பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


மணந்தான் என மகாபாரதம் குறித்துள்ளது. அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களும் மெகஸ்தனிஸ், கெளடில்யர் ஆகியோரது நூல்களும், மகா வம்சம் என்ற இலங்கை வரலாறும் இவர்களது தொன்மையைத் துலக்கும் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன.

பதினொன்றாம் நூற்றாண்டில் மலர்ந்த சோழப் பேரரசு, வடக்கே, வடுக, கலிங்க நாடுகளை கைப்பற்றியதுடன், கங்கைச் சமவெளியில் தங்களது புலிக்கொடியை பறக்க விட்டது. தெற்கேயுள்ள பாண்டியரையும் வென்று பாண்டிய நாட்டை சோழ நாட்டின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டது. அப்பொழுது பாண்டிய நாடு, சோழ பாண்டிய மண்டலம் எனப் பெயர் பெற்று இருந்தது. மூன்றாவது குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசு சிதைந்தது.[1] வடக்கே சாளுக்கியர், நுளம்பர், சம்பு வரையர் ஆகிய குறுநில மன்னர்கள் எழுச்சிப் பெற்று, சோழப் பேரரசை சிறுகச்சிறுக சிதைத்து அழிவு பெறச் செய்தனர். இந்தச் சூழ்நிலையில் பாண்டியர்களும் தங்களது பழமையை எய்துவதற்கு முயன்றனர். என்றாலும் அப்பொழுது இருந்த குலசேகர பாண்டியனுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் ஏற்பட்ட பூசல்களினால் வடக்கே இருந்த டில்லி பேரரசின் வலியகரங்கள் பாண்டிய நாட்டில் குறுக்கிட்டன. மதுரையில் டில்லி சுல்த்தானின் படையணியும் கி.பி.1323-முதல் நிரந்தரமாக நிலைகொண்டது.[2] இதன் தொடர்பாக அமைந்த மதுரை சுல்தான்கள் என்ற தென்னரசு உருவாகி பாண்டிய நாட்டிலும் சோழ, தொண்டை மண்டல நாட்டுப் பகுதிகளிலும் அமைந்து கி.பி. 1378-ல் முடிந்தது.[3] இந்த சுல்தான்களது கல்வெட்டுக்கள் திருக்கோலக்குடி, கண்டதேவி ஆகிய ஊர்களில் உள்ளன.

வடக்கே ஆந்திர நாட்டில் தோன்றிய விஜயநகரப் பேரரசின் வலிமை வாய்ந்த கரங்கள் தெற்கு நோக்கி நீண்டன. பாண்டிய நாட்டில் மதுரை சுல்தான்களை வென்று வடுகர்களது ஆட்சியை கி.பி. 1378 ல் நிறுவின.[4] இவர்களது ஆட்சி கி.பி.1736 வரை நீடித்த பொழுது இவர்களது அரசப் பிரதிநிதிகளாக ஒரு காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் மாவலிவாணாதிராயர்கள். இவர்கள் கி.பி. பத்து, பதினோராவது நூற்றாண்டுகளில் சோழநாட்டில் இருந்து பாண்டிய நாட்டில் குடி புகுந்தவர்கள். போர் மறவர்களான இவர்கள் தங்களைப் பாண்டிய மறவர்கள் என்று கூட சொல்லிக் கொண்டனர். பாண்டிய மன்னர்களது சிறந்த அலுவலர்களாகவும் சாமந்தர்களாகவும் பணிபுரிந்து சாதனை படைத்தனர். பாண்டியநாடு, சோழ பாண்டிய மண்டலமாக, சோழர்களது ஆட்சிப் பரப்பாக அமைந்து இருந்த பொழுதும், அவர்களது


  1. Hussaini. Dr - SAQ History of Pandya Country
  2. Ibid - 113
  3. Srinivasa Ayyangar.S. Dr. South India and her Mohamaden Invaders (1921) Page; 223-29
  4. வேதாச்சலம்.வெ. - பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் (1987) பக். 56