பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 155


இந்த அறக்கொடைகளை ஒருமுறை முழுமையாகப் படித்து முடித்த பிறகு, இந்த அறக்கொடைகளை வழங்கிய சிறந்த பண்பாளரான பரோபகாரியை, மன்னரை கும்பெனியார் நாடு கடத்தி தண்டனை அளித்துள்ளதை அறியும் பொழுது நெஞ்சத்தில் வேதனைதான் விஞ்சுகிறது.

ஆனால், கும்பெனியாரது கணிப்பு "வேங்கன் பெரிய உடையாத் தேவர் பெரியமருது சேர்வைகாரரது மகளை மறுமணம் செய்து கொண்டதன் மூலம் பெருமை மிகுந்த நாலுகோட்டை குடும்பத்திற்கும் சமய நீதிகளுக்கும் இழிவினை ஏற்படுத்தி தமது நலன்களை பிரதானி மருது சேர்வைக்காரர்களது சுயநலங்களுடன் இணைத்துக் கொண்டவர்" என்பதாகும். நாடு கடத்தல் தண்டனை பெற்று எழுபத்து இரண்டு பேரும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களது பயணம் பற்றி வேறொரு நூலில்[1] இடம் பெற்றுள்ள பகுதி அதன் பொருத்தம் கருதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பெற்ற நாட்டையும் பெண்டு பிள்ளைகளையும், பேணி வளர்த்த பெற்றோருடன், சுற்றத்தையும், பிரிந்த அவர்களின் கண்ணிர்க் கதையின் சிறுபகுதி அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. அன்றைய நிலையில் தூத்துக்குடிக்கும் மலேசியா நாட்டிற்கும் இடைப்பட்ட வங்கக் கடலைக் கடப்பதற்கு ஆறுவார காலம் கப்பல் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. ஆதலால் இந்த எழுபத்து இரண்டு கைதிகள், இருபது பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர் ஆகியோருக்குத் தேவையான குடிநீர் உணவுப் பொருட்கள் ஆகியன கொண்டு சேர்க்கப்பட்டன. பின்னர் அந்த எழுபத்து இரண்டு வீரர்களையும் இருவர் இருவராக இணைத்து கைவிலங்குகள் பூட்டி கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். 11.2.1801-ம் தேதியன்று கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணம் தொடங்கியது.


'உண்ணும் பொழுது மட்டும் இவர்களது கைவிலங்குகள் தளர்த்தப்பட்டன. மற்ற நேரம் முழுவதும் அந்த கைவிலங்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் இடர்பாடாக இருந்தன. கரை காணாத கடலுக்கு ஊடே பயணம் செய்யும்பொழுது கூட அவர்கள் தப்பித்து தாயகம் திரும்பிவிடக் கூடும் என்ற பயம், பயணம் தொடர்ந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆழமான கடல். அவர்களது கவலைகள் போல பரந்த வானம் முழுவதும் கவிழ்ந்துள்ள மேகத்தின் பயமுறுத்தல், பேரலைகளது ஆவேசம். கப்பலின்


  1. கமால் Dr. S.M. மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 180-181