பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் பண்பினை, உள்ளப் பாங்கினை சங்க காலத்தில் இருந்து உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் குலத்தின் பிரதிநிதிகளா இந்த இருவரும் நிச்சயமாக இருக்க முடியாது. ஆம். அப்படித்தான் இந்தப் புதின நூலாசிரியரது எழுத்துக்கள் இந்தப் பத்திரங்களின் உள்ளக் கிடக்கையாக இந்தப் புதினத்தில் உருப்பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கும், தமிழரது பண்பாட்டிற்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தியதுடன் சிவகங்கை வரலாற்றையும் தடம் புரளச் செய்துள்ளன, இந்த இழிவு சேர்த்த எழுத்துக்கள்.

வரலாற்றுக்கு முரணான இன்னும் சில எழுத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கம் 66

'சிவகங்கையின் அரசர் முத்து வடுகநாத உடையாத் தேவர். மனைவியின் பிரிவாற்றாமையால் மனங்கலங்கி காணப்படுகிறார்.'

பக்கம் 69

'அதற்காக நான் கிழவரையா மணப்பது?' - வேலுநாச்சியாரது வினா!

பக்கம் 74

"இளமை கொழிக்கும் வேலுநாச்சி, முதுமையின் தளர்ச்சிக் கதவங்களைத் தட்டிக் கொண்டிருக்கும் முத்து வடுகநாதரை மணக்க ஒப்புக் கொண்டது...'

மன்னர் முத்து வடுகநாதரது முதல் மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை. அவர் எப்பொழுது இறந்தார் என்பதோ அப்பொழுது மன்னருக்கு வயது என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற ஆவணம் ஒன்றின்படி மன்னர் 1736-ல் பிறந்தார், 25.6.1772-ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில் தியாகியானார். மொத்தம் அவரது வாழ்நாள் 36 ஆண்டுகள். அவருக்கு ஒரே மனைவி ராணிவேலுநாச்சியார். இவருக்கு முன்னாள் எந்த நாச்சியாரை மணந்தார். எப்பொழுது அந்தப் பெண்மணி மரணமுற்றார் என்ற செய்திகளை எங்கிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை.

பக்கம் 70

"...இராமநாதபுரத்து இளவரசர் கோழையா?' (வேலுநாச்சியார்)
'கோழையல்ல கயமை நிரம்பியவன். அவன் பேடியைவிடக் கேவலமானவன்...' (வீரத்தேவர்)

இங்கு குறிப்பிடப்பெறும் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்துச் சேதுபதி, கி.பி.1749-62 வரை ஆட்சி செய்தவர். இவரைப் பற்றி இவ்வளவு மோசமாக இந்த நூலாசிரியர் ஏன் எழுதினார் என்பது தெரியவில்லை.