பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

கிடைத்துவிட்டது.[1] சிவகங்கைச் சீமையும், கும்பெனியாருக்கு எதிர் அணி என முடிவு செய்து அவரது நடவடிக்கைகளை இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினார்.[2]

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து ஊமைத்துரையும் அவரது தோழர்களும் 2.2.1801 தப்பி வர உதவியது. மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை சிறந்த ராணுவ தளமாகத் திகழ சிவகங்கைச் சீமை மறவர்களும் ஆயுதங்களும் பயன்பட்டன. 24.5.1801 நடைபெற்ற போரில் கும்பெனியாரது அசுர முயற்சிகளை தோல்வியுறச் செய்தன. பின்னர் 10.6.180 தேதி அரண்மனை சிறுவயலில் ஊமைத்துரை சிவகங்கைப் பிரதானிகளிடம் அடைக்கலம் பெற்றது. சிவகங்கையில் வகுத்த திட்டப்படி தளபதி மயிலப்பன் கும்பெனியார் நிர்வாகத்தில் இருந்த மறவர் சீமையில், கிளர்ச்சிகளைத் தொடர்ந்து கும்பெனி நிர்வாகத்திற்கு பெருத்த இழப்பீடுகள் ஏற்பட்டது. இவையனைத்தும் கலெக்டர் லூஷிங்டன் திரட்டிய இரகசியச் செய்திகள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரினை வெற்றிகரமாக முடித்த தளபதி அக்கினியூ, மறவர்சீமைக் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கவும் கும்பெனித் தலைமை உத்திரவிட்டது.[3] சிவகங்கைச் சீமையின் நிலையினை நன்கு ஆராய்ந்து பெரும் போர் ஒன்றினைத் தொடர்வதற்கான திட்டத்தை புதுக்கோட்டை தொண்டமானது துணையுடன் திரட்டினான் அக்கினியூ அத்துடன், சிவகங்கைச்சீமை மக்களை பிரதானிகள் மருது சகோதரர்களது பிடிப்பில் இருந்து நீங்குமாறு செய்ய இரண்டு உத்திகளைக் கையாண்டான்.

முதலாவது, சிவகங்கை அரச குடும்பத்திற்குச் சம்பந்தமில்லாத பிரதானிகள், மருது சேர்வைக்காரர்கள், இறந்து போன மன்னர் முத்து வடுகநாதருக்குப் பின்னர் சிவகங்கை அரசியல் தலைவியாக ஒரு பெண்மணி (அவரது மனைவி ராணி வேலுநாச்சியார்) பொறுப்பு ஏற்றுள்ளதால் அவரது பணியாளர்களான மருதுசகோதரர்கள் தங்களைப் பிரதானிகளாக அறிவித்துக்கொண்டு ராணியாரையும், சிவகங்கை மக்களையும் அடக்கி ஒடுக்கி சர்வாதிகாரம் செய்வதுடன் சிவகங்கைச் சீமையை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றனர். சிவகங்கைச் சீமையின் பேஷ்குஷ் தொகையினை வசூலிப்பதற்கு சட்டப்படி உரிமை பெற்றுள்ள கும்பெனியாருக்கு எதிராக சிவகங்கைச் சீமை மக்கள், ஆயுதம் எடுக்கக் கூடாது என்றும், மருது சகோதரர்களை விட்டு நீங்கி சிவகங்கையின் முறையான ஜமீன்தார் விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற பொதுஅறிவிப்பை 6.7.1801-ல் வெளியிடச்செய்தான்.[4]


  1. Selections from the History of Tamil Nadu (1978) P: 228
  2. Papers relating to polegar war (selections)
  3. Ibid.
  4. Military Consultations Vol.285(A) 28.9.1801. P: 5043 44