கம்பன் கவித் திரட்டு 2, 3/003-005

விக்கிமூலம் இலிருந்து



 

கம்பன் கவித் திரட்டு


(மூன்றாம் பாகம்)


ஆரண்ய காண்டம்

 



முதற்பதிப்பு 1990

உரிமம் ஆசிரியருக்கே

 

வெளியிட்டோர் :

நித்தியானந்த ஜோதி நிலையம்

த. பெ. 1284

3D 43 V. K. சாலை சென்னை-28.

 

மாருதி பிரஸ்,

173, பீட்டர்ஸ் ரோடு,

சென்னை-14

 

ஆரண்ய காண்டம் படலங்கள்

  1.  விராதன் வதைப்படலம்
  2.  சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
  3.  அகத்தியப் படலம்
  4.  சடாயு காண் படலம்
  5.  சூர்ப்பணகைப் படலம்
  6.  கரன் வதைப் படலம்
  7.  மாரீசன் வதைப் படலம்
  8.  சடாயு உயிர் நீத்த படலம்
  9.  அயோமுகிப் படலம்
  10.  கவந்தப் படலம்
  11.  சபரி பிறப்பு நீங்குப் படலம்.
 



ஆரண்ய காண்டம்

விராதன் வகைப் படலம்


(கடவுள் வாழ்த்து)


பேதி யாது நிமிர் பேத வுருவம்
       பிறழ்கிலா
ஓதி யோதி யுணறும் தொறு
       முணர்ச்சியுதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்
       முதலோர் தெரிகிலா
ஆதி நாத ரவரெம்
       மறிவினுக் கறிவரோ.


எங்கும் நிறைந்திருப்பனும், வேதம் வேதியர், விரிஞ்ஜன் முதலியோரின் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டவனும், எல்லாப் பொருள்களுக்கும் தலையாயவனுமாகிய இராமபிரானை வணங்கி எடுத்த கருமத்தை இனிது முடிப்போமாக! 

ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம் பன்னிரண்டு படலங்கள் கொண்டது. மொத்தம் 1196 பாடல்கள். இவற்றுள் இத் தொகுப்பில் எடுக்கப்பட்டுள்ள பாடல்கள் 133.

ஆரண்யத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறும் காண்டம் இது. விராதன் வதையில் தொடங்குகிறது. சபரி பிறப்பு நீங்கு படலத்தில் முடிகிறது.

சித்திரகூட மலையில் இருப்பது தெரிந்துவிட்டபடியால் இனிமேல் அயோத்தி மக்கள் அடிக்கடி வருவார்கள் என்று கருதினான் இராமன். எனவே அவ்விடம் விட்டு அகன்றான்; இளையவனுடனும் சீதையுடனும் தண்ட காரணியம் நோக்கிப் புறப்பட்டான்.

சூரிய குலத்தில் தோன்றிய மனுச்சக்கரவர்த்தியின் மகன் இட்சுவாகு. அவனுக்குப் புதல்வர் நூறு பேர் அந்த நூற்றுவரில் கடைப்பட்டவன் தண்டன் என்பவன். அவன் முரடன், துஷ்டன், தண்டிக்கத்தக்கவனாக இருந்தமையின் தண்டன் என்று அவனுக்குப் பெயர் வந்தது.

விந்திய மலைக்கும் சைவலமலைக்கும் இடையே உள்ள பகுதியைத் தனது ராஜ்யமாகக் கொண்டான் அவன். மதுமந்த நகரில் இருந்து அரசு செலுத்திவந்தான்.

ஒரு நாள் அவன் சுக்கிராச்சாரியார் ஆசிரமத்துக்குச் சென்றான். அவர் மகள் அரஜை என்பவள்மீது காமுற்றான். வலிந்து அவளைக் கற்பழித்தான். இதனை அறிந்த சுக்கிராச்சாரியார் அவனைச் சபித்தார். அதனால் அவனது நாடு பாழாகி அவனும் அழிந்தான். அந்த இடம் தண்டகவனம் என்று பெயர் பெற்றது. 

தண்டக வனத்திலே இருந்த முனிவர்கள் மகிழ்ந்தார்கள் இராமனை வரவேற்றார்கள்.

இராமன், இலக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் அத்திரி முனிவருடைய ஆசிரமத்துக்குச் சென்றனர்.

அத்திரி என்பவர் சப்தரிஷிகளுள் முதல்வர். திரிவர்க்க தோஷங்களாகிய காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றையும் போக்கியவர் என்பது பொருள். வேத அத்யயனம் செய்யாது மூன்று இரவுகளைப் போக்காதவர் என்றும் கூறுவர். இவர் பிரம்ம குமாரர்களில் ஒருவர்.

இவருடைய மனைவி அனசூயை. அனசூயை என்றால் பொருமை அற்றவள் என்று பொருள். இவள் தக்ஷப் பிரஜாபதியின் புதல்வியருள் ஒருத்தி.

தனது கற்பு நிலையைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு ஆட்டியவள்.

என்றும் மாசுபடியாத பட்டாடை, நறுமணங்குன்றாத கலவைச் சாந்து, என்றும் குன்றா இளமை ஆகியவற்றை சீதைக்கு அளித்தாள் என்று வான்மீகம் கூறும்.

விராதன் என்பவன் ஓர் அரக்கன். சிவந்த கண்கள், சுருண்ட தலைமயிர், விஷம் ஒரு மலை வடிவு பெற்றுவருவது போலும் தோற்றத்தினன்.

அவனது நடைப் பெயர்ச்சியினால் பெருங்காற்று எழுந்தது. அக்காற்று மலைகளைப் பெயர்த்தது. அவ்விதம் பெயர்ந்த மலைகள் காற்றிடைப்பட்ட பஞ்சுபோல் பறந்தன.

குதிரை, யானை, சிங்கம், புலி இவற்றையெல்லாம் ஒரு பாம்பினாலே தொடுத்துக்கட்டி மாலையாக அணிந்து கொண்டிருத்தான் அவ் விராதன். 

யானைகளைப் பிடித்துத் தன் அகன்ற வாயிலே மென்று தின்று கொண்டிருந்தான். அப்பொழுதும் அடங்காத பசியுடையவன். இந்திரனது ஐராவதம் என்னும் யானையின் நெற்றிப் பட்டத்தைத் தன் நெற்றிப்பட்டமாகவும், அதன் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட பூண்களைத் தனது தோள் வளைகளாகவும் கொண்டு விளங்கினான்.

அவ்வரக்கன் தான் கொன்ற புலிகளின் தோலை ஆடையாக உடுத்தியிருந்தான். யானைத் தோல்களைச் சல்லடமாக அணிந்திருந்தான். திசை யானைகளுக்குக் கட்டப்பட்டிருந்த மணிகளை எல்லாம் ஒரு மலைப்பாம்பிலே கோத்து அதனைத் தனது ஆடைக்கு அலங்காரமாகக் கட்டியிருந்தான்.

பூதங்கள் ஐந்தும் ஓர் உருக்கொண்டு வருவதே போலும் உருவத்தன் இடி போன்ற குரல் உடையவன். இருபத்தையாயிரம் யானைகளின் பலம் கொண்டவன்.

இத்தகைய விராதன் சீதா பிராட்டியைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் எழும்பினான். இராம லட்சுமணர் இருவரும் அவனது தோள் மீது ஏறி இரு தோள்களையும் வெட்டி வீழ்த்தினர்.

உடனே விராதன் தன் சுய உருப்பெற்று இராமப்பிரானைப் பலவாறு துதித்தான்.

“அவனை ‘நீ யார்’ என்று வினவ அவன் சொன்ன பதில் வருமாறு:

“நான் ஒரு கந்தர்வன். தும்புரு எனும் பெயருடையவன். குபேரன் ஆட்சிக்குட்பட்ட தேவர் உலகில் உள்ளவன். அரம்மை எனும் தேவமாது ஆடல் புரியக்கண்டு அவள் மீது காதல் கொண்டேன்; சீற்றம் கொண்ட குபேரன் என்னை அரக்கனாகச் சபித்தான். 

இந்த வானமண்டலம் முழுவதும் சுற்றித் திரித்து எல்லாரையும் வருத்திக்கொன்ற கிலிஞ்சன் என்ற அரக்கனின் மைந்தனாகப் பிறந்தேன். நினது திருவடி தீண்டப்பெற்றேன். சாபம் நீங்கப்பெற்றேன்” என்று கூறித் தும்புரு எனும் கந்தர்வனாகி வானுலகு சென்றான்.

பிறகு இராமன் இலட்சுமணன் சீதை மூவரும் சரபங்கர் ஆசிரமம் சென்றனர்.

இராமனின் வருகைக்காக காத்திருந்த முனிவர் இராமனைத் தரிசித்து, எரியில் புகுந்து முக்தி எய்தினார்.

“எனது ஆசிரமத்துக்கு வரவேண்டும்; எனது ஆசிரமத்துக்கு வரவேண்டும்” என்று முனிவர் பலரும் அழைத்தனர். இவ்வாறு பத்து ஆண்டுகள் அவர்களுடைய ஆசிரமங்களிலே தங்கிவிட்டு இராமன் சீதையோடும் இலக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆசிரமம் சென்றான்.

முனிவர் மகிழ்ந்தார், அவர்களை வரவேற்றார். அங்கேயே இருக்குமாறு கூறினார். அஸ்திரங்கள் பல கொடுத்தார்.

அரக்கர்களை அழிக்கும் நோக்கத்துடன் வந்திருப்பதால் இன்னும் தெற்கே சென்று அவர்கள் வரும் வழியிலே இருப்பது நல்லது என்றான் இராமன்.

“நல்லது என்று அகஸ்தியரும் பஞ்சவடி எனும் இடம் பற்றிக் கூறி அங்கே சென்று வசிக்குமாறு கூறினார்.

பஞ்சவடி என்றால் ஐந்து ஆலமரங்கள் உள்ள இடம் என்று பொருள். இந்த இடம் அகண்ட கோதாவரிக் கரையில் நாசிக் அருகே உள்ளது. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள், வடம் என்றால் ஆலமரம் என்று பொருள். 

ஓங்கும் மரன் ஓங்கி
        மலை ஓங்கி மணல் ஓங்கிப்
பூங்குலை குலாவு குளிர் சோலை
        புடை விம்மித்
தூங்கு திரை ஆறு தவழ்
        சூழுலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால் உறையுள்
        பஞ்சவடி மஞ்ச!

மரங்கள் ஓங்கி வளரப் பெற்றதாய்–மலைகள் உயர்ந்து காணப்பெற்றதாய்–மணல் மேடுகள் உயர்ந்து விளங்கப் பெற்றதாய் –அசைந்து செல்லும் ஆறு தவழ்வதால்–ஓரிடம் குன்றின் அருகே உள்ளது பஞ்சவடி என்று அதற்குப் பெயர்.

மஞ்ச–மைந்தனே! ஓங்கு மான் ஓங்கி–உயர்ந்த மரங்கள் வளரப் பெற்று; மலை ஓங்கி–மலைகள் உயரப் பெற்றும்; மணல் ஓங்கி– மணல் குன்றுகள் உயரப் பெற்றும்; பூ குலை குலாவு–பூங்கொத்துக்கள் விளங்குகின்ற; குளிர் சோலை–குளிர்ந்த சோலைகள்; புடை விம்மி–பக்கங்களில் விளங்கப் பெற்றும்; தூங்கு திரை–மிக்க அலை மோதும்; ஆறு தவழ்–மெதுவாகச் செல்லும் ஆறு பாயப் பெற்ற; சூழலது–சூழ்நிலை உடைய; ஓர் குன்றின் பாங்கர்–ஒரு குன்றின் அருகே ; பஞ்சவடி–பஞ்சவடி என்ற; உறையுள்–வாசஸ்தலம்; உளது–இருக்கிறது

கன்னியின் வாழை கனி
        ஈவ, கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு
        போதும் உள; தெய்வப்

பொன்னி எனல் ஆய புனல்
        ஆறும் உள; போதா
அன்னம் உள; பொன் இவளொடு
        அன்பின் விளையாட

அகஸ்திய முனிவரிடத்திலே விடை பெற்றுக் கொண்டு இராமனும் சீதையும் லட்சுமணனும் பஞ்சவடி நோக்கிப் புறப்பட்டனர்.வழியிலே ஜடாயு என்ற கழுகரசனைக் கண்டனர். ஜடாயு அவர்களைப் பஞ்சவடிக்கு அழைத்துச் சென்றது. அங்கே கோதாவரி நதியை அவர்கள் கண்டார்கள்.

(அவ்விடத்தில்) கனி ஈவ–பழங்கள் தரும்; கன்னி இள வாழை–மிகவும் இளமையான வாழை மரங்களும்; கதிர்–கதிர்களையும்; வாலின்–வாலையும் உடைய; செந்நெல் உள–சிவந்த நெற் பயிர்களும் உள; தேன் ஒழுகு போதும் உள–தேன் சொரியும் மலர்களும் உள்ளன; தெய்வப்பொன்னி–தெய்வத் தன்மை பொருந்திய காவிரி; ஆய–அனைய; புனல் ஆறும் உள–வெள்ளம் பெருகும் ஆறும் உண்டு; பொன் இவளொடு–பொன் போன்ற இச் சீதையுடன்; அன்பின் விளையாட–அன்போடு விளையாடுவதற்கு போதா–பெரு நாரைகளும்; அன்னமும்–அன்னப்பறவைகளும்; உள –உள்ளன.

புவியினுக்கு அணியாய், ஆன்ற
        பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அகத்துறைகள் தாங்கி
        ஐந்திணை நெறி அளாவிச்
சவி உறத்தெளிந்து, தண் என்று
        ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா வரியினை
        வீரர் கண்டார்.

கோதாவரி நமது நாட்டின் அழகியதொரு பெருநதி, எனவே புவியினுக்கு அணியாகி என்றார் கம்பர்.

ஆன்ற பொருள் தருவதாவது என்ன? சிறந்த மலைகளிலே உள்ள பொருள்களை அடித்துக்கொண்டு வருதல். அவ்வளத்தால் ஏராளமான விளைபொருள்களைக் கொடுத்து நாட்டின் செல்வம் பெருக்குதல். புண்ணிய நதி ஆதலால் தன்னிடை மூழ்குவோர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு விதமான புருஷார்த்தங்களையும் கொடுத்தல்.

விளை நிலங்களுக்கு வளம் தருவதால் புலத்திற்றாகி என்றார்.

அங்கே மலர்களின் குவியல் உண்டு. குளிர்ந்த சோலை தழைத்து இருக்கும். இளம் வாழை மரங்கள் உள. அவை கனி தரும், செந்நெல் உண்டு. தேன் வழியும் மலர்கள் உள்ளன. தெய்வத் தன்மை பொருந்திய காவிரியே என்று சொல்லத்தக்க ஆறும் உண்டு. திருமகள் ஒத்த சீதையுடன் விளையாட அன்னம் உண்டு. பெருநாரை உண்டு.

மக்கள் நீராடுவதற்காக நீர்த்துறைகள் ஆங்காங்கே பெற்று இருப்பதால் அவி அகத்துறைகள் தாங்கி என்றார்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் வழியே கோதாவரி நதி பாய்வதால் ஐந்திணை நெறி அளாவி என்றார்.

பளிங்கு போல் தெளிந்து இருப்பதால் அவியுறத்தெரிந்து என்றார்.

மிகவும் குளிர்ந்த தண்ணீருடையதாக இருப்பதால் தண் என்று ஒழுக்கம் தழுவி என்றார்.

ஆகவே, சான்றோர் தம் கவி போல் இருந்தது கோதாவரி எனும் நதி என்றார்.



புவியினுக்கு அணியாய்–பூமிக்கு ஓர் அலங்காரமாய்; ஆன்ற பொருள் தந்து–சிறந்த பொருள்களைக் கொடுத்து; புலத்திற்கு ஆகி–நிலத்திற்கு உரியதாகி; அவி அகத்துறைகள் தாங்கி– நீராடுதற்குரிய துறைகள் உள்ளனவாய்; ஐந்திணை நெறி அளாவி–குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்கள் வழி சேர்ந்து; சவி உறத் தெளிந்து– செவ்வையாகத் தெளிந்து; தண் என்று ஒழுக்கம் தழுவி– குளிர்ந்த நல்ல ஒழுக்கம் கொண்டு; சான்றோர் கவி என–பெரியோர் செய்த கவி போல; கிடந்த–இருந்த; கோதாவரியை– கோதாவரி ஆற்றை; வீரர் கண்டார்–வீரர்களாகிய இராம லட்சுமணர் கண்டனர்.

கோதாவரி நதியைச் சான்றோர் கவிக்கு உவமை கூறுகிறார் கம்பர். எப்படி? புவியினுக்கு அணியாகி–பலவித அணிகள் பொருந்தியதாக விளங்கும் சான்றோர் கவி; உலகத்தினரால் கொண்டாடப்பெறும்.

ஆன்ற பொருள் தந்து–அறம் பொருள் இன்பம் வீடு என்ற சதுர்வித புருஷார்த்தங்களின் பெருமையை உணர்த்தும்; கற்பவருக்கு நுண் அறிவுபுகட்டும்–ஆராய்ச்சி செய்பவருக்கு மேலும் மேலும் புதியனவாகப் புலப்படத்தக்க பொருள் தரும்.

அவி அகத்துறைகள் தாங்கி–அகப்பொருள் இலக்கணங்கள் பொருந்தி இருக்கும்; ஐந்திணை நெறி ஆளாவி–குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய புணர்தல், இருத்தல், பிரிதல், இரங்கல், ஊடல் எனும் ஐவகை ஒழுக்கங்களும் உள்ளதாக இருக்கும்.

சவி உறத் தெளிந்து – மயங்க வைத்தல் என்ற குற்றத்துக்கு இடமில்லாமல் தெளிவாக நன்கு விளங்கச் சொல்லுதல் என்ற அழகுடையதாக இருக்கும்.

தண் என்ற ஒழுக்கம் உடையதாய்– தீய ஒழுக்கங்களை விவரிக்காமல் நல் ஒழுக்கங்களையே வலியுறுத்தும்–மெல்லென்ற ஓசையோடு தட்டின்றிச் செல்லும் நடையுடையதாய் இருக்கும்.

ஓதிமம் ஒதுங்க கண்ட
        உத்தமன் உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கிச்
        சிறியதோர் முறுவல் செய்தான்
மாது அவள் தானும் ஆண்டு வந்து
        நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
        புதியது ஓர் முறுவல் பூத்தாள்.

அன்னங்கள் ஒதுங்கி நடந்து செல்கின்றன. உத்தமனான இராமன் அவற்றை நோக்கினான்; அருகில் உள்ள சீதையின் நடையையும் நோக்கினான்; புன் முறுவல் பூத்தான்.

சீதை என்ன செய்தாள்? அங்கு வந்து நீர் குடித்துச் செல்லும் ஆண் யானையின் நடை கண்டு அதுவரை இல்லாத புன்முறுவல் பூத்தாள்.

“உன் நடை அழகின் முன்னே இந்த அன்னத்தின் நடையழகு என்னே” எனும் கருத்துத் தொனிக்க இராமன் புன்முறுவல் பூத்தான்.”

“இராமன் நடை அழகின் முன் இந்த ஆண் யானை நடையில் தோற்கும்” எனும் கருத்துப் படச் சீதை புன்முறுவல் பூத்தாள்.



ஓதிமம்–அன்னங்கள்; ஒதுங்க– விலகிச் செல்ல; கண்ட– பார்த்த; உத்தமன்– உத்தமனாகிய இராமன்; உழையள் ஆகும்– அருகில் உள்ள; சீதை தன் நடையை நோக்கி– சீதையின் நடையைப் பார்த்து; சிறியது ஓர் முறுவல் செய்தான்– புன்னகை பூத்தான். ஆண்டு வந்து– அங்கே வந்து; நீர் உண்டு– நீர் குடித்து; மீளும்– திரும்பிச் செல்லும்; போதகம்– ஆண் யானை; நடப்ப நோக்கி; – விலகி நடப்பது கண்டு; மாது அவள் தானும்– சீதையும்; புதியது ஓர் புன்முறுவல் பூத்தாள்– (இராமனது நடை கண்டு) இதுவரை இல்லாத புதியதொரு புன்சிரிப்புச்சிரித்தாள்.

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர்
        பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்
        நிமிர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என
        அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என
        வஞ்ச மகள் வந்தாள்.

இவ்விதம் இவர்கள் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது சூர்ப்பணகை வந்தாள்; உள்ளத்திலே வஞ்சக எண்ணம் கொண்டு அழகியதோர் வடிவம் எடுத்து வந்தாள்; விஷம் என்று சொல்லும் படி வந்தாள்; அன்னம்போல நடந்து வந்தாள்; செம்பஞ்சும் குளிர் தளிர்களும் வருந்த செக்கச் செவேல் என்ற சிவந்த தாமரை போன்ற தனது சிறிய அடிகளை எடுத்து மெல்ல மெல்ல வைத்து இளமயில் போல வந்தாள்.

ஒளி விஞ்ச– ஒளி மிகுந்து விளங்கும்; பஞ்சி– செம் பஞ்சும்; குளிர் பல்லவம்– குளிர்ச்சி தரும் இளம் தளிர்களும்; அனுங்க– வருந்த; செஞ்செவிய– செந்நிறமான அழகு கொண்ட; கஞ்சம் நிகர்– தாமரை ஒத்த; சீறடியள் ஆகி– தனது சிறிய அடிகளை எடுத்து வைத்து நடந்து; அம் சொல்– அழகிய சொற்கள் பேசும்; இள மஞ்ஞை என– இளமயில் போலவும்; அன்னம் என– அன்னப் பறவை போலவும்; மின்னல் வஞ்சி என்ன– மின்னல் கொடி போலவும்; நஞ்சம் என– விஷம் போலவும்; வஞ்ச மகள்– வஞ்சனையே உருவாகிய அந்த சூர்ப்பணகை; வந்தாள்– வந்தாள்.

கானின் உயர் கற்பகம்
        உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை
        காம நிறை வாசத்
தேனின் மொழி உற்று இனிய
        செவ்வி நனி பெற்றோர்
மானின் விழி பெற்று
        மயில் வந்தது என வந்தாள்.

கற்பகத் தருவிலே படரும் கொடிக்கு காமவல்லி என்று பெயர். நறுமணம் வீசும் அந்தக் காமவல்லி போல் மேனி பெற்று வந்தாள் சூர்ப்பணகை; தேன் மொழியாள்; நல்ல அழகுடன் விளங்கினாள்.

இயற்கையிலேயே பார்ப்பதற்கு அழகாயிருக்கும் மயில். அதன் நடையும் அழகு. அதற்கு மானின் கண்ணும் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள்.

கானின் உயர்– உயர்ந்த நறுமணம் வீசுகின்ற; கற்பகம் உயிர்த்த– கற்பக தருவைச் சார்ந்து அதன்மேல் படர்கின்ற; கதிர்வல்லி– காமவல்லி என்ற தெய்வ பூங்கொடி; மேனி நனி பெற்று– அழகியதொரு பெண் வடிவம் பெற்று; காமம் விளை நெறி– காமம் விளைவிக்கின்ற ஒழுக்கமும்; வாசத்தேனின் மொழி உற்று– வாசனை வீசும் தேன் மொழியளாகி; இனிய செவ்வி நனி பெற்று– கண்ணுக்கினிய அழகை நன்கு பெற்று; ஓர் மானின் விழிபெற்று– மானின் மருண்ட பார்வையுடன்; மயில் வந்தது என– மயில் போன்ற சாயலும் நடையும் கொண்டு; வந்தாள்– வந்தாள்.

பூவிலோன் புதல்வன் மைந்தன்
        புதல்வி; முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவனான
        செங்கை யோன் தங்கை; திக்கின்
மா எலாந் தொலைத்து வெள்ளி
        மலை எடுத்து உலக மூன்றும்
காவலான் பின்னை; காமவல்லியாங்
        கன்னி என்றாள்.

அப்படி அவள் வருகிற போது அவளது சிலம்பு, மேகலை, ஆரம் முதலிய அணிகள் ஒலித்தன. அவள் தனது கூந்தலில் சூடியுள்ள மலரில் வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்தன. இவற்றால் யாரோ பெண் ஒருத்தி வருகிறாள் என்று அறிந்தான் இராமன். ஒலி வரும் வழியிலே பார்வையைச் செலுத்தினான். அவன் அருகே வந்தாள் சூர்ப்பணகை, வணங்கினாள். “யார் நீ? உன் ஊர் எது? உன் பெயர் என்ன? உன் உறவினர் யார்?” என்று கேட்டான் இராமன்.

அப்போது அவள் சொன்னாள்:

“பிரும்மதேவர் தமக்குத் துணையாக ஒன்பது பிரும்மாக்களைப் படைத்தார். அவருள் ஒருவர் புலஸ்தியர். அந்தப் புலஸ்தியரின் புதல்வன் விச்ரவசு. விச்ரவசுவின் மகள் நான்; சிவபெருமானது துணைவனாகிய குபேரனின் தங்கை; திக்கு யானைகளை உலுக்கி, கயிலாய கிரியைப் பெயர்த்தவனும் திரிலோக சக்கரவர்த்தியுமான இராவணனுக்குப் பின் பிறந்தவள்; என் பெயர் காமவல்லி; கன்னி நான்” என்றாள்.

பூவிலோன்– தாமரை மலரில் தோன்றிய பிரும்மாவினது; புதல்வன்– பிள்ளையாகிய புலஸ்தியருடைய; மைந்தன்– குமாரனாகிய விச்ரவசுவின்; புதல்வி– பெண் நான்; முப்புரங்கள் செற்ற– திரிபுர தகனம் செய்த; சேவலோன்– ரிஷபத்தை வாகனமாக உடைய சிவபெருமானின்; துணைவனான– நண்பனாகிய; செங்கையோன்–சிவந்த கைகளை உடைய (குபேரனின்); தங்கை–தங்கை; திக்கின் மா எலாந்– திக்கஜங்களை எல்லாம்; தொலைத்து– வலிவிழக்கச் செய்து; வெள்ளிமலை எடுத்து– வெள்ளி மயமான கைலாச கிரியைப் பெயர்த்த; உலக மூன்றும் காவலான்–மூவுலகும் காத்தல் வல்ல இராவணனது; பின்னை– பின் பிறந்தவள்; காம வல்லியாம் கன்னி– காமவல்லி எனும் பெயர் கொண்ட கன்னி நான்.

தனது பெருமைகளை எல்லாம் சொல்லிப் பார்த்தாள்; தான் கன்னி என்றும் கூறினாள். இராமன் மீது விருப்பம் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள்; இராமன் இணங்கவில்லை; மறுத்துவிட்டான்.

அந் நிலையில் சீதையைக் கண்டாள். அவளது பேரழகு கண்டாள். அவள் இருப்பதால் இராமன் தன்னை லட்சியம் செய்யவில்லை என்று கருதினாள். இராமன் இல்லாதபோது சீதையை எடுத்துப் போக முயன்றாள். அந்தச் சமயத்திலே அருகிலே காவல் நின்ற இளையவன் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விரட்டிவிட்டான்.



நசையாலே மூக்கு இழந்து
        நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ்
        மாசுண்டது ஆகாதோ
திசை யானை விசை கலங்கச்
        செருச் செய்து மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து
        இராவணவோ! இராவணவோ!

சூர்ப்பணகை அலறத் தொடங்கினாள்.

“ஓ இராவணா! ஓ இராவணா!” என்று பெருங்குரல் எடுத்துத் தன் அண்ணனை அழைத்தாள்.

“எட்டுத் திக்கிலும் உள்ள யானைகளை வென்று, அவற்றின் கொம்புகளை ஒடித்து அடக்கிப் புகழ்பெற்ற இராவணனே! ஆசையினாலே நான் என் மூக்கைப் பறிகொடுத்து விட்டேன். இது உன் புகழுக்கு இழுக்கு அன்றோ? நின் புகழுக்குக் களங்கம் வராதோ.”

திசை யானை– எட்டுத் திக்கிலும் உள்ள யானை; வசை கலங்க– தன் சினவேகம் அடங்க; செருச்செய்து– அவற்றுடன் போர் செய்து; மருப்பு ஒசித்த– கொம்புகளை ஒடித்த; இசையாலே பெயர் எழுது– புகழாலே விளங்கப் பெற்ற; இராவண ஓ! இராவண ஓ! –இராவணனே; நசையாலே–ஆசையினாலே; மூக்கு இழந்து–என் மூக்கைப்பறிகொடுத்து; நான் பட்ட– நான் அடைந்த; நாண் இலா– வெட்கம் கெட்ட; வசையாலே–பழியினாலே; நின் புகழ்– உனது புகழும்; மாசுண்டது ஆகாதோ– களங்கம் அடையாதோ; (ஆகும் என்றபடி)

திசை யானை எட்டாவன, வருமாறு:

1. ஐராவதம் 2. புண்டரீகம் 3. வாமனம் 4. குமுதம் 5. அஞ்சனம் 6. புஷ்பதந்தம் 7. சார்வபெளமம் 8. சுப்பிரதீகம்.

உரன் நெரிந்து விழ என்னை
        உதைத்து உருட்டி மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க
        நான் இருந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ?
        இவை படவும் கடவேனோ?
அரன் இருந்த மலை எடுத்த
        அண்ணாவோ! அண்ணாவோ!

“சிவன் இருந்த கயிலாய மலையைப் பெயர்த்த என் அண்ணா!

என்னை உதைத்து உருட்டி என் மூக்கை அறுத்தமானிடன் பெருமிதங்கொண்டு தன் தோள் கண்ட வண்ணம் இன்னும் இருக்கிறானே! நான் புலம்புகிறேனே! கரன் பாதுகாப்பில் இருக்கும் வனம் இதுவன்றோ! எனக்கு இந்த கதி நேரலாமோ?”

இவ்விதம் புலம்பிவிட்டு கரதூஷணர்களிடம் சென்று முறையிட்டாள் சூர்ப்பணகை அவர்களும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு இராம லட்சுமணர்களுடன் போர் செய்ய வந்தார்கள். அவர்களும் அவர்களுடன் வந்த படைகளும் பொடிப் பொடியாகச் சிதறி அழியும்படி போர் செய்தனர் இராம லட்சுமணர்.

அரன் இருந்த–சிவபெருமான் எழுந்தருளிய; மலை எடுத்த– கயிலாய கிரியைப் பெயர்த்த; ஓ அண்ணா! உரன் நெரிந்து விழ– என் மார்பு நெரிபட்டு நான் கீழே விழ; என்னை உதைத்து– என்னைக் காலால் உதைத்து; உருட்டி– நான் உருண்டு விழச் செய்து; மூக்கு அரிந்த– என் மூக்கை அறுத்த; நரன்– மானிடன்; இருந்து– இன்னமும் உயிருடன் இருந்து; தோள் பார்க்க– தன் தோள் வலி கண்டு பெருமிதம் அடைய; நான் இருந்து– நான் தனியே இருந்து கொண்டு; புலம்புவதோ? கரன் இருந்த வனம் அன்றோ?; இவை படவும்– இவையாவும் இருக்கவும்; கடவேனோ– நமது ஆட்சியில் நான் இக்கதி அடைவேனோ?

தலை சிந்தின; வழி சிந்தின;
        தழல் சிந்தின; தரைமேல்
மலை சிந்தினபடி சிந்தின
        வருசிந்துர மழைபோல்
சிலை சிந்தின; கணை சிந்தின
        திசை சிந்தின; திசையூடு
உலை சிந்தின; பொறி சிந்தின
        உயிர் சிந்தின உடலம்.

தலைகள் சிந்தின; விழிகள் சிந்தின; நெருப்புப் பொறி பறக்கும் விழிகள் சிதறின; தரையிலே யானைகள் மலை போல் விழுந்தன; இராமன் விட்ட அம்புகள் எல்லாத் திக்குகளிலும் மழை போல் உதிர்ந்தன; கொல்லன் உலைக்களத்திலிருந்து கிளம்பும் நெருப்புப் பொறிபோல் அரக்கர் தம் உடல்கள் சிதறின. உயிர்கள் சிதறின.

தலைசிந்தின– அரக்கர்களது தலைகள் சிதறின; தழல் சிந்தின விழி சிந்தின– தீப்பொறி கக்கிய அவர் தம் விழிகள் சிந்தின; தரைமேல்– பூமியிலே; மலை சிந்தினபடி– மலைகள் சிதறி விழுந்தன போல். வருசிந்துரம்–எதிர்த்து வந்த யானைகள்; சிந்தின–சிதறி விழுந்தன; மழைபோல் சிலை சிந்தின கணை–மழைபோல் இராமன் வீசிய அம்புகள்; திசை சிந்தின–எல்லாத் திக்குகளிலும் சிதறின; திசை ஊடு–அத்திக்குகளில் எல்லாம்; உலை சிந்தின பொறி சிந்தின உடலம் –கொல்லன் உலைக் களத்திலிருந்து சிதறிய நெருப்புப் பொறிபோல் உடல்கள் சிதறின; உயிர் சிந்தின.

அரக்கர் படைகள் எல்லாம் அழிந்து போயின. கரன் மாண்டான்; தூஷணனும் மாண்டான்.

மூக்கு அறுபட்ட சூர்ப்பணகை இலங்கை சென்றாள். அவளது அலங்கோலங் கண்ட இலங்கை மக்கள் தமக்குள் பின் வருமாறு பேசிக்கொண்டனர்.

போர் இலான் புரந்தரன்
        ஏவல் பூண்டான்
ஆர் உலாம் நேமியான்
        ஆற்றல் தோற்றுப் போய்
நீரினான்; நெருப்பினான்;
        பொருப்பினான் இனி
ஆர் கொலாம் ஈது?” என
        அறைகின்றார் சிலர்

இவள் மூக்கை அறுத்தவர் எவராக இருப்பார்? தேவர்களின் தலைவன் இந்திரனாக இருப்பானோ? அன்று; அவன் தான் நம் இராவணனுடன் போர் செய்ய முடியாமல் தோற்று அவனுக்கு ஏவல் செய்கிறானே. திருமாலோ? அன்று. அவன் தான் இராவணனை எதிர்க்க முடியாமல் பாற்கடலில் ஒளிந்துக் கொண்டானே, சிவனோ? அவன்தான் கயிலையில் இருக்கிறானே.

பின் எவராயிருப்பர்?

சிலர்–சில அரக்கர்; புரந்தரன்–இந்திரன்; போர் இலான்–போர் செய்ய முடியாது தோற்றுப்போய்; ஏவல் பூண்டான்–இராவணன் ஏவல் செய்கிறான்; ஆர் உலாம்–கூரிய; நேமியான்–சக்கரம் உடைய திருமால்; ஆற்றல் தோற்றுப் போய்–போரிலே தோற்று வலிவிழந்து; நீரினான்–கடலில் புகுந்து கொண்டான்; நெருப்பினான்–தீயுமிழ் கடவுளாகிய சிவபெருமான்; பொருப்பினான்–கையிலங்கிரியிலேயுளான்; ஈது–இவ்வாறு மூக்கை அறுத்தவர்; யார் கொல்–யாவராயிருக்க முடியும்? என அறைகின்றனர்–என்று ஒருவரை மற்றொருவர் வினவுகின்றனர்.

முழவினில், வீணையில் முரல்
        நல் யாழில்
தழுவிய குழலினில் சங்கில்
        தாரையில்
எழு குரல் இன்றியே
        என்றும் இல்லது ஓர்
அழுகுரல் பிறந்தது அவ்
        இலங்கைக்கு அன்று அரோ.

அன்றையதினம் இலங்கையிலே ஓர் அழுகுரல் தோன்றியது. வீணையின் நாதமும் யாழின் மெல் ஓசையும், முழவின் முழக்கவும், குழலின் ஓசையும் எல்லாம் ஓய்ந்தன; ஓய்ந்தன, ஓய்ந்தே போயின!

முழவினில்– மத்தளத்தினின்றும்; வீணையில்– வீணையீனின்றும்; முரல்– ஒலிக்கின்ற; நல்யாழினில்– நல்ல யாழினின்றும்; தழுவிய– இசை தழுவிய குழலினில்– புல்லாங் குழலினின்றும்; சங்கில்– சங்க வாத்தியங்களினின்றும்; தாரையில் ஒழுங்காகத் தொடர்ந்து வரும்; எழுகுரல்– எழுகின்ற குரல்; இன்றியே– இல்லாமலே; என்றும் இல்லது– என்றும் இல்லாத; ஓர் அழுகுரல்– ஒப்பற்ற அழுகைக் குரல்; அன்று– அன்றைய தினம்; அவ் இலங்கைக்கு– அந்த இலங்கையில்; பிறந்தது– தோன்றியது.

மடித்த பில வாய்கள் தொறும்
        வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள்
        சுருக்கொள உயிர்ப்பக்
கடிதத் கதிர் வாள் எயிறு
        மின் கனல மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி
        “யாவர் செயல்?” என்றான்.

இலங்கையிலே

இராவணன் தனது சிங்காதனத்தில் வீற்றிருக்கிறான். மூக்கறுபட்ட சூர்ப்பணகை ஓடி வருகிறாள். அவன் முன் விழுந்து புரண்டு அழுகிறாள். கண்டான் இராவணன்; கொண்டான் கோபம். பல்லை நறநறவென்று கடித்தான்; உதட்டை மடித்தான்; அனல் கக்கும் பெருமூச்சு விட்டான். “மூக்கை அறுத்தவன் எவன்?” என்று இடிபோல முழங்கினான்.



(இராவணன் என்ற வடமொழிப் பெயர் கூச்சலிடுபவன் என்றும் கூச்சலிடச் செய்பவன் என்றும் பொருள்படும். சிவனது கயிலங்கிரியை இராவணன் பெயர்த்த போது அதற் கீழே அவனுடைய விரல்கள் நசுங்கின. வலி பொறுக்க முடியாமல் பேரிரைச்சல் இட்டான் அதனால் இப்பெயர் வந்தது.) மடித்த– கோபத்தால் உதடு மடிக்கப்பட்ட; பிலம் வாய்கள் தொறும்– குகை வாய் போன்று; ஆழ்ந்து அகன்று நீண்டுள்ள தனது பத்து வாய்களிலும்; புகை வந்து முந்த– கோபத்தால் புகை வெளிச் செல்லவும் துடித்த தொடர் மீசைகள்– பட பட என்று துடித்த நெடுந்தூரம் தொடர்ச்சியாக உள்ள மீசை; சுருக்கொள்ள– தீப்பிடிக்கும் படி; உயிர்ப்ப– சினத்தீயுடன் கலந்த மூச்சு விடவும்; கடித்த–கோபத்தால் நறநறவென்று கடித்த; வாள் எயிறு– கூர்மையும் ஒளியும் கொண்ட பற்கள்; மின் கனல– மின்னல் போல் ஒளி வீச; மேகத்து இடித்த உரம் ஒத்து– மேகம் இடித்த இடிபோல; உரறி– பெரு முழக்கம் செய்து; யாவர் செயல் என்றான்– இது எவருடைய செயல் என்று கேட்டான்.

“கானிடை அடைந்து
        புவி காவல் புரிகின்றார்
மீன் உடை நெடுங் கொடியினோன்
        அனையர் மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர்
        உவமை இல்லார்
மானிடர் தடிந்தனர்கள்
        வான் உருவி” என்றாள்.

மானிடர் இருவர் காட்டிலே வந்து அரசு செலுத்துகின்றனர். ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவரை ஒப்பாரிலர்; மன்மதன் போன்றார்; மனித உடல் தாங்கியவர்; வாளை உருவி என் மூக்கை அரிந்து விட்டனர்.



மேல்– மேலே உள்ள உலகங்களிலும்; கீழ்– கீழே உள்ள உலகங்களிலும்; உவமை இல்லார்– உவமை கூறுதற்கு வேறு எவரும் இல்லாதவர்; மானிடர்– மானிடர்; ஊன் உடை– மாமிச தேகம் கொண்டார்; கானிடை அடைந்து– காட்டிலே வந்து தங்கி; புவி காவல் புரிகின்றார் ராஜ்யபாரம் செய்கின்றனர்; மீன் உடை– மீன் பொறிக்கப் பெற்ற; நெடுங்கொடியினோன்– நீண்ட கொடியுடைய மன்மதன்; அனையர்– போன்றோர்; வாள் உருவி– தம் வாளை உருவி; தடிந்தனர்கள்– என் மூக்கை அறுத்துவிட்டார்கள்.

“மன் மதனை ஒப்பர்
        மணி மேனி; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள்
        தோளின் வலி தன்னால்;
என் அதனை இப்பொழுது
        இசைப்பது? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஓர்
        இமைப்பின் நனிவில்லால்”

மன்மதன் போலும் அழகினர்; அழகு மட்டும் உடையவர் அல்லர்; வடக்கே உள்ள மேரு மலையின் செருக்கை அடக்கும் புயவலியுடையவர்; கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் ஏழுலகங்களையும் அழிக்கும் வில் திறம் படைத்தோர்; அதை இப்பொழுது சொல்வதில் பயன் என்ன?

மணிமேனி– உடல் அழகில்; மன்மதனை ஒப்பர்– மன்மதனுக்கு ஒப்பாவார்; திரள்தோளின் வலி தன்னால்– தமது திரண்ட தோள்களின் வலிமையால்; வடமேரு தன்– வடக்கே உள்ள மேருமலையின்; மதன்– செருக்கை; அழிப்பர்– அழிக்க வல்லவர்; வில்லால்– வில் வலிமையினால்; ஓர் இமைப்பில்– கண் மூடிக் கண் திறக்கும் முன்; உலகு ஏழின்– ஏழு உலகங்களின்; நல் மதன்– சிறந்த வலியை; அழிப்பர்– அழிப்பார்கள்; அதனை இப்பொழுது இசைப்பது ஏன்?– அதனை இப்பொழுது எவ்வாறு எடுத்து இயம்புவேன்?

மருந்து அனைய தங்கை
        மணி நாசி வடிவாளால்
அரிந்தவரும் மானிடர்
        அறிந்தும் உயிர் வாழ்வார்
விருந்து அனைய வாளொடும்
        விழித்து இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும்
        இன் உயிர் கொடு இன்னும்

ஒரே ஒரு தங்கை; எஞ்சியிருக்கிறாள்; தேவாமிர்தம் போல் கிடைத்தற்கு அரியவள், அவளது மூக்கை அரிந்துவிட்டனர். அரிந்தவரோ மானிடர். அவரோ இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்;

சிவபெருமான் அளித்த சந்திரஹாஸம் எனும் வாளை வைத்துக்கொண்டு, இது வரை அதை உபயோகிக்காமல் போற்றி வைத்து, இராவணன் என்பவன் இன்னமும் இருக்கிறான்.

இவ்வாறு இராவணன் தன்னைப் படர்க்கையில் பழித்து கொண்டான்.

மருந்து அனைய– தேவாமிர்தம்போல் கிடைத்தற்கு அரிய; தங்கை– தங்கையாகிய சூர்ப்பணகையின்; மணி நாசி– அழகிய மூக்கினை; வடிவாளால்– கூரிய தம் வாளினால்; அரிந்தவரும் மானிடர்– அறுத்தவரும் அற்ப மானிடரே; அறிந்தும்– இக் கொடும் செயலை அறிந்த பிறகும்; உயிர் வாழ்வார்– அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்; இராவணனும்– இராவணன் என்ற பெயர் கொண்டவனும்; விருந்து அனைய வாள் ஒடும்– புதிதான வாளோடும்; விழித்து– தன் இருபது கண்களும் கொட்ட விழித்துப் பார்த்துக்கொண்டு; இறையும் வெள்காது– சிறிதும் வெட்கமில்லாமல்; இன் உயிர் கொடு– தன் இனிய உயிரை வைத்துக்கொண்டு; இருந்தனன்– உயிரோடு இருக்கிறான்.

என்று உரை செயா,
        நகை செயா எரி விழிப்பான்
“வன் துணை இலா இருவர்
        மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய
        குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர்
        நிருதர்” என்றான்.

“காட்டிலே உனக்குக் காவலாக இருந்த கரன் முதலானோர் என்ன செய்து கொண்டிருந்தனர்? துணை வலிமையற்ற இருவரேயாக உள்ள அம் மானிடரைக் கொன்றனர் இல்லையா?” என்று கேட்டான். எப்படிக் கேட்டான்? கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான்.

என்று உரை செயா– என்று சொல்லி, நகை செயா– சிரித்து; எரி விழிப்பான்– தீப்பொறி பறக்க விழிப்பவனாய்; (சூர்ப்பணகையை நோக்கி) நெடிய குன்றுடைய கானில் நின்ற– நீண்ட மலைகளையுடைய காட்டிலே உனக்குக் காவலாய் நின்ற; கரனே முதலினோர்– கரன் முதலாக உள்ள; நிருதர்– அரக்கர்; வன்துணை இலா– வலிய துணை இல்லாத; இருவர் மானிடரை– இருவரே ஆக உள்ள அம் மனிதரை; வாளால்–தமது வாளினால்; கொன்றிலர்களா– கொன்றாரில்லையா? என்றான்– என்று கேட்டான்.

அற்று அவன் உரைத்த லோடும்
        அழுது இழி அருவிக் கண்ணாள்
எற்றிய வயிற்றள், பாரினிடை
        வீழுந்து ஏங்குகின்றாள்
“சுற்றமும் தொலைந்தது ஐய!
        நொய்து” எனச் சுமந்த கையள்
உற்றது தெரியும் வண்ணம்
        ஒரு வகை உரைக்கலுற்றாள்

அப்படி அவன் கேட்ட உடனே கண்களிலிருந்து அருவி போல் நீர் பொழிந்து கொண்டு, வயிற்றிலே அடித்துக் கொண்டு தரையிலே கிடந்து புரண்டு அழுது கொண்டிருந்த சூர்ப்பணகை, தலைமீது இருகைகளையும் வைத்துக்கொண்டு “நம் சுற்றம் தொலைந்தது ஐயா!” என்று அலறினாள். கானிலே நிகழ்ந்தவற்றை ஒருவாறு உரைக்கலானாள்.

அற்று அவன் உரைத்தலோடும்– அவ்வாறு இராவணன் கேட்ட அளவில்; அழுது இழி அருவி கண்ணாள்– அழுது வீழ்கின்ற அருவி போன்று நீர் சொரியும் கண்ணினள் ஆகியவளும்; எற்றிய வயிற்றள்– தனது இரு கைகளாலும் வயிற்றிலே அடித்துக் கொண்டவளும்; பாரின் இடை வீழ்ந்து– பூமியிலே விழுந்து; ஏங்குகின்றாள்– அழுது புரண்டு வருந்துகின்றவளும் ஆகிய சூர்ப்பணகை (அவனை நோக்கி) ஐய– ஐயனே! சுற்றமும் அக் கரன் முதலாகிய நம் சுற்றமும்; நொய்து தொலைந்தது– எளிதில் அழிந்து போயிற்று; என– என்று கூறி; சுமந்த கையாள்– தலைமேல் கையை வைத்துக்கொண்டு; உற்றது தெரியும் வண்ணம்– அங்கே நடந்தது தெரியும்படி; ஒரு வகை– ஒருவாறு; உரைக்கலுற்றாள்– சொல்லத் தொடங்கினாள்.

“சொல் என்தன் வாயில் கேட்டார்
        தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார்
        கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங்கண்
        இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
        ஏறினர் விண்ணின்” என்றாள்.

“மூக்கறுபட்ட செய்தியை நான் வந்து கரன் முதலியோரிடம் சொன்னேன். சொல் கேட்ட அளவில் சேனைகள் பின் தொடரப் புறப்பட்டனர். செந்தாமரை போலும் அழகிய கண்களை உடைய அந்த இராமன் எனும் பெருமை மிக்கோன் ஒரே வில்லினால் மூன்றே நாழிசையில் அவர்கள் எல்லாரையும் விண் உலகுக்கு அனுப்பிவிட்டான்” என்றாள்.

சொல்– நான் கூறிய அச் சொற்களை; என்தன் வாயில் கேட்டார்– என் வாயினாலே நான் சொல்லக்கேட்டனராய்; தொடர்ந்து எழு சேனையோடும்– தம்மைப் பின் தொடர்ந்தெழுந்த சேனைகளோடும்; கல் என்ற ஒலியில்– கல் என்ற ஒலியோடு; சென்ற கரன் முதல் காளை வீரர்– கரன் முதலான வீரக் காளைகள்; எல் ஒன்று– சூரியனுடைய கிரணங்கள் பட்ட; கமலம்– தாமரைப் போல்; செங்கண்– சிவந்து ஒளிரும் கண்களை உடைய; இராமன் என்று இசைத்த– இராமன் எனும் பெயர் கொண்ட; ஏந்தல்– பெருமைமிக்க ஒருவனது; வில் ஒன்றில்– ஒரே வில்லால்; கடிகை மூன்றில்– மூன்றே நாழிகை அளவில்; விண்ணில் ஏறினர்– விண்ணுலகு புகுந்தனர்; என்றாள்.

ஆயிடை எழுந்த சீற்றத்து
        அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உருக்கும் நெய்யில்
        சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய
“நீ இடை இழைத்த குற்றம்
        என்னை கொல்? நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும்
        வலிந்து அவர் கொய்ய” என்றான்.

அந்த மானிடர் இவ்வாறு உன் மூக்கையும், உதடுகளையும் அரியும் படியாக நீ அவர்களுக்குச் செய்த குற்றம் என்ன? என்று கேட்டான் இராவணன். யாரை நோக்கி? சூர்ப்பணகையை நோக்கி.

அ இடை– அப்பொழுது இராவணன்; எழுந்த– பொங்கி எழுந்த; சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி– கோபத்தில் அழுந்திய தன் துன்பம் மாறுபட்டு வேறாகி; தீ இடை உகுத்த நெய்யில்– நெருப்பிலே வார்த்த நெய்போல; சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய– தான் கொண்ட கோபத்திற்கு வலியை உண்டாக்க; அவர்– அந்த மானிடர்; நின்னை– உன்னை; இன்னே– இவ்விதமாக; வாய் இடை இதழும் மூக்கும்– வாயிடமான உதடும் மூக்கும்; வலிந்தனர் கொய்ய– வலிந்து அரியும்படியாக; நீ இடை இழைத்த குற்றம் என்? – நீ அவரிடம் செய்த குற்றம் யாது? என்றான்– என்று கேட்டான்.

“என் வயின் உற்ற குற்றம்
        யாவர்க்கும் எழுத ஒண்ணாத்
தன்மையன் இராமனோடும்
        தாமரை தவிரப் போந்தாள்
மின் வயின் மருங்குல் கொண்டாள்
        வேய் வயின் மென்தோள் கொண்டாள்
பொன் வயின் மேனி கொண்டாள்
        பொருட்டினால் புகுந்தது” என்றாள்.

நீ செய்த குற்றம் என்ன? என்று கேட்ட இராவணனுக்குப் பதில் சொல்கிறாள் சூர்ப்பணகை. என்ன சொல்கிறாள்? “ஓவியற்கு எழுத ஒண்ணா உருவத்தனாகிய இராமன்பால் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளோ! தாமரை மலரை நீங்கி வந்த திருவினாள்; மின்னல் போலும் இடையுடையாள்; மூங்கில் போலும் மெல்லிய தோள் உடையாள்; பொன் போன்ற மேனியாள்; அவள் பொருட்டால் விளைந்தது” என்றாள்.

(அது கேட்ட சூர்ப்பணகை) என்வயின் உற்ற குற்றம்– என்பால் ஏற்பட்ட தவறு (யாது எனில்); யாவர்க்கும் எழுத எண்ணாத– சித்திரக்கலை வல்லார் எவர்க்குமே எழுத முடியாத; தன்மையன்– சிறப்பு அமைந்த; இராமனோடும்– அந்த இராமனோடும்; தாமரை தவிரப் போந்தாள்– தனக்கு இருப்பிடமான தாமரை மலரைவிட்டு வந்தவளும்; மின்வயின் மருங்குல் கொண்டாள்- மின்னலிடமிருந்து தனது இடையைப் பெற்றவளும்; வேய்வயின் மென்தோள் கொண்டாள். மூங்கிலிடமிருந்து தன் மென்மையான தோள்களைப் பெற்றவளும்; பொன் வயின் மேனி கொண்டாள்- பொன்னிடமிருந்து தன் மேனியைக் கொண்டவளுமாகிய ஒருத்தி; பொருட்டினால்- காரணத்தால்; புகுந்தது என்றாள்- நிகழ்ந்தது என்றாள்.


“இன்னவள் தன்னை உன் பால்
        உய்ப்பல் என்று எடுக்கல் உற்ற
என்னை அவ் இராமன் தம்பி
        இடை புகுந்து இலங்குவாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்:
        முடிந்தது என் வாழ்வு; முன் நின்
சொன்னபின் உயிரை நீப்பான்
        துணிந்தனென்” என்னச் சொன்னாள்.

“இப்படிப்பட்ட சீதை என்பாளைத் தூக்கி வந்து உன்பால் சேர்க்க எண்ணி அவள் பால் நண்ணிய என்னை, இராமனின் தம்பியாகிய லட்சுமணன் என்பான் வந்து இடையே புகுந்து நான் அவளைத் தூக்கு முன் என் மூக்கை அரிந்து விட்டான். என் வாழ்வு நாசமாயிற்று. இதனை உன் பால் தெரிவித்துவிட்டு உயிர் துறப்பது என்று முடிவு செய்தேன்” என்றாள்.

இன்னவள் தன்னை– இப்படிப்பட்ட அழகியாகிய சீதை என்பாளை; உன்பால் உய்ப்பல் என்று உன்னிடம் சேர்க்கக் கருதி; எடுக்கல் உற்ற என்னை- தூக்கிக்கொண்டு வர அவள் அருகில் சென்ற என்னை: அ இராமன் தம்பி– அந்த இராமனுடைய தம்பியாகிய லட்சுமணன்; இடை புகுந்து– நடுவே ஓடி வந்து புகுந்து; இலங்குவாளால்– தன்னிடம் விளங்கிய ஒரு வாளினால்; முன்னை– அவளை நான் எடுக்கப் புகு முன்பே; மூக்கு அரிந்துவிட்டான்– என் மூக்கை அறுத்து விட்டான்; என் வாழ்வும் முடிந்தது– அதனால் என் வாழ்வும் முடிந்தே போய்விட்டது; உன்னில் சொன்ன பின்– இவற்றையெல்லாம் உன் பால் கூறிய பின்; உயிரை நீப்பான் துணிந்தனென்– உயிர் துறப்பது என்று முடிவு செய்தேன்; என்ன– என்று சொன்னாள்.

மஞ்சு ஒக்கும் அளக ஓதி
        மழை ஒக்கும் வடித்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய
        பவளத்தை விரல்கள் ஒக்கும்
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
        கொண்டவள் வதனம் ஐய,
கஞ்சத்தின் அளவிற்றேனும்
        கடலினும் பெரிய கண்கள்
.

சீதையின் முகத்திலே வந்து தொங்குகின்ற சுருண்ட கூந்தல் மேகம் போல் இருக்கும். வாரி முடித்த கூந்தல் நீர் உண்ட கருமேகம்போல் இருக்கும். அவள் பாதங்களோ செம்பஞ்சு போல் இருக்கும். விரல்களோ சிவந்த பவளம் போல் இருக்கும். முகமோ தாமரை மலர் போன்றது. கடல் போன்ற அகல கண்கள். அவள் வாயினின்றும் உதிர்க்கின்ற சொற்கள் அமுதம்

ஐய– ஐயனே! அம்சொற்கள்– அழகிய சொற்களை; அமுதில்– அமுதத்திலிருத்து; அள்ளிக்கொண்டவள்– வாரி எடுத்துக் கொண்டவள் (அவள்); வதனம்– அவளது முகம்; கஞ்சத்தின் அளவிற்றேனும்– தாமரை மலர் அளவினது ஆயினும்; கண்கள்– அவளுடைய கண்கள்; கடலினும் பெரிய– கடலை விட அகன்று ஆழமானவை; பெரியவை; அளக ஓதி– முன்னே குழைந்து விளங்கும் கூந்தல்; மஞ்சு ஒக்கும்– மேகம் போலிருக்கும்; வடித்த கூந்தல்– பின்னே வாரி முடித்துத் தொங்க விடப்பட்ட கூந்தலோ; மழை ஒக்கும்– நீருண்ட கருமேகம் போலிருக்கும்; அடிகள்– அவள் பாதங்களோ; பஞ்சு ஒக்கும்– செம்பஞ்சு போலிருக்கும்; விரல்கள்– அவளுடைய விரல்கள்; செய்ய பவளத்தை ஒக்கும்– சிவந்த பவளம்போல் இருக்கும்.

வில் ஒக்கும் நுதல் என்றாலும்
        வேல் ஒக்கும் விழி என்றாலும்
பல் ஒக்கும் முத்து என்றாலும்
        பவளத்தை இதழ் என்றாலும்
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வா ஆல்
        சொல்லலாம் உவமை உண்டோ?
நெல் ஒக்கும் புல் என்றாலும்
        நேர் உரைத்தாக வற்றோ?

அவளுடைய புருவங்கள் விற்போன்றவை என்று சொன்னாலும், விழிகள் வேல் போன்றவை என்று சொன்னாலும், முத்துப்போன்ற பற்கள் என்று சொன்னாலும், பவளம் போலும் உதடுகள் என்று சொன்னாலும் சொல் பொருந்துமே அன்றிப் பொருள் பொருந்தாது. உவமை சொல்லக் கூடியது எதுவுமே இல்லை. புல்மாதிரி இருக்கும் நெல் என்றால் அது சரியாகுமா?

நுதல்– அவளுடைய புருவம்; வில் ஒக்கும்– வில் போலிருக்கும்; என்றாலும்– என்று சொன்னாலும்; விழி– கண்; வேல் ஒக்கும்– வேல் போலிருக்கும்; என்றாலும்– என்று சொன்னாலும்; பல்– அவளுடைய பற்கள்; முத்து ஒக்கும் என்றாலும்– முத்துப் போன்றவை என்று சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும்– பவளத்தை அவளது உதடுகளுக்குச் சமமாகச் சொன்னாலும்; சொல் ஒக்கும்– சொல் அளவில் ஒத்திருக்கும்; பொருள் ஒவ்வா– பொருள் அமைதி தகுதி பெறா; ஆல்– ஆதலால்; சொல்லலாம் உவமை உண்டோ?–

சொல்லத்தக்க உவமானப் பொருள் இந்த உலகில் உண்டோ? இல்லை. நெல் புல் ஒக்கும் என்றாலும்– நெல் புல்லை ஒத்திருக்கும் என்று சொன்னாலும்; நேர் உரைத்தாக அற்றோ? - சொல் அளவில் தகுதி பெறுமே அன்றிப் பொருளில் தகுதி பெறுமோ; பெறாது அன்றோ?

தோளையே சொல்லுகேனோ?
        சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ?
        அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால்
        தனித்தனி விளம்பல் ஆற்றேன்?
நாளையே காண்டி அன்றே
        நான் உனக்கு உரைப்பது என்னோ
.

அவளுடைய தோளின் அழகைச் சொல்லுவேனா? ஒளி வீசும் முகத்திலே உலவும் வாள் போன்று கூரிய விழிகளைச் சொல்லுவேனா? ஏனைய உறுப்புகளைச் சொல்வேனா? எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? தனித்தனியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன். நாளைக்குத்தான் நீ போகிறாயே! நேரில் கண்டு கொள். நான் சொல்வது எதற்கு?

தோளையே சொல்லுகேனோ– அவளுடைய தோள் அழகைச் சொல்வேனா? சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? – ஒளி பொருந்திய அவள் முகத்தில் உலவுகின்ற வாள் போலும் கண்களைச் சொல்வேனோ? அல்லவை வழுத்துகேனோ? – மற்றும் சொல்லக்கூடிய அவயவங்கள் பற்றிக் கூறுவேனோ? மீளவும் திகைப்பது அல்லால்– வருணித்துச் சொல்லும்போது மீண்டும் திகைக்கிறேனே அன்றி; தனித்தனி விளம்பல் ஆற்றேன்– அவற்றைத் தனித்தனி எடுத்துச் சொல்ல முடியாதிருக்கிறேன். நாளையே காண்டி அன்றோ– நாளை நீ காணப்போகிறாய் அல்லவா? நான் உனக்கு உரைப்பது என்னோ– நான் சொல்வது எதற்கு.

பாகத்தில் ஒருவன் வைத்தான்;
        பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்;
        அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த என்னை
        வென்ற நுண் இடையை நீயும்
மாகத் தோள் வீர, பெற்றால்
        எங்ஙனம் வைத்து வாழ்தி?

உமையைத் தனக்கு உரியவளாகப் பெற்றான் சிவன். தன் இடது புறம் வைத்துக் கொண்டான். திருமகளைத் தனக்கு உரியவளாகப் பெற்றான் திருமால்; மார்பிலே வைத்துக் கொண்டான். கலைமகளைத் தனக்கு உரிமையாகப் பெற்றான் பிரமன்; நாவிலே வைத்துக் கொண்டான். சீதையைப் பெற்றால் நீ எவ்வாறு வைத்து வாழ்வாய்? 

இவ்வாறு தம் ஐயனைப் புகழ்கிறாள் அந்தச் சூர்ப்பணகை. அபசகுனத்தின் அறிகுறி இங்கேயே தொனிக்கிறது “சீதையைப் பெற்றால் நீ எங்ஙனம் வைத்து வாழ்வாய்?” என்று கேட்கிறாள். “வாழமாட்டாய்; வீழ்வாய்” என்பது தொனிக்கிறது.

மாகத் தோள் வீர– பெரிய வானம் அளாவிய தோள்களை உடைய வீரனே! ஒருவன் பாகத்தில் வைத்தான்– மும்மூர்த்திகளில் ஒருவனாகிய சிவன் தனது மனைவியாகிய உமையை இடது பாகத்தில் வைத்துக்கொண்டான்; ஒருவன்– திருமால்; பங்கயத்து இருந்து பொன்னை– தாமரையில் நின்ற திருமகளை; ஆகத்தில் வைத்தான்– தனது மார்பில் வைத்துக் கொண்டான்; அந்தணன்– பிரமன்; நாவில் வைத்தான்– (தனது மனைவியாகிய கலைமகளை) தனது நாவிலே வைத்துக் கொண்டான்; நீயும் மேகத்தில் பிறந்த மின்னை– மேகத்தில் பிறந்த மின்னலை; வென்ற– வெற்றிகண்ட; நுண் இடையை– நுண்ணிய இடையாளாகிய சீதையை; பெற்றால்– அடையப் பெற்றால்; எங்ஙனம் வைத்து வாழ்தி? - எவ்வாறு வைத்து வாழ்வாய்? (வாழ மாட்டாய் என்ற பொருள் இங்கே தொணிப்பது காண்க.)

இந்திரன் சசியைப் பெற்றான்;
        இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்;
        தாமரைச் செங்கணானும்
செந்திருமகளைப் பெற்றான்;
        சீதையைப் பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின், நன்மை
        அவர்க்கு இலை உனக்கே ஐயா.

தேவேந்திரன் இந்திராணியை மனைவியாகப் பெற்றான். ஆறுமுகப் பெருமானின் தந்தையாகிய சிவபெருமான் உமையைப் பெற்றான். செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் இலட்சுமியைப் பெற்றான். அவ்வாறே நீயும் சீதையைப் பெற்றாய் நன்மை யாருக்கு? அவருக்கா? இல்லை! உனக்கே.

ஐயா– ஐயனே; இந்திரன்– தேவேந்திரன்; சசியைப்பெற்றான்– இந்திராணியைத் தனக்குரியவளாகப் பெற்றான்; இரு மூன்று வதனத்தோன்– ஆறுமுகப் பெருமானின்; தந்தையும்– தந்தையாகிய சிவபெருமானும்; உமையைப் பெற்றான்– பார்வதியைப் பெற்றான்; தாமரை செங்கணானும்– செந்தமாரை போலும் கண்கள் கொண்ட திருமாலும்; செந்திருமகளைப் பெற்றான்– அழகிய இலட்சுமியைப் பெற்றான்; (அவ்வாறே) நீயும் சீதையைப் பெற்றாய்– நீயும் சீதையைப் பெற்றுவிட்டாய்; அந்தரம் பார்க்கின்– நன்மை உனக்கே அவர்க்கு இல்லை.

கரனையும் மறந்தான்; தங்கை
        மூக்கினைக் கடிந்தும் நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற
        பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
        அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்: கேட்ட
        மங்கையை மறந்திலாதான்.

சூர்ப்பணகை சொல்லக் கேட்ட மங்கையை மறவாத இராவணன், தன்னை முற்றிலும் மறந்தான்.

கரனும் பிறரும் மாய்ந்ததை மறந்தான்; தங்கையின் மூக்கை அறுத்தவன் திறனையும் மறந்தான்; அதனால் விளைந்துள்ள அவமானத்தையும் மறந்தான்; சிவனையும் வெற்றி கண்ட காமனின் அம்பினால் தாக்கப்பட்டுத் தான்பெற்ற வரனையும் மறந்தான்.

கேட்ட மங்கையை மறந்திலாதான்– இவ்வாறு சூர்ப்பணகை கூறக் கேட்ட சீதை எனும் மங்கையை மறந்திலாத இராவணன்; கரனையும் மறந்தான்– தம்பியாகிய கரன் மாண்டதையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்தும் நின்றான் உரனையும் மறந்தான்– தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த பின்னரும் நிற்கும் வீரனின் வலிமையையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்– அதனால் தனக்கு நேர்ந்த இழிவையும் மறந்தான்; அரனையும் கொண்ட– சிவனையும் வெற்றி கண்ட; காமன் அம்பினால்– மன்மதன் கணையினால்; முன்னை வரனையும் மறந்தான்– முன்பு தான் பெற்ற சிறந்த வரத்தையும் மறந்தான்.

“செந்தாமரைக் கண்ணோடும்
        செங்கனி வாயினோடும்
சந்தார் தடந்தோளொடும்
        தாழ் தடக்கைகளோடும்
அம்தார் அகலத்தொடும்
        அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அவ்வல்வில்
        இராமன்” என்றான்.

சூர்ப்பணகையோ இராமனையே எண்ணி எண்ணி இரவு முழுவதும் தூங்கவில்லை. இராவணன் கண்முன் எப்படி சீதையின் உரு தென்பட்டதோ அதே போல சூர்ப்பணகையின் கண்முன் எப்போதும் இராமனுடைய உருவே நின்று கொண்டிருந்தது.

அவள் சொன்னாள்,

“செந்தாமரை போன்ற கண்களுடனும், கோவைப்பழம் போல் சிவந்த வாயுடனும், அழகான தோள்களோடும், முழங்கால் வரை தொங்கும் கைகளுடனும், அகன்ற மார்புடனும், மலை போல் நிற்கிறானே இவன்தான் வில் தரித்த அந்த இராமன்” என்றாள்.

“செந்தாமரைக் கண்ணோடும்– செந்தாமரை போன்ற கண்களொடும்; செங்கனி வாயினோடும்– சிவந்த கோவைப்பழம் போன்ற வாயுடனும்; சந்து ஆர் தடம் தோளொடும்– அழகு நிறைந்த பெரிய தோள்களுடனும்; தாழ் தடக்கைகளோடும்– முழங்கால் அளவு தொங்குகின்ற பெரிய கைகளோடும்; அம்தார் அகலத்தொடும்– அழகிய மாலையணிந்த அகன்ற மார்புடனும்; அஞ்சனக் குன்றம் என– மை மலைபோல் வந்தான்– வந்தவனாகிய இவன்தான்; அவ் வல் வில் இராமன் என்றாள்– வலிய வில் உடைய இராமன் என்றாள்.

பொய் நின்ற நெஞ்சில் கொடியாள்
        புகுந்தாளை நோக்கி
நெய் நின்ற கூர் வாளவன்
        நேர் உறநோக்கு, “நங்காய்!
மைந் நின்ற வாள் கண் மயில்
        நின்று என வந்து என் முன்னர்
இந் நின்றவள் ஆம் கொல் இயம்பிய
        சீதை?” என்றான்.

 சூர்ப்பணகை மூட்டி விட்ட காமத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சீதையையே எண்ணி எண்ணி இரவு முழுவதும் உறங்கவில்லை இராவணன்.

காலையில் அவனைக் காண வந்தாள் சூர்ப்பணகை, “நன்றாகப் பார்! இதோ என் கண் முன் ஒரு பெண் நிற்கிறாளே! மை தீட்டப்பெற்று வாள் போலும் கண்களுடன் ஒரு மயில் வந்து நிற்பது போல் நிற்கிறாளே! இந்தப் பெண் தானா நீ சொன்ன அந்த சீதை நன்றாகப் பார்த்துச் சொல்” என்று கேட்டான் இராவணன்.

நெய் நின்ற கூர் வாளவன்– பகைவரது நிணம் தோய்ந்து நின்ற கூரியவாளாயுதத்தை உடைய இராவணன்; பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி– அங்கு வந்த பொய் சேர் மனத்தாளாகிய கொடிய சூர்ப்பணகையைப் பார்த்து; நங்காய்! - பெண்ணே! நேர் உற நோக்கு– நன்றாகப் பார்; மை நின்ற– மை தீட்டப்பட்ட; வாள் கண்– வாள் போலும் கண்களை உடைய; மயில் நின்று என– ஒரு மயில் வந்து நின்றது போல, வந்து என் முன்னர்– என் முன் வந்து; இந்நின்றவள் ஆம் கொல்– இதோ நிற்கின்றாளே; இவள்தானா? இயம்பிய சீதை– நீ சொன்ன சீதை.

“பேதாய்! பெண்ணைப் பற்றிக் கேட்கிறேன் நான், ஆணைப் பற்றிச் சொல்கிறாய் நீ. நாம் தான் மாயம் செய்வதில் வல்லவர் என்றால் மானிடர் நம்மினும் வல்லவரோ? நம்மிடமே வந்து மாயம் செய்கிறார்?”

இவ்வாறு கூறினான் இராவணன். அவனோ அந்தச் சீதையையே எண்ணி அவள் தன் எதிரே வந்து நிற்பாள் போல் காண்கிறான்; அவளோ இராமனையே இடைவிடாது எண்ணி எண்ணி அவனே தன் எதிர் வந்து நிற்பான் போல் காண்கிறாள். அவன் சீதையைக் கேட்கிறான். அவள் இராமனைச் சொல்கிறாள்.

இரண்டும் உரு வெளித் தோற்றமே! சமயம் பார்த்து மெதுவாக விண்ணப்பம் நீட்டுகிறாள் சூர்ப்பணகை. “நீ போய் சீதையைத் தூக்கிக்கொண்டு வந்து இன்பமடை, நான் இன்புறுவதற்கு இராமனை எனக்குக் கொடு” என்கிறாள்.

மீன் கொண்டு ஊடாடும் வேலை
        மேகலை உலகம் ஏத்தத்
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்
        சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
        வாள் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்
        இராமனைத் தருதி என்பால்!

வண்டு மொய்த்த மலர் கூந்தலும், சிற்றிடையும் கொண்ட சீதை என்கிற மான் போன்ற மங்கையைத் தூக்கிக் கொண்டு வந்து நீ இன்பம் அடைவாய் நான் இன்புறும் வண்ணம் இராமனை எனக்குக்கொடு.

மீன் கொண்டு– மீன்களைத் தன்னிடத்திலே கொண்டு; ஊடாடும்– அலை வீசுகிற; வேலை– கடலையே; மேகலை– மேகலாபரணமாக உடைய; உலகம்– இந்த உலகத்தினர்; ஏத்த– புகழும்படி; தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்– வண்டுகள் தனக்கு இடமாகத் திரியும் கூந்தல்; சிற்றிடை– சிறிய இடையையும் உடைய; சீதை என்னும் - சீதை என்கிற, மான் கொண்டு- மான் போலும் மங்கையைத் தூக்கிக்கொண்டு வந்து ஊடாடு நீ- நீ இன்புறுவாய்; உன் வாள்வலி- உன் ஆயுத வலிமையை, உலகம் காண- உலகத்தினர் கண்டு வியப்புறும் வண்ணம்; யான் கொண்டு ஊடாடும் வண்ணம் நான் கலந்து இன்புறும் விதமாக; என் பால்- என்னிடத்திலே, இராமனைத் தருதி- இராமனைக் கொண்டு வந்துகொடு.

மாரீசன் சுபாகு என இருவர்; சுந்தன் எனும் யக்ஷனுக்கும் தாடகைக்கும் பிறந்தவர்; அகஸ்திய முனிவரால் சபிக்கப்பெற்று அரக்கரானோர்: இராவணனுக்கு மாமன் முறையினர்; மாயம் வல்லவர்.

தாடகையின் மூத்த புதல்வன் மாரீசன். இரண்டாவது புதல்வன் சுபாகு. இம்மூவரும் விசுவாமித்திர முனிவரின் வேள்வியை அழிக்கப் போந்தனர். இராமனது அம்புக்கு ஆற்றாது ஒடிப் பிழைத்தான் மாரீசன். தாடகையும் சுபாகுவும் கொல்லப்பட்டனர்.

“சந்த மலர்த் தண் கற்பக
        நீழில் தலைவர்க்கும்
அந்தகனுக்கும் அஞ்ச
        அடுக்கும் அரசு ஆள்வாய்
இந்த வனத்து என் இன்னல்
        இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் சொல்லுதி”
        என்றான் மருள்கின்றான்.

சூர்ப்பணகை ஊட்டிய காமம் என்ற நஞ்சு தலைக்கு ஏறி நிற்பத் தவிக்கிறான் இராவணன், எவ்வாறேனும் அச்சீதையை அடைய விரும்புகிறான். சீதையை மாயத்தால் தூக்கி வரத் தீர்மானிக்கிறான். அதற்குத் தன் மாமன் மாரீசனின் துணையினை நாடுகிறான். மாரீசனின் இருக்கை தேடிச் செல்கிறான், தனியனாக அவ்வாறு தனியனாக வந்த இராவணனைக் கண்டு மருள்கிறான் மாரீசன். ஏன்? இராவணன் வருகையால் தனக்கு எவ்விதத் துன்பம் நேருமோ என்று அஞ்சுகிறான் மாரீசன். அச்சத்தால் மருள்கிறான். “தேவர் கோனும் தென் திசைக்கோனும் அஞ்ச ஆட்சி புரியும் ஒருவனே! இந்தக் காட்டிலே உள்ள எளியவனாகிய எனது இருக்கைக்குத் தனியனாக வந்திருக்கிறாய், வருகையின் உட்கருத்து என்ன? சொல்” என்று கேட்கிறான். அப்போது இராவணன் சொல்கிறான்;

மருள்கின்றான் - (இராவணன் தன்னிடம் வந்தது என்ன தீமை செய்யக் கருதியோ?) என்று அஞ்சி மயங்கினவனாகிய மாரீசன் (அந்த இராவணனை நோக்கி) சந்தம் மலர் தண் கற்பக நீழல் - அழகிய மலர்களை உடைய குளிர்ந்த கற்பக விருட்சங்களின் நிழலில் அமர்ந்து வானுலகை ஆட்சி செய்யும்; தலைவர்க்கும் - தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - யமனுக்கும்; அஞ்ச அடுக்கும் - அஞ்சும்படி ஆணை செலுத்தும்; அரசு ஆள்வாய் - அரசு செலுத்துகிறவனே;

(நீ) இந்த வனத்து - இந்தக் காட்டிலே; என் இன்னல் இருக்கைக்கு - துன்பத்துக்கிடமான எனது இருப்பிடத்துக்கு; எளியோரின் - எளிய நிலையில் உள்ளவர் போல்; வந்த கருத்து என்? - வந்த நோக்கம் யாது? சொல்லுதி - சொல்வாய்; என்றான் - என்று சொன்னான்.




ஆனது அனைத்தும்;
        ஆவி தரித்தேன்; அயர்கின்றேன்
போனது பொற்பும்
        மேன்மையும் அற்றேன் புகழோடும்
யான் அது உனக்கு இன்று
        எங்ஙன் உரைக்கேன் இனி என் ஆ
வானவருக்கும் நாண
        அடுக்கும் வசை அம்மா!

எனக்கு வரவேண்டிய தீமைகள் எல்லாம் வந்துவிட்டன புகழ் போயிற்று; சிறப்பும் போயிற்று; மேன்மையும் இழந்தேன்; வானவருக்கும் நாணத்தக்க சிறுமை வந்து விட்டது. அதை உனக்கு எவ்வாறு கூறுவேன்! எடுத்து இயம்பும் ஆற்றல் இலேன்; உயிரை மட்டும் இழக்காமல் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். வருந்துகிறேன். இனி எனக்கு என்ன பெருமை உளது?

ஆனது அனைத்தும் - எனக்கு வரவேண்டிய தீமைகள் எல்லாம் வந்துவிட்டன; போனது புகழோடும் பொற்பும் - புகழோடு எனது சிறப்பும் போயிற்று;

மேன்மையும் அற்றேன் - மேன்மை இழந்தேன்; அது - அதை; உனக்கு - உனக்கு இன்று எங்ஙனம் உரைக்கேன்? எவ்வாறு சொல்வேன் இன்று; ஆவி தரித்தேன் - உயிரை மட்டும் போகாது பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்: அயர்கின்றேன் - வருந்துகிறேன் : வானவருக்கும் - தேவர்களுக்கும்; நாண - வெட்கமுறும் வண்ணம்; அடுக்கும் வசை- வந்து சம்பவித்துள்ளது நிந்தனை (சிறுமை) இனி என் ஆ - இனி என்ன பெருமை இருக்கிறது?


வன்மை தரித்தோர் மானிடர்
        மற்று அங்கு அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும்
        நிலை நேர்ந்தால்
என் மரபுக்கும் நின் மரபுக்கும்
        இதன் மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி
        மற்று என்? புகழ் வேலோய்
.

புகழ் மிக்க வேல் கொண்ட மாமனே! மானிடர் பலம் பெற்று விட்டனர்; தண்டகாரண்யத்திலே அவர்தம் வாளால் மூக்கினை இழக்கும் நிலை உனது மருகியாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்தது. நின் குலத்துக்கும் என் குலத்துக்கும் இதை விட இழிவு வேறு என்ன வேண்டும்? என்று தூபம் போட்டான் இராவணன்.

புகழ் வேலோய் - புகழ் மிக்க வேலாயுதம் உடையோய்; மானிடர் - மனிதர்; வன்மை தரித்தோர் - பலம் பெற்று விட்டனர்; மற்று - மேலும்; அங்கு - தண்டகாரணியத்தில்; அவர் - அந்த மானிடர், வாளால் - தம் கை வாளினால்; நின் மருகிக்கும் - உனது மருமகளாகிய சூர்ப்பணகைக்கும்: நாசி இழக்கும் நிலை நேர்ந்தால் - மூக்கை இழக்கும்படியான ஒரு சூழ்நிலை உண்டானால்; என் மரபுக்கும் என் குலத்துக்கும்; நின் மரபுக்கும் - உன் குலத்துக்கும்; இதன் மேல் - இதற்கு மேலான ஓர் புன்மை தெரிப்பின் - ஓர் இழிவைக் கூறுமிடத்து; மற்று இனி வேறு என்? - இனிமேல் வேறு என்ன இருக்கிறது?




“வெப்பு அழியாத என் நெஞ்சும்
        உலந்தேன்; விளிகின்றேன்;
ஒப்பு இலர் என்றே
        போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும்
துப்பு அழி செவ்வாய் வஞ்சியை
        வெளவத் துணை கொண்டிட்டு
இப்பழி நின்னால் தீரிய
        வந்தேன் இவண்” என்றான்.

“மேற்கூறிய நிகழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்டுள்ள மனக்கொதிப்பு அழியவில்லை. மனமும் அழிந்தேன்; இறக்கும் நிலையில் உள்ளேன்.

அவர்களுடன் போர் செய்ய விருப்பம் இலேன். காரணம் அம்மானுடர் எனக்கு நிகரானவர் அல்லர். ஆயினும் அவர் பால் உள்ள வஞ்சிக்கொடி போன்றாளை வவ்வி கொண்டுவர முடிவு செய்துளேன். இவ்வாறு செய்வதன் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள பழி தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு உனது துணை வேண்டி இங்கே வந்துளேன்” என்றான்.

வெப்பு அழியாது - (மேற் கூறிய நிகழ்ச்சிகளால்) எனக்கு உண்டான மனக் கொதிப்பு அழியாமல்; நெஞ்சும் உலந்தேன் - மனமும் அழிந்தேன்; விளிகின்றேன் - அதனால் நான் இறந்து அழியும் நிலையில் இருக்கின்றேன்; ஒப்பு இலர் என்றே - எனக்கு அம்மானுடர் நிகரானவர் அல்லர் என்று கருதியே போர் செய ஒல்லேன் - அவரோடு போர் செய்ய விருப்பமில்லாதவனாக இருக்கின்றேன்; உடன் வாழும் - அம்மானிடரோடு வாழ்கின்ற; துப்பு அழி செவ்வாய் - பவழத்தைத் தோல்வியுறச் செய்யும் சிவந்த வாயுடைய; வஞ்சியை - கொடி போன்றாளை, வவ்வு அபகரிக்க; துணை கொண்டு இட்டு - உன்னை என் துணையாகக் கொண்டு; இப்பழி நின்னால் தீரிய - எனக்கு ஏற்பட்டுள்ள இப்பழியை உன்னைக்கொண்டு நீக்கிக்கொள்ள இவண் வந்தேன் - இவ்விடம் வந்தேன்; என்றான் - என்று கூறினான்.

இச் சொல் அனைத்தும் சொல்லி
        அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
        என்னக் கிளர்வான் முன்
சிச்சி எனத் தன் மெய்ச் செவி
        பொத்தித் தெருமந்தான்
அச்சம் அகற்றிச் செற்ற
        மனத்தோடு அறைகின்றான்.

இராவணன் கூறிய சொற்களைக் கேட்டான் மாரீசன். இரும்பை உருக்கிக் காதிலே ஊற்றியது போல இருந்தது. ‘சிச்சீ’ என்று கூறித் தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்; வருந்தினான்; பயம் நீங்கப் பெற்றான்; கோபமுற்றான்; பின் வருமாறு சொல்கின்றான்.

அரக்கன் - இராவணன்; எரிகின்ற கிச்சின் . எரிகின்ற நெருப்பில்; உருக்கு இட்டு உய்த்தனன் என்ன - உருக்கை இட்டுக் காய்ச்சி அதனைத் தன் காதுகளில் செலுத்தினான் என்னும் படி; இச்சொல் அனைத்தும் - இவ்வித வார்த்தைகள் எல்லாம்; சொல்லி - தன்னிடம் சொல்லி; கிளர்வான் முன்- தன்னைத் தூண்டும்; அந்த - இராவணன் முன் சிச்சி எனத் தன் மெய்ச் செவி பொத்தி - சீச்சீ என்று சொல்லித் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு; தெருமந்தான் - குழப்பமுற்று வருந்தினவனாகி; அச்சம் அகற்றி - ஒருவாறு பயம் நீங்கப் பெற்றவனாய்; செற்ற மனத்தோடு - கோபமுற்ற மனத்துடனே; அழைக்கின்றான் - பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.


மன்னா! நீ நின் வாழ்வை
        முடித்தாய்! மதியற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை
        என்றே உணர்கின்றேன்;
இன்னா தேனும் யான் இது
        உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத்
        துணிவு எல்லாம்.

“அரசனே! நீ உனது வாழ்வை முடித்துக் கொண்டாய்; புத்தி கெட்டுப் போனாய்; இது உன் செயல் அன்று - உனது பண்டை வினையின் செயலே என்று நினைக்கிறேன். நான் சொல்லப்போவது உனக்குப் பிடிக்காது இருப்பினும் உனக்கு நல்லதே சொல்வேன்” என்று சில நல்லுரைகள் நவின்றான் மாரீசன்.

மன்னா - அரசே! நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உனது வாழ்நாளை முடித்துக் கொண்டாய்; மதி அற்றாய் - உனது அறிவை இழந்துவிட்டாய்; ஈது உன்னால் அன்று - இச் செயல் உன்னால் ஆக்கப்பட்டது அன்று ஊழ்வினை - உனது பழைய வினையின் பயனே இவ்வாறு உன்னைத் தூண்டியது; என்றே உணர்கின்றேன் - என்றே கருதுகின்றேன்; இன்னாது ஏனும் (உனக்கு) ஆகாதது என்று தோன்றினும்; இதம் இது யான் உரைப்பன் - உனக்கு நன்மை தரத்தக்க இதனை நான் உனக்குக் கூறுவேன்; என்ன - என்று கூறி; அன்னவனுக்கு - அந்த இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதியளிக்கும் நல்ல புத்தியாகிய நீதி அனைத்தும் சொன்னான் - எடுத்துக் கூறினான் மாரீசன்.


திறத் திறனாலே செய்தவம்
        முற்றித் திரு உற்றாய்;
மறத்திறனாலே சொல்லுதி;
        சொல் ஆய்; மறை வல்லாய்!
அறத் திறனாலே எய்தினை
        அன்றோ அது; நீயும்
புறத்திறனாலே பின்னும்
        இழக்கப் புகுவாயோ?

“நீ இப்போது பெற்றுள்ள செல்வமும் சீரும் தர்ம வழியிலே அறத்தினாலே வந்தவை. அவைகளை இந்த மறவழி பின்பற்றி இழக்கத் துணிவாயோ? சொல்?” என்றான்.

மறைவல்லோய் - வேதங்களை (நன்கு) அறிந்தவனே! திறம் திறனாலே - மிகத் திறமையினாலே; செய்தவம் முற்றி - செய்யக் கூடிய தவங்களையெல்லாம் செய்து முடித்து; திரு உற்றாய் - நீ இப்பொழுது பெற்றுள்ள சீரும் செல்வமும் பெற்றுள்ளாய்; மறத்தினாலே - அதர்மத்தினால் (உன் கொடிய வலிமையை மேற்கொண்டு) சொல்லுதி - இவ்வாறு சொல்கிறாய்; அறத்திறனாலே எய்தினை அன்றோ? - நீ செய்த அறத்தின் வலிமையினாலே இச் செல்வச் சிறப்பினை அடைந்தாய் அன்றோ? அது - அச் செல்வ வாழ்க்கையை; புறத்திறனாலே - அறத்திற்குப் புறனான அதர்ம வலிமையினாலே; பின்னும் இழக்க - பின்பு இழந்து விடுதற்கு; புகுவாயோ - அத்தீய செயலில் புக்கு நீ கெடப் போகின்றாயோ? சொல்வாய் - சொல்வாயாக.


நாரம் கொண்டார் நாடு
        கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்றொருவற்கு
        ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
        தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்; கண்டகர்
        உய்ந்தார் எவர்? ஐயா!

ஐயனே! பிறர் நாட்டிலே உள்ள நீரைத் தம் வலியாலோ அல்லது திருட்டுத் தனமாகவோ அபகரித்தவர்.

பிறர் நாட்டை அதர்ம வழியிலே பிடுங்கிக் கொண்டவர்.

தொன்று தொட்டு மனு நீதி முறைப்படி வாரம் வசூலிக்காமல், அதர்ம முறையில் குடி வாரம் வசூல் செய்வோர்.

மற்றொருவருக்கு வாழ்க்கைத் துணையாகி அவர் தம் மனையிலே வாழும் மனைவியை அபகரித்துக் கொண்டவரும், பெரும் பாவிகள் இவர்களை தரும தேவதை தானே அழிக்கும். இவருள் உய்ந்தார் எவர்? எவரும் இலர்.

ஐயா - ஐயனே; நாரம் கொண்டார் - பிறர் நாட்டிலே உள்ள நீரை தம் வலியால் அல்லது திருட்டுத் தனத்தால் அபகரித்துக் கொண்டவரும்; நாடு கவர்ந்தார் - பிறருடைய நாட்டை அதர்ம வழியில் பற்றிக் கொண்டவரும்; நடைஇல்லா வாரம் கொண்டார் - மனு முறைப்படி நடைபெற்று வரும் முறை இல்லாமல் அதிகமான குடிவாரத்தை (வரியை) குடிகளிடமிருந்து வலிய வாங்கிக் கொண்டவரும்; மற்று ஒருவர்க்கு ஆய மனை வாழும் -வேறு ஒருவருக்கு உரியவள் ஆகி அவனது வீட்டில் வாழ்ந்துவரும்; தாரம் கொண்டார் - மனைவியைத் தம் வலியால் அபகரித்துக் கொண்டவரும்; என்று இவர் தம்மை - என்று சொல்லப்பட்ட இவர்களை; தருமம் தான் - தரும தேவதை தானே வந்து; ஈரும் - அறுத்து அழிக்கும்; கண்டகர் உய்ந்தார் எவர்? - பாவிகள் யாரே அழிவடையாமல் தப்பிப் பிழைத்தார்; (ஒருவரும் இலர்.)


அந்தரம் உற்றான் அகலிகை
        பொற்பால் அழிவுற்றான்;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்
        தாம் இழிபு உற்றார்?
செந்திரு ஒப்பார் எத்தனையோர்
        நின் திரு உண்பார்?
மந்திரம் அற்றார் உற்றது
        உரைத்தாய் மதி அற்றாய்.

தேவர் உலகினை ஆளும் தேவேந்திரன் அகலிகையின் அழகிலே மயங்கினான்; அழிவுற்றான். இம்மாதிரி கெட்டு அழிந்தோர் பலர். உன் பால் திருமகளை ஒத்தார் பலர் உளர். அங்ங்ணமிருக்க உனக்கு ஏன் இந்தக் கெடுமதி? ஆலோசனையில்லாதவர் கூறிய யோசனை இது. அறிவுகெட்டு விட்டாய்.

அந்தரம் உற்றான் - சுவர்க்கத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்டு ஆட்சி புரியும் இந்திரன்; அகலிகை பொற்பால்- அகலிகையின் அழகில் ஈடுபட்டு; அழிவுற்றான் யாவரும் வெறுக்கத் தக்க சாபக் கேட்டினை அடைந்தான்; இந்திரன் ஒப்பார் - அந்த இந்திரனைப் போன்றவர்; எத்தனையோர் தாம் இழிபு உற்றார் - எத்தனை பேர் தாம் சிறப்பு அழிந்து இழிநிலையுற்றனர்? செம் திரு ஒப்பார்- செவ்விய திருமகளைப் போன்ற அழகுடை மகளிர்; எத்தனையோர் நின் திரு உண்பார் - எவ்வளவு பேர் உன் நலத்தை அனுபவிப்பவராய் உள்ளனர்? (அவ்விதம் இருக்க) மந்திரம் அற்றோர் ஆலோசனையற்றவர்; உற்றது உரைத் தாய் - கூறிய யோசனையைச் சொன்னாய்; மதி அற்றாய்- அறிவு கெட்டவன் ஆனாய்.

செய்தாயேனும் தீவினையோடும்
        பழி அல்லால்
எய்தாது; எய்தாது; எய்தின்
        இராமன் உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள்
        கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம்
        முடித்து உன் குழு எல்லாம்
.

உன் எண்ணப்படியே இக்காரியத்தை நீ செய்தாயேனும் பாவம் தான்வரும்; பழி தான்வரும்; வேறு எதுவும் உனக்குக் கிட்டாது; கிட்டாது. அப்படி ஒரு கால் உன் எண்ணம் கை கூடுமாயின் பின் என்ன விளையும் தெரியுமோ? உலகனைத்தும் ஈன்ற திருமாலாகிய இராமபிரானின் சுடுசரத்தால் நீ உன் குலத்தோடு அழிவாய்; உன்னைச் சேர்ந்த அரக்கர் கூட்டம் பூண்டோடு மாயும். இது நிச்சயம்.

செய்தாய் ஏனும்–நீ உன் எண்ணப்படியே இதனைச் செய்தாயேனும்; தீவினையோடும் பழி அல்லாது எய்தாது எய்தாது–பாவத்தோடு பழியல்லாது வேறு எதுவும் உனக்குக் கிட்டாது கிட்டாது; எய்தின்–அப்படியே உன் எண்ணம் நிறைவேறினாலும்; உலகு ஈன்றான்–உலகனைத்தும் படைத்த திருமாலாகிய இராமன் வைதால், அன்ன முனிவர் தம் கொடிய சாபம் போன்ற; வாளிகொண்டு–கூரிய தனது அம்பு கொண்டு; உன் வழியோடும்–உன் குலத்தோடும்; கொற்றம் முடித்து–உன் அரசை அழித்து, உன் குழு எல்லாம்–உன்னைச் சேர்ந்த அரக்கர் கூட்டத்தை எல்லாம்; கொய்தான் அன்றே–பூண்டோடு அழித்து விட்டான் என்றே வைத்துக்கொள்.

மாண்டார் மாண்டார் நீ இனி
        மாள்வார் தொழில் செய்ய
வேண்டா; வேண்டா; செய்திடின்
        உய்வான் விதி உண்டோ?
ஆண்டார்; ஆண்டார்; எத்தனை
        என்கேன்; அறம் நோனார்
ஈண்டார்; ஈண்டார்; நின்றவர்
        எல்லாம் இலர் அன்றோ?

மாண்டார் மாண்டவரே. அவ்வாறு மாண்டவர் தொழிலை நீ செய்ய வேண்டாம்; வேண்டாம் அப்படி உன் விருப்பப்படி நீ செய்வாயானாள் உய்யும் வழி உனக்கு வேறு இல்லை. உலகிலே அரசாண்டவர் எத்தனை பேர்? அறவழியே நிற்காதவர் இவ்வுலகில் இருக்கவே மாட்டார். இவ்வுலகில் நீண்ட காலம் இருந்தவர் எல்லாரும் இறந்து போயினர் அன்றோ?



மாண்டார் மாண்டார் - இறந்தவர் இறந்து போனவரே; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா வேண்டா - நீ இனி இறப்பவர் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டாம் வேண்டாம்; செய்திடின் - அவ்வாறு செய்வாய் ஆயின்; உய்வான் விதி உண்டோ? - உய்யும் வழி உண்டோ? (இல்லை) ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் - உலகை ஆண்டவர் எத்தனை பேர் இறந்தனர் என்பேன்; அறம் நோனார் -அறத்தின் வழியே தன் வாழ்க்கையைச் செலுத்தாதவர்; ஈண்டார் ஈண்டார் - நீடித்து இங்கு இருக்கவே மாட்டார் மாட்டார்; நின்றவர் எல்லாம் - இவ்வுலகில் நீண்ட காலம் இருந்தவர் எல்லாரும்; இவர் அன்றோ - இப்பொழுது இல்லாது இறந்து போயினர் அன்றோ.

நின்றும் சென்றும் வாழ்வன
        யாவும் நிலையா வாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை
        உணர்ந்தாய்; புலையாள்தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை
        கொள்ளாய்; உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி;
        ஐயா! இனி’ என்றான்.

“ஐயனே! இந்த உலகிலே உள்ள உயிர்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன நிலைத்து இருப்பன அல்ல; இந்த உண்மையை நீ உணர்ந்துளாய். ஆதலின் இந்த இழிதொழில் புரிய எண்ணாதே. என் சொல்லை ஏற்பாயாக. இப்பொழுது பெற்றுள்ள செல்வத்துடன் என்றென்றும் வாழ்வாயாக” என்றான் மாரீசன்.

ஐயா!-ஐயனே! நின்றும் சென்றும் - நகராமல் ஓரிடத்தில் நிலைபெற்றிருந்தும், நடமாடிப் பல இடங்களுக்குச் சென்றும்; வாழ்வன யாவும் - வாழ்கின்ற எல்லா உயிர்களும்; நிலையா - நிலைத்து இருப்பன அல்ல; (ஆதலால்) பொன்றும் என்னும் மெய்ம்மை - உலகில் உள்ள எல்லாம் ஒரு காலத்தில் அழியும் என்ற உண்மையை உணர்ந்தாய் - உணர்ந்திருக்கின்றாய் புலையாள்தற்கு - (அத்தகைய நீ) இவ் இழி தொழில் செய்தற்கு ஒன்றும் உன்னாய் - சிறிதும் நினையாதிருப்பாயாக; என் உரை கொள்ளாய் - என் சொல்லை ஏற்றுக்கொள்வாயாக; இனி உயர் செல்வத்து - இனியும் இப்பொழுது நீ பெற்றுள்ள உயர்ந்த செல்வ நிலையில்; என்றும் என்றும் வைகுதி - என்றென்றும் நீடித்து இருப்பாயாக; என்றான் - என்று இராவணனுக்குச் சொன்னான் மாரீசன்.


“கங்கை சடை வைத்தவனோடும்
        கயிலை வெற்பு ஒர்
அங்கையின் எடுத்த எனது
        ஆடு எழில் மணித்தோள்
இங்கு ஒர் மனிதற்கு
        எளிய என்றனை” எனத் தன்
வெங்கண் எரியப் புருவம் மீது
        உற விடைத்தான்.

“கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற கயிலாய கிரியைப் பெயர்த்து என் உள்ளங்கையிலே வைத்துக்கொண்டவன் நான் அத்தகைய பராக்கிரமம் கொண்ட தோள்கள் என்தோள்கள் கேவலம் ஒரு மனிதனுக்கு எளிய என்று கூறினாய்” என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கூறினான் இராவணன்.



(அம்மொழி கேட்ட இராவணன் மாரீசனை நோக்கிச் சொல்கிறான்).

கங்கை சடை வைத்தவனோடும் - சடையிலே கங்கையை வைத்துள்ள சிவபெருமானோடும்; கயிலை வெற்பு - அவன் இருக்கும் கயிலாய மலையை ஓர் அம்கையில் எடுத்த- எனது ஓர் உள்ளங்கையிலே பெயர்த்து எடுத்து வைத்துக் கொண்ட எனது ஆடு எழில் மணித்தோள் - என்னுடைய போர் செய்ய வல்ல அழகிய சிறந்த தோள்கள்; இங்கு ஒரு மனிதனுக்கு இங்கே ஒர் அற்ப மனிதனுக்கு; எளிய என்றனை என - கீழ்ப்பட்டவை என்றாய் என்று; தன் வெம் கண் . தன் கொடிய கண்கள்; எரிய - கனல் கக்க; புருவம் மீதுற - புருவங்கள் மேல் நோக்கி நிற்க விடைத்தான் - கோபித்துரைத்தான்.


“நிகழ்ந்ததை நினைந்திலை என்
        நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை; எனக்கு இளைய
        நங்கை முகம் எங்கும்
அகழ்ந்தவரை ஒப்பு உற
        அமைந்தவரை ஐயா!
புகழ்ந்தனை; தனிப் பிழை
        பொறுத்தனன் இது” என்றான்.

“என்ன நடந்தது என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. எனது மனநிலையை இகழ்ந்தாய் எனது தங்கையின் மூக்கை அறுத்த அந்த மானிடரை அஞ்சாது என்னிடமே புகழ்ந்து பேசுகிறாய். இது மாபெரும் பிழை; பொறுத்தேன்” என்றான் இராவணன்.

ஐயா! - ஐயனே! நிகழ்ந்ததை - நடந்ததை நினைக்கிலை-நினைத்தாய் இல்லை; அஞ்சாது - அச்சம் இல்லாது; என் நெஞ்சின் நிலை - எனது மனநிலையை இகழ்ந்தனை - இகழ்ந்து கூறினாய்; எனக்கு இளைய நங்கை - எனக்கு இளையவளான தங்கை சூர்ப்பனகையின்; முகம் எங்கும் - முகம் எல்லாம்; அகழ்ந்தவரை ஒப்பு உற - தோண்டப்பட்ட மலையில் உள்ள மேடு பள்ளங்கள் போல விளங்க; அமைத்தவரை - செய்தவரான அந்த மானிடரை; புகழ்ந்தனை - என்னிடமே புகழ்ந்து பேசினாய் தனிப் பிழை - ஒப்பற்ற பிழை; இது பொறுத்தனன் - இந்தப் பெரும் பிழை பொறுத்தேன்; என்றான் - என்று கூறினான் இராவணன்.


தன்னை முனிவுற்ற தறுகண்
        தகவு இலோனைப்
பின்னை முனிவுற்றிடும் எனத்
        தவிர்தல் பேணான்
“உன்னை முனிவுற்று, உன்
        குலத்தை முனிவுற்றாய்
என்னை முனிவுற்றிலை; இது என்?”
        என இசைத்தான்.

தன் பால் சினம் கொண்டு சீறிய இராவணன் மேலும் சீறுவானோ என்று மாரீசன் அஞ்சினான் அல்லன். அவனுக்கு நலன் கூறுவதை விடுத்தான் அல்லன். “நீ என் மீது சீறினாய் அல்லை; உன் மீது சீற்றம் கொண்டாய். உன் குலத்தின் மீது சினங்கொண்டாய். நீ இச் செயல் புரிய முற்பட்டது ஏன்?” என்று இதமாகக் கூறினான்.

தன்னை முனி உற்ற - தன்பால் சினம் கொண்ட தறு கண் தகவு இலோனை - அஞ்சாத நேர்மையற்ற அவ்விராவணனை ; பின்னை முனிவுற்றிடும் - மேலும் தன் மீது சினம் கொள்வான் என்று; தவிர்தல் பேணான் - அவனுக்கு நலம் கூறுவதை விடாதவனாய்; (அந்த மாரீசன் இராவணனை நோக்கி) என்னை முனிவுற்றிலை - என் மீது நீ கோபிக்கவில்லை; உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் - உன்னையே கோபித்துக்கொண்டாய் உன் குலத்தைக் கோபித்தாய்; இது என்? நீ இச் செயல் புரியத் துணிவது ஏன்? என்று இசைத்தான் - என்று இதமாகக் கூறினான்.

எடுத்த மலையே நினையின்
        “ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை; நீ இது வலித்தி”
        என வாரிப்
பிடித்து அமலை நாண் இடை
        பிணித்து, ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை அண்ட முகடு
        உற்ற மலை அன்றோ?

கயிலை மலை இமயமலையின் ஒரு சிகரம். அதனை எடுத்ததையே நீ பெரிதாகப் பாராட்டினால் - பெருமை படுவாயானால், மனிதன் என்று நீ எந்த இராமனை இழித்துக் கூறுகிறாயோ அந்த இராமன் பதினாறு வயது பாலனாய் இருந்த காலத்திலே சீதையின் சுயம்வரத்திலே எடுத்து வளைத்த நிலையில் அந்த வேகம் தாங்காது ஒடிந்து போன மலை போன்ற அச் சிவ தனுசு எது? ஆகாய முகடு அளாவியதும் மலைகளுள் சிறந்ததும், பெரியதுமான மேருமலை அன்றோ?”

இவ்வாறு இராமனின் ஆற்றவை எடுத்துக் கூறினான் மாரீசன்.



எடுத்த மலையே நினையின் - நீ எடுத்த கயிலாயமலையையே நினைத்துப் பெருமை கொள்வாய் என்றால்; இது ஈசன் வில்லாய் வடித்த மலை - இதுவே சிவபெருமான் போர் செய்வதற்கு வில்லாக வடித்துக் கொண்ட மலை; நீ இது வலித்தி என - நீ இதை வளைத்து நாண் ஏற்று என விசுவாமித்திரர் கூற; ஒருவன் - நீ இழித்துக் கூறும் ஒருவனாகிய (மானிடனாகிய) இராமன்; மேல் நாள் - முன் ஒரு நாள்; வாரி - அதனை எளிதில் எடுத்து;பிடித்து - கையில் பிடித்து; அம்மலை இடை நாண் பிணித்து - அந்த மலையிடையே நாணேற்றி; (வளைக்கத் தொடங்கிய நிலையில்) ஒடித்த மலை - ஒடித்த அவ்வில்லாகிய மலை; அண்ட முகடு உற்ற - இவ்வண்டத்தின் உச்சியைத் தொட்டு உயர்ந்த; மலை அன்றோ - மேரு மலைக்கு நிகரானது அன்றோ?


யாதும் அறியாய்; உரை கொளாய்
        இகல் இராமன்
கோதை புனையா முன் உயிர்
        கொள்ளை படும் அன்றே
பேதை மதியால் “இஃது ஓர்
        பெண் உருவம்” என்றாய்;
சீதை உருவோ? நிருதர்
        தீவினை அன்றோ?

இராமனின் ஆற்றலைப் பற்றி நீ ஏதும் அறியாய்; நான் சொல்லும் நல்லுரையும் ஏற்றுக்கொள்ள மாட்டாய்; இராமன் போருக்கு எழு முன்பே நம் அரக்கர் குலம் அழியும் என்பது உறுதி. நீ அபகரித்து கொண்டு வர எண்ணும் சீதையை ஒரு பெண் உருவம் என்று கருதுகின்றாய்; “புத்தி கெட்டவனே! அது சீதை உரு அன்று அரக்கர் செய்த தீவினை அல்லவா பெண் உருக்கொண்டு சீதை எனும் பெயர் தாங்கி வந்துளது.”

யாது அறியாய் - இராமனின் ஆற்றல் பற்றி நீ ஏதும் அறிய மாட்டாய்; உரை கொளாய் - நான் கூறும் நல்லுரைகளையும் நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய்; இகல் இராமன் - போரில் வல்ல இராமன்; கோதை புனையாமுன் - போர்க்கு எழக் கையுறை அணியா முன்பே; ( அதாவது போரணி பூணத் தொடங்கும் அந்த நேரத்திலேயே) உயிர் கொள்ளை படும் அன்றே - அரக்கர்களாகிய நமது உயிர் அனைத்தும் அழிக்கப்படும் என்பது உறுதி; பேதை மதியால் - உன் மூட மதியால்; இஃது ஓர் பெண் உருவம் என்றாய் - இது ஓர் பெண் உருவம் என்றாய்; (நீ அபகரித்து வரக் கருதும் சீதை ஒரு பெண் வடிவம் என்று கருதியுள்ளாய்) சீதை உருவோ - அது சீதை எனும் பெண் உருவமோ? (அன்று) நிருதர் தீவினை அன்றோ - அரக்கர்களாகிய நம்மவர் செய்த பாவமே சீதை உருவம் பெற்று வந்துளது அன்றோ.


உஞ்சு பிழையாய் உறவினோடும்
        என உன்னா
நெஞ்சு பறை போதும்; அது
        நீ நினைய கில்லாய்
அஞ்சும் எனது ஆருயிர்
        அறிந்து அருகு நின்றார்
 நஞ்சு நுகர் வாரை “இது
        நன்று” எனலும் நன்றே?

சீதையைத் தூக்கி வந்தால் நீ உயிர் வாழமாட்டாய். உறவினரோடும் அழிவாய். அதனை எண்ணிப் பார்க்கும் திறன் உனக்கு இல்லை. உன் நிலை கண்டு எனது ஆருயிர் அஞ்சுகின்றது. என் மனம் பறை அடிப்பதுபோல் துடிக்கின்றது. உனக்குச் சாதகமாக நான் பேசுவது என்பது விஷம் குடிப்பவரைப் பார்த்து அருகில் நின்றார், “இது நன்று” என்று சொல்வது ஒக்கும். அது நன்றோ?

உறவினோடும் உஞ்சு பிழையாய்-(இக்காரியம் செய்தால்) நீ உன் உறவினரோடும் பிழைக்கமாட்டாய் (அழிவாய்) என- என்று; உன்னா - எண்ணி; நெஞ்சு பறை மோதும் - எனது நெஞ்சு பறையடிப்பதுபோல் துடிக்கிறது; நீ அது நினைய கில்லாய் - நீ அதை நினைக்கின்றாயில்லை; (அத் தீமையை எண்ணும் திறமையில்லாதவன் ஆனாய்) அஞ்சும் எனது ஆருயிர் - (உன் நிலை கண்டு) எனது அரிய உயிர் அஞ்சுகின்றது; (உனக்கு இணங்கி நான் பேசுவது என்பது) நஞ்சு நுகர்வாரை அறிந்து - விஷம் அருந்துவாரைத் தெரிந்து: அருகு நின்றார் - அருகில் நிற்பவர்; இது நன்று என்னலும் - இது நல்லது என்று கூறுவதும் நன்றே இதனினும் நல்லது ஆகும்.


என்ன உரை இத்தனையும்
         எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின
         அரக்கர் பதி சொன்னான்;
அன்னை உயிர் செற்றவனை
         அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன்
         என்று உணர்கை நன்றோ?

இவ்வாறு நன்கு யோசித்து நல்லுரை பகர்ந்த மாரீசனை நோக்கி அரக்கர் பதியான இராவணன் கூறுகின்றான், “உன் தாயைக்‌ கொன்றான்‌ அந்த இராமன்‌. அவனுக்கு அஞ்சி இங்கு வந்து மறைந்து நீ வாழ்கின்றாய்‌ போர்‌ செய்யும்‌ திறம்‌ கொண்ட ஒருவன்‌ என்று உன்னை மதித்து வருதல்‌ நன்றோ?”

என்ன – என்று மாரீசன்‌ சொன்ன; உரை இத்தனையும்‌– அறிவுரைகள்‌ இவ்வளவையும்‌; எத்தனையும்‌ எண்ணி எல்லா விதங்களாலும்‌ ஆலோசித்து; சொன்னவனை – சொன்ன மாரீசனை; ஏசினன்‌ – ஏசினவனாய்‌; அரக்கர்‌ பதி – அரக்கர்‌ தம்‌ அரசனான இராவணன்‌; சொன்னான்‌ – பின்‌ வருமாறு கூறினான்‌; அன்னை உயிர்‌ செற்றவனை – உன்‌ தாயாகிய தாடகையின்‌ உயிரைப்‌ போக்கிய அந்த இராமனுக்கு; அஞ்சி – பயந்து; உறைகின்‌றாய்‌ – இங்கு வந்து தவம்‌ செய்பவன்போல்‌ மறைந்து வாழ்கின்றாய்‌; உன்னை – அத்தகைய பேதையாகிய உன்னை; ஒருவற்கு ஒருவன்‌ என்று – போர்‌ செய்வதற்கு உரிய ஆண்‌ மகன்‌ என்று; உணர்‌கை – மதித்தல்‌; நன்றோ – சிறப்புடையது ஆகுமோ?


“மறுத்தனை எனப்‌ பெறினும்‌
       நின்னை வடி வாளால்‌
ஒறுத்து மனம்‌ உற்றது முடிப்பென்‌
       ஓழிகல்‌ லேன்‌;
வெறுப்பன கிளத்தல்‌ உறும்‌
       இத்தொழிலை விட்டு என்‌
குறிப்பின்‌ வழி நிற்றி; உயிர்‌
       கொண்டு உழலின்‌” என்றான்‌.

“எனது நோக்கப்படி நடக்க நீ மறுத்தனையாகின்‌ எனது வாளால்‌ உன்‌னைக்‌ கொன்று நான்‌ கருதியதை முடிப்பேன். அவ்வாறு செய்யாமல் இவ்விடம் விட்டு அகல மாட்டேன். ஆதலின் நீ உயிருடன் வாழ விரும்பினால் எனக்குப் பிடிக்காத இந்த உபதேசம் செய்யும் தொழிலை விட்டு என் வழி நிற்பாயாக, என் நோக்கப்படி நடப்பாயாக” என்றான் இராவணன்.

மறுத்தனை எனப் பெறினும்– எனது கருத்துக்கு ஏற்ப நடக்க மறுத்தாய் எனினும்; நின்னை– உன்னை; வடிவாளால்– எனது கூறிய வாளினால்; ஒறுத்து– அழித்து; மனம் உற்றது– என் மனம் கருதியதை; முடிப்பென்– செய்து முடித்தே தீருவன்; ஒழிகில்லேன்– இதனைச் செய்யாமல் விடமாட்டேன்; ஆதலின்– ஆதலினால்; உயிர் கொண்டு உழலின்– நீ உயிரோடு வாழ விரும்பினால்; வெறுப்பன கிளத்தல் உறும்– நான் வெறுப்பனவற்றைச் சொல்லும் இத் தொழிலை விட்டு; நீ எனக்கு உபதேசம் செய்யும் தகாத இத்தொழிலை விட்டு; என்குறிப்பின் வழி– என் நோக்கின்படி; நிற்றி– நின்று நடப்பாயாக; என்றான்– என்று கூறினான் இராவணன், (மாரீசனை நோக்கி)

“ஆண்டையான் அனைய கூற
       அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீரத்
       தண்டகம் புக்க காலைத்
தூண்டிய சரங்கள் பாயத்
       துணைவர் பட்டு உருள அஞ்சி,
மீண்ட யான் சென்று செய்யும்
       வினை என் கொல்? விளம்புக”
                                                    என்றான்.

“விசுவாமித்திரருடைய யாகத்தின்‌ போது நான்‌ அடைத்த அவமானம்‌ போக்கச்‌ க௫தி அரக்கரான நண்பர்‌ இருவருடனே கண்ட கவனம்‌ புகுந்தேன்‌. மான்‌ உருவில்‌ இராமனுக்குக்‌ கேடு விளைக்கப்‌ புகுந்தேன்‌. அப்போது அவன்‌ ஏவிய கணையினால்‌ எனது நண்பர்‌ இருவரும்‌ மாய்ந்தனர்‌. நான்‌ பயந்து ஓடி வந்தேன்‌. மீண்டும்‌ நான்‌ சென்று செய்யும்‌ செயல்‌ யாது சொல்‌” என்றான்‌ மாரீசன்‌.

ஆண்டையான்‌ அனைய கூற– இராவணன்‌ அவ்வாறு சொல்லவே; (மாரீசன்‌) பூண்ட என்‌ மானம்‌. தீர– முதன்‌ முதல்‌ விசுவாமித்தரர்‌ யாகம்‌ செய்தபோது நான்‌ அந்த இராமனால்‌ அடைந்த அவமானம்‌ நீங்கும்‌ பொருட்டு; அரக்கர்‌ ஓர்‌ இருவரோடும்‌– நண்பர்களான இராக்கதர்‌ இருவருடனே; தண்டகம்‌ புகுந்தகாலை– மான்‌ வேடம்‌ பூண்டு இராமன்‌ இருந்த தண்டக வனம்‌ சென்று அவனுக்குக்‌ கேடு விளைக்கப்‌ புகுந்த காலை; தாண்டிய சரங்கள்‌ பாய– அந்த இராமன்‌ ஏவிய அம்புகள்‌ பாய்ந்தமையால்‌; துணைவர்‌– எனக்குத்‌ துணை வந்த நண்பர்‌; பட்டு உருள– ஆவி துறந்து கீழே விழுந்து உருள; அஞ்ச மீண்ட யான்‌– பயந்து ஒடிவந்த நான்‌; சென்று செய்யும்‌ வினை என்‌கொல்‌?– மறுபடியும்‌ அங்கு சென்று செய்யக்கூடிய செயல்‌ என்ன? விளம்புக– சொல்‌; என்றான்‌– என்று கேட்டான்‌.

ஆயவன்‌ அனைய கூற,
      அரக்கர்‌ கோன்‌ ஐய நொய்து உன்‌
தாயை ஆருயிர்‌ உண்டானை
      யான்‌ கொலச்‌ சமைந்து நின்றேன்‌
“போய்‌ ஐயா புணர்ப்பது என்னை
      என்பது பொருந்திற்று ஒன்றோ?
மாயையால்‌ வஞ்சித்து அன்றோ
      வௌவுகல்‌ அவளை” என்றான்‌.

“நான்‌ போய்ச்‌ செய்வது என்ன என்று கேட்டிறாயே! நீ அஞ்சும்‌ இராமனைக்‌ கொல்ல நான்‌ உறுதி பூண்டுள்ளேன்‌. ஆகவே உனக்கு அந்த பயம்‌ வேண்டாம்‌. சீதையை நான்‌ தூக்கி வருவதற்கான வஞ்சகச்‌ செயலை நீ செய்‌.”

ஆயவன்‌ அனைய கூற– மாரீசன்‌ அவ்வாறு கூறவே; அரக்கர்‌ கோன்‌– அரக்கர்‌க்கு அரசனாகிய இராவணன்‌; ஐய– ஐயனே; நொய்து உன்‌ தாயை– பெண்‌ என்று கருதாது இழிந்த முறையில்‌ உனது தாயின்‌; ஆருயிர்‌ உண்டானை– அரிய உயிரை அழித்த அந்த இராமனை; கொல்ல– கொல்லுவதற்கு; யான்‌ சமைந்து நின்றேன்‌– நான்‌ உறுதி பூண்டுள்ளேன்‌; போய்‌ ஐயா புணர்ப்பது. என்னை– நீ போய்ச்‌ செய்யக்‌ கூடிய சூழ்ச்சி என்ன? என்பது– என்று வினவுகல்‌; பொருத்திற்று ஒன்றோ– உனக்குப்‌ பொருத்தமான செயலோ? அவளை– அந்த சீதையை; மாயையால்‌ வஞ்சித்து– உனது மாயத்தால்‌ வஞ்சித்து ஏமாற்றி; வெளவுதல்‌ அன்றோ– நான்‌ அவளை அபகரித்து வருதல்‌ அன்றோ.

“என்ன மா மாயம்‌ யான்‌ மற்று
       இயற்றுவது? இயம்புக” என்றாள்‌
“பொன்னின்‌ மான்‌ ஆகிப்‌ புக்கு அப்‌
       பொன்னை மால்‌ புணர்த்துக” என்ன
‘அன்னது செய்வென்‌’ என்னா
       மாரீசன்‌ அமைந்து போனான்‌.
மின்னும்‌ வேல்‌ அரக்கர்‌ கோனும்‌
       வேறு ஒரு நெறியில்‌ போனான்‌.

“அங்கு சென்று நான்‌ செய்யக்கூடிய மாயம்‌ யாது?” என்று கேட்டான்‌ மாரீசன்‌.

“பொன்‌ மான்‌ உருக்கொண்டு அப்‌ பெண்‌ மானின்‌ உள்ளம்‌ கவர்வாய்‌” என்றான்‌ அரக்கர்கோன்‌.

“அங்ஙனே ஆகுக” என்று இசைந்து சென்றான்‌ மாரீசன்‌.

இராவணனும்‌ வேறு ஒரு வழியில்‌ சென்றான்‌.

இங்கு யான்‌ என்ன மா மாயம்‌ இயற்றுவது – இப்பொழுது யான்‌ செய்யத்தக்க மா மாயச்‌ செயல்‌ எது? இயம்புக – சொல்வாய்‌; என்றான்‌ – என்று இராவணனை நோக்கக்‌ கேட்டான்‌ மாரீசன்‌; பொன்னின்‌ மான்‌ ஆகிப்‌ புக்கு – பொன்‌ போன்ற நிறங்கொண்ட ஒரு மான்‌ ஆகி அவர்கள்‌ இருக்கும்‌ இடம்‌ சென்று; அப்‌ பொன்னை மால்‌ புணர்த்துக – பொன்‌ போன்ற அச்‌ சீதைக்கு ஆசை உண்டாக்குவாயாக; என்ன – என்று சொன்னான்‌ இராவணன்‌. அன்னது செய்வன்‌ என்னா – அப்படியே செய்வேன்‌ என்று; மாரீசன்‌ அமைத்து போனான்‌ – மாரீசன்‌ அதற்கு இசைத்து சென்றான்‌; மின்னும்‌ வேல்‌ அரக்கர்‌ கோனும்‌ – மின்னும்‌ வேல்‌ தாங்கிய அரக்கர்‌க்கரசனாகிய இராவணனும்‌; வேறு ஒரு நெறியில்‌ போனான்‌ – வேறு ஒரு வழியாகச்‌ சென்றான்‌.


தன்‌ மானம்‌ இலாத
        தயங்கு ஓளி சால்‌
மின்‌ மானமும்‌
        மண்ணும்‌ விளங்குவது ஓர்‌
பொன்‌ மான்‌ உருவம்‌ கொடு
        போயினன்‌ ஆல்‌
நன்‌ மான்‌ அனையாள்‌ தனை
        நாடுறுவான்‌.

மண்ணிலும்‌ சரி விண்ணிலும்‌ சரி தனக்கு ஒப்புமையில்லாத ஓர்‌ பொன்மான்‌ உருக்கொண்டு சீதையை நாடி இராமன்‌ இருந்த காடு சென்றான்‌ மாரீசன்‌.

நல்‌ மான்‌ அனையாள்‌ தனை – அழகிய மான்‌ போன்ற சீதையை; நாடுறுவான்‌ – நாடுதலை மேற்‌ கொண்ட அம்‌மாரீசன்‌; தன்‌ மானம்‌ இலாத – தனக்கு நிகர்‌ இல்லாத; தயங்கு ஒளி சால்‌ – விளங்கும்‌ ஒளி மிக்க; மின்‌ மானமும்‌ – மின்னலோடு கூடிய ஆகாயத்தும்‌; மண்ணும்‌ – புவியிலும்‌; விளங்குவது ஓர்‌ – விளங்குவதான ஒப்பற்ற; பொன்மான்‌ உருவம்‌ கொடு – பொன்மான்‌ உருவம்‌ கொண்டு; போயினான்‌ – இராமன்‌ இருந்த வனம்‌ போனான்‌.


நெற்றிப்‌ பிறையாள்‌
       முனம்‌ நின்றிடலும்‌
முற்றிப்‌ பொழி காதலின்‌
       முந்துறுவாள்‌
பற்றித்‌ தருக என்பென்‌
       எனப்‌ பதையா
வெற்றிச்‌ சிலை வீரனை
       மேவினள்‌ ஆல்‌.

அந்த மான்‌ வந்து சீதை முன்‌ நின்றது; கண்டாள்‌ சீதை. அதன்பால்‌ ஆசை கொண்டாள்‌, இதைப்‌ பற்றி தருமாறு இராமனைக்‌ கேட்பேன்‌ என்று கூறிக்கொண்டு விரைந்து சென்றாள்‌ இராமன்‌ இருக்குமிடத்துக்கு.

நெற்றிப்‌ பிறையாள்‌ முனம்‌ – பிறை மதி போன்ற நெற்றியுடைய சீதையின்‌ முக்னே; நின்றிடலும்‌ – அந்த மான்‌ போய்‌ நிற்கவும்‌; முற்றிப்பொழி காதலின்‌ முந்துறுவாள்‌ – நிறைத்து மேல்‌ ததும்புகின்ற ஆசையின்‌ முன்‌ செல்‌பவளான அவள்‌; பற்றித்‌ தருக என்பென்‌ – இதைப்‌ பிடித்துக்‌ கொடுப்பீர்‌ என்பேன்‌; எனப்பதையா – என்று வேகமாக; வெற்றிச்‌ சிலை – வெற்றி வில்‌ ஏத்திய; வீரனை – இராமன்‌ இருக்குமிடம்‌; மேவினள்‌ – சென்றாள்‌.


அனையவள்‌ கருத்தை உன்னா
       அஞ்சனக்‌ குன்றம்‌ அன்னான்‌
“புனை இழை காட்டு அது” என்று
       போயினான்‌; பொறாத சிந்தைக்‌
கனை கழல்‌ தம்பி பின்பு
       சென்றனன்‌; கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற
       மான்‌, எதிர்‌ விழித்தது அன்று ஏ.

“எங்கே அந்த மான்‌? காட்டு” என்று சொல்லிக்‌ கொண்டே சீதையைப்‌ பின்‌ தொடர்ந்து சென்றான்‌ இராமன்‌. லட்சுமணனும்‌ பின்னே சென்றான்‌. அந்த மானும்‌ அவர்களை விழித்துப்‌ பார்த்தது, எது போல? ஊழ்வினை வருவது போல வந்து நின்ற மான்‌ அவர்களைப்‌ பார்த்தது.

அனையவள்‌ கருத்தை உன்னா – அவ்வாறு வருந்திக்‌ கூறிய சீதையின்‌ நோக்கத்தை எண்ணி; அஞ்சனக்‌ குன்றம்‌ அன்னான்‌ – மை மலை போன்ற இராமன்‌; புனை இழை – பூண்ட அணிகளையுடைய பெண்ணே! அது காட்டு – எங்கே அந்த மானைக்‌ காட்டு; என்று – என்று; போயினான்‌ – அம்‌ மானைக்‌ காணச்‌ சென்றான்‌; பொறாத – அது கண்டு பொறாத மனமுடைய; கனை கழல்‌ – ஒலிக்கும்‌ வீரக்கழல்‌ அணிந்த; தம்பி – தம்பியாகிய இலட்சுமணனும்‌; பின்‌ சென்றனன்‌ – பின்னே தொடர்ந்து சென்றான்‌; (அப்பொழுது) கடக்க ஒண்ணா – விலக்க முடியாத; வினைஎன – ஊழ்வினை என்று; வந்து – வந்து; நின்ற மான்‌ – நின்ற மாரீசனாகிய மான்‌; எதிர்‌ – அவர்களை நோக்கி; விழித்தது – விழித்துப்‌ பார்த்தது.


என்‌ ஒக்கும்‌ என்னல்‌ ஆகும்‌?
      இளையவ! இதனை நோக்காய்‌;
தன்‌ ஒக்கும்‌ என்பது அல்லால்‌
      தனை ஒக்கும்‌ உவமை உண்டோ?
பல்‌ நக்க தரளம்‌ ஓக்கும்‌;
      பசும்‌ புல்‌ மேல்‌ படரும்‌ மெல்‌ நா
மின்‌ ஒக்கும்‌; செம்‌பொன்‌ மேனி
      வெள்ளியின்‌ விளங்கும்‌ புள்ளி.

உடன்‌ வந்த தம்பியை நோக்கிச்‌ சொல்கிறான்‌ இராமன்‌ “தம்பீ! இந்த மானை உற்று நோக்குவாயாக, இதற்கு ஓப்‌பானது எது? எதுவுமில்லை. இதன்‌ பற்கள்‌ முத்துப்போல்‌ உள்ளன. நாக்கு மின்னல்‌ போல உள்ளது; மேனி செம்பொன்‌ போன்றுளது. புள்ளிகளோ நக்ஷத்திரங்கள்‌ போல்‌ ஒளி வீசுகின்றன”

இளையவ! – தம்பீ! இதனை நோக்காய்‌ – இந்த மானை உற்று நோக்குவாயாக; தன்‌ ஒக்கும்‌ – இதற்கு நிகர்‌ இதுலே; என்பது அல்லால்‌ – என்று சொல்வது தவிர; (வேறு) என்‌ ஒக்கும்‌ என்னவாகும்‌? – எதை இதற்கு ஒப்புமை சொல்லலாகும்‌? தனை ஒக்கும்‌ உவமை உண்டோ? – இதற்கு ஏற்‌ற உவமை சொல்வதற்கு உண்டோ? (இல்லை); பல்‌ – இதன்‌ பற்கள்‌; நக்க தரளம்‌ ஒக்கும்‌ – ஒளி வீசும்‌ முத்துகளுக்கு ஒப்பாகும்‌; பசும்‌ புல்‌ மேல்‌ படரும்‌. பசும்‌ புல்லைத்‌ தின்பதற்கு அதன்‌ மேல்‌ செல்லும்‌; மென்நா – மெல்லிய நாக்கு; மின்‌ ஒக்கும்‌ – மின்னலுக்கு ஒப்பாகும்‌; மேனி செம்பொன்‌ – இதன்‌ உடலோ சிவந்த பொன்‌ போன்றுள்ளது: புள்ளி – இதன்‌ உடலில்‌ அமைந்துள்ள புள்ளி; வெள்ளியின்‌ விளங்கும்‌ – வெள்ளிபோல்‌ ஒளி வீசுகின்றது.


ஆரியன்‌ அனைய கூற
       அன்னது தன்னை நோக்கிச்‌
‘சீரியது அன்று இது’ என்று
       சிந்தையில்‌ தெளிந்த தம்பி
“காரியம்‌ என்னை? ஈண்டுக்‌ கண்டது
       கனக மானேல்‌
வேலி அம்‌ தெரியல்‌ வீர
       மீள்வதே மேன்மை” என்றான்‌.வ

இராமன்‌ அல்வாறு கூறிய உடனே அம்‌ மானைப்‌ பார்த்துத்‌ தன்‌ சிந்தையிலே ஒரு முடிவு கொண்ட தம்பியாகிய லட்சுமணன்‌ “இது பொன்‌ மான்‌ ஆயின்‌ இதனால்‌ நமக்கு ஆக வேண்டியது யாது? ஒன்றுமில்லை, ஆகவே இதிலே சிந்தை பறி கொடாது திரும்புவதே நாம்‌ செய்தகு சீரிய செயலாகும்‌” என்றான்‌.

ஆரியன்‌ அனைய கூற - மேலோனாகிய இர௱மன்‌ அவ்வாறு கூறவும்‌; அன்னது தன்னைநோக்கி – ௮ம்‌ மானைப்‌ பார்த்து; சிந்தையில்‌ தெளிந்த தம்பி – தெளிந்த சிந்தையுடைய தம்பியாகிய லட்சுமணன்‌; வேரி அம்‌ தெரியல்‌ வீர – நல்ல மணமும்‌ அழகும்‌ கொண்ட மாலையணிந்த வீர; ஈண்டு கண்டது– இங்கே பார்த்தது; கனக மானேல்‌– பொன்‌ மானே ஆயின்‌; காரியம்‌ என்னை?– இதனால்‌ நமக்கு ஆக வேண்டியது எது? (ஒன்றுமில்லை– ஆகவே) மீள்வதே– நாம்‌ இதனை விட்டும்‌ பர்ணசாலைக்குத்‌ திரும்பச்செல்வதே; மேன்மை– மேலான செயல்‌; என்றான்‌– என்று சொன்‌னான்‌.


அற்று அவன்‌ பகரா முன்னம்‌
       அழகனை அழகியாளும்‌
‘கொற்றவன்‌ மைந்த; மற்றிக்‌
       குழைவுடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின்‌
       பதியிடை அவதி எய்தப்‌
பெற்றுழி இனிது உண்டாடப்‌
      பெறற்கு அருந்தசைமைத்து’என்றாள்‌.

அப்படி இலட்சுமணன்‌ சொன்ன உடனே அழகில்‌ சிறந்த இராமனைப்‌ பார்த்து அழகில்‌, சிறந்த சீதை சொல்கிறாள்‌:

“சக்கரவர்த்தி திருமகனே! விரைவிலே இந்த மானைப்‌ பிடித்துத்‌ தருவீராயின்‌ . நமது வனவாசம்‌ முடித்து அயோத்திக்குத்‌ திரும்பச்‌ சென்று வாழும்போது மகிழ்ந்து விளையாடத்‌ தக்கதாயிருக்கும்‌.”

அற்று அவன்‌ பகரா முன்னம்‌– அவ்வாறு அந்த லட்சமணன்‌ சொல்‌லும்‌ அளவிலே; அழகனை– அழகில்‌ சிறந்த இராமனை; அழகியாளும்‌– அழகே வடிவு கொண்டு வந்த சீதையும்‌; கொற்றவன்‌ மைந்த– சக்கரவர்த்தி திருமகனே! குழைவு உடை– இப்பொழுது தளர்ந்த நிலையில்‌ உள்ள; இ உழையை– இம்‌ மானை? வல்லை– விரைவிலே; பற்றினை– பிடித்து; தருதி ஆயின்– தருவாய் ஆயின்; அவதி எய்தப் பெற்று– நம் வனவாசம் முடியப் பெற்று மதியிடை– நம் அயோத்தி நகரிலே: இனிது உண்டாட– மகிழ்ந்து விளையாட; பெறற்கு அரும் தகைத்து– பெறுதற்குரிய சிறப்புடையதாகும்; என்றாள்– என்று சொன்னாள்.

ஐயா, நுண் மருங்குல் நங்கை
        அஃது உரை செய, ஐயன்
‘செய்வென்’ என்று அமைய நோக்கித்
        தெளிவு உடைச் செம்மல் செப்பும்
‘வெய்ய வல் அரக்கர் வஞ்சம்
        விரும்பினார் வினையின் செய்த
கை தவமான் என்று அண்ணல்
        காணுதி கடையின்’ என்றான்.

இவ்வாறு சீதா பிராட்டி சொல்லவும் ‘அவ்வாறே பற்றித் தருவன்’ என்று இராமன் அம் மானை நோக்கினான். “இம் மான் மாயம் வல்ல அரக்கர் வஞ்சம் தீர்க்கக் கருதி ஏவிய மாயமான். இதனை நீவிர் இறுதியில் காண்பீர்.” என்றான் லட்சுமணன்.

ஐய– உளதோ இலதோ என்று ஐயம் கொள்ளத் தக்க; மருங்குல் நங்கை– இடையுடையவளாகிய சீதை, அஃது உரை செய்ய– அம்மொழி கூறவும்; செய்வன என்று– அவ்வாறே பற்றித் தருவன் என்று; ஐயன்– இராமன்; அமைய நோக்க– அம் மானைக் கூர்ந்து நோக்க; தெளிவுடை தம்பி– தெளிந்த மதி கொண்ட தம்பியாகிய லட்சுமணன்; செப்பும்– பின் வருமாறு சொல்லத் தொடங்கினான். அண்ணல்– பெரியோய்! வஞ்சம் விரும்பினார்– வஞ்சகச்செயல் புரிய விரும்பினவர்களான; வெய்ய– கொடிய; வல்– வலிமை பொருந்திய; அரக்கர்– இராட்சதர்கள்; வினையில் செய்த– சூதாகச் செய்த; கைதவம் மான் என்று– மாயமான் இஃது என்று; கடையின்– முடிவில்; காணுதி– காண்பாய்; என்றான்– என்று கூறினான்.


மந்திரத்து இளையோன் சொன்ன
        வாய்மொழி மனத்துக் கொள்ளான்
சந்திரற்கு உவமை சான்ற
        வதனத்தாள் சலத்தை நோக்கிச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
        முறுவலன், சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான் அம்
        மானினைத் தொடரலுற்றான்.

அழகிய தோள்கள் கொண்ட அவ்விராமன் ஆலோசனை மிக்க இளையோனாகிய லட்சுமணன் சொன்ன மொழிகளைக் காதில் ஏற்றான் அல்லன்; பவழ வாயில் புன்னகை பூத்தான்; மானைப் பின் தொடர்ந்து சென்றான்.

சிகர செவ்வி– மலைச் சிகரங்கள் போன்ற; சுந்தரத் தோளினான்– அழகிய தோள்கள் கொண்ட; இராமன் மந்திரத்து இளையோன்– ஆலோசனை மிக்க இளையவனாகிய லட்சுமணன், சொன்ன– எடுத்துக்கூறிய; வாய்மொழி– உண்மையான சொற்களை; மனத்துள்– தன் மனத்தின் உள்ளே; கொள்ளான்– ஏற்றுக்கொள்ளாதவனாய்; சந்திரற்கு – சந்திரனுக்கு; உவமை சான்ற உவமை கூறுவதில் சிறந்து விளங்கிய; வதனத்தாள்– முகம் உடைய வளான சீதா பிராட்டியின்; சலத்தை நோக்கி – கோபத்தைக் கருதி; சிந்துரம் – செந்நிறங்கொண்ட; பவளச் செவ்வாய் – பவழம் போன்ற சிவந்த வாயிடத்தே; முறுவலன் – புன்னகை கொண்டவனாய்; அ மானினை – அந்த மானை; தொடரல் உற்றான் – பின் பற்றிச் செல்லத் தொடங்கினான்.

மிதித்தது மெல்ல, மெல்ல,
        வெறித்தது, வெருவி மீதில்
குதித்தது, செவியை நீட்டிக்
        குரபதம் உரத்தைக் கூட்டி
உதித்து எழும் ஊதை உள்ளம்
        என்று இவை உருவச்செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
        காட்டுவது ஒத்தது அன்றே.

முதலில் மெதுவாக அடி எடுத்து வைத்தது அந்த மாயமான்; பிறகு அச்சம் கொண்டதுபோல் மேலே தாவிக் குதித்தது. பிறகு கால்களை உடம்போடு சேர்த்துக்கொண்டு காற்றினும் கடுவேகமாக ஒடிய தன்றே.

மெல்ல மெல்ல மிதித்தது – (அந்த மாயமான் முதலில்) மெதுவாக அடிவைத்து நடந்து சென்றது; வெறித்தது – வெறித்துப் பார்த்தது; வெருவி மீதில் குதித்தது – அச்சங் கொண்டதுபோல மேலே தாவிக் குதித்தது; செவியை நீட்டி – தன் காதுகளை நீட்டி; குரபதம் உரத்தை கூட்டி – குளம்போடு கூடிய கால்களை மார்பில் ஒட்டினாற்போல மடக்கி வைத்துக்கொண்டு; உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை – தோன்றி மேற்கிளம்பி எழும் காற்று, மனம் என்ற இவற்றை; உருவ செல்லும் – ஊடுருவிச் செல்லும்: கதிக்கு – செலவிற்கு; ஒரு கல்வி வேறே காட்டியது ஒத்தது – கற்றறிய வேண்டிய ஒரு புதிய பாடத்தைத் தனிப்பட்ட முறையில் காட்டியதை; ஒத்து – ஓட்டம் எடுத்தது.


குன்றிடை இவரும்; மேகக்
        குழுவிடைக் குதிக்கும்; கூடச்
சென்றிடின் அகலும்; தாழின்
        தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும்
        நிதி வழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர்
        மனம் எனப் போயிற்று, அம்மா!

அந்த மாயமான் மலைமீது ஏறும்; மேகக் கூட்டங்களின் இடையே தாவிக் குதிக்கும். கூடச் சென்றால் வெகுதொலைவில் ஓடிவிடும்; அருகில் வந்து நிற்கும்; கையால் பற்றிவிடும் நிலையில் வரும்; நிற்கும். அருகில் சென்றால் ஓடிவிடும். ஓரிடத்தே நில்லாது பணமுடையவர்களையே நாடி அலையும் விலை மகளிர் மனம்போல அம் மானும் பாசாங்குகள் பல செய்து ஓரிடத்தும் நில்லாது அவ்வனம் எங்கும் சுற்றித் திரிந்தது.

அ மான் – அந்த மாயமான்; குன்று இடை இவரும் – மலையின் மீது ஏறும்; மேக குழு இடைக் குதிக்கும் – மேகக் கூட்டங்களின் இடையே தாவிக் குதிக்கும்; கூடச் சென்றிடின் – அதனோடு கூடப்போனால்; அகலும் – நீண்ட தூரம் ஓடிப்போகும்; தாழில் – சற்றுத் தாமதித்தால்; தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – கையால் பற்றிவிடும் நிலையில் அருகே வந்து நிற்கும்; நின்றதேபோல நீங்கும் – அருகே நின்றதுபோல் நின்று திடீரென்று வெகு தொலைவில் சென்றுவிடும்; (ஆதலின் அது) நிதி வழி நேயம் நீட்டும் – செல்வம் உள்ள வழியில் தம் ஆசையைச் செலுத்தும்; மன்றல் அம்கோதை மாதர் – மனம் வீசும் அழகிய மாலை அணிந்த விலை மகளிர்; மனம் என – மனம் என்று சொல்லும்; தகைத்து – தன்மையது ஆயிற்று.

பற்றுவான் இனி அல்லன்; பகழியால்
        செற்று வானில் செலுத்தல் உற்றான் என
மற்ற மாய அரக்கன் மனக்கொளா
        உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான்.

இனி இராமன் தன்னைப் பிடிப்பதில் கருத்துச் செலுத்த மாட்டான். பகழி ஒன்றால்கொன்று விண்ணுலகு செலுத்துவான் என்று கண்டு கொண்டான் மாரீசன். தனது முழு சக்தியையும் உபயோகித்து வானிலே எழும்பிக் குதித்து ஓடினான்.

அ மாய அரக்கன் – மாயையில் வல்ல அரக்கனான அம்மாரீசன்; இனிப் பற்றவான் அல்லன் – இராமன் இனி என்னைப் பிடிக்க முயலமாட்டான்: பகழியால் செற்று – தன் அம்பினால் என்னைக் கொன்று; வானில் செலுத்தல் உற்றான் – விண்ணுலகு செலுத்தக் கருதியுள்ளான்; என – என்று; மனம் கொளா – மனத்தில் எண்ணிக்கொண்டு; உற்ற வேகத்தின் – தனக்கு உரிய மிக வேகத்துடனே; உம்பரில் ஓங்கினான் – வானில் மேல் எழும்பிச் செல்லலாயினான்.




அக்கணத்தில் ஐயனும் வெய்ய தன்
        சக்கரத்தில் தகைவு அரிது ஆயது; ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான்
        “புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு?” எனா.

அந்தக் கணத்திலே இராமன் என்ன செய்தான்? சுதர்சனம் என்ற சக்கரம்போல எவராலும் தடுப்பதற்கு அரிய அஸ்திரம் ஒன்றை ஏவினான். எத்தகைய அம்பு? வெய்யதோர் பகழி – சிவந்த நிறம் கொண்ட பகழி என்ன சொல்லி ஏவினான்? “இவன் எங்கு செல்கிறானோ அங்கு தொடர்ந்து சென்று இவன் இன்னுயிர் மாய்ப்பாயாக” என்று கூறி அப் பகழியை ஏவினான்.

அ கணத்தில் – அதே சமயத்தில்; ஐயனும் – இராமனும்; தன் சக்கரத்தினில் – திருமாலாகிய நிலையில் கொண்டுள்ள சுதர்சனம் எனும் சக்கரம்போல; தகைவு அரியது ஆயது – எவராலும் தடுப்பதற்கு அரியது ஆகிய; ஓர் – ஒரு; வெய்ய – கொடிய; செக்கர் மேனி பகழி – சிவந்த நிறம் கொண்ட அம்பை; புக்க தேயம் புக்கு – இவன் செல்லும் இடம் எங்கும் தொடர்ந்து சென்று; இன் உயிர் போக்கு எனா – இவனுடைய இனிய உயிரைப் போக்கு என்று சொல்லி; செலுத்தினான் – ஏவினான்.


நெட்டிலைச் சரம், வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது; அப்பொழுதே பகுவாயினால்
அட்டதிக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தான்.



அந்த இராமபாணம் என்ன செய்தது? அந்த வஞ்சகனின் மார்பிலே தைத்தது. அந்தக் கணமே அவன் தன் பெருவாய் திறந்து எட்டுத் திக்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரல் எழுப்பி “ஹா சீதே; ஹா லக்ஷ்மணா” என்று கூவி ஒரு மலைபோல் தன் சுய உருவில் வீழ்ந்தான்.

நெடு இலை சரம் – நீண்டு கூர்மையாயுள்ள சிலை போன்ற அலகு கொண்ட அந்த இராம பாணம்; வஞ்சனை – வஞ்சகனான அந்த மாரீசனுடைய; நெஞ்சு உற – இதயத்திலே நன்கு பொருந்த; பட்டது – போய் தைத்தது; அப்பொழுதே – அந்தக் கணத்திலே; பகுவாயினால் – பிளந்த தன் வாயினால்; அட்ட திக்கும் – எட்டுத் திக்குகளிலும்; அப்புறமும் – அவற்றிற்கு அப்பாலும்; புக – புகும்படி; விட்டு – பெருங்குரல் கொடுத்து; அழைத்து – “ஹா சீதே! ஹா லக்ஷ்மணா!” என்று கூவி; ஒரு குன்று என – ஒரு மலை போலத் தன் உண்மை வடிவில்; வீழ்ந்தான் – கீழே விழுந்தான் மாரீசன்.

வெய்யவன் தன்
        உருவொடு வீழ்தலும்
“செய்யது அன்று” எனச்
        செப்பிய தம்பியை
‘ஐயன் வல்லன்’ என் ஆர்
        உயிர் வல்லன், நான்
உய்ய வந்தவன்
        வல்லன் என்று உன்னினான்.

கொடிய வஞ்சகனான அந்த மாரீசன் தன் சுயரூபம் கொண்டு வீழ்ந்த உடனே இராமன் எண்ணியது யாது? இந்த மான் பின்னே செல்வது சரியன்று என்று சொன்ன தம்பி மிக்க கெட்டிக்காரன். நான் உய்யும் பொருட்டு என் பின்னே காடு போந்தவன் என்று பெருமையோடு எண்ணினான்.

வெய்யவன் – கொடியவனான அந்த மாரீசன்; தன் உரு ஒடு – தன் சுய உருவத்துடனே; வீழ்தலும் – கீழே விழுந்தவுடன்; (இராமன்) செய்யது அன்று – இந்த மான் பின்னே செல்வது சரியன்று (வஞ்சக மான்) என – என்று; செப்பிய – சொன்ன; தம்பியை – தம்பியாகிய வட்சுமணனை; ஐயன் வல்லன் – என்னப்பன் கெட்டிக்காரன்; என் ஆருயிர் வல்லன் – எனது அரிய உயிர் போன்றவன்; வலியன் (சமர்த்தன்) நான் உய்ய வந்தவன் – காட்டிலே எனக்கு ஏற்படவிருக்கும் இன்னல்களினின்றும் நான் பிழைத்து வாழ என்னுடன் காடு போந்தவன்; என்று உன்னினான் – என்று பெருமையோடு எண்ணினான்.

எயிறு அலைத்து
        முழை திறந்து ஏங்கிய
செயிர் தலைக் கொண்ட
        சொல் செவி சேர்தலும்
குயில் தலத்திடை உற்றது
        ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து
        விழுந்து மயங்கினாள்.

மாரீசனின் கூக்குரல் கேட்டவுடனே சிதை என்ன செய்தாள்? தன் இரு கைகளாலும் வயிற்றிலே அடித்துக் கொண்டு மரத்தின் மீதிருந்த குயில் தரையிலே விழுந்தது போல துயருற்றுத் தரையிலே விழுந்து மயங்கினாள். 

எயிறு – பற்கள்; அலைத்தது – மூடி அசைதல் கொண்ட; முழை திறந்து – குகை போன்ற தன் வாய் திறந்து; ஏங்கிய – முழங்கிய; செயிர்தலை கொண்ட சொல் – குற்றம் மேற்கொண்ட அம் மாரீசனின் கூக்குரல்; செவி சேர்தலும் – காதில் விழுந்த உடனே; குயில் – ஒரு குயிலானது; தலத்து இடை உற்றது – தான் இருந்த மரத்தினின்றும் தரையிலே வீழ்ந்தது போல; ஓர் கொள்கையாள் – ஒரு துயர் நிலை அடைந்தவளாய்; வயிறு அலைத்து – தன் வயிற்றைக் கைகளால் புடைத்துக்கொண்டு; விழுந்து – தரையில் விழுந்து; மயங்கினாள் – மயக்கமுற்றாள்.


‘பிடித்து நல்கு இவ் உழை
        எனப் பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு’
        என மெய் அழல்
கொடிப் படிந்தது என,
        நெடுங்கோள் அரா
இடிக்கு உடைந்தது
        எனப் புரண்டு ஏங்கினாள்.

“நீயே இந்த மானைப் பிடித்து வந்து எனக்குக்கொடு என்று சொல்லி அறிவு கெட்டவள் ஆனேனே! என் வாழ்வுக்கு ஆதாரமான கணவன் அழியும் படியான காரியத்தைச் செய்து விட்டேனே!” என்று கூறி நெருப்பிலே பட்ட கொடிபோலவும், இடியோசை கேட்ட பாம்பு போலவும் வலிவிழந்து தரையிலே புரண்டு அழுதாள்.

இ உழை – இந்த மானை; பிடித்து நல்கு – நீயே பிடித்து வந்து எனக்குக் கொடு; என் – என்று; பேதையேன் – அறிவு இல்லாத நான்; முதல் வாழ்வு – என் வாழ்வுக்கு ஆதாரமாயுள்ள என் கணவனை; முடித்தனென் – அழியும் படியான செயலைச் செய்து முடித்து விட்டேனே; என – என்று கூறி; மொய் அழல் கொடி படிந்தது என – எழுநா விட்டு எரியும் தீ ஒன்று; ஒரு பூங்கொடியைப் பற்றிக்கொண்டது போலவும்; நெடுங்கோள் அரா – நீண்ட வலிய பாம்பு ஒன்று; இடிக்கு உடைந்தது என – இடி முழக்கம் கேட்டு வலிவிழந்து வருந்திக் கிடந்தது போலவும்; புரண்டு – தரையிலே கிடந்து புரண்டு; ஏங்கினாள் – வருந்தி அழுதாள்.


“குற்றம் வீந்த குணத்தின்
        எம் கோமகன்
மற்றை வாள் அரக்கன்
        புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன்
        என்னவும், என் அயல்
நிற்றியோ? இளையோய்
        ஒரு நீ” என்றாள்.

“குற்றம் என்பது இல்லாத குணக்குன்றாய் என் தலைவன் மாற்றார் செய்த சூழ்ச்சியால் வீழ்ந்தான். அவனது குரல் கேட்டும் தம்பியாகிய நீ இங்கு நிற்பாயோ” என்று கடிந்து கொண்டாள் சீதை. யாரை நோக்கி? இளையவனாகிய லட்சுமணனை நோக்கி.

குற்றம் வீந்த – குற்றம் என்பது இல்லாத: குணத்தின் – நல்ல குணங்களை உடைய, எம் கோமகன் – என் தலைவன்; மற்றை – வேறுபட்ட (அதாவது பகைவனான) வாள் அரக்கன் – கொடிய அரக்கன்; புரிமாயையால் – செய்த மாயத்தால்; இற்று வீழ்ந்தனன் என்னவும் – உயிரற்றக் கீழே விழுந்தான் என்பதை (அவன் குரலால்) கேட்ட பின்பும்; இளையோய் ஒரு நீ – அவனுடைய தம்பியாகிய நீ; என் அயல் நிற்றியோ – என் அருகிலே நிற்கின்றாயோ? என்றாள் – என்று லட்சுமணனை நோக்கிக் கடிந்து கொண்டாள்.

“பார் எனப் புனல் எனாப்
        பவனம் வான், கனல்
பேர் என அவை
        அவன் முனியில் பேருமால்
கார் எனக் கரிய அக்
        கமலக் கண்ணனை
யார் எனக் கருதி இவ்
        இடரின் ஆழ்கின்றீர்?”

“இராமனை – கார் மேனி வண்ணனை – செந்தாமரைக் கண்ணனை – யார் என்று கருதிநீவிர் இத்துன்பத்தில் கிடந்து உழல்கின்றீர்? அவன் சினங்கொண்டால் நிலம், நீர், காற்று, தீ, வானம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களும் நிலை குலையுமே!” என்றான் இளையவன்.

பார் என – புவி என்றும்; கனல் என – தீ என்றும்; புனல் என – நீர் என்றும்; பவனம் வான் கனல்பேர் என அவை – காற்று ஆகாயம் எனும் பேர் கொண்ட எவையும்; அவன் முனியில் – இராமன் கோபித்தால்; பேரும் ஆல் – அவை நிலை தளர்ந்து கெடும்; ஆதலின்; கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை – நீருண்ட மேகம் போலும் கரிய நிறங்கொண்ட செந்தாமரைக் கண்ணனாகிய இராமனை; ஆர் எனக் கருதி – யார் என்று நினைத்து; இவ் இடரின் – இவ்விதத் துன்பத்தில்: ஆழ்கின்றீர் – நீவிர் ஆழ்ந்து தவிக்கின்றீர்?

காவலன், ஈண்டு நீர்
        கருதிற்று எய்து மேல்
மூவகை உலகமும், முடியும்;
        முந்து உள
தேவரும் முனிவரும்
        முதல செவ்வியோர்
ஏவரும் வீவர்; நல்
        அறமும் எஞ்சுமால்

இராமன் எல்லா உயிர்களையும் காத்தல் வல்லோன். நீர் கருதியவாறு அழிவுறுவான் ஆயின் மூவுலகமும் முடியும்; பிரம்மாதிதேவர் அழிவர்; முனிவர்களும் அழிவார்கள்; நல்லதோர் அறமும் அழியும்.

காவலன் – எல்லா உயிர்களையும் காத்தல் வல்லோனாகிய இராமன்; ஈண்டு – இப்பொழுது; நீர் கருதிற்று – நீவிர் கருதியவாறு; எய்துமேல் – அழிவுற்றால்; மூவகை உலகமும் முடியும் – சுவர்க்கம், பூமி, பாதாளம் என்று சொல்லப்பெறும் மூவகை உலகங்களும், அனைத்தும் அழிந்துப்போம்; முந்து உள – முதன்மையாகக் கருதப்பட்ட பிரம்மாதி தேவர்களும்; முனிவரும் – முனிவர்களும். முதல – முதன்மையாகக் கொண்ட; செவ்வியோர் ஏவரும் – சிறந்தோர் யாவரும்; வீவர் – அழிவர்; நல் அறமும் – அழியாத நல்லதோர் அறமும்; எஞ்சும் ஆல் – அழியும்.

“பரக்க என் பகர்வது?
        பகழி பண்ணவன்
துரக்க, அங்கு அதுபடத்
        தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ்வுரை எடுத்து
        அரற்றினான்; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலீர்;
        இருத்திர் ஈண்டு” என்றான்.

“இராமன் ஏவிய அம்பு தைக்கவே சோர்வுற்று அழியும் அந்த அரக்கன் இராமனுடைய குரல் எடுத்துக் கதறிக் கூவினான். ஆகவே அது பற்றி நீவிர் கலங்காதீர்; வருந்தாதீர்; அழாதீர்!” என்று சீதைக்கு ஆறுதல் கூறினான் லட்சுமணன்.

பரக்க என் பகர்வது – விரிவாக நான் இனி என்ன சொல்வது? பண்ணவன் – நம் தலைவனாகிய இராமன்; பகழி துரக்க – அம்பு ஒன்றை ஏவ; அங்கு அதுபட – ஆங்கே அது அந்த மான் மீது பட தொலைந்து சோர்கின்ற அரக்கன் – தன் வலி தொலைந்து சோர்ந்து அழிகின்ற அவ்வரக்கன்; அ உரை எடுத்து அரற்றினான் – இராமன் குரலால் அவ் வார்த்தைகளைக் கூறிக் கதறிக் கூவினான்; (ஆதலின்) அதற்கு இரக்கம் உற்று இரங்கலீர் – அதன் பொருட்டு ஏங்கி வருந்தாதீர்; ஈண்டு இருத்திர் – இங்கே கவலையின்றி இருப்பீராக என்று தேறுதல் கூறினான் லட்சுமணன்.

என்று அவன் இயம்பலும்
        எழுந்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள்
        கொதிக்கும் உள்ளத்தள்



நின்ற நின் நிலை இது
        நெறியிற்று அன்று எனா
வன் தறு கண்ணினள்
        வயிர்த்துக் கூறுவாள்.

இவ்வாறு இளைய பெருமாள் கூறிய உடனே என்ன ஆயிற்று? சினம் பொங்கிய சீதைக்கு தன்னைக் கொன்று விட்டது போலும் துயரம் மேலிட்டது; உள்ளம் கொதித்தது; உறுத்து விழித்தாள் “உன் அண்ணனின் அலறல் கேட்டும் நீ விரைந்து ஓடினாய் அல்லை; சிறிதும் மனம் பதறாமல் நிற்கின்றாய். உனது இந்த நிலை நியாயமா? நல்நெறியா? அடுக்குமா?” என்று சில கடும் சொற்களை அள்ளி வீசினாள்.

என்று அவன் இயம்பலும் – என்று லட்சுமணன் கூறியதும்; எழுந்த சீற்றத்தள் – சினம் பொங்கியவளாய்; கொன்று அன தன்னைக் கொன்றதே போலும்; இன்னலள் – துன்பமுடையவளாய்; கொதிக்கும் உள்ளத்தள் – கொதிக்கின்ற மனம் உடையவளாய்; வன்தறு கண்ணினள் – வலிய வீரத் திரு பார்வையுடையவளாய்; (லட்சுமணனை நோக்கி) நின்ற நின் நிலை இது – உன் முன்னவனின் அலறல் கேட்டும் சிறிதும் நிலை தளராமல் இங்கு நிற்கின்றாயே இது; நெறியிற்று அன்று – நல்ல நெறியாகுமா? ஆகாது. எனா – என்று; வயிர்த்துக்கூறுவாள் – கடுமையான சொற்கள் சில கூறத் தொடங்கினாள்.

“ஒரு பகல் பழகினார்
        உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு
        வெற்றி கேட்டும் நீ



வெருவலை நின்றனை
        வேறு என்? யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து
        இறப்பென் ஈண்டு” என

ஒரு நாள் பழகிய போதினும் உயிரைக் கொடுத்து உதவி செய்வர். யார்? உண்மை அன்புடையோர். அவ்விதமிருக்க நீயோ இராமன் உயிருக்கு ஆபத்து வந்தது அறிந்தும் அசையாது, நிலை பெயராது, அஞ்சாது, கலங்காது நிற்கின்றாய். இனி எனக்கு என்ன இருக்கிறது? தீயிலே விழுந்து உயிர் துறப்பேன் என்று கூறி,

ஒரு பகல் பழகினார் – ஒரு நாளே பழகினவர் ஆயினும்; (உண்மை அன்புடையோர்) உயிரை ஈவர் (அந்த நண்பருக்காக) தமது உயிரையும் கொடுத்து உதவி செய்வர்; (அங்ஙனமிருக்க) பெருமகன் – தலைவனாகிய இராமன்; உலைவு உறு பெற்றி – அழிவடைந்தான் என்பது; கேட்டும் – காதால் கேட்டும்; வெருவலை – பதறவில்லை; நின்றனை – என் எதிரில் நின்று கொண்டிருக்கிறாய்; வேறு என் எனக்கு வேறு கதி என்ன இருக்கிறது? இனியான் – இனிமேல் நான்; கடிது – விரைவிலே; எரி இடை – தீயிலே; வீழ்ந்து – விழுந்து; ஈண்டு – இப்போதே; இறப்பன் – உயிர் துறப்பேன்; எனா – என்று.

தாமரை வனத்திடைத்
        தாவும் அன்னம் போல்
தூம வெம் காட்டு எரி
        தொடர்கின்றாள் தனை
சேம வில் குமரனும்
        விலக்கிச் சீறடிப்
பூமுக நெடு நிலம்
        புல்லிச் சொல்லுமால்



குளத்திலே மலர்ந்திருக்கிற தாமரைக் காட்டிலே தாவும் அன்னம் போல ஓடினாள் சீதை எங்கே? காட்டிலே புகைவிட்டு எரியும் தீ நோக்கி. எதற்கு? தீயிலே விழுந்து உயிர்விட; அப்போது இளைய பெருமாள் பூமியிலே விழுந்து வணங்கி, சீதையைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொன்னான்.

தாமரை வனத்திடை – குளத்திலே உள்ளதொரு செந்தாமரைக் காட்டிலே; தாவும் – தாவியோடும்; அன்னம் போல் – அன்னப் பறவை போல; தூம வெம் காட்டு எரி – புகை சூழ்ந்த காட்டுத் தீயினிடத்திலே; தொடர்கின்றாள் – செல்லத் தொடங்கினாள்.

தனை – அவ்வாறு உயிர் விடச் சென்ற சீதையை; சேம வில் குமரனும் – சீதையைப் பாதுகாத்தல் கருதி வில்லேந்தி நின்ற இளைய பெருமாள்; விலக்கி – தடுத்து; சிறு அடி பூ முகம் – சிறிய அடிகளாகிய தாமரை மலர் முன்னே; நெடு நிலம் புல்லி – பூமியிலே விழுத்து வணங்கி; சொல்லுவான் – பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.

“துஞ்சுவது என்னை? நீர்
        சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென்; மறுக்கிலென்;
        அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும்; அடியனேன்
        ஏகுகின்றனென்;
வெஞ்சின விதியினை
        வெல்ல வல்லமோ?”

நீவிர் உயிர் துறப்பது ஏன்? வேண்டாம்; நீவிர் கூறிய சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். உமது கட்டளையை நான் மறுக்கவில்லை. போகின்றேன். விதி வலிது. அதை வெல்ல நம்மால் முடியுமோ? (முடியாது)

துஞ்சுவது – நீவிர் இறப்பது; என்னை – ஏன்? நீர் சொற்ற சொல்லை – நீவிர் சொன்ன சொல்லுக்கு; யான் அஞ்சுவென் – நான் பயப்படுகிறேன்; மறுக்கிலேன் – நீவிர் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிய நான் மறுத்தேன் அல்லன். இனி – இனிமேல்; அவலம் தீர்ந்து – உம்முடைய வருத்தம் நீங்கி; இஞ்சு இரும் – இங்கே இருப்பீராக; அடியனேன் ஏகுகின்றனன் – நான் செல்கிறேன்; வெஞ்சின விதியை – மிக்க சினத்துடன் நம்மீது சீறி வரும் விதியை; வெல்ல வல்லமோ? – வெல்லும் வல்லமை நமக்குளதோ. (இல்லை)

போகின்றேன் அடியனேன்
        பொருந்தி வந்து, கேடு
ஆகின்றது; அரசன் தன்
        ஆணை நீர் மறுத்து
“ஏகு” என்றீர்; இருக்கின்றீர்
        தமியிர் என்று, பின்
வேகின்ற சிந்தையான்
        விடை கொண்டு ஏகினான்.

எனது ஐயன் இராமனுடைய கட்டளை ‘இங்கே இரு’ என்பது; அதை மீறி “ஏகு” என்கிறீர். துணை எவருமின்றி இருக்கிறீர். வேகின்ற சிந்தையோடு போகின்றேன். விடையும் கொண்டேன் என்று சொல்லிப் போனான் லட்சுமணன்.

அடியனேன் போகின்றேன் – அடியேன் இப்போதே போகின்றேன்; கேடு – ஒரு பெருங்கேடு; பொருந்தி வந்து ஆகின்றது – நம்மிடம் வலியே வந்து பொருந்தியுள்ளது; அரசன் தன் ஆணை – இராமனது கட்டளையை; மறுத்து – மீறி; ஏகு என்றீர் – நீவிர் என்னைப் போகச் சொல்கின்றீர்; தமியிர் இருக்கின்றீர் – நீவிர் தனியாக இருக்கின்றீர்; என்று – எனக் கூறி; பின் – பிறகு; வேகின்ற சிந்தையான் – துயரால் மனம் வெந்து கொண்டிருக்கும் இலட்சுமணன்; விடைகொண்டு – சீதையிடம் விடை பெற்றுக்கொண்டு; ஏகினான் – சென்றான்.

“இருப்பனேல், எரியிடை
        இறப்ப ரால் இவர்;
பொருப்பு அனையானிடைப்
        போவெனே எனின்
அருப்பம் இல் கேடு வந்து
        அடையும்; ஆருயிர்
விருப்பனேற்கு என் செயல்”
        என்று விம்மினான்.

“நான் போகாது இங்கு நின்றால் இவர் தீயில் வீழ்ந்து இறப்பர். போனாலோ? பெரும் கேடு வரும். இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவிக்கிறேன். உயிர் விடாது உழல்கின்றேன் என் செய்வேன்?” என்று விம்மினான் லட்சுமணன்.

இருப்பனேல் – நான் போகாது இங்கே இருப்பேன் ஆகில்; இவர் எரியிடை இறப்பர்; இந்தப் பிராட்டி தீயில் வீழ்ந்து உயிர் விடுவர்; பொருப்பு அனையான் குடை – குன்றனைய இராமனிடையே செல்வேன் ஆகில்; அருப்பம் இல் – அற்பமானது என்று தள்ளிவிட முடியாத; கேடு – பெருங்கேடு; வந்து அடையும் – வந்து சேரும், ஆருயிர் விருப்பனேற்கு – உயிரை விடாமல் அதன் மீது பற்றுக்கொண்டிருக்கும் யான் என் செயல் – என்ன செய்வேன்? (ஒன்றும் தெரியவில்லையே) என்று – என்று எண்ணி; விம்மினான் – தேம்பி வருந்தியழுதான் லட்சுமணன்.

இளையவன் ஏகலும்
        இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன்
        வஞ்சம் முற்றுவான்
முளை வரித் தண்டு ஒரு
        மூன்றும் முப் பகைத்
தளை அரி தவத்தவர்
        வடிவும் தாங்கினான்.

லட்சுமணன் “எப்பொழுது செல்வான்? எப்பொழுது செல்வான்?” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் வளைந்த கோரப் பற்கள் கொண்ட இராவணன்.

லட்சுமணன் சென்ற உடனே சந்நியாசிக் கோலம் கொண்டான். திரிதண்டம் ஒன்றைக் கையில் ஏற்றான்.

இளையவன் – லட்சுமணன் ; ஏகலும் – சென்ற உடனே; இறவு பார்க்கின்ற – அவன் செல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த; வளை எயிற்று – வளைந்த பற்களை உடைய; இராவணன் – இராவணன்; வஞ்சம் – தான் எண்ணி வந்த வஞ்சகச் செயலை; முற்றுவான் – செய்து முடித்தற் பொருட்டு; வரி – வரிந்து கட்டப்பட்ட; முளை – மூங்கில்; தண்டு – கோல்; ஒரு மூன்றும் – ஒன்றாகிய மூன்றும் முப்பகை – காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று விதமான உட்பகைகளாகிய; தளை – பந்தங்களையும் அரி – அறுத்த; தவத்து அவர் வடிவும் – துறவியர் வடிவமும்; தாங்கினான் – மேற்கொண்டான்.

ஊண் இலனாம் என
      உலர்ந்த மேனியன்
சேன் நெறி வந்தது
      ஓர் வருத்த செய்கையன்
பாணியின் அளந்து
      இசை படிக்கின்றான் என
வீணையின் இசைபட
      வேதம் பாடுவான்.

நீண்டகாலமாகச் சோறு காணாதவன் என்றுசொல்லும்படியாக, வற்றி உலர்ந்த உடலையுடையவனாய்; நெடுந்துாரம் நடந்து வந்தவன் போல அலுப்பு மேலிட்டவனாய், சாமகானம் செய்து கொண்டு அதற்கு ஏற்ப வீணையொடு கைத்தாளம் போட்டுக்கொண்டு வந்தான்.

ஊண் இலனாம் – நீண்ட நாட்களாக உணவு கொள்ளாதவன்; என – என்று சொல்லும்படியாக; உலர்ந்த மேனியன் – வற்றிக் காய்ந்து போன உடல் உடையவனாய்; சேண் நெறி வந்தது – நீண்ட தூரத்திலிருந்து நடந்து வந்தவன் போல; ஓர் வருத்த செய்கையன் – அலுப்புத் தோன்றும் செயல்கள் உடையோனாய்; பாணியின் அளந்து – கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, இசைபடிக்கின்றான் என – பாடுகிறான் என்று சொல்லும்படியாக; வீணையின் இசைபட – வீணா கானத்துடன்; வேதம் பாடுவான் – சாம வேதத்தை கானம் செய்வான் ஆனான்.

பூப்பொதி அவிழ்ந்தன
       நடையன்; பூதலம்
தீப்பொதிந்ததாம் என
       மிதிக்கும் செய்கையன்
காப்பு அரும் நடுக்கு உறும்
       காலன்; கையினன்
மூப்பு எனும் பருவமும்
       முனிய முற்றினான்.

பூவின் இதழ்கள் மெல்ல அவிழ்வது போன்ற நடை; தீ மேல் நடப்பவன் போல அடிமேல் அடிவைத்த நடை; நடுங்கும் கால்கள்; நடுங்கும் கைகள்; பிறர் கண்டு அருவருக்கத்தக்க முதுமை.

பூப்பொதி அவிழ்ந்து அன - பூவின் இதழ் மெல்ல விரிவது போலும்; நடையன் - மெதுவான நடையுடையவனாய்; பூதலம் - பூமி; தீ பொதிந்தது ஆம் என - பூமியிலே நெருப்பு நிரம்ப இருப்பது போல; மிதிக்கும் செய்கையன் - பட்டதும் படாததுமாக அடிமேல் அடி வைப்பவனாய்; காப்பு அரும் - காத்தற்கு இயலாமல்; நடுக்கு உறும் - நடுங்கும்; காலன் - கால்களை உடையவனாய்; கையினன்-கைகளை உடையவனாய்; மூப்பு எனும் பருவமும் - முதுமையும்; முனிய - பிறர் கண்டு அருவருக்கத் தக்க விதமாக; முற்றினான் - முதுமை எய்தினான்.

தாமரை மணி, தொடர்
       தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையின்,
       வளைந்த ஆக்கையன்,

நாம நூல் மார்பினன்
       நணுகினான் அரோ
தூமனத்து அருந்ததி
       இருந்த சூழல் வாய்.

ஆமை போல் கூன் விழுந்த உடல்; கையிலே மணி மாலை; மார்பிலே பூணூல்; இவ்விதத் தோற்றத்துடன், அருந்ததி போலும் கற்பினளாகிய சீதை இருந்த பன்னசாலையை அணுகினான். யார்? இராவண சந்நியாசி.

தவத்தின் - தவத்திற்கு அறிகுறியான; தாமரை மணி தொடர் மாலையன் - தாமரை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை ஏந்தியவனாய்; ஆமையின் இருக்கையின் - ஆமையின் முதுகு போல; வளைந்த - கூன் விழுந்த; ஆக்கையன் - உடல் கொண்டவனாய்; நாம நூல் மார்பினன் - பெருமை மிகு பூணுல் புரளும் மார்புடையயோனாய்; தூமனத்து - தூய சிந்தையுடைய; அருந்ததி - அருந்ததி போலும் கற்புடைய சீதா பிராட்டி; இருந்த சூழல்வாய் - இருந்த பன்ன சாலையை; அணுகினான் - நெருங்கினான்

தோம் அறு சாலையின்
       வாயில் துன்னினான்
நா முதல் குழறிட
       நடுங்கு சொல்லினான்
“யாவிர் இவ்விருக்கையுள்
       இருந்துளீர்?” என்றான்
தேவரும் மருள் கொளத்
       தெரிந்த மேனியான்.

அரக்கர் தம் மாயங்களை நன்கு அறிந்த தேவர்களும் மயங்கும் வண்ணம் துறவி வேஷம் பூண்ட அந்த இராவன சந்தியாசி சீதையிருந்த பன்னசாலை வாயிலை அடைந்தான். “இதனுள் இருப்பவர் யார்” என்று நாக் குழறக் கேட்டான்.

தெரிந்த – அரக்கர் தம் மாயங்களை நன்கு அறிந்த; தேவரும் – தேவர்களும்; மருள் கொள – இவன் இராவணன் என்று அறியாது மயங்கும் வகையில்; மேனியான் – துறவு மேனி கொண்ட அந்த இராவணன்; தோம் அறு சாலையின் வாயில் – குற்றமற்ற அப்பன்னசாலை வாயிலை; துன்னினான் – நண்ணினான்; நா முதல் குழறிட – நாத்தடுமாற; நடுங்கு சொல்லினான் – நடுங்கும் சொற்களை உடையவனாய்; இவ் இருக்கையுள் – இந்த குடிலில்; இருந்துளீர் – இருக்கின்றவர்களே ! யாவீர் – நீங்கள் யார்? என்றான் – என்று கேட்டான்.

தோகையும் “இவ் வழித்
        தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்”
        என்னும் சிந்தையாள்
பாகு இயல் கிளவி ஓர்
        பவளக் கொம்பர் போன்று
“ஏகு மின் ஈண்டு” என
        எதிர் வந்து எய்தினாள்.

“இவர் – இந்த வனத்திலே தவம் செய்பவர் போலும்” என்று எண்ணினாள் சீதை. தேன் பாகுபோலும் இனிய மொழிகளால் “இங்கே எழுந்தருள்க” என்று வரவேற்ற வண்ணம் ஒரு பவளக் கொடி போல் அந்தக் கபட சந்நியாசியின் எதிரில் வந்து தோன்றினாள்.

தோகையும் – மயில் போலும் சாயலாளாகிய சீதையும்; இவ் வழி – இந்த வனத்தில் இருக்கும்; தோம் இல் சிந்தனை மாசற்ற மனமுடைய; சேகு அறு நோன்பினர் – குற்றமற்ற தவ விரதமுடையவர்; இவர்; என்னும் சித்தையாள் – என்ற எண்ணங்கொண்டவளாய்; பாகு இயல் கிளவி – தேன் பாகு போலும் சுவையுடைய இனிய சொற்களால்; ஈண்டு ஏகுமின் – இங்கு எழுந்தருள்க; என – என்று கூறி, எதிர் வந்து எய்தினாள் – அந்தக் கபட சந்நியாசியின் எதிரே வத்தாள்.

வெற்பிடை மதம் என
        வியர்க்கும் மேனியன்
அற்பினின் திரைபுரள்
        ஆசை வேலையன்
பொற்பினுக்கு அணியினைப்
        புகழின் சேக்கையைக்
கற்பினுக்கு அரசியைக்
        கண்ணில் நோக்கினான்.

இராவணனுடைய உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பின; பெருக்கெடுத்து ஓடின; ஆசை எனும் கடலிலே அகப்பட்ட அவன், அழகுக்கு ஓர் அணியாய், புகழுக்கு இருப்பிடமாய், கற்பினுக்கு அரசியாய் விளங்கும் சீதாபிராட்டியைத் தன் கண்களால் கண்டான்.

வெற்பு இடை மதம் என – மலையிடத்தே உண்டாகும் சிலாசத்து எனும் கல்மதம்போல; வியர்க்கும் மேனியன் – வியர்வை பெருகும் உடலுடையவனும், அற்பினில் – அன்பினால்; திரை புரள் – அலை புரண்டு எழும்; ஆசை வேலையன் – ஆசை எனும் கடலிடைப்பட்டவனுமாகிய இராவணன்; பொற்பினுக்கு அணியினை – அழகுக்கு ஓர் அணிகலன் போன்றவளை; புகழின் சேக்கையை புகழுக்கு இருப்பிடமானவளை; கற்பினுக்கு அரசியை – கற்பு என்பதற்கு ஓர் அரசி போன்றவளை கண்ணில் நோக்கினான் – தன் கண்களால் நேரில் கண்டான்.

புன மயிர் சாயலின்
        எழிலில் பூதறைச்
சுனை மடுத்து உண்டு
        இசை முரலும் தும்பியின்
இனம் எனக் களித்துளது
        என்பது என்? அவன்
மனம் எனக்களித்தது
        கண்ணின் மாலையே.

இராவணனுக்குத் தலைகள் பத்து; கண்கள் இருபது; இந்த இருபது கண்களும் என்ன செய்தன? களித்தன. எதை போல? – மலர்களிலே உள்ள தேன் ஒரு மடுவிலே தேங்கியுள்ளது. தேங்கிய மதுவை உண்டு களித்து மயங்கி ரீங்காரம் செய்கின்றன வண்டுகள். அம் மாதிரி ஏன்? அவன் மனம் போல கண்களும் களித்தன என்பதே பொருந்தும்.

கண்ணின் மாலையே – சீதையைக் கண்ட அந்த இராவணனுடைய கண் வரிசைகள்; புனமயில் சாயல் தன் எழிலில் – காட்டிலே சுயேச்சையாய் திரிகின்ற மயில் போலும் மேனியளாகிய சீதையின் அழகினால்; பூ நறை சுனை மடுத்து – பூக்களில் உள்ள தேன் நிறைந்த மடுவில் அதனைத் தேக்கிப் பருகி; இசை முரலும் – ரீங்காரம் செய்கின்ற தும்பியின் இனம் என – வண்டுகள் கூட்டம்போல; களித்துளது என்பது என்? – மகிழ்ந்து மயங்கின என்று சொல்வதில் என்ன சிறப்பு? (பின் என்னை) அவன் மனம் எனக் களித்தது – அவன் மனமேபோல் கண்களும் களித்தன.

சேயிதழ்த் தாமரைச்
        சேக்கை தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற
        மேனி காணுதற்கு
ஏயுமே இருபது இங்கு
        இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று
        அல்லல் எய்தினான்.

தாமரை மலரிலே வீற்றிருக்கின்ற திருமகள்; தனது இருக்கை விட்டு இவ்விடம் வந்துவிட்டாள். அவளது அழகிய மேனி காண்பதற்கு எனது கண்கள் இருபது போதுமோ? போதா – “ஆயிரம் கண்கள் – இமையாத கண்கள் – பெற்றிலனே” என்று வருந்தினான். – வருந்தியவன் யார்? இராவணன்.

சேய் இதழ் தாமரைச் சேக்கை – சிவந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய தனது இருப்பிடம்; தீர்ந்து – விட்டு; இவண் – இவ்விடம்; மேயவள் – வந்துள்ள திருமகளாகிய இவள்; மணி நிறமேனி – சிறந்த ஒளியுடைய திருமேனியை; காணுதற்கு – காண்பதற்கு; இங்கு இருபது நாட்டங்கள் – எனக்குள்ள இந்த இருபது கண்கள்; ஏயுமே – போதுமோ; (போதா) இமைப்பு இல் நாட்டங்கள் – இமையாத கண்கள்; ஆயிரம் இல்லை என்று – ஆயிரம் இல்லையே என்று; அல்லல் எய்தினான் – (எண்ணி) துன்பம் அடைந்தான் இராவணன்.

ஆண்டையான் அனையன உன்னி
        ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை
        முறை இலோன் தனைக்
காண்டலும் கண்ணின் நீர்
        துடைத்த கற்பினாள்
“ஈண்டு எழுந்தருளும்”
        என்று இனிய கூறினாள்.

தன் கணவனுக்கு நேர்ந்த துன்பம் கேட்டுக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த சீதை அக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கட்டுக்கு அடங்காத ஆசை மேலும் மேலும் உந்த அங்கே நின்று கொண்டிருந்த கபட சந்நியாசியை வரவேற்றாள் “இங்கே எழுந்தருள்வீர்” என்று இனிய சொல் கூறினாள்.

ஆண்டையான் – அங்கிருந்து கொண்டு; அனையன – மேற்கூறியவற்றையெல்லாம்; உன்னி – எண்ணி; ஆசை மேல் மூண்டு எழு – ஆசையானது மேலும் மேலும் மூண்டு எழுகின்ற; முறை இலான் – நல்வழி நில்லாத அந்த கபட சந்நியாசியை; கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கண்களிலிருந்து பெருகும் நீரைத் துடைத்துக்கொண்டு சிறந்த கற்புடையவளாகிய; சீதை “ஈண்டு எழுந்தருளும்” என்று. நீவிர் இங்கே எழுந்தருள்வீராக என்று; இனிய கூறினாள் – இனிய சொல் கூறினாள்.

இருந்தவன் “யாவது
        இவ் இருக்கை இங்கு உறை
அருந்தவன் யாவன்?
        நீர் யாரை?” என்றலும்
“விருந்தினர்; இவ்வழி
        விரகு இலார்” எனப்
பெருந் தடங் கண்ணவள்
        பேசல் மேயினாள்

சீதா பிராட்டி அளித்த வரவேற்பைப் பெற்று, இருக்கையில் அமர்ந்த இராவணன் கேட்டான். என்ன கேட்டான்? “இது எவரது உறைவிடம்? இங்கே தவம் செய்பவர் யார்? நீர் யார்?” என்று கேட்டான்.

“ஐயோ பாவம்! கள்ளங் கபடம் அறியாதவர். இவ்வழிச் செல்பவர் போலும் இவ்விடத்துக்குப் புதியவர் போலும்” என்று கருதி சீதா பிராட்டியும் சொல்லத் தொடங்கினாள்.

இருந்தவன்– சீதா பிராட்டியின் வரவேற்பை ஏற்று அவளால் அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த அந்த இராவண சந்நியாசி; இவ் இருக்கை– இந்த இருப்பிடம்; யாவது– எவருடையது? இங்கு உறை– இங்கே வசிக்கின்ற; அருந்தவன்– அரிய தவசி யாவன்? யார்? நீ யாரை? நீர்– யார்? என்றலும்– என்று கேட்கவும்; இவ்வழி விருந்தினர் – இவர் இவ்விடம் வந்த விருந்தினர்; விரகு இலார்– வஞ்ச மற்றவர்; என– என்று எண்ணி; பெருந்தடங்கண் அவள்– பெரிய விசாலமான கண்களை உடைய சீதா பிராட்டியும்; பேசல்மேயினாள்– பேசத் தொடங்கினாள்.



“தயரதன் தொல் குலத்
        தனயன், தம்பியோடு
உயர்குலத்து அன்னைசொல்
        உச்சி ஏந்தினான்
அயர்வு இலன்; இவ்வழி
        உறையும் அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர்
        பெருமையீர்” என்றாள்.

“பழைமை மிகும் இட்சுவாகு குலத்திலே தோன்றிய தசரத சக்கரவர்த்தியின் மகன் – தன் தாயின் கட்டளையைத் தலைமேல் தாங்கி; தம்பியோடு கான்போந்து அயர்வின்றி இங்கே உறைகின்றார். அவர் பெயரை நீவிர் அறிந்திருப்பீரே! அறியீரோ?” என்று கேட்டாள்.

பெருமையீர்– பெருமைக்கு உரியவரே. தொல் குலம்– பழைமையான இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த; தயரதன்– தசரத சக்கரவர்த்தியின்; தனயன்– குமாரன்; உயர் குலத்து– உயர்ந்த குலத்திலே பிறந்த; அன்னை சொல்– தாயின் கட்டளையை; உச்சி ஏந்தினான்– தலைமேல் தாங்கினான்; தம்பியோடு– தம்பியாகிய லட்சுமணனோடு; அயர்வு இலன்– சிறிதும் சோர்வு வருத்தம் இன்றி; இவ்வழி உறையும்– இவ்விடத்தில் வசிக்கின்றார்; அன்னவன்– அவரது; பெயரினை– பெயரை; தெரிகுதிர்– அறிந்திருப்பீரே; என்றாள்– என்று சொன்னாள்.


“கேட்டனன்; கண்டிலென்
        தெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை
        நண்ணினேன்; மலர்


வாள் தடங்கண்ணின் நீர்
        யாவர் மாமகள்?
காட்டிடை அரும் பகல்
        கழிக்கின்றீர்” என்றான்.

“கங்கை நீர் பாயும் அந்தக் கோசல வள நாட்டுக்கு ஒருமுறை சென்றுளேன்; நீவிர் சொன்னவற்றைக் கேட்டுளேன்; ஆனால் நேரில் கண்டேன் அல்லன். அகன்ற மலர் விழியுடைய நீவிர் எவர் மகள்? இந்தக் காட்டிடத்தே அரிய வாழ்நாளைக் கழிக்கின்றீர்?” என இரங்குவான் போல் கேட்டான்.

கேட்டனன் – நீர் சொன்ன யாவும் கேள்வியுற்றேன் (ஆனால்) கண்டிலன் – நான் அவரை நேரில் கண்டேன் அல்லன்; கெழுவு கங்கை நீர் நாட்டிடை – கங்கை ஆறு பாயும் அந்தக் கோசல வள நாட்டுக்கு; ஒரு முறை – ஒரு தடவை; நண்ணினேன் – போயிருந்தேன்; மலர் – தாமரை மலரையும்; வாள் – வாளையும் போன்ற; தடங்கண்ணின் – அகன்ற பெரிய கண்களையுடைய; நீர் யாவர் மாமகள் – நீவிர் எவருடைய மகள்? காடு இடை அரும் பகல் கழிக்கின்றீர்? – இத்தக் காட்டினிடையே அரிய வாழ்நாளைக் கழிக்கின்றீர்? என்றான் – என்று இரங்குவான் போல் கேட்டான்.


“அனக மா நெறி படர்
        அடிகள்! நும் அலால்
நினைவது ஓர் தெய்வம்
        வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மாமகள்; பெயர்
        சனகி; காகுத்தன்
மனைவி யான்” என்றனள்
        மறு இல் கற்பினாள்.



“சன்மார்க்க நெறியிலே ஒழுகும் அடிகாள்! நும் போன்ற தவசிகளை அன்றி வேறு தெய்வத்தை நினையாத மனமுடையான் சனக மகாராசன்; அவனது மகள் நான்; என் பெயர் சானகி; காகுத்தன் மனைவி நான்” என்றாள்.

மறு இல் கற்பினாள்– மாசற்ற கற்புடைய சீதாபிராட்டி; அனக மா நெறி படர்– குற்றமற்ற சன்மார்க்க வழி நிற்கும்; அடிகள்– அடிகளே; நும் அலால்– உம் போன்றவர் அல்லாது; நினைவது ஓர் தெய்வம்– நினைக்கக்கூடிய தெய்வம்; வேறு இலாத– வேறு ஒன்று இல்லாத; நெஞ்சினான்– மனங் கொண்ட; மா சனக– மாட்சிமைமிக்க சனக மகாராசனது; மா மகள்– இளங்குமரி; பெயர் சனகி– சானகி என்பது எது பெயர்; யான் காகுத்தன் மனைவி– காகுஸ்தரது மனைவி ஆவேன்; என்றனள்– என்று மறுமொழி கூறினாள்.

அவ்வழி அணையன
        உரைத்த ஆயிழை
“வெவ்வழி வருந்தினிர்
        விளைந்த மூப்பினிர்
இவ்வழி இருவினை
        கடக்க எண்ணினீர்
எவ்வழி நின்றும் இங்கு
        எய்தினீர்?” என்றாள்.

இவ்வாறு தனது வரலாறு கூறிய சீதை அந்த இராவண சந்நியாசியை நோக்கிக் கேட்கிறாள். “இம்மைமறுமை ஆகிய இருவினைகளையும் கடக்க எண்ணித் தவவேடம் தனைக் கொண்டீர். முதுமை மேலிட்டவராகக் காணப்படுகிறீர். இந்தக் கொடிய காட்டிலே நடந்து வந்ததால் களைப்புற்றிருக்கிறீர். நீவிர் எங்கிருந்து எங்கிருந்து இங்கு வருகின்றீர்” என்று கேட்கிறாள்.

அனையன உரைத்த– அவ்விதம் கூறிய; ஆய் இழை– சீதை; அவ்வழி– அப்போது; (அந்த இராவண சந்நியாசியை நோக்கி) விளைந்த மூப்பினிர்– பழுத்த முதுமையுடையீர்; இ வழி– இத் தவ வழியிலே; இருவினை கடக்க எண்ணினீர்– இரு வினைகளையும் கடக்கக் கருதியுள்ளீர்; எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர்– எங்கிருந்து இங்கு வந்தீர்?; வெவ்வழி வருந்தினீர்– கொடிய இக் காட்டு வழி நடந்ததால் இளைப்புற்றவராகக் காணப்படுகிறீர்; என்றாள்– என்று கேட்டாள்.

“இந்திரற்கு இந்திரன்;
        எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான் முகன்
        மரபில் தோன்றினான்.
அந்தரத் தோடும் எவ்
        உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அருமறை
        வைகும் நாவினான்.”

தேவர் எல்லாருக்கும் அரசன் தேவேந்திரன்; அவனுக்கு அரசன் இராவணேசுவரன்; ஓவியத்தில் எழுத முடியாத சுந்தர ரூபன்; பிரமன் வமிசத்திலே தோன்றியவன்; வானுலகோடு ஏனைய உலகம் யாவும் ஆள்கின்றான். வேதங்களை நன்கு அறிந்தவன்.

இந்திரற்கு– இந்திரனுக்கு; இந்திரன்– அரசன்; எழுதல் ஆகலா– எவராலும் எழுத முடியாத; சுந்தரன்– அழகன்; நான்முகன்– பிரமனுடைய; மரபில்–வமிசத்தில்; தோன்றினான்– வந்தவன்; அந்தரத்தோடும்– வானுலகத்தோடும்; எவ்வுலகும்– எல்லா உலகங்களும்; ஆள்கின்றான்– ஆள்கின்றவன்; மந்திரத்து– மந்திரங்கள் கொண்ட; அருமறை– அரிய வேதங்களை; வைகும் நாவினான்– ஓதும் நாவினையுடையவன்.

“ஈசன் ஆண்டு இருந்த பேர்
        இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து
        எடுக்கும் ஊற்றத்தான்
ஆசைகள் சுமந்த பேர்
        ஆற்றல் ஆனைகள்
பூசல் செய் மருப்பினைப்
        பொடி செய் தோளினான்.”

“ஈசன் வசிக்கிறானே, அந்த கயிலங்கிரியை வேரோடு பிடுங்கிய ஆற்றல் உடையவன். அது மட்டுமா? வலிமை மிக்க யானைகளின் தந்தங்களை ஒரே நொடியில் பொடி செய்யக்கூடிய பேராற்றல் உள்ளவன்!” என்று பொடி வைத்து பேசினான் இராவணன்.

ஈசன்– சிவபெருமான்; ஆண்டு இருந்த– இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளும்; இலங்கு மால் வரை– சிறந்து விளங்கும் பெரிய கயிலாய கிரியை; ஊசி வேரொடும்– சிறு வேர் விடாமல்; பறித்து– பிடுங்கி; எடுக்கும்– எடுக்கின்ற; ஊற்றத்தான்– வலிமையுடையவன்; ஆசைகள் சுமந்த– திக்குகளைத் தாங்கிய; பேர் ஆற்றல் ஆனைகள்– பேராற்றல் கொண்ட யானைகள்; பூசல் செய்– சண்டை செய்கின்ற; மருப்பினை– தந்தங்களை; பொடி செய்– தூளாக ஒடித்த; தோளினான்– தோளை உடையவன்.

வெம்மை தீர் ஒழுக்கினன்;
        விரிந்த வேள்வியன்;
செம்மையோன்; மன்மதன்
        திகைக்கும் செவ்வியன்;
எம்மையோர் அனைவரும்
        இறைவர் என்று எணும்
மும்மையோர் பெருமையும்
        முற்றும் பெற்றியான்.

தீமையற்ற நல் ஒழுக்கம் உடையவன்; பரந்த வேதங்களை நன்கு ஓதியவன்; செம்மை நெறி பிறழாதவன்; மன்மதனும் வெட்கும் அழகுடையவன்; மும்மூர்த்திகளின் பெருமையுடையவன்.

வெம்மை தீர் ஒழுக்கினன்– தீமையற்ற நல்ல ஒழுக்கம் உடையவன்; விரிந்த வேள்வியன்– விரிவான வேதங்களைக் கேட்டு ஓதி உணர்ந்தவன்; செம்மையோன்– செம்மை நெறி பிறழாதவன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்; மன்மதனும் திகைக்கும்படியான அழகுடையவன்; எம்மையோர் அனைவரும்– எவர் எவ்வுலகினராயினும் அவர் அனைவரும்; இறைவர் என்று எணும்– தெய்வம் என்று கருதும்; மும்மையோர் பெருமையும்– மும் மூர்த்திகளின் பெருமையும்; முற்றும் பெற்றியான்– முழுவதும் அமைந்த பெருமையுடையவன்.



தாள் உடை மலர் உளான்
        தந்த அந்தம் இல்
நாள் உடை வாழ்க்கையன்;
        நாரி பாகத்தன்
வாள் உடைத் தடக்கையன்
        வாரி வைத்த வெங்
கோள் உடைச் சிறையினன்;
        குணங்கள் மேன்மையான்.

பிரமதேவனிடம் இருந்து சாகாவரம் பெற்றவன்; சிவபெருமான் கொடுத்த சந்திரகாசம் என்ற வாள் ஏந்திய கையன்; நவக்கிரகங்களையும் சிறையில் அடைத்தவன்; மேன்மையான குணங்களை உடையவன்.

தாள் உடை மலர் உளான்– தண்டினை உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவன்; தந்த– அருளிய; அந்தம் இல்– முடிவிலாத; நாள் உடை வாழ்க்கையன்– வாழ் நாட்களை உடையவன்; நாரி பாகத்தன்– உமையவளைத் தன் இடமருங்கில் உடைய சிவபெருமான்; வாள் உடைத் தடக்கையன் (அருளிய)– சந்திரகாசம் எனும் வாளை உடைய பெரிய கைகளை உடையவன்; வாரி வைத்த– ஒருங்கே திரட்டி எடுத்து வைத்த; வெங்கோள் உடை– நவக்கிரகங்களை எல்லாம் அடைத்து வைத்த; சிறையினன்– சிறைச்சாலையினை உடையவன்; குணங்கள் மேன்மையான்– மேன்மை மிகு குணங்களை உடையவன்.

நவக்கிரகங்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டான் இராவணன். அதைத் தற்பெருமையாக சொல்லிக்கொள்கிறான்.



“நிற்பவர் கடைத்தலை
        நிறைந்து தேவரே;
சொற்படும் மற்றவன்
        பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய
        நிதியம் கையன;
பொற்பு அகம் மான நீர்
        இலங்கைப் பொன் நகர்.”

அவனுடைய அரண்மனை வாயிலிலே தேவர்கள் வந்து கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள். கற்பக விருட்சம் முதலிய தேவருலகச் செல்வம் யாவும் அவன் கைவசம் உள்ளன. அவன் வசிக்கும் இலங்காபுரியோ தேவேந்திர பட்டணமாகிய அமராவதி போலிருக்கும்.

கடைத்தலை நிறைந்து– அவனுடைய ‘தயவு நாடி தலைவாசலிலே கூட்டம் கூட்டமாக; நிற்பவர்– வந்து காத்து நிற்பவர்; தேவரே– தேவர்களே ஆவார்கள்; கற்பகம் முதலிய– கற்பகம் சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் முதலிய தெய்வ விருட்சங்களும்; நிதியம்– தேவருலகச் செல்வமும்; கையன– அவன் கைவசம் உள்ளன; நீர் இலங்கைப் பொன்னகரம்– அவன் வாழ்கின்ற பொன்னகரம் நீர் சூழ்ந்த இலங்கை; பொற்பு அகம்மான– அது எது போன்ற நகரம் எனின் தேவேந்திரனுடைய ராஜதானியாகிய அமராவதி போன்றது, மற்று அவன் பெருமை சொல்லுங்கால்– மேலும் அவனது பெருமை சொல்லப்புகின்; சொல்படும்– சொற்கள் போதா.



“ஆண்டையான் அரசு
        வீற்றிருந்த அந்நகர்
வேண்டியான் சில பகல்
        உறைதல் மேயினேன்
நீண்டனென் இருந்து
        அவற் பிரியும் நெஞ்சு இலேன்
மீண்டனென்” என்றனன்
        வினையம் உன்னுவான்.

அந்நகரிலே நான் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவ்விடம் விட்டுப் பிரியமனமிலேன். மீண்டும் போகிறேன் என்றான்.

ஆண்டையான்– தலைவனான அவன்; அரசு வீற்றிருந்த– அரசாட்சி புரிந்து வீற்றிருந்த; அந்நகர்– அந்த இலங்காபுரியிலே; யான்– நான்; வேண்டி– விரும்பி; சில பகல்– சில நாட்கள்; உறைதல் மேயினேன்– தங்கியிருந்தேன்; நீண்டனென் இருந்து– அவ்விடவிருந்து நீங்கி நீண்ட நாள் இருந்து விட்டேன்; அவர் பிரியும் நெஞ்சு இலேன்– அவருடன் நெருங்கிப் பழகிய பின் பிரிய மனமிலேன்; மீண்டனென்– திரும்பிவிட்டேன்; என்றனன்– என்று கூறினான்; வினையம் உன்னுவான்– வந்த காரியத்திலே கண்ணும் கருத்துமாயிருந்த இராவணன்.

“வனத்திடை மாதவர்
        மருங்கு வைகலீர்;
புனல் திரு நாட்டிடைப்
        புனிதர் ஊர் புக



நினைத்திலீர் அற நெறி
        நினைக் கிலாதவர்
இனத்திடை வைகினீர்;
        என் செய்தீர்?” என்றாள்.

“காட்டிலே அருந்தவம் புரியும் முனிவர் மத்தியிலே வாழ்ந்தீர் அல்லீர்; நீர் வளம் மலிந்த நாட்டிலே பரிசுத்தமானவர்கள் வாழ்கின்ற பதிகளிலே வாழ்ந்தீர் அல்லீர்; தரும நெறி பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாத அரக்கரிடையே வாழ்ந்தீர். என்ன காரியம் செய்தீர்!” என்றாள்.

வனத்து இடை– காட்டினிடத்தே வாழும்; மாதவர்– தவம்புரி முனிவர்; மருங்கு– அருகே; வைகலீர்– தங்கியிருந்தீர் அல்லீர்; புனல் திரு நாட்டிடை– நீர் வளம் மிக்க சிறப்பு மிகுநாட்டிலே வாழும்; புனிதர்– புண்ணிய சீலர்கள்; பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறவர்கள்; ஊர் புக– இருக்கும் ஊர்களுக்குச் செல்ல; நினைத்திலீர்– நினைத்தீர் அல்லீர்; அறநெறி– தரும மார்க்கத்தை; நினைக்கிலாதவர்– சிறிதும் நினையாதவர்களான இனத்திடை– அரக்கர் கூட்டத்திலே; வைகினீர்– தங்கியிருந்தீர்; என் செய்தீர்? எத்தகைய தகாத செயல் புரிந்தீர்? என்றாள்– என்று கூறினாள் சீதை.

“அரக்கர் நல்லவரே! தேவர்களைவிடத் தீயர் அல்லர்” என்று சொல்கிறான் இராவணன்.

“தருமத்தை வளர்க்கும் வள்ளலாகிய இராமன் இவ்வனத்தில் அரிய தவம் செய்யும் நாட்களுக்குள் அரக்கர் தம் குலத்தோடு இறந்து ஒழிவார்கள்” என்று சொல்கிறாள் சீதை.

“மானிடர், அரக்கர்தம்மை வேருடன் அழிப்பர். எனின், யானையின் இனத்தை இளமுயல் கொல்லும்; சிங்கத்தை மான்குட்டி கொன்று விடும்!” என்கிறான் இராவணன். அதாவது மனிதரால் அஃது இயலாது என்பது பொருள்.

சீற்றம் கொண்ட இராவண சந்நியாசி மேலும் சொல்கிறான்:

“மேருவைப் பறிக்க வேண்டின்
        விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினைக் கலக்க வேண்டின்
        நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின்
         பால் நிகர் செம்சொல் ஏழாய்
யார் எனக் கருதி சொன்னாய்
         இராவணற்கு அரிது என்?”
                                                       என்றான்.

“மகா மேரு மலையை அடியோடு பெயர்த்து எடுக்க விரும்பினாலும் சரி; வான மண்டலத்தை இடித்து நொறுக்க விரும்பினாலும் சரி; கடல்களைக் கலக்க விரும்பினாலும் சரி; அக் கடலிலே உள்ள வடவா மகாக்கினியை அவிக்க விரும்பினாலும் சரி; பூமியை பெயர்த்தெடுக்க விரும்பினாலும் சரி; அந்த இராவணனுக்கு இவை ஏதும் அரிய செயல் அல்ல. இராவணனை நீ யார் என்று நினைத்து இந்த வார்த்தை சொன்னாய்; பால் போலும் சுவை மிகு சொல்லுடைய பெண்ணே!”

பால் நிகர் செம் சொல் ஏழாய்– பால் போலும் சுவையுள்ள சொற்களையுடைய பெண்ணே! யார் எனக் கருதி சொன்னாய்– அந்த இராவணனை யார் என்று எண்ணி இவ் வார்த்தை சொன்னாய்; மேருவைப் பறிக்க வேண்டின்– மகா மேரு பர்வதத்தைப் பறித்து எடுக்க விரும்பினாலும்; விண்ணினை இடிக்க வேண்டின்– வான மண்டலத்தை இடித்துத் தள்ளவிரும்பினாலும்; நீரினைக்கலக்க வேண்டின்– கடல் நீரைக் கலக்கவிரும்பினாலும்; நெருப்பினை அவிக்க வேண்டின்– அக் கடலில் உள்ள வடவா மகா அக்கினி எனும் நெருப்பை அவிக்க விரும்பினாலும்; பாரினை எடுக்க வேண்டின்– பூமியைப் பெயர்த்து எடுக்க விரும்பினாலும்; இராவணற்கு– அந்த இராவணனுக்கு; அரிதுஎன்– முடியாத அரிய காரியம் எது? எதுவுமில்லை. என்றான்.

திக் விஜயம் செய்து வந்த இராவணன் கார்த்தவீரியார்ச்சுனனோடு போர் புரிய விரும்பினான். நர்மதை ஆற்றில் அவன் நீராடுவது அறிந்தான். அங்கு சென்றான். தானும் நீராடினான். கரை சேர்ந்தான் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசை செய்தான்.

அப்போது மேற்கே நீராடிக் கொண்டிருந்த கார்த்தவீரியார்ச்சுனனுக்கு நீர் போதவில்லை. தன் ஐநூறு கைகளாலும் நீரைத் தடுத்தான்; நீரை மிகுவித்தான்; நீர் விளையாடினான், அவ்வாறு நீரைத் தடுத்ததால் எதிர் பொங்கியது வெள்ளம்; கரை புரண்டது. இராவணன் பூசை செய்த சிவலிங்கம் நிலை குலையச்செய்தது. கோபமுற்றான் இராவணன். சேனையோடு சென்றான்; கார்த்தவீரியன் மீது போர் தொடுத்தான். அப்போது கார்த்தவீரியன் தனது ஆயிரங்கைகளாலும் பற்றி இராவணனைச் சிறை வைத்தான். புலத்தியன் சென்று கார்த்தவீரியனுக்கு “இராவணஜித்” எனும் பட்டமளித்து இராவணனை விடுவித்தான். அத்தகைய கார்த்தவீரியன் ஜமதக்கினி முனிவரது ஆசிரமத்துப் பசுவைக் கவர்ந்தான். இரு கை கொண்ட பரசுராமன் சென்று கார்த்தவீரியனைப் போரில் வென்று பசுவை மீட்டான்.


“அரண்‌ தரு திரள்‌ தோள்‌ சால
        உள எனின்‌ ஆற்றல்‌ உண்டோ?
கரண்ட நீர்‌ இலங்கை வேந்தைச்‌
        சிறை வைத்த கழல்‌ கால்‌ வீரன்‌
திரண்ட தோள்‌ வனத்தை எல்லாம்‌.
        சிறியது ஓர்‌ பருவம்‌ தன்னில்‌
இரண்டு தோள்‌ ஒருவன்‌ அன்றோ
        மழுவினால்‌ எறிந்தான்‌?” என்றாள்‌.

“திரண்டதோள்கள்‌ இருந்து விட்டால்‌ மட்டும்‌ போதுமா? திறமை உண்டாகி விடுமா? அதே இராவணனைக்‌ கார்த்த வீரியார்ச்சுனன்‌ சிறை வைக்கவில்லை? அந்தக்‌ கார்த்த வீரியார்ச்சுனனை இரண்டே தோள்‌ கொண்டவனும்‌ இளைஞனுமாகிய பரசுராமன்‌ தனது கோடாலி கொண்டு வெட்டி வீழத்தவில்லையா?”

அரண்‌ தரு – பாதுகாப்பளிக்கின்ற; திரள்‌ தோள்‌ – திரண்ட தோள்கள்‌: சால உள எனின்‌ – மிகுதியாக இருந்து விட்டால்‌ போதுமா? ஆற்றல்‌ உண்டோ – திறமை உண்டாகி விடுமா? அவை வலியவை என்று கூறிவிட முடியுமா? கரண்ட நீர்‌ இலங்கை வேந்தை – நீர்க்காகங்கள்‌ வாழும்‌ கடல்‌ நீரால்‌ சூழப்‌ பெற்ற இலங்கை அரசனாகிய இராவணனை; சிறை வைத்த – முன்‌ ஒருகால்‌ சிறையில்‌ அடைத்து வைத்த; கழல்கால்‌ வீரன்‌ – வீரக்கழல்‌ அணிந்த கால்களை உடைய வீரனாகிய கார்த்தவீரியார்ச்சுனைது; திரண்டதோள்‌ வனத்தை எல்லாம்‌ – திரண்டதோள்களாகிய காட்டை (கார்த்தவீரியார்ச்சுனன்‌ ஆயிரம்‌ தோள்களை உடையவன்‌) சிறியது ஓர்‌ பருவம்‌ தன்னில்‌ – சிறு வயதிலே; இரண்டு தோள்‌ ஒருவன்‌ – இரண்டு தோள்களோடு கூடியவனாகிய பரசுராமன்‌; மழுவினால்‌ – தன்‌ கைக்‌கோடாலியால்‌ வெட்டி வீழ்த்தினான்‌; அன்றோ – அல்லவா என்றாள்‌.

என்று அவள்‌ உரைத்தலோடும்‌
        எரிந்தன நயனம்‌; திக்கில்‌
சென்றன திறள்‌ தோள்‌; வானம்‌
        தீண்டின மகுடம்‌; திண்‌ கை
ஒன்றொடு ஒன்று அடித்த; மேகத்து
        உரும்‌ என எயிற்றின்‌ ஒளி
மென்றன; வெகுளி பொங்க
        விட்டது மாய வேடம்‌.

இவ்வாறு சீதை சொன்ன உடனே இராவண சந்நியாசிக்குக்‌ கோபம்‌ வந்துவிட்டது. கண்கள்‌ தீப்பொறி கக்கின; கிரீடம்‌ அணிந்த தலைகள்‌ வானை முட்டின; இருபது கைகளும்‌ நாலாபக்கமும்‌ சென்று ஒன்றுடன்‌ மற்றொன்று அடித்துக்கொண்டன; மேகத்திலே தோன்றும்‌ இடிபோல்‌, பல்லை நறநற என்று கடித்தான்‌. இடியில்‌ தோன்றும்‌ மின்னல்போல்‌ பற்கள்‌ ஒளி வீசிய. மாய சந்நியாசி வேடம்‌ கலைந்தது.

என்று அவள்‌ உரைத்தலோடும்‌ – என்று பிராட்டி கூறிய அளவில்‌; நயனம்‌ எரிந்தன – அந்த இராவண சந்நியாசியின்‌ கண்கள்‌ எரி கக்கின; திரண் தோள்‌ – திரண்ட தோள்கள்‌; திக்கில்‌ சென்றன – திக்குகள்‌ எங்கும்‌ பரந்து பூரித்துச்‌ சென்றன; மகுடம்‌ – கிரீடங்கள்‌; வானம்‌ தீண்டின – ஆகாயத்தை முட்டின; தீண்‌கை – வலியகைகள்‌; ஒன்றொடு ஒன்று அடித்த – ஓன்றோடு ஓன்று அடித்துக்கொண்டன. (எது போல?) மேகத்தின்‌ உரும்‌ என – மேகத்தில்‌ தோன்றும்‌ இடிபோல; எயிற்றின்‌ ஒளி மென்றன – பல்லை நறநற என்று கடித்தபோது அப்‌ பல்‌ வரிசையில்‌ தோன்றிய ஒளி, மின்னல்‌ போல்‌ தோன்றின; வெகுளி பொங்க – சினம்‌ எழுந்து பொங்க; விட்டது மாயவேடம்‌ – மாய சந்நியாசி வேடம்‌ கலைந்தது.


ஆற்ற வெம்‌ துயரத்து அன்னாள்‌
        ஆண்டு உற்ற அலைக்கண்‌ நோக்கின்‌
ஏற்றம்‌ என்‌ நினைக்கல்‌ ஆகும்‌?
        எதிர்‌ எடுத்து இயம்பலாகும்‌.
மாற்றம்‌ ஒன்று இல்லை; செய்யும்‌
        வினை இல்லை; வரிக்கல்‌ ஆகாக்‌
கூற்றம்‌ வந்து உற்ற காலத்து
        உயிர்‌ எனக்‌ குலைவு கொண்டாள்‌.

இவ்வாறு இராவணன்‌ தன்‌ சுயரூபம்‌ வெளிப்பட்டு நிற்கக்‌ கண்டாள்‌ சீதை.

இராமனுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி துயருற்றிருக்கும்‌ அவளுக்கு மற்றும்‌ ஒரு பெருந்துயரம்‌ நேர்ந்துவிட்டது. இத்துயரத்துக்கு அதிகமான துன்பம்‌ வேறு எது உளது? எதைச்‌ சொல்லமுடியும்‌? அவன்‌ சொல்லக்‌ கூடியது எதுவும்‌ இல்லாது போயிற்று. என்ன செய்வது என்று தெரியவில்லை. தப்பிக்கின்ற வழியும்‌ இல்லை. செயலற்றவள்‌ ஆனாள்‌. இயமன்‌ வந்தபோது உயிர்‌ எப்படித்‌ துக்குமோ அப்படித்‌ துடித்தாள்‌.

ஆற்ற வெம்‌ துயரத்து அன்னாள்‌ – இராமபிரானுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணிப்‌ பெரும்‌ துன்பமுற்றிருந்த சீதை; ஆண்டு உற்ற – அப்பொழுது அந்த இராவணனால்‌ நேர்ந்த; அலைக்கண்‌ நோக்கின்‌ – துன்பத்தைப்‌ பார்க்கும்‌ போது; ஏற்றம்‌ என்‌ நினைக்கல்‌ ஆகும்‌? – மேலும்‌ அதிகமான துன்பம்‌ எதனை நினைக்கமுடியும்‌? (வேறு எந்தத்‌ துன்பத்தையும்‌ நினைத்துச்‌ சொல்ல முடியாத அவ்வளவு பெரிய துன்பம்‌ என்றபடி) எதிர்‌ எடுத்து இயம்பலாகும்‌. இதற்கு எதிராக வேறு எத்துன்பத்தை எடுத்துக்‌ கூறுதல்‌ இயலும்‌? மாற்றம்‌ ஒன்றும்‌ இல்லை – அவள்‌ சொல்லக் கூடிய சொல்‌ எதுவுமில்லாது போயிற்று; செய்யும்‌ வினை இல்லை – அவனை விட்டுத்‌ தப்பிக்கக்‌ தக்க செயலும்‌ இல்லாது போயிற்று. (ஆகவே) வரிக்கல்‌ ஆகா – வரிக்கத்‌ தகாத; கூற்றம்‌ – இமயன்‌; வந்து உற்ற காலத்து – வந்த சமயத்திலே; உயிர்‌ என – தவிக்கும்‌ உயிர்‌ போல; குலைவு கொண்டாள்‌ – நடுக்கம்‌ கொண்டாள்‌.


“குலைவு உறல்‌, அன்னம்‌! முன்னம்‌
        யாரையும்‌ கும்பிடா என்‌
தலைமிசை மகுடம்‌ என்னத்‌
        தனித்தனி இனிது தாங்கி
அலகு இல்‌ பூண்‌ அரம்பை மாதர்‌
        அடி முறை ஏவல்‌ செய்ய
உலகம்‌ ஈரேழும்‌ ஆளும்‌
        செல்வத்துள்‌ உறைதி” என்றான்‌.

அப்போது இராவணன்‌ சொல்கிறான்‌; “அன்னம்‌ போன்றவளே! அஞ்சாதே. யாரையும்‌ கும்பிட்டு அறியாத என்‌ தலைமீது உள்ள கிரீடம்‌ போல உன்னை என்‌ தலை மீது தாங்குவேன்‌; தேவ மகளிர்‌ ஏவல்‌ செய்ய வைப்பேன்‌. ஈரேழு பதினான்கு உலகங்களையும்‌ ஆளும்‌ பெரும்‌ செல்வத்‌தில்‌ மகிழ்ந்திருப்பாயாக.”

அன்னம்‌ – அன்னம்‌ போன்றவளே! குலைவுறல்‌ – பயப்‌படாதே; முன்னம்‌ யாரையும்‌ கும்பிடா – இதற்குமுன்‌ எவரையும்‌ கும்பிட்டு வணங்காத; என்‌ தலை மிசை – என்‌ முடி மீதுள்ள; மகுடம்‌ என்ன – கிரீடம்‌ என்று சொல்லும்‌ படியாக; தனித்தனி – ஒவ்வொரு தலையிலுமாக; இனிது தாங்கி – இனிமையாக உன்னை உயர்த்தி வைத்துக்‌ கொண்டு; அலகு இல்‌ பூண்‌ அரம்பை மாதர்‌ – கணக்கற்ற ஆபரணங்களை அணிந்த அரம்பையர்கள்‌; அடிமுறை ஏவல்‌ செய்ய – உன்‌ திருவடி பணிந்து முறைப்படி நீ அவர்களுக்கு இடும்‌ குற்றேவல்‌ செய்ய; உலகம்‌ ஈரேழும்‌ – ஈரேழு பதினான்கு உலகங்களும்‌; ஆளும்‌ – ஆட்சி செலுத்தும்‌; செல்வத்துள்‌ – எனது பெரும்‌ செல்வ வாழ்வில்‌; உறைதி – மகிழ்ந்திருப்பாயாக; என்று – என்று சொன்னான்‌.

“விண்ணவர்‌ ஏவல்‌ செய்ய
        வென்ற என்‌ வீரம்‌ பாராய்‌;
மண்ணிடைப்‌ புழுவின்‌ வாழும்‌
        மானிடர்‌ வலியர்‌ என்றாய்‌;
பெண்‌ எனப்‌ பிழைத்தாய்‌ அல்லை
        உன்னை யான்‌ பிசைந்து தின்ன
எண்ணுவென்‌; எண்ணில்‌ பின்னை
        என்‌ உயிர்‌ இழப்பென்‌” என்றான்‌.

“தேவர்களை வெற்றி கண்டு அவர்கள்‌ எனக்கு ஏவல்‌ செய்ய வைத்த எனது வீர பராக்கிரமத்தை நீ எண்ணிப்‌ பார்க்காதவளாய்‌ இந்த பூமியிலே வாழும்‌ அற்பப்‌ புழுக்‌களாகிய மானிடர்‌ வலியர்‌ என்றாய்‌ இவ்வாறு என்‌ எதிரில்‌ கூறிய நீ ஒரு பெண்‌ ஆனமையின்‌ உன்னைச்‌ சும்மாவிட்டேன்‌. இன்றேல்‌ உன்னைப்‌ பிசைந்து தின்றிருப்பேன்‌. அப்படிச்‌ செய்து விட்டால்‌ நீ இறந்துவிடுவாய்‌. உன்‌ மீது கொண்ட காதலால்‌ நானும்‌ இறப்பேன்‌. அதனால்‌ உன்னை நான்‌ கொன்றேனல்லன்‌ என்றான்‌.

விண்ணவர்‌ ஏவல்‌ செய்ய – தேவர்கள்‌ நான்‌ ஏவிய காரியங்களைச்‌ செய்ய; வென்ற – அவர்‌களை வென்று அடிமை கொண்ட; என்‌ வீரம்‌ பாராய்‌ – என்னுடைய பராக்கிரமத்தை எண்ணிப்‌ பாராதவளாய்‌; மண்‌ இடை – இந்த பூமியிலே; புழுவின்‌ வாழும்‌ – அற்பப்‌ புழுக்களைப்போல்‌ வாழுகின்ற; மானிடர்‌ – மனிதர்‌; வலியர்‌ என்றாய்‌ – வலியுடையோர்‌ என்று கூறினாய்‌ (இவ்வாறு என்‌ எதிரில்‌ கூறிய நீ) பெண்‌ எனப்‌ பிழைத்தாய்‌ – ஒரு பெண்‌ என்ற காரணத்தினால்‌ உயிர்‌ பிழைத்தாய்‌; அல்லை – இன்றேல்‌; உன்னை யான்‌ பிசைந்து தின்ன எண்ணுவேன்‌ – உன்னை என்‌ கைகளால்‌ பிசைந்து தின்ன எண்ணியிருப்பேன்‌; பின்னை எண்ணில்‌ – பின்‌ விளைவுகளை நோக்கி அவ்வாறு செய்தேனல்லன்‌;

(உன்னைக்‌ கொன்று தின்றால்‌ நீ இறந்து படுவாய்‌ உன்னை அடையமுடியாமல்‌) என்‌ உயிர்‌ இழப்பேன்‌ – நானும்‌ எனது உயிர்‌ துறப்பேன்‌; என்றான்‌ – என்று சொன்னான்‌.


செவிகளைக்‌ தளிர்‌ கையாலே
        சிக்குறச்‌ சேமம்‌ செய்தாள்‌;
“கவினும்‌ வெஞ்சிலைக்கை வென்றிக்‌
        காகுத்தன்‌ கற்பினேனை
புவியிடை, ஒழுக்கம்‌ நோக்காய்‌
        பொங்கு எரிப்‌ புனிதர்‌ ஈயும்‌
அவியை நாய்‌ வேட்டது என்ன
        என் சொனாய்‌ அரக்க?” என்னா.

காமாந்தகாரம்‌ கொண்ட இராவணனுடைய சொற்கள்‌ தனது காதுகளிலே விழாதவாறு தன்‌ காதுகளை இறுக மூடிக்கொண்டாள்‌ சீதை.

“பூமியிலே நல்லொழுக்கத்தைச்‌ சிந்தியாத அரக்கனே! வெற்றி வில்‌ ஏந்திய காகுத்தன்‌ கற்பரசியாகிய என்னை என்ன சொன்னாய்‌? தவ முனிவர்கள்‌ தாம்‌ வளர்க்கும்‌ அக்னியிலே அளிக்கும்‌ பவித்ரமான அவியை உண்ண நாய்‌ விரும்பியது போல என்ன வார்த்தை சொன்னாய்‌?”

செவிகளை – தன்‌ இரு காதுகளையும்‌; தளிர்‌ கையாலே – மெல்லிய தன்‌ இரு கரங்களாலே; சிக்கு உற – அழுத்தி; சேமம்‌ செய்தாள்‌ – (இராவணனுடைய சொற்கள்‌ காதிலே விழாதபடி) பாதுகாத்துக்‌ கொண்டவளாய்‌ (அவனை இகழ்ந்து நோக்கி) அரக்க – அரக்கனே; புவியிடை – பூமியிலே; ஒழுக்கம்‌ – (உள்ள நல்‌ ஒழுக்கத்தை, நோக்காய்‌ – நாடாதவனே? கவினும்‌ வெம்‌ சிலை வென்றிக்‌கை – வெற்றி தரும்‌ கொடிய வில்லேந்திய கையனாகிய; காகுத்தன்‌ கற்பினேனை – காகுத்தனுடைய கற்பு மிக்க மனைவியாகிய என்னை? புனிதர்‌ – பரிசுத்தராகிய முனிவர்கள்‌! பொங்கு எரி – கொழுந்து விட்டு எரியும்‌ தீயிலே; ஈயும்‌ – தேவர்க்கு அளிக்கும்‌; அவியை – அவியை; நாய்‌ வேட்டது என்ன – இழிவாகிய நாய்‌ ஓன்று விரும்பியது போல (நீ விரும்பி) என்‌ சொனாம்‌ – என்ன சொன்னாய்‌; என்னா – என்று கூறி (மேலும்‌ சொல்வாள்‌);


“புல்‌ நுனை நீரின்‌ நொய்தாய்‌
        போதலே புரிந்து நின்ற
இன்‌ உயிர்‌ இழத்தல்‌ அஞ்சி
        இற்பிறப்பு அழிதல்‌ உண்டோ?

மின்‌ உயிர்த்து உருமின்‌ சீறும்‌
        வெங்கணை விரவா முன்னம்‌
உன்‌ உயிர்க்கு உறுதி நோக்கின்‌
        ஒளித்தியாய்‌ ஓடி” என்றாள்‌.

“இந்த உயிர்‌ அற்பமானது; புல்லின்‌ நுனியிலே தங்கியுள்ள பனிநீர்‌ போன்று விரைவிலே அழியுந்‌ தன்மையது. இத்‌தகைய எனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதே என்று அஞ்சி நான்‌ உன்‌ கருத்துக்கு இணங்கேன்‌. குலத்திற்குக்‌ கேடு செய்யேன்‌. இடித்து முழங்கி மின்னல்‌ போல்‌ வரும்‌ இராமனின்‌ சுடுசரம்‌ உன்மீது பாயு முன்‌ ஓடி ஒளிந்து கொள்‌. உன்‌ உயிர்‌ மீது ஆசையிருந்தால்‌ அதைக்‌ காக்க ஒடு” என்றாள்‌.

நுனை நீரின்‌ – புல்லின்‌ நுனியிலே தங்கியிருக்கின்ற நீரீத்துளி போன்று; நொய்தாய்‌ – அற்பமாகி; போதலே – அழிந்து போவதையே; புரிந்து நின்ற – தன்‌ தொழிலாக்கிக்‌ கொண்டு நிற்கின்ற; இன்‌ உயிர்‌ இழத்தல்‌ அஞ்சி – இனிய உயிரை விடுவதற்குப்‌ பயந்து இல்‌ பிறப்பு அழிதல்‌ உண்டோ? நற்குடியிலே பிறந்‌த பெருமை அழியுமாறு செய்வதுண்டோ. மின்‌ உயிர்த்து – மின்னல்‌ போல்‌ ஒளி வீசி; உருமின்‌ சீறும்‌ – இடிபோல்‌ கர்ஜித்துக்கொண்டு வரும்‌; வெம்கணை – இராமனின்‌ கொடியகணைகள்‌; விரவா முன்னம்‌ – உன்னை நாடி வந்து அழிப்பதன்‌ முன்னர்‌: உன்‌ உயிர்க்கு – உன்‌னுடைய உயிருக்கு; உறுதி நோக்கின்‌ – நலம்‌ நாடினை ஆயின்‌; ஓடி ஒளித்தி – இவ்விடம்‌ விட்டு எங்காவது மறைந்து கொள்வாயாக; என்றாள்‌ – என்று சொன்னாள்‌.


“அணங்கினுக்கு அணங்கு அனாய்‌ நின்‌
        ஆசை நோய்‌ அகத்துப்‌ பொங்க
உணங்கிய உடம்பினேனுக்கு
        உயிரினை உதவி, உம்பர்க்‌

கணம்‌ குழை மகளிர்க்‌ கெல்லாம்‌
        பெரும்‌ பதம்‌ கைக்கொள்‌?” என்னா
வணங்கினன்‌; உலகம்‌ தாங்கும்‌
        மலையினும்‌ வலிய தோளான்‌.

உலகினைத்‌ தாங்கி நிற்கின்ற மேரு மலையை விட; வலிமை பொருந்தி தோள்களையுடைய இராவணன்‌ சொல்கிறான்‌:

“அழகுக்கு ஓர்‌ அழகு போன்றவளே! உன் மீது கொண்ட ஆசை நோயானது என்‌ உள்ளத்திலே பொங்குகிறது. அதனால்‌ என்‌ உடல்‌ வாடிப்‌ போயிற்று. எனக்கு உயிர்ப்‌ பிச்சை தருவாய்‌. தெய்வ மகளிர்‌ எல்லாரும்‌ உனக்கு ஏவல்‌ செய்யக்கூடிய அரும்‌ பெரும்‌ பதவியை ஏற்பாய்‌.”

இவ்வாறு சொல்லி சீதாபிராட்டியை வணங்கினான்‌ அந்த இராவணன்‌.

உலகம்‌ தாங்கும்‌ – உலகினைக்‌ தாங்கி நிற்கின்ற; மலையினும்‌ – மலையை விட; வலிய – வலிமை பொருந்திய; தோளான்‌ – தோள்களை உடைய இராவணன்‌; அணங்‌கினுக்கு அணங்கு அனாய்‌ – அழகுக்கு ஓர்‌ அழகு போன்‌றாய்‌; நின்‌ ஆசை நோய்‌ – உன்பால்‌ கொண்ட ஆசை எனும்‌ நோயானது; அகத்துப்‌ பொங்க – என்‌ உள்ளத்திலே பொங்கிக்‌ கொதிப்பு ஏற; உணங்கிய உடம்பினேனுக்கு – (அதனால்‌) வாடிய உடலையுடைய எனக்கு; உயிரினை உதவி – உயிர்ப்பிச்சை அளித்து; உம்பர்‌ – தேவருலகத்‌திலுள்ள; கணம்‌ குழை – திரண்ட குழை எனும்‌ காதணி அணிந்த; மகளிர்க்கு எல்லாம்‌ – தெய்வப்‌ பெண்களுக்கெல்‌லாம்‌; பெரும்‌ பதம்‌ – சிறந்த பெரும்‌ பதவியை; கைக்‌கொள்‌ – நீ ஏற்பாய்‌; என்னா – என்று; வணங்கினான்‌ – பிராட்டியை நமஸ்கரித்தான்‌.

ஆண்டு ஆயிடை தீயவன்
        ஆயிழையைத்
தீண்டான்; அயன் மேல் உரை
        சிந்தை செயாத்
தூண் தான் எனல் ஆம்
        உயர் தோள் வலியால்
நீண்டான் நிலம்; யோசனை கீழொடுமேல்.

தீயவனாகிய அந்த இராவணன் சீதாபிராட்டியைத் தொட அஞ்சினான். காரணம் பிரமதேவன் அவனுக்களித்த சாபம். அந்த சாபம் அவனது நினைவுக்கு வந்தது. எனவே தூண்கள் என்று சொல்லத்தக்க தன்னுடைய தோள் வலியாலே சீதை இருந்த அந்த இடத்தை அதாவது நிலத்தை ஒரு யோசனை அளவுக்கு அப்படியே பெயர்த்து எடுத்தான்.

ஆண்டு – அப்பொழுது; தீயவன் – தீயவனாகிய அந்த இராவணன்; ஆயிழையை – பிராட்டியை மேல் அயன் உரை – மேனாள் பிரமதேவன் இட்ட சாபச் சொல்லை; சிந்தை செய்யா – எண்ணி; தீண்டான் – அவள் மேனியைத் தொடாமல்; தூண்தான் எனல் ஆம் – தூண்கள் என்று சொல்லத் தக்க, உயர்தோர் – உயர்ந்த தன் தோள்களின் வலியால் – பலத்தினாலே; ஆயிடை – அந்த இடத்து; நிலம் கீழொடு மேல் – நிலத்தை அடியோடு; யோசனை – ஒரு யோசனை விஸ்தீரணத்துக்கு; நீண்டான் – பெயர்த்து எடுத்தான்.

கொண்டான் உயர் தேர் மிசை
        கோல் வளையாள்
கண்டாள்; தன் ஆருயிர்
        கண்டிலளால்

மண் தான் உறும்
        மீனின் மயங்கினளால்;
விண் தான் வழியா
        எழுவான் விரைவான்.

அவ்வாறு பூமியைப் பெயர்த்து எடுத்த இராவணன் என்ன செய்தான்? தன் தேர் மேல் கொண்டுபோய் வைத்தான். இது கண்டாள் சீதை. உயிரற்றவள் போலானாள். தண்ணீரிலிருந்து எடுத்துத் தரை மீது போடப்பட்ட மீன்போல் மயக்கமுற்றாள். வான் மார்க்கமாகத் தன் தேரைச் செலுத்த விரைந்தான் இராவணன்.

உயர் தேர் மிசை கொண்டான் – (அங்ஙனம் சீதா தேவியை எடுத்த இராவணன்) தனது உயர்ந்த தேர் மீது வைத்துக் கொண்டான்; கோல் விளையாள் – அழகிய வளையல்களை அணிந்த சீதை; கண்டாள் – அச் செயல் கண்டாள்; தன் ஆர் உயிர் கண்டிலள். உயிரற்றவள் போல் ஆனாள்; மண் தான் உறும் – தரையில் போட்ட மீனின் – மீன்போல; மயங்கினள் – மயக்கமுற்றாள்; (அப்பொழுது இராவணனும்) விண்தான் வழியா – ஆகாய மார்க்கமாக; எழுவான் – எழுந்து செல்லும் பொருட்டு; விரைவான் – விரைபவன் ஆனான்.

‘விடுதேர்’ என வெம் கனல்
        வெந்து அழியும்
கொடி போல் புரள்வாள்
        குலைவாள் அயர்வாள்
துடியா எழுவாள்
        துயரால் அழுவாள்
‘கடிதா அறனே! இது
        கா’ எனு மால்.



“தேரைச் செலுத்து” என்று தன் தேரோட்டிக்குக் கட்டளையிட்டான்.

நெருப்பிலே வெந்து அழியும் கொடிபோல் துவண்டாள் சீதை; புரண்டாள்; நிலை குலைந்தாள்; சோர்ந்தாள்; துடித்து எழுந்தாள்; துன்பம் மேலிடக் கதறினாள் தரும தேவதையே இத் துன்பத்தினின்றும் என்னைக் காப்பாற்று” என்று கதறினாள்.

விடு தேர் என – தேரைச் செலுத்து என்று: (இராவணன் தன் தேர்ப் பாகனுக்குக் கூற) கனல் வெந்து அழியும் – நெருப்பிலே விழுந்து வேக்காடு பெற்று அழிகின்ற; கொடி போல் – ஒரு பூங்கொடி போல; புரள்வாள் – விழுந்து புரள்வாள்; குலைவாள் – நிலை குலைவாள்; அயர்வாள் – சோர்வாள்; துடியா – துடித்து; எழுவாள் – மீண்டும் எழுவாள்; துயரால் – துன்பம் பொங்க; அழுவாள் – கதறுவாள்; கடியா அறனே – எங்களால் கைவிடப்படாத ஏ தருமமே! இது கா எனும் – இத்துன்பத்தினின்றும் என்னைக் காப்பாயாக என்று கூறுவாள்.

மலையே! மரனே!
        மயிலே! குயிலே!
கலையே! பிணையே!
        களிறே! பிடியே!
நிலையா உயிரேன்
        நிலை தேறினிர் போய்
உலையா வலியார்
        உழை நீர் உரையீர்.



மலையே! மரங்களே! மயிலே! குயிலே! கலைமான்களே! பெண் மான்களே! ஆண் யானைகளே! பெண் யானைகளே! நிலை கொள்ளாமல் தத்தளிக்கும் உயிருடையேன் நான். எனது இந்த நிலையை நீங்கள் அறிவீர்கள் அழியாத வலிமை கொண்ட அந்த இராமனிடமும் லட்சுமணனிடம் சொல்வீராக.

மலையே – மலைகளே; மரனே – மரங்காள்; மயிலே – மயில்காள்; குயிலே – குயில்களே; கலையே – கலைமான்களே; பிணையே – பெண் மான்களே; களிறே – ஆண் யானைகளே; பிடியே – பெண் யானைகளே; நிலையா உயிரேன் – நிலை கொள்ளாது தத்தளிக்கின்ற உயிரையுடைய எனது; நிலை – நிலையை, தேறினிர் நீர் – நன்கு அறிந்த நீங்கள்; உலையா வலியார் – உழை அழியாத வலிமை கொண்ட அந்த இராம லட்சுமணரிடத்திலே; உரையீர் – சொல்வீராக.

“செஞ்சேவகனார் நிலை
        நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே
        வன தேவதைகாள்!
‘அஞ்சேல்’ என நல்குதிரேல்
        அடியேன்
உஞ்சால் அதுதான்
        இழிவோ? உரையீர்!”

மேகங்களே! சோலைகளே! வனதேவதைகளே! சிறந்த வீராகிய இராமபிரான் என்னை இழந்து துன்புறுவதை நீங்கள் அறிவீர்கள். அப்போது அவருக்குச் சொல்லுங்கள்,

“அஞ்சாதே என்று எனக்கு ஆறுதல் கூறுவீராயின் நான் உயிர் பிழைப்பேன். அவ்வாறு உயிரி பிழைக்கச் செய்வது உங்களுக்குத் தகாத செயலோ?”

மஞ்சே – மேகங்களே; பொழிலே – சோலைகளே; வனதேவதை காள் – வனத்திலே உள்ள தெய்வங்களே; செம்சேவகனார் நிலை – சிறந்த வீரராகிய இராமபிரான் எனை இழந்ததால் அடையக்கூடிய நிலையை; நீர் – நீங்கள்; தெரிவீர் – அறிவீர்கள்; உரையீர் – அவருக்குச் சொல்வீராக; அஞ்சேல் என – அஞ்சுதல் வேண்டாம் என்று; நல்குதிரேல் – எனக்கு ஆறுதல்மொழி கூறுவீராயின்; அடியேன் – நான்; உஞ்சால் – (உய்வேன்) அவ்வாறு உயிர் பிழைத்தால்; அது தான் இழிவோ – உங்களுக்குத் தகாத இழிசெயலோ.

“கோதாவரியே! குளிர்வாய்
        குழைவாய்;
மாதா அணையாய்
        மனனே தெளிவாய்;
ஒதாது உணர்வார்
        உழை ஓடினை போய்
நீ தான் வினையேன்
        நிலை சொல்லலையோ?”

“கோதாவரியே! குளிர்ச்சி பொருந்தியவளே! தாய் போன்றவளே! தெளிந்த மனமுடையாய்! ஓதாது உணர்ந்த உத்தமன் இராமனிடம் ஓடிச்சென்று எனது நிலை சொல்வாயோ?”



கோதாவரியே – கோதாவரி நதியே; குளிர்வாய் – குளிர் தன்மை உடையாய்; குழைவாய் – நீ இளகிய இயல்புடையாய்; மாதா அணையாய் – உயிர்களுக்குத் தாய் போன்றவளே (எனக்கும் தாய் போன்றவளே) மனனே தெளிவாய் – குற்றமற்ற தெளிந்த மனமுடையாய்; நீ தான் – நீயாவது; ஓதாது உணர்வார் உழை – ஓதாமலே உணர்ந்த எனது கணவராகிய இராமனிடம்; ஓடினை போய் – ஓடிச் சென்று; வினையேன் நிலை – துன்பத்திற்குரிய தீவினையுடைய எனது நிலையை; சொல்லலையோ – சொல்ல மாட்டாயோ!

“முந்தும் சுனைகாள்!
        முழை வாழ் அரிகாள்!
இந்தந் நிலத்தோடும்
        எடுத்தகை நால்
ஐந்தும், தலை பத்தும்
        அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு
        சிரித்திடுவீர்.”

“மலையிலே உள்ள நீர்ச்சுனைகளே! மலைக்குகையில் வாழும் சிங்கங்களே! நான் இருந்த பூமியோடு என்னைப் பெயர்த்துக்கொண்டு போகிற இவனது கைகள் இருபதும், தலைகள் பத்தும் இராம பாணத்தால் அறுந்து கீழே விழுதல் கண்டு நீங்கள் சிரிக்கமாட்டீர்களா!”

முந்தும் – என் முன்னே தோன்றுகின்ற; சுனைகாள் – மலை ஊற்றுக்களே; முழைவாழ் – மலைச்குகைகளிலே வாழும்! அரிகாள் – சிங்கங்களே; இந்தந் நிலத்தோடும் – நான் இருந்த தரையோடும்; எடுத்த கை நால் ஐந்து – பெயர்த்து எடுத்த இருபதுகைகளும்; தலை பத்தும் – தலைகள் பத்தும்; அலைந்து உலைய – இராமபிரான் விடும் பகழியால்; அறுந்து சிந்தும்படி – கீழே விழும்படி; கண்டு – நீங்கள் பார்த்து; சிரிக்கிலீரோ – சிரிக்கமாட்டீர்களோ!

இவ்விதம் பலவாறு கூறிப் புலம்பி அழுகின்ற சீதையைப் பார்த்து இராவணன் சொல்கிறான்:

“நீ சொல்கிற அந்த மனிதர்கள் போரிலே என்னைக் கொன்று உன்னை மீட்கப் போகிறார்களா? அவர்களுக்கு வல்லமை இருந்தால் மீட்டுக் கொள்ளட்டுமே!”

இவ்வாறு சொல்லித் தன் கைகளைக்கொட்டி பரிகாசமாகச் சிரித்தான் அந்த இராவணன்.

அப்போது சீதை சொல்கிறாள்:

“உன் மாயையினாலே வஞ்சகமாகப் பொய்மான் ஒன்றை ஆக்கினாய். அவ்வாறு உண்டாக்கி உன் உயிர் கவரும் கூற்றாகிய இராமனை அந்த வஞ்ச மான் பின்னே போகச் செய்தாய், பின் அவர் இல்லாத சமயத்திலே நான் தனித்து இருந்தபோது வந்து புகுந்து என்னைக்கொண்டு போகிறாய்; கள்வனே போல் கவர்ந்து செல்கின்றாய்.

அந்த இராமனோடு நேர்நின்று போர்செய்து உன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தைரியமும் திறமையும் உனக்கு இருக்குமானால், உன் தேரை இவ்விடம் விட்டுச் செலுத்தாதே. நீ சுத்த வீரனோ! உன் இனத்தவரான சுரதுரஷணாதியரைக் கொன்று, உன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து வாட்டிய மனிதர்கள் காட்டிலே இருக்கிறார்கள் என்பது கேட்டும் நீ இந்த மாயம் செய்தது எதனால்? அவர்கள்பால் நீ கொண்ட அச்சம் அன்றோ.” 

இவ்வாறு சீதை இடித்துக் கூறவும் அந்த இராவணன் சொல்கிறான்.

மொழி தரும் அளவில் “நங்கை!
        கேள் இது; முரண் இல் யாக்கை
இழி தரு மனிதரோடே
        யான் செரு ஏற்பல் என்றால்
விழி தரும் நெற்றியான் தன்
        வெள்ளி வெற்பு எடுத்தோட்குப்
பழி தரும்; அதனின் சாலப்
        பயன் தரும் வஞ்சம்” என்றான்.

“பெண்ணில் சிறந்தவளே! நான் சொல்வது கேள். நீ சொன்ன அந்த மனிதர்களோடே நான் நேர் நின்று போர் செய்வேனேயாகில் அது எனக்குப் பழி. நெற்றியிலே கண் படைத்த அந்தச் சிவபெருமானுடைய கைலாசகிரியை எடுத்த என் தோள்களுக்கு இழிவு. அதை விட இந்த வஞ்சகச் செயல் நல்லதொரு பயன் தருவது ஆகும்” என்றான்.

மொழி தரும் அளவில் – இவ்வாறு சீதை சொன்ன அளவிலே; (அவளை நோக்கி) நங்கை – பெண்ணிற் சிறந்தவளே! இது கேள் – நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக; முரண் இல் யாக்கை – வலியற்ற உடல் கொண்ட; இழிதரு மனிதரோடே – இழிவான மனிதர்களுடனே; யான் செரு ஏற்பல் என்றால் – நான் போரிடுவேன் என்றால்; விழி தரும் நெற்றியான் தன் – நெற்றிக் கண்ணன், சிவபெருமானுடைய; வெள்ளிவேற்பு – வெள்ளி மலையாகிய கைலாசகிரியை; எடுத்தோட்குப் – எடுத்தஎனது தோள்களுக்குப்; பழிதரும் – பழிப்புண்டாகும்; அதனின் – அதனைவிட; வஞ்சம் – நான் இப்பொழுது மேற்கொண்டுள்ள வஞ்சகச் செயலே; சால – மிகவும்; பயன் தரும் – நல்ல பயன் தரும் என்றான்.

என்னும் அவ் வேளையின் கண்,
         “எங்கு அடா போவது? எங்கே?
நில்! நில்” என்று இடித்த சொல்லன்
         நெருப்பிடைப் பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீரத்
         துண்டத் தன் மேரு எனும்
பொன் நெடுங்குன்றம் வானின்
         வருவதே போலும் மெய்யான்.

இப்படி இராவணன் கூறிக்கொண்டிருக்கிறபோது, “எங்கேயடா! போகிறாய்? நில், நில்” என்று இடி முழக்கம் போல கூவிக்கொண்டு, கண்களிலே நெருப்பைக் கக்கும் கோபத்துடனே. மின்னல்போல ஒளி வீசி வீரச் செயல் புரியும் மூக்குடையவனும் மேரு என்னும் பொன் மலையே பறந்து வருவது போன்ற உடல் உடையவனும் (ஆகிய சடாயு வந்தான்.)

என்னும் அவ் வேலையின் கண் – என்று கூறிய அந்த சமயத்திலே; எங்கு அடா போவது எங்கே – அடா! எங்கே போகிறாய்? எங்கே? நில் நில் – அப்படியே நில், நில்; என – என்று? இடித்த சொல்லின் – இடி முழக்கம்போலே உரக்கக் கூவிய சொற்களுடன்; நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – சினத்தால் தீப்பொறி பரப்பும் கண்களை உடையவனும்; மின் என விளங்கும் – மின்னல்போல ஒளி வீசும்; வீர துண்டத்தன் – வீரச் செயல் புரியும் மூக்குடையவனும்; மேரு எனும் பொன் நெடுங் குன்றம் – பொன் மலையான மேரு எனும் நெடிய மலை; வானின் வருவதே போலும் – ஆகாயத்திலே வருவதே போன்ற; மெய்யான் – பருத்த உடல் உடையவனும் (ஆன சடாயு வந்தான்).

பாழி வன் கிரிகள் எல்லாம்
        பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர, விண்ணில்
        புடைப்புறக் கிளர்ந்து பொங்கி
அழியும் உலகும் ஒன்றாய்
        அழிதர முழுதும் வீசும்
ஊழி வெம் காற்று இது என்ன
        இரு சிறை ஊதை மோத

(அந்த சடாயு)

தன் இரு சிறகுகளையும் வீசிக்கொண்டு வந்ததால் ஊழிக் காற்று என்று சொல்லும்படியாகக் காற்று வீசியது

பருத்த வலிய மலைகள் எல்லாம் பூமியிலிருந்து வேரோடு பெயர்ந்து ஆகாயத்திலே எழும்பி ஒன்றுடன் மற்றொன்று மோதிப் பொடிப்பொடியாகி பூமியிலே விழுந்தன. பெரும் ஓசையுடன் கடல் பொங்கி வானை மூட்டும்படியாக அலை எழும்பியது.

பாழி வன் கிரிகள் எல்லாம் – பருத்த வலிய மலைகள் யாவும்; பறித்து எழுந்து – பறிக்கப்பட்டு மேலே எழுந்து; ஒன்றோடு ஒன்று – ஒன்றுக்கொன்று; பூழியின் உதிர – புழுதி போலாகி உதிர்ந்து விழ; விண்ணில் புடைப்புற – வானில் முட்டும்படியாக; கிளர்ந்து பொங்கி – பெரும் ஓசையிட்டு மேற்கிளம்பி; ஆழியும் – கடலும்; உலகும் – இவ்வுலகமும்; ஒன்றாய் அழிதர – ஒரேயடியாக அழிந்து போக; முழுதும் வீசும் – உலகமெங்கும் வீசியடிக்கும்; ஊழி வெம்காற்று – ஊழிக்காற்று; இது என – இது என்று சொல்லும்படியாக; இரு சிறை – தன் இரண்டு சிறகுகளும்; ஊதைமோத – பெருங்காற்று வீச.

சாகை வன் தலையொடு
        மரமும் தாழ மேல்
மேகமும் விண்ணின்
        மீச் செல்ல மீ மிசை
“மாக வெம் கலுழன் ஆம்;
        வருகின்றான்” என
நாகமும் படம் ஒளித்து
        ஒதுங்கி நையவே.

வனத்திலிருந்த மரங்கள் கிளையுடன் கீழே விழுந்தன. வானிலே உள்ள மேகங்கள் பூமியிலே உள்ள மலைகள் இரண்டும் இடம்மாறி விண்ணிலே சென்றன. வைகுந்தத்தில் இருக்கின்ற கருடன் வருகிறான் என்று பயந்து சர்ப்பங்கள் படம் விரித்து ஆடுதல் ஒழித்து ஓடி ஒடுங்கின.

மரமும் – அவ் வனத்திலிருக்கின்ற மரங்களும்; சாகைவன் தலையொடு – கிளைகளாகிய வலிய தலையொடு; தாழ – தாழ்ந்து விழ; மேல் மேசமும் கிரிகளும் – மேலே உள்ள மேகங்களும் மலைகளும்; விண்ணின் மீச் செல்ல – இடம் பெயர்ந்து ஆகாயத்தின் மேலே செல்லவும், மாகவெம்கலுழனே வருகின்றான் – வைகுந்தத்தில் உள்ள கருட பகவானே வருகின்றான; என – என்று சொல்லுமபடியாக; நாகமும் – சர்ப்பங்களும்; படம் ஒளித்து – தம் படங்களைச் சுருக்கி மறைத்துக்கொண்டு; ஒதுங்கி நையவே – ஒதுங்கி சென்று வருந்த.

யானையும், யாளியும்
        முதல் யாவையும்
கான் நெடு மரத்தொடு
        தூறுகள் இவை
மேல் நிமிர்ந்து இரு
        சிறை வீச்சின் ஏறலால்
வானமும் கானமும்
        மாறு கொள்ளவே.

சடாயு தன் இரு சிறகுகளையும் வீசுதலால் எழுந்த காற்றின் வேகத்தினாலே என்ன நிகழ்ந்தது? யானை, யாளி முதலிய விலங்குகளும், காட்டில் உள்ள நெடிய மரங்களும், புதர்களும், கற்களும். மேலே எழும்பின. வானத்திலே பறந்தன. அது எப்படி இருந்தது? எது வானம், எது கானகம் என்று தெரியாமல் நிலை மாறிக் காட்சியளித்தது.

யானையும் – யானைகளும்; யாளியும் – யாளிகளும்; முதல் யாவையும் – முதலிய எல்லா விலங்குகளும்; கான் நெடுமரத்தொடு – காட்டில் உள்ள நெடிய மரங்களோடு; தூறு கல் இவை – புதர்கள், கற்கள் ஆகிய இவைகளும், இரு சிறை – சடாயுவின் இரண்டு சிறகுகள்; வீச்சின் – வீசுவதினாலே (எழும் காற்றின் வேகத்தினாலே) மேல் நிமிர்ந்து ஏறலால் – தம் நிலை பெயர்ந்து மேலே எழுந்து வானத்தில் ஏறிச் செல்வதால்; வானமும் கானமும் – ஆகாயமும் காடும்; மாறு கொள்ளவே – இடம் விட்டு மாறி மயங்கின.

வந்தனன் எருவையின்
       மன்னன்; மான்பு இலான்
எந்திரத் தேர் செலவு
       ஒழிக்கும் ஈட்டினால்
சிந்துரக் கால் சிரம்
       செக்கர் மூடிய
கந்தரம் கயிலையை
       நிகர்க்கும் காட்சியான்.

இராவணனுடைய விசைத்தேர் செல்லும் வேகத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியிலே கால், தலை இரண்டும் சிவந்தன. செவ்வானம் கவிந்தது போன்றிருந்தது. கழுத்து கயிலாய கிரிபோல் காட்சியளித்துக்கொண்டு கழுகரசன் சடாயு வந்தான்.

மாண்பு இலான் – நற்குண நற்செயல் இல்லாத இராவணனின்; எந்திரத் தேர் – சக்தி மிகு தேரின்; செலவுபோக்கை; ஒழிக்கும் – தடுத்து நிறுத்தும்; ஈட்டினால் – முயற்சியால்; சிந்துரம் கால் சிரம் – சிவந்த கால்களும், சிரமும் செக்கர் மூடிய – செவ்வானம் கவிந்தது போன்ற; கந்தரம் – கழுத்தும்; கயிலையை – கைலாச மலையை; நிகர்க்கும் – ஒப்பாக விளங்கும்; காட்சியான் – தோற்றம் கொண்டவனுமாகிய; எருவையின் மன்னன் – கழுகுகளின் அரசனாகிய சடாயு; வந்தனன் – அந்த இராவணன் எதிரே வந்தான்.

சீதாபிராட்டியின் புலம்பல் கேட்டு வெகு வேகமாகப் பறந்து வந்தான் சடாயு. என்ன நடத்தது என்பதறியான். அணங்கினை நோக்கினான். “அஞ்சேல்” என்று துணிவு கூறினான். தேரை நிறுத்துமாறு சொன்னான். நிறுத்தினான் அல்லன் அரக்கன்.

“அறிவில்லாதவனே! பிழை செய்து விட்டாய்; பேர் உலகின் மாதா அனையாளை யார் என்று நீ எண்ணினாய்?”

“சினங்கொண்டு கொல்ல வந்த யானை மீது மண் உண்டையை வீசலாமா? அது மேலும் சினம் கொண்டு தாக்குமன்றோ!”

“அது போல அரக்கர்களைக் கொன்று அறம் காக்க வந்த இராமபிரானது தேவியை அபகரித்துச் செல்லும் நின் செயல் மேலும் உங்கள் மீது பெரும் சீற்றம் கொள்ளத் தூண்டுமன்றோ!”

“மனிதர் வடிவில் வந்துள்ள இந்த இராம லட்சுமணர், பிரமன், விஷ்ணு, சிவன் எனும் மூவர்களின் ஆதி பரம் பொருளேயன்றோ! ஆலோசனை யற்றவனே! பயித்தியம் முற்றியவனாக நீ இந்த அபசாரம் செய்தாய்.

“திரிபுரம் எரித்த சிவபெருமானிடம் நீ பெற்ற வரங்களும், நீ தேர்ச்சி பெற்றுள்ள மாயப்போர் முதலிய விந்தைகளும் எதுவரை உனக்கு உதவும்?

இராமனது வில் உன் மீது கணை தொடுக்கும் வரை தான் பின்னர் அவை உன்னைப் பாதுகாக்க மாட்டா.

இராமன் உன் மீது போர் தொடுத்து விட்டால் அவனைத் தடுத்தல் அரிது. ஆதலின் இந்தச் சீதையை இங்கேயே விட்டு நீ ஓடிவிடு.

சீதா தேவியை அவள் இருந்த பன்ன சாலைக்கு நானே கொண்டுசேர்ப்பேன்;”

இவ்வாறு சமாதான முறையில் நல்லுரை கூறினான் சடாயு.

இராவணன் இணங்கினான் அல்லன்.

“எதிர்த்து வரும் கழுகே! நாவை அடக்கு, எங்கே? அந்த மானிடரை எனக்குக் காட்டு. என் வாளினால் உன் மார்பு புண்ணாகிவிடும். இவ்விடம் விட்டு ஓடு,” என்றான் இராவணன்.

உடனே சடாயு இடிபோல் முழங்கித் தன் சிறகுகளால் இராவணனது தேரின் மீது பறந்து வீணைக் கொடியை அறுத்தான்.

இராவணனுடைய இருபது தோள்களின் மீதும் தாவிக் குதித்து மூக்கால் கொத்தினான் சடாயு; தன் நகங்களால் குடைந்து புண்ணாக்கினான். சிறகுகளால் அடித்தான்; முத்து மாலை அணிந்து விளங்கிய கவசத்தை அறுத்து நாசமாக்கினான்.

இராவணனது வில்லைத் தன் மூக்கினாலே பறித்து ஒடித்தான்.

இராவணன் தனது வாளினால் சடாயுவின் சிறகை அறுத்தான். சடாயு மண்மேல் விழுந்தான்; மலை வீழ்ந்தது போல.

அது கண்டு சீதா பிராட்டி அழுது வருந்தினாள்.

ஏங்குவாள் தன்மையும்
       இறகு இழந்தவன்
ஆங்கு ஊறு தன்மையும்
       அரக்கன் நோக்கினான்.
வாங்கினன் தேரிடை
       வைத்த மண்ணோடும்
வீங்கு தோள் மீக்கொடு
       விண்ணின் ஏகினான்.

இராவணனது தேர், குதிரை, பாகன் முதலியவற்றையெல்லாம் சடாயு அழித்து விட்டான். வேறு தேர் இல்லை இராவணனுக்கு. சீதா தேவியின் தனிமை கண்டான். சடாயுவின் மரணாவஸ்தை கண்டான். சீதையை அவளிருந்த நிலத்தோடு பெயர்த்துத் தன் தேர் மீது வைத்திருந்தான் அல்லவா? அந்த நிலத்தோடு அவளைத் தன் பருத்த தோள்களில் தூக்கிக்கொண்டான். வான வீதி வழியாகச் சென்றான்.


ஏங்குவாள் தனிமையும் - இவ்வாறு வருந்திப் புலம்புகின்ற சீதாபிராட்டியின் துணையற்ற தனி நிலைமையையும்; இறகு இழந்தவன் - சிறகிழந்த சடாயு; ஆங்கு - அப்போது; உறு தன்மையும் - உயிர் ஊசலாடுற்ற தன்மையையும்; அரக்கன் - இராவணன்; நோக்கினான் - பார்த்தான்; தேரிடை . தேர் மீது; வைத்த மண்ணோடும் - சீதையை வைத்த நிலத்தோடு; வாங்கினன் - தூக்கி எடுத்து; வீங்கு தோள் கொடு - பருத்து உயர்ந்த தனது தோள்களின் மீது வைத்துக்கொண்டு; விண்ணின் ஏகினான் - ஆகாய மார்க்கமாகச் சென்றான்.

வஞ்சியை அரக்கனும்
       வல்லை கொண்டு போய்ச்
செஞ்செவே திருவுருத்
       தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர்
       நடுவண் ஆயிடைச்
சிஞ்சுப வனத்திடைச்
       சிறை வைத்தா அரோ.

இவ்விதம் சீதா பிராட்டியை வானவழியே தூக்கிச் சென்ற இராவணன், இலங்காபுரிபில் இருக்கும் அசோகவனத்திற்குக் கொண்டு போய்; கொடிய இராட்சத மகளிர் நடுவே சிறை வைத்தான்.

அரக்கனும் – அரக்கனான இராவணனும்; வஞ்சியை – வஞ்சிக்கொடி போன்ற சீதா தேவியை: திரு உருத் தீண்ட அஞ்சுவான் – அவளது திருமேனி தொடுதற்குப் பயந்து; ஆய் இடை – அந்த இலங்கை மா நகரிலுள்ள; சிஞ்சுப வனத்திடை – அசோக வனத்திலே; நஞ்சு இயல் – விஷம் போன்ற கொடிய நச்சுத் தன்மை கொண்ட; அரக்கியர் நடுவண் – இராட்சசிகள் நடுவே; செஞ்செவே – செம்மையாக; சிறை வைத்தான் – காவலில் வைத்தான்.

இந்நிலை இணையவன்
        செயல் இயம்பினாம்
“பொன் நிலை மானின்
        பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக” என
        மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை
        பேசுவோம் அரோ.

இதுவரை சீதை, சடாயு, இராவணன் ஆகியோரது செயல் கூறினோம்.

பொன் மான் பின்னே சென்ற இராமபிரானது நிலையை அறிவாயாக. என்று சீதா பிராட்டியால் ஏவப்பெற்ற லட்சுமணனின் நிலையை இனிக் கூறுவாம்.

இ நிலை – இத் தன்மையதாக; இனையவர் செயல் – சீதை, சடாயு, இராவணன் ஆகியோரின் செயல்களை; இயம்பினாம் – சொன்னோம்; பொன்நிலை மானின் பின் – பொன்னிறம் பொருந்திய மாயமானின் பின்னே; தொடர்ந்து போகிய – அதனைப் பின்பற்றிச் சென்ற; மன் நிலை அறிக என – இராமபிரானின் நிலையை அறிவாயாக என்று; மங்கை ஏவிய – சீதா பிராட்டி ஏவிய; பின் இளையவன் – இளைய பெருமாளாகிய லட்சுமணன் நிலையை; பேசுவாம் – இனிச்சொல்லத் தொடங்குவோமாக

தண் திரைக்கலம் என
       விரைவில் செல்கின்றான்
புண்டரீகத் தடம்
       காடு பூத்து ஒரு
கொண்டல் வந்து இழிந்தன
       கோலத்தான் தனைக்
கண்டனன் மனமெனக்
       களிக்கும் கண்ணினான்.

கடலிலே செல்லும் மரக்கலம் போல விரைந்து சென்றான் லட்சுமணன். நீருண்ட மேகம் ஒன்று தாமரை மலர்கள் அடர்ந்து பூத்துப் பூமியிலே வந்து இறங்கியது என்று சொல்லத் தக்க அழகிய திருமேனியுடன் விளங்கும் இராமனைக் கண்டான்; கண்ணும் மனமும் களி எய்தினான்.

தண் திரைக் கலம் என – தெளிந்த அலைகள் வீசும் கடலிலே செல்லும் மரக்கலம் போல; விரைவில் செல்கின்றான் – வேகமாகச் செல்லும் இலட்சுமணன்; ஒரு கொண்டல் – நீருண்ட மேகம் ஒன்று; புண்டரீகத் தடம்காடு பூத்து – தாமரை மலர்கள் அடர்ந்த காடு என்று சொல்லும்படியாக மலர்ந்து; வந்து இழிந்தன – பூமியிலே வந்து இறங்கியது என்று சொல்லும் படியான;கோலத்தான் தனை– அழகிய திருமேனியுடைய இராமபிரானை; மனம் எனக்களிக்கும் கண்ணினான் – மனம் போல மகிழும் கண்களையுடையவனாய்; கண்டனன் – பார்த்தான்.

இராமனைக் கண்ட உடனே இளைய பெருமாள் அவ்விராமனின் திருவடிகளைத் தொழுது நின்றான்.

சீதையைத் தனியே விட்டு வர நேர்ந்த காரணங்களை எல்லாம் லட்சுமணன் விவரித்தான். கேட்டான் இராமன்.

பொன்மானைப் பிடித்துத் தருமாறு கேட்ட சீதையின் மீது எவ்வித குற்றமும் இல்லை. “அது பொன் மான் அன்று; மாயமான்” என்று கூறிய உன் மீதும் குற்றம் இல்லை. குற்றம் எனதே. மானைத் தொடர்ந்து வந்த குற்றம் எனதே.

சீதைக்கு ஆபத்து விளைவிக்கக் கருதிய யாரோ செய்த சூழ்ச்சி இது என்று கூறி மனம் உடைந்து சிந்தை தளர்ந்தான் இராமன். தம்பியுடன் விரைந்தான் பன்னசாலைக்கு.

ஓடி வந்தனன் சாலையின்
       சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள்
       தனைக் காணான்
கூடு தன்னுடையது
       பிரிந்தாருயிர் குறியா
தேடி வந்து அது
       கண்டிலது ஆம் என நின்றான்.

பன்னசாலைக்கு விரைந்து ஓடி வந்தான் இராமன். சீதையைக் கண்டிலன். உடலை விட்டுச் சென்ற ஓர் உயிர் மீண்டும் அவ்வுடலில் புகுவான் வேண்டித் தேடி வந்து அவ்வுடலைக் காணாதது போல் திகைத்து நின்றான்.

ஓடி வந்தனன் – விரைந்து ஓடி வந்து இராமன்; சாலையின் – அப் பன்ன சாலையினிடத்து; சோலையின் உதவும் – சோலையிலே மலர்ந்த; தோடு இவர்ந்த – இதழ்கள் ஓங்கி விளங்கிய; பூம் – பூக்களை அணிந்த; சுரி குழலாள் தனை – சுருண்ட கூந்தலை உடைய சீதா பிராட்டியை; காணான் – காணாதவனாய்; ஆர் உயிர் – அரிய உயிர்; தன்னுடையது – தன்னுடையதான; கூடு பிரிந்து – உடலை விட்டுப் பிரிந்து சென்று; குறியா தேடி வந்து – மீண்டும் அவ்வுடலில் புகும் நோக்குடன் திரும்பி வந்து; அது கண்டிலது ஆம் என – அவ்வுடலைக் காணாதது போல; நின்றான் – திகைத்து நின்றான்.

கைத்த சிந்தையன் கனங்குழை
       அணங்கினைக் காணாது
உய்த்து வாழ்தர வேறு ஒரு
       பொருள் இலான், உதவ
வைத்த மாநதி மண்ணோடு
       மறைந்தன, வாங்கிப்
பொய்த்துளோர் கொளத்திகைத்து
       நின்றானையும் போன்றான்.

ஆபத்துக் காலத்தில் வாழ்வதற்கு உதவியாயிருத்தல் பொருட்டு தனது பெரும் செல்வம் முழுவதையும் துளி கூட வைத்துக்கொள்ளாமல், மண்ணிலே புதைத்து வைத்தான் ஒருவன். வஞ்சகரான கள்வர் அப்பெரு நிதியை மண்ணொடு பெயர்த்துக்கொண்டு போயினர். தன் செல்வத்தைக் காணாமல் ஏக்கமுற்றவன் போல் ஏங்கி நின்றான் இராமன்.

கனங்குழை – கனமான காதணி அணிந்த; அணங்கினை – சீதா பிராட்டியை; காணான் – காணாமல்; கைத்த சிந்தையன் – மனம் வெறுப்புற்ற இராமன்; உய்த்து வாழ் தர உதவ – வேண்டும்போது தனது ஜீவனோபாயத்துக்கு உதவுவதற்காக; வேறு பொருள் இலான் – வேறு பொருள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள பொருள் முழுவதையும்; மண்ணோடு வைத்த மாநிதி – மண்ணிலே புதைத்து வைத்த பெரும் செல்வமானது; பொய்த்துளோர் – வஞ்சகரான கள்வர்; வாங்கி கொள மறைந்தன – மண்ணோடு பெயர்த்துக் கொண்டு போய் மறைத்துவிட; திகைத்து நின்றானையும் போன்றான் – ஏக்கமுற்ற ஒருவன் போல் ஆனான்.

“தேரின் ஆழியும் தெரிந்தனம்
        தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகன்றதும்
        பார்த்தனம்; பயன் இன்று
ஒரும் தன்மை ஈது என் என்பது?
        உரன் இலாதவர் போல்;
தூரம் போதல் முன்தொடர்ந்தும்” என்று
        இளையவன் தொழலும்

“தேர்ச் சக்கரத்தின் சுவடு கண்டோம்; தேவியைத் தீண்டுதற்கு அஞ்சி நிலத்தொடு பெயர்த்து எடுத்துச் சென்றதும் அறிந்தோம். இனி, வலிமையில்லாதவர் போல் ஆலோசிப்பதில் பயன் என்ன? தேவியை எடுத்துச் சென்றவன் வெகு தூரம் போகு முன் நாமும் பின் தொடர்வோம்” என்று இராமனைத் தொழுது கூறினான் லட்சுமணன்.

இளையவனாகிய – தம்பியாகிய லட்சுமணன்; தேரின் ஆழியும் – தேர்ச் சக்கரத்தின் சுவடும்; தெரிந்தனம் – கண்டோம்; தீண்டுதல் அஞ்சி – சீதாபிராட்டியின் திருமேனி தீண்டுதற்குப் பயந்து; பாரீனோடு – அவள் இருந்த நிலத்தோடு; கொண்டு – பெயர்த்து எடுத்துக்கொண்டு; அகன்றதும் – சென்றதும்; பார்த்தனம் – பார்த்துவிட்டோம்; உரன் இலாதவர் போல் – வலிமையற்றவர் போல; பயன் இன்று – ஒரு விதப் பிரயோசனமும் இல்லாமல்; ஓரும் தன்மை ஈது – நாம் ஆலோசிக்கும் இத் தன்மையை; என் என்பது – என் என்று சொல்வது; தூரம் போதல் முன் – பிராட்டியை எடுத்துச் சென்றவன் வெகு தூரம் போவதன் முன்; தொடர்தும்– அவனைப் பின் தொடர்ந்து செல்வோம்; என்று இளையவன் தொழலும் – என்று இளையவனாகிய லட்சுமணன் தொழுது கூறவும்.

“ஆம்; அதுவே சரி” என்று கூறி இளையவன் கூறிய யோசனைக்கு இணங்கினான் இராமன். நீண்ட அம்புப் புட்டில் முதலியவற்றை முறைப்படி அணிந்து கொண்டனர் இருவரும். தேர் சென்ற சுவடு பின்பற்றிச் சென்றனர். அவ்வாறு சிறிது தூரம் சென்றனர். தேர்ச் சுவடு மறைந்தது. வெந்த புண்ணில் வேல் ஊடுருவிச் சென்றது போல் மனம் புழுங்கினான் இராமன்.

“இனி என்ன செய்வோம் தம்பி?” என்று பிரலாபித்தான் இராமன்.

“ஏங்கிச் செயலற்று நிற்பதால் யாது பயன்? அந்தத் தேர் வான் வழியே தெற்கு நோக்கிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. அது சென்றிருக்கும் தூரமோ உமது கணை பாய்வதற்கு அப்பாற்பட்டது அன்று. எனவே வீண் ஆலோசனையில் காலதாமதம் செய்ய வேண்டாம்,” என்றான் லட்சுமணன்.

“ஆம்! அதுவே செய்யத் தக்க செயல்” என்று ஒப்புக் கொண்டான் இராமன்.

இருவரும் தெற்கு நோக்கி இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். ஒரு யோசனை என்பது பத்து மைல்.

அங்கே என்ன கண்டனர்? வீணைக்கொடி ஒன்று முறிந்து கிடக்கக் கண்டனர்.

“பிராட்டியை எடுத்துச் சென்றவன் இராவணனே. வீணைக் கொடி அவனது தேர்க் கொடியே. உற்று நோக்கின் அவனை எதிர்த்துப் போரிட்டவன் சடாயுவே எனலாம். ஆகவே நாம் வேகமாகச் செல்வோம். சடாயுவுடன் போரில் கலந்து கொள்வோம்” என்றான் இளையவன்.

“ஆம்; அதுவே சரி” என்றான் இராமன்.

இருவரும் சுழல் காற்று போலவும், காற்றாடி போலவும் விரைந்து சென்றனர்.

ஓரிடத்திலே வில் ஒன்று முறிந்து கிடக்கக் கண்டனர். இன்னும் சிறிது தூரம் சென்றனர். திரிசூலம் ஒன்றும், அம்புப்புட்டில் ஒன்றும் கிடக்கக் கண்டனர்.

இன்னும் சிறிது தூரம் சென்றனர். இராவணன் மார்பிலே அணிந்திருந்த கவசம் கிடக்கக் கண்டனர். அங்கே தேர்க் குதிரைகள் இறந்து கிடக்கக் கண்டனர். தேர்ப் பாகன் இறந்து கிடக்கக் கண்டனர். இன்னும் சிறிது தூரத்தில் கவச குண்டலங்கள் இரத்தின ஆபரணங்கள் முதலியன கண்டனர்.

“சீதா பிராட்டியைக் கொண்டு சென்றவன் இராவணனே. அவனுடன் போரிட்டவன் சடாயுவே” என்று உறுதியாகக் கூறினான் லட்சுமணன். 

அங்கே இரத்த வெள்ளத்தில் சடாயு குற்றுயிராகக் கிடக்கக் கண்டனர் இருவரும்.

உடனே இராமன் அந்த சடாயுவின் மீது விழுந்து புரண்டு அழுதான்.

துள்ளி ஓங்கு செந்தாமரை
        நயனங்கள் சொரியத்
தள்ளி ஓங்கிய அமலன் தன்
        தனி உயிர்த் தந்தை,
வள்ளியோன் திருமேனியில்
        தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன
        மலை என வீழ்ந்தான்.

தனது செந்தாமரைக் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருகச் சிவபெருமானின் வெள்ளிமலை மீது கரியமலை கிடந்ததுபோல விழுந்து அழுதான் இராமன்.

ஓங்கு செந்தாமரை நயனங்கள் — சிறந்து விளங்கும் செந்தாமரைக் கண்கள்; துள்ளி சொரியத்தள்ளி — நீர்த்துளிகளைச் சொரிந்து வெளியிட்டு ஓங்கிய; துன்பம் மேலிட்ட அமலன் — பரிசுத்தனாகிய இராமன்; தன் தனி உயிர் தந்தை — தனது ஒப்பற்ற உயிர் போன்ற தந்தையும்; வள்ளியோன் —வள்ளலுமான சடாயுவின்; திருமேனியில் திருமேனி மீது; தழல் நிற மன்னன் — செந்நிற மேனிச் சிவபெருமானுடைய; வெள்ளி ஓங்கலில் —வெள்ளிமலை எனும் வெண்ணிறக் கயிலை மலை மீது; அஞ்சன மலை என — ஒரு கருமை நிற மலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்.

“என தாரம் பற்றுண்ண
        ஏன்றாயைச் சான்றோயைக்
கொன்றானும் நின்றான்;
        கொலையுண்டு நீ கிடந்தாய்;
வன் தாள் சிலை ஏந்தி
        வாளிக் கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன்
        நெடுமரம் போல் நின்றேனே.”

“என் மனைவியைப் பிறன் ஒருவன் கவர்ந்து சென்றான். அது கண்டு அவளைக் காத்து மீட்கும் பொருட்டு நீ போரிட்டாய் சான்றோய்! நீ இறந்துவிட்டாய். உன்னைக் கொன்றவனோ இன்னும் உயிரோடு இருக்கின்றான். நீ கொலையுண்டு கிடக்கின்றாய். நானோ வில் சுமந்து ஒரு கூடை அம்புகளைச் சுமந்து வீணில் நிற்கின்றேன், நெடு மரம்போல் நிற்கின்றேனே.”

என் தாரம் பற்று உண்ண – என் மனைவியை இன்னொருவன் கவர்ந்து செல்ல; என்றாயை – அது கண்டு அவளை மீட்கும் பொறுப்பினை ஏற்றுப் போரிட்ட உன்னை; சான்றோயை – மேலான குணச்சிறப்புடைய உன்னை; கொன்றானும் – கொன்றவனாகிய அக் கொடியோனும்; நின்றான் – இறவாது இன்னும் உயிர் கொண்டு வாழ்கின்றான்.

நீ கொலை உண்டு கிடந்தாய் – நீயோ கொலை செய்யப்பட்டுக் குற்றுயிராய்க் கிடக்கின்றாய்; வல்தாள் சிலை ஏந்தி – வரிய அடிப்பாகம் கொண்ட வில்லினை ஏந்தி; வாளிக் கடல் சுமந்து – கடல்போல் ஏராளமான அம்புகளை வீணில் சுமந்துகொண்டு; நின்றேனும் – நிற்கின்ற யானும்; நின்றேன் - சும்மா நிற்கின்றேன்; நெடுமரம் மரம்போல் நின்றேனே - நீண்டுயர்ந்த மரம்போலப் பயனற்றவனாய் நின்றேனே,

இவ்வாறு இராமன் அழுது புலம்பக் கண் விழித்தான் சடாயு. சீதா பிராட்டியைக்கொண்டு சென்றவன் இராவணன் தான் என்பதை அவர்களுக்கு அறிவித்து உயிர் நீங்கினான்.

இராமனும் லட்சுமணனும் அந்தப் புள்ளின வேந்துக்கு ஈமக்கிரியை செய்து மேலும் செல்லத் தொடங்கினர்.

அந்தி நேரம் வந்தது. இராமன் லட்சுமணன் ஆகிய இருவரும் ஒரு மலைச்சாரலில் தங்கினர். இரவு முழுவதும் துயில் கொள்ளாது துன்புற்றான் இராமன். பொழுது விடிந்தது. இருவரும் மீண்டும் நடந்தனர். பதினெட்டு யோசனை தூரம் நடந்தனர் அன்றைப்பொழுது போயிற்று. இரவு வந்தது. “பருகு நீர் கொண்டு வா தம்பீ” என்றான் இராமன்.

தம்பியாகிய லட்சுமணன் நீர் தேடிச் சென்றான். அயோமுகி எனும் அரக்கி ஒருத்தி லட்சுமணனைக் கண்டாள். அவன் மீது காமமுற்றாள். சூர்ப்பனகை, தாடகைபோல இவளும் ஓர் அரக்கி என்பது அறிந்தான் லட்சுமணன். அந்நிலையில் அவனை வலிந்து தூக்கிக்கொண்டு ஓடினாள் அயோமுகி, அப்போது அவளுடைய மூக்கை அறுத்து அவளுடைய பிடியிலிருந்து தப்பினான் லட்சுமணன் தண்ணீர் எடுத்துக்கொண்டு விரைந்து ஓடிவந்தான்.

நீண்ட நேரமாயிற்று நீர் கொண்டு வரச் சென்ற இளையவனைக் காணாது தவித்தான் இராமன். தேடிச் கொண்டுசென்றான். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த லட்சுமணன் இராமனிடம் தண்ணீரைக் கொடுத்து அயோமுகியிதன் பிடியில், தான் சிக்கியதையும் பின்னே அவள் மூக்கை அரிந்து வந்ததையும் இராமபிரானுக்குக் கூறி இதுவே கால தாமதம் ஆனமைக்குக் காரணம் என்றான்.

இராமன் தம்பியைத் தழுவிப் புகழ்ந்து மகிழ்ந்தான். இரவு கழிந்தது. சூரியன் தோன்றினான். இருவரும் நடக்கலாயினர்.

அப்படி நடக்கும் போது கபந்தன் என்றோர் அரக்கன் எதிர்ப்பட்டு இராம லட்சுமணர்களை விழுங்க முற்பட்டான். அப்போது அவ் வீரர் அவனது தோள்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு வீழ்த்திய காலை அவ்வரக்கன் மாண்டு போனான். கந்தருவ உருக் கொண்டு வானில் தோன்றினான்.

“நீ யார்?” என்று வினவினான் இராமன்.

“நான் ஓர் கந்தருவன். தனு வம்சத்தில் தோன்றியவன். முனிவர் ஒருவர் சாபத்தினால் இப் பிறவி பெற்றேன். நின் கை பட்டதால் அச் சாபம் நீங்கிற்று. முன்னைய உருப் பெற்றேன்” என்றான்.

இவ்வாறு கூறிப் பலவாறு இராமனைத் துதித்தான். பின்னே மதங்காசிரமம் சென்று இராமனது வருகைக்காகக் காத்திருக்கும் சபரிக்கு அருள் புரியுமாறு கூறினான்.

பிறகு சபரியிடம் வழி கேட்டு அறிந்து சுக்ரீவனிடம் சென்று, அவனது நட்பைப் பெற்று, சீதா பிராட்டியைத் தேடுமாறு கூறி மறைந்தான்.

வால்மீகி இராமாயணத்திலே பின் வருமாறு காணப்படுகிறது.

கவந்தன் சொல்கிறான் : “ஸ்ரீ ராமா! நான் தனு என்பவன் வமிசத்திலே ஸ்ரீ என்பவனுக்கு மகனாகப் பிறந்தேன். அழகிய வடிவம் பெற்றேன். ஆயினும் கோர உருக்கொண்டு பலரையும் அச்சுறுத்தி வந்தேன். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரையும் அச்சுறுத்தியபோது அவர் வெகுண்டு “இக் கோர உருவமே உனக்கு நிலைப்பதாக” என்று சபித்தார். பின்னர் நான் எனது பிழையுணர்ந்தேன். முனிவரை வேண்டினேன். இராமபிரான் உன் கரங்களைத் துண்டித்து எரிக்கும்போது இக்கோர உரு நீங்கும் என்றார். யான் கடுந்தவம் புரிந்தேன். நீண்ட வாழ்நாள் பெற்றேன். அதனால் செருக்குற்றேன்; இந்திரனை எதிர்த்தேன். என் கைகளும் தலையும் வயிற்றினுள் புகுமாறு செய்தான் இந்திரன். அவனை வேண்டினேன். ஒரு யோசனை தூரம் என் கைகள் நீள வரமளித்தான்.

அத்யாதம இராமாயணம் கவந்தனைப் பற்றி பின் வருமாறு கூறுகிறது.

“கவந்தன் ஒரு கந்தர்வன். பிரம்மாவிடம் வரம்பெற்றவன். அஷ்ட வச்ர முனிவரால் இந்தக் கோர உருப் பெற்றவன்.”

இராமனும் லட்சுமணனும் அங்கிருந்து நடந்தனர். நடந்து மதங்கர் ஆசிரமம் அடைந்தனர். அவர்களது வருகைக்காகக் காத்திருக்கும் சபரியைக் கண்டனர்.

இராமனைக் கண்ட சபரி அவ்விருவரையும் உபசரித்தாள். பின்னே மோட்சம் எய்தினாள். அன்றிரவு மதங்கர் ஆசிரமத்திலே தங்கி மறுநாள் பம்பாசிரஸை அடைந்தனர்.