பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சட்டம் தெரியாத கலெக்டர்!


குறித்ததொன் றெடுத்ததைக் கூற்றெனப் படித்தான்.
“தேசநன் னிலையினைச் சிதைவுறச் செய்தீர்;
மோசம் வருதலை முகர்ந்தேன் இன்றவண்
தயாரோ கொடுக்க ஜாமின்” என்றே.
“பெயாரோ இவ்வுரை பெருமிதம் உற்றால்”
என்று நான் நண்பர்க் கியம்பிஎழுத் தீந்தேன் :-
“ இன்று நீர் எம்மை இருட்சிறை யிட்டிட
மனத்தினில் உன்னிஇம் மாற்றம் உரைத்ததால்,
தனத்தினில் உயர்ந்த ஜாமீன் கொடுக்கிறோம்.
ஆனால் வழக்கினை அடுத்த கோர்ட்டில்
மேனாள் மாற்றிட விரும்பினோம்” என்றே.
குறித்த பிரிவரை குறைவழக் கொன்றினே
மறித்த சிறையினை வழங்கலாம் என்றதால்,
“வாயுதாப் போட்டுளேன்: மன்சிறை தந்துளேன்:
போயவண் இரும்' எனப் புகன்றனன் விஞ்சு.
“கொடுத்த ஜாமினைக் கொள்ளிரோ?” என்றேன்.
“கொடுத்த எழுத்துநும் குற்றத்தை மறுத்ததால்
ஜாமினை ஏற்றிடேன்; ஜல்திபோம்” என்றான்.
தாமதம் இலாது சாற்றிய நிபந்தனை
இலாது ஜாமினை யீந்ததா எழுதிப்
பொலாதவன் கரத்திற் பொள்ளெனக் கொடுத்தேன்
இந்த மத்தியில் எண்ணிலாப் போலிஸார்
வந்தனர் மேடை. வந்ததும் எம்மை
“நடங்கள்” என்றனர். நானுடன் விஞ்சுவை
“திடங்கொடு பதிலெதும் செப்புக” என்றேன்.

78