பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

திருவள்ளுவர் திருக்குறள்.

(வ. உ. சிதம்பரம் பிள்ளை உரையுடன்.)

உரைப்பாயிரம்.


பூவுலகின்கண் தோன்றி நிலவுகின்ற மொழிகள் பல. அவற்றுள் நம் தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட நூல்கள் எண்ணில. அவற்றில், அழிந்து போனவை பல; அழியாது நிற்பவை சில. அச் சிலவற்றில் சிறந்தவை மிகச் சில; சாலச் சிறந்தவை மிக மிகச் சில. அந் நூல்களை “மேற்கணக்கு” எனவும், “கீழ்க்கணக்கு” எனவும் பகுத்துத் தொகுத்துள்ளார் நம் முன்னோர். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை "பத்துப் பாட்"டிலுள்ள நூல்கள் பத்தும், "எட்டுத் தொகை"யிலுள்ள நூல்கள் எட்டு மாம். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை “பதினெண் கீழ்க் கணக்” கிலுள்ள நூல்கள் பதினெட்டு மாம்.

அப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப் பெற்றது. அது மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயவர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவரென்றும் கூறிவருகின்ற தொன்றாலேயே நன்கு விளங்கும்.

1