திருக்குறள் மணக்குடவருரை/தீவினையச்சம்

விக்கிமூலம் இலிருந்து

௨௧-வது.-தீவினையச்சம்,

தீவினையச்சமாவது, தீவினைகளைப் பிறருக்குச் செய்யாமை.

[இல்வாழ்வார் விலக்க வேண்டிய கொடிய பாவங்களில் மேல் விதந்து கூறாதவற்றையெல்லாம் பொதுவகையாக இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]

ன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

இ - ள் :- தன்னைத் தான் காதலன் ஆயின்-தனக்குத் தான் நல்லவனாயின், எனைத்து ஒன்றும் தீவினைப்பால் துன்னற்க-யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைச் செய்யா தொழிக.

[யாதொன்றாயினும்-ஒரு சிறிதும்.]

இது, தீவினைக்கு அஞ்சவேண்டு மென்றது. ௨0௧.

னைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

இ-ள்:- எனைப்பகை உற்றாரும் உய்வர்-எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தி உண்டாம்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்-தீவினையாகிய பகை நீங்காது (என்றும்) புக்குழிப் புகுந்து கொல்லும்.

அஃதாமாறு பின்பே கூறப்படும். [உய்தி - பிழைத்தல்.]

இது, தீவினையானது (தன்னைச் செய்தானைப்) பின்சென்று அடுமென்றது. ௨0௨.

தீவினை செய்தார் கெடுதல், நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

இ-ள்:- தீவினை செய்தார் கெடுதல்-தீயவானவற்றைப் (பிறர்க்குச்) செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தால் அற்று-தன் நிழல் தன்னை நீங்காதே தன் அடியின் கீழ் ஒதுங்கினாற் போலும்.

இது, தீவினை அடுமாறு காட்டிற்று. ௨0௩.

றந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

இ-ள்:- மறந்தும் பிறன் கேடு சூழற்க-ஒருவன் மறந்தும் பிறனுக்குக் கேட்டைச் சூழாதொழிக; சூழின்-சூழ்வானாயின், சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-(அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன் முன்னே) சூழ்ந்தவனுக்குக் கேட்டை(த் தீமைசெய்தார்க்குத் தீமை பயக்கும்) அறந்தானே சூழும். [சூழ்தல்-நினைத்தல்.]

இது, தீமையை நினைப்பினும் அது கேடு தரு மென்றது. ௨0௪.

லமென்று தீயவை செய்யற்க; செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

இ-ள்:- இலம் என்று தீயவை செய்யற்க-ஒருவன் நல்கூர்ந்தேம் என்று நினைத்து (ச்செல்வத்தைக் கருதித்) தீவினையைச் செய்யாதொழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பின்பும் நல்குரவின னாவன்.

[மற்று என்பது அசைநிலை. "இலம்" என்பது தீவினை செய்வாரது கூற்றாகக் கூறப்பட்டது.]

இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறிய னாகுமென்றது. ௨0௫.

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க, நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

இ-ள்:- தன்னை நோய்ப்பால அடல் வேண்டாதான்-தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீப்பால பிறர்கண் செய்யற்க-தீமையாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.

[பகுதி-வகை. தான் என்பது அசை.]

இசு, தீவினை செய்தார்க்கு நோய் உண்டாகு மென்றது. ௨0௬.

தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இ-ள்:- தீயவை தீய பயத்தலால்-தீத்தொழிலானவை (தமக்குத்) தீமையைப் பயத்தலானே, தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தொழில்கள் (தொடிற் சுடுமென்னும்) தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்..

இது, தீய செயல் தீயினும் மிகுந்த துன்பத்தை விளைவிக்கு மென்றது. ௨0௭.

தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர்,
தீவினை என்னும் செருக்கு.

இ-ள்:- தீவினை என்னும் செருக்கு-தீவினையாகிய களிப்பை, தீவினையார் அஞ்சார்-(என்றும்) தீத்தொழில் செய்வார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-சீரியார் அஞ்சுவார்.

[செல்வம் முதலியவற்றின் களிப்பால் பெரும்பாலும் தீவினை நிகழ்வதால் "தீவினை யென்னும் செருக்கு" என்றார்.]

இது, தீவினை செய்தற்கு நல்லோர் அஞ்சுவா ரென்றது. ௨0௮.

ருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

இ-ள்:- மருங்கு ஓடி தீவினை செய்யான் எனின்-ஒருவன் மருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-தான் கேடு இல்லாதவன் என்று அறிக.

[மருங்கு ஓடி- அறநெறியை விட்டுப் பக்கத்தில் ஓடி; அதாவது அறநெறியினின்றும் பிறழ்ந்து.]

இது, தீவினை செய்யாதார்க்குக் கேடில்லை என்றது. ௨0௯.

றிவினு ளெல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

இ-ள்:- செறுவார்க்கும் தீய செய்யாது விடல்-தமக்குத் தீமை செய்வார்க்கும் தாம் தீமை செய்யாதொழுகுவதற்கு ஏதுவாகிய அறிவை, அறிவினுள் எல்லாம் தலை என்ப-(எல்லா அறங்களையும் அறியும்) அறிவெல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் (நல்லோர்.)

[விடல் என்று கூறினார், விடுதற்குக் காரணமாகிய அறிவினை. செய்யாது என்பது ஈறு கெட்டுநின்றது.]

இது, தீவினையைச் செய்யாத அறிவு எல்லாவற்றுள்ளும் தலைமையுடைத் தென்றது. ௨௧0.