அலெக்சாந்தரும் அசோகரும்/பேரரசர் அசோகர்

விக்கிமூலம் இலிருந்து

4. பேரரசர் அசோகர்

பதினாயிரக் கணக்கான மன்னர்களின் பெயர்களிடையே, அசோகரின் பெயர், தனியாக, ஒரு தாரகை போல் ஒளி வீசுகின்றது என்றும், ருஷ்யாவிலுள்ள வால்கா நதியிலிருந்து ஜப்பான் நாடு வரையிலும் அவருடைய திருப்பெயர் இப்பொழுதும் பாராட்டப் பெறுகின்றது என்றும் உலக சரித்திர ஆசிரியரான எச். ஜி. வெல்ஸ் குறித்துள்ளார். வெற்றியடைந்த பின்னர்ப் போர் முறையைத் துறந்த அரசர் அசோகர் ஒருவரே என்றும் அவர் திருக்கிறார்.

பல வகையிலும் பெரும் புகழுக்கு உரியவரே அசோகர். ‘எல்லா மனிதர்களும் என்னுடைய குழந்தைகள்’ என்று அவர் ஒரு கல் தூணில் எழுதி வைத்திருக்கிறார். எழுத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் அவர் அவ்வாறே வாழ்ந்து காட்டினார். மக்களின் நலமே தம் நலம் என்றும், மக்களாகிய உயிரைத் தாங்கும் உடலைப் போன்றவரே மன்னர் என்றும் அவர் உணர்ந்திருந்தார். ஊன் கொழுத்து, உடல் பருத்து வாழ்வதே வாழ்க்கை என்றில்லாமல், மக்கள் ஒழுக்கத்திலும் சிறந்து, உன்னதமான இலட்சியப் பாதையில் உறுதியுடன் வாழ வேண்டும் என்றே பெற்றோர் எண்ணுவர். அங்ஙனமே அவரும் எண்ணியிருந்தார். ஒரு கல் வெட்டில், “தாழ்ந்தவர்களும் பெரியோர்களும் இடைவிடாது முயற்சி செய்க” என்று அவர் குறித்துள்ளார். வாழ்க்கையின் இலட்சியங்கள், வாழும் முறைகள் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவு புகட்ட முன் வந்த முதல் அரசர் அவரே யாவார்.

மக்களுக்கு அசோகர் புகட்ட விரும்பிய அறநெறி சாதாரணமானதுதான். தாய் தந்தையரைப் பேணுதல், குருவைப் போற்றுதல், எல்லோரிடத்திலும், எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்பாயிருத்தல், பாவங்களுக்கு அஞ்சி ஒதுங்குதல், இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெற உழைத்தல் முதலிய அறங்களையே அவர் எடுத்துக் கூறியுள்ளார். இவை எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானவை. ஆயினும் இவற்றில் இடைவிடாது முயற்சி செய்யவேண்டும் என்பது அவர் விருப்பம். அவர், ‘முயற்சி செய்க’ என்று எழுதியிருக்கும் இரு சொற்களும் பொருள் பொதிந்தவை. புத்தர் பெருமானின் அறவுரைகளில் நன்றாக ஊறியிருந்த அவருடைய உள்ளத்திலிருந்து வெளிவந்த சொற்கள் அவை.

புத்தர் மனமாசுகளை நீக்கி, நல்லெண்ணங்களை வளர்க்கச் சொன்னார். ‘நல்லதை விரைவாக நாட வேண்டும்; பாவத்திலிருந்து சித்தத்தை விலக்க வேண்டும். அறச்செயலைச் செய்வதில் தாமதித்தால், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும்’ என்பது அவர் திருவாக்கு. ‘மனத்துக்கண் மாசில’னாக ஆவதற்குரிய வழிகளையும் அவர் வகுத்துக் காட்டியுள்ளார். ஆனால் எந்த வழியானாலும் அதில் இடைவிடாத முயற்சி வேண்டும். இதனை அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்தி வந்தார். ‘கருத்துடைமையே நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு வழி; மடிமையே மரணத்திற்கு வழி,’ என்று அவர் தெரிவித்தார். இதை விளக்க ஓர் உதாரணம் கூறினார். ஆற்றின் மறுகரைக்குச் செல்ல விரும்பும் ஒருவன் இக்கரையிலேயே நின்றுகொண்டு, அக்கரையே, வா, வா!' என்று கூறினால், அது வருமா? அம்மட்டோடு நில்லாமல், அவன், இருந்த இடத்திலேயே போர்த்திப் படுத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினால், அவன் மறுகரையை அடைய முடியுமா? இதற்கும் மேலாகத் தன் கால்களையும் கைகளையும் தளைகளால் நன்றாகக் கட்டிக்கொண்டு துயின்றால், எந்தக் காலத்திலாவது அவன் அக்கரையை அடைய முடியுமா? அந்த மனிதனைப் போலவே மக்கள் முயற்சியில்லாமல் இருப்பதுடன், துன்ப விலங்குகளையும் மாட்டிக் கொள்கின்றனர் என்று அப்பெருமான் விளக்கிச் சொல்வ துண்டு. அவரது இறுதிக் காலத்தில் அவர் சீடர்களைப்பார்த்து, “நீங்கள் நல்ல கதியை அடைவதற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்!” என்று கூறினார். இவற்றை யெல்லாம் கருத்திலே கொண்டுதான் அசோகரும், இடைவிடாமல் முயற்சி செய்யும்படி, கால வெள்ளத்திலே அழியாத கல்லிலே பொறித்து வைத்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நல்ல ஆட்சி புரிந்து, அல்லும் பகலும் மக்கள் நலனை நாடிவந்த அசோகர், தாம் விழிப்போடிருந்து வேலை செய்தது போதாது என்று மனக்குறை கொண்டிருந்தார். ஒரு கல்வெட்டில் அவரே பின் கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்: “நான் விழிப்போடிருக்கும் வேளையிலோ, செய்து முடிக்கும் காரியத்திலோ எனக்கு ஒருபோதும் அமைதி ஏற்படவில்லை. மக்களின் நலனுக்காக நான் சேவை செய்ய வேண்டும் என்றே கருதுகிறேன்; இது முற்றுப் பெறுதல் விழித்திருப்பதையும், முறைப்படி செயலாற்றுவதையும் பொறுத்திருக்கிறது. எல்லா மக்களும் நன்மை அடையும்படி பணியாற்றுவதைவிட எனக்கு வேறு வேலையில்லை.” அசோகர் உள்ளக்கிடக்கை மேலே கூறியவற்றிலிருந்து தெளிவாகத் தெரியும். இத்தனைக்கும் அவர் பாரதப் பேரரசர்; பல்லாயிரம் போர் வீரர்கள் வில்லும் வாளும், ஈட்டியும், வல்லயமும், கேடயமும் தாங்கித் தொடர்ந்து வரவும் படைத் தலைவர்கள் அனைவரும் சேவித்துக் கட்டியம் கூறவும், மன்னர்கள் அடிபணியவும், மதயானையின் பிடரி மேல் வீற்றிருந்து ஆணை செலுத்திய அரசர் பிரான்!

அசோகரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மிகச் சுருக்கமாகவே கிடைத்துள்ளன; ஆனால், புராணக் கதைகளே அதிகம். அவரைப் பற்றியும், அவர் தந்தையார், பாட்டனார் பற்றியும் யவனத் தூதர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறும் செய்திகளிலிருந்து நாம் அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிகின்றது. நீண்ட காலம் செங்கோல் ஓச்சிய அசோகரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டில்கூட விரிவாகத் தெரிந்து கொள்ள வழியில்லாமலிருந்தது. ஆனால், பின்னர், அவரே எழுதிவைத்த கல் தூண்களும், பாறைகளும் நாடெங்கும் கண்டு பிடிக்கப் பெற்றதால், அவர் ஆட்சியின் பிற்பகுதியைப் பற்றி விரிவாக அறிய முடிந்தது. கல்வெட்டுக்களைக் கண்ட பின்பும், அவற்றில் பொறித்திருந்த செய்திகளையும் புரிந்துகொள்ள நெடுநாளாயிற்று. கல்வெட்டுக்களில் அசோகர் தமது இயற்பெயரான ‘அசோக வர்த்தனர்’ என்று பொறிக்கவில்லை; ‘தேவர் களுக்கு உகந்தவர், பார்வைக்கு இனியவர்’ என்று பொருள்படும் ‘தேவானாம்பிரிய பிரியதரிசி’ என்றே குறித்துள்ளார். பாரசீகப் பெரு மன்னர் தரியஸ் எழுதிவைத்த கல்வெட்டு ஒன்றில் தாமே தமக்குக் கட்டியம் கூறிக்கொள்வது போல, ‘இராசாதி ராசர், (அரசர்க்கரசர்) இராச்சியங்களின் அதிபதி’ என்றும், இன்னார் குமாரரும், இன்னார் பேரருமான மாபெரும் மன்னர் தரியஸ் என்றும் குறித்திருக்கிறார். ஆனால், அசோகரோ பெரும்பாலும் தம் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. ‘சக்கரவர்த்தி’ என்ற சொல்லே அவர் கல்வெட்டுக்களில் காணப்பெறவில்லை. இதிலிருந்து அசோகருடைய அடக்கமும் பண்பும் தெளிவாய்த் தெரிகின்றன.

கதைகள், கல்வெட்டுக்களின் துணை கொண்டு பார்த்தால், அசோகர் பிந்துசாரரின் இராணிகளில் சுபத்திராங்கி என்ற மகாராணியின் மைந்தர் என்றும், வேறு ஓர் இராணியின் மைந்தரான சுமணர் என்பவரே பட்டத்திற்குரிய மூத்தவர் என்றும், திஷ்யன் என்று அசோகருக்கு ஒரு தம்பி இருந்தான் என்றும் தெரிகின்றது. அசோகருடைய மனைவியர் தேவி (வேதிஸ மகாதேவி சாக்கிய குமாரி), காருவாகீ, அசந்தமித்திரை, பத்மாவதி, திஷ்யரட்சிதை என்போர். இவர்களில் தேவிக்கு மகேந்திரனும், காருவாகீக்குத் திவாரனும், பத்மாவதிக்குக் குணாளனும் மைந்தர்கள். ஐலௌகா என்று ஒரு குமாரனும் அசோகருக்கு இருந்ததாகக் காஷ்மீர் வரலாறு கூறும். தேவிக்குச் சங்கமித்திரை, சாருமதி என்ற இரு பெண்களும் இருந்தனர். சங்கமித்திரை அக்னிப்பிரமனையும், சாருமதி தேவ பால க்ஷத்திரியனையும் பின்னர் மணந்துகொண்டனர். தசரதன், சம்பிரதி, சுமணன் ஆகியோர் அசோகருடைய பெயரர்கள். இவர்களில் சுமணன் சங்கமித்திரையின் மகன்; சம்பிரதி குணாளனுடைய மைந்தன்; தசரதனே பின்னர் மன்னனாயிருந்தவன்.

அசோகர் கி. மு. 274 இல் அரியணை ஏறினார். அவர் சிறுவயதிலிருந்தே அரசர்க்குத் தேவையான கல்வியிலும் கலைகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். 18 ஆண்டுக் காலம் பயிற்சி முடிந்த பிறகு, அவர் சிறந்த போர்வீரராக விளங்கினார். அப்பொழுது பஞ்சாப், காஷ்மீரம் முதலியவை உள்ளிட்ட வடமேற்கு மாநிலத்தின் தலைநகரான தட்சசீலத்தில் சுசீமர் அரசப் பிரதிநிதியாயிருந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளின் சில கொடுமைகளை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். சுசீமரால் கலகத்தை அடக்க முடியாததால், பிந்துசாரர் ஒரு படையுடன் அசோகரை அங்கே அனுப்பிவைத்தார். அசோகர் கலகத்தை எளிதில் அடக்கி, மக்களின் குறைகளை விசாரித்துப் பரிகாரம் கண்டார். பின்பு அவரே அங்குச் சிறிது காலம் அரசப்பிரதிநிதியாக இருந்து ஆட்சி புரிந்தார். இளம் வயதில் தட்சசீல வாழ்க்கை அவருக்கு மிகவும் பயன்பட்டிருக்க வேண்டும்.

கல்வி கேள்விகளுக்குப் புகழ் பெற்ற இடம் தட்சசீலம். மேலும் மேற்குப் பக்கத்து நாடுகளுடன் தொடர்பு கொள்ள அதுவே தலைவாயிலாகவும் விளங்கிற்று. அங்கிருந்த பல்கலைக் கழகம் ஆசியா முழுதும் புகழ்பெற்றது. மோரியர் ஆட்சியில் தட்சசீலம் மிகப் பெரிய வாணிகத் தலமாகவும் விளங்கி வந்தது. மோரியருக்கு முன்னர் அது சுதந்தர நாடாயிருந்ததால், மக்கள் புதிய ஆட்சியில் மனக் குறை கொள்வது இயல்பாகும். அத்தகைய குறைக்கு இடமில்லாமல், அசோகர், வெறும் படையை மட்டும் நம்பியிராமல், மக்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.

பின்னர் அவர் மேற்கு மாநிலமான மாளவ இராச்சியத்தின் தலைநகரான உச்சயினியில் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அந்நகரும் வாணிகத்தில் செல்வம் கொழிக்கும் நகராகத் திகழ்ந்தது. அங்கேயிருந்த காலத்தில், அசோகர் தேவி என்ற வைசியப் பெண்ணைக் காதலித்து, அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். தேவியின் குழந்தைகளே மகேந்திரனும் சங்கமித்திரையும். தேவி பெளத்த தருமத்தில் மிகுந்த பற்றுடையவள். அவளது முயற்சியாலேயே அசோகர் புத்த தருமத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளவும், அதைப் போற்றிப் பின்பற்றவும் முடிந்தது என்று கருத இடமுண்டு.

அசோகருக்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் கெளதம புத்தர். அவரும், அசோகரைப் போல, கபிலவாஸ்துவில் ஆண்டு வநத சுத்தோதன மன்னரின் மைந்தரான இளவரசர். உலகில் மக்கள் படும் அவதிகளைக் கண்டு, பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு முதலியவற்றின் காரணத்தை அறிந்து, பிறவாப் பெருநிலையை அடையும் ஞானத்தைப் பெற வேண்டும் என்று அவர், நாடு துறந்து, காட்டிலே ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்தார். பின்னரே அவருக்கு ஞானோதயம் உண்டாயிற்று. அது முதல் அவர், தமது எண்பது வயதுவரை, பல இடங்களுக்கும் கடந்து சென்று தருமப் பிரசாரம் செய்து வந்தார். காணும் துன்பங்கள்,அத்துன்பங்களிலே பெருந் துன்பமாகிய மரணம் ஆகியவை தொலையவேண்டுமானல், பிறப்பே தொலைய வழி காணவேண்டும் என்றும், பற்றற்ற வாழ்க்கையே முடிவிலாப் பேரின்பமாகிய நிருவாணத்தை அளிக்கும் என்றும் பற்று விடுவதற்கும், ஒழுக்கமாக வாழ்வதற்கும் எட்டுப் படிகளாக அமைந்த 'அஷ்டாங்க மார்க்கம்' தக்க வழி என்றும் அவர் மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த மன்னர் பிம்பிசாரர், பெளத்த தருமத்தை மேற்கொண்டு, பெருமானுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து வந்தார். மகத நாட்டில் புத்தரைப் பின்பற்றிய துறவிகளான பெளத்த பிக்குக்களுக்குப் பல விகாரங்களும், ஆராமங்களும் அமைந்திருந்தன. நாள்தோறும் ஆயிரம் ஆயிரமாக மக்கள் பெளத்த தருமத்தை ஏற்றுக் கொண்டனர். புத்தரைப் போல, அவர் காலத்திலேயே தோன்றிய மாவீரரும், அவருடைய அடியார்களாகிய சைனத் துறவிகளும் தங்களது சமண சமயத்தைப் பரப்பி வந்தனர். வேதங்களை ஆதாரமாய்க் கொண்டு யாகங்கள் முதலியவை இயற்றுவதை இச்சமயங்கள் கண்டித்தன. இவை பழைய வைதிக இந்து தர்மத்திற்கு எதிராக விளங்கியதால், இந்து சமயத்தாரும் இவற்றைச் சமாளிப்பதற்காக எதிர்ப்பிரசாரம் செய்து வந்தனர். இவ்வாறு அக்காலத்தில் வட இந்தியா முழுதும் சமய ஆராய்ச்சிகளும், பிரசாரங்களும், வாதங்களும் நிறைந்திருந்தன.

அசோகர் காலத்திலும் சமண, பெளத்தப் பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வந்தன. ஆயினும் அப்பொழுது அவை சில சில பகுதிகளிலேயே உரம் பெற்று வந்தன. அவை பின்னால் இமயம் முதல் குமரிவரை பரவிப் பல்கிப் பெருகி வந்ததையும், அவற்றின் சிறந்த பண்புகளை இந்து சமயமே ஏற்றுக் கொண்டதையும் சரித்திரத்திலே காண்கிறோம்.

அசோகர் அரியணை ஏறிய பின் 13 ஆண்டுக்காலம் தம் தந்தையைப் போலவும், பாட்டனார் சந்திரகுப்தரைப் போலவும் முறையாக ஆண்டு வந்தார். நல்ல வேளையாக அவருக்குப் பேரரசை அமைக்கும் பொறுப்பு இல்லை; அதை முந்தியவர்களே செம்மையாகச் செய்து முடித்துவிட்டார்கள். ஆயினும், தெற்கே இருந்த தமிழகமும், கீழைக்கடற்கரையில் கோதாவரி ஆற்றுக்கும் மகாநதிக்கும் இடையிலிருந்த காடுகள் அடர்ந்த கலிங்கமும் மகத சாம்ராச்சியத்திற்கு வெளியிலிருந்தன. தெற்கே இருந்த சோழ, பாண்டியர்களுடன் அசோகர் நெருங்கிய அன்புத் தொடர்பு கொண்டிருந்தார் என்பது அவருடைய கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. ஆனால், கலிங்கம், ஒரு பக்கத்தில் கடல் இருந்த போதிலும், மற்றைப் பக்கங்களிலெல்லாம் மகதப் பேரரசை ஒட்டியிருந்தது பிந்து சாரருக்குப் பின்னர்க் கலிங்க மன்னர் பேரரசுத் தொடர்பையே முழுதும் அறுத்துக் கொண்டிருக்கவும் கூடும். எனவே அசோகர் பெரும்படையுடன் கலிங்கத்தை வெல்வதற்காகப் படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. இப்போரே அவரது கன்னிப் போராகவும் அவரது இறுதிப் போராகவும் விளங்கியது.

இப்பொழுது ஒரிஸா என்று அழைக்கப்பெறும் கலிங்கம் கடலரண், மலையரண், கானரண் ஆகியவற்றைப் பெற்றது. கலிங்க மக்களும், மன்னரும் பெரும் வீரர்களாக இருந்தனர். அவர்கள் 'வேலாலும் வில்லாலும் வேலி கோலி' நின்ற அரணே அந்நாட்டின் நான்காவது அரணாக விளங்கியது. அவர்கள் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவில் இருந்ததால் தொன்று தொட்டே அவர்கள் இருபுறத்திலிருந்தும் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தனர். சில சமயங்களில் அவர்களும் படையெடுத்துச் சென்று தாக்கியிருக்கின்றனர். சந்திரகுப்தருக்கு முன், அவருடைய பாட்டனார் மெளரியர் மகத இராச்சியத்தில் நந்தர்களிடம் படைத் தலைவராய் இருந்த சமயம், அவர் கலிங்கத்தைத் தாக்கி வென்றார். பின்னர் அமைதி நிலவியிருந்தது. அளவிடற்கரிய பெரிய படைகளுடன், அவற்றிற்கு வேலையேயில்லாமல், பாடலிபுத்திரத்தில் அசோகர் வாளா அமர்ந்திருக்க முடியவில்லை. வாய்ப்புக் கிடைத்ததும், கி. மு. 262 இல் அவர் கலிங்கத்தைத் தாக்கி வென்றார். அவருக்குப் பின் கலிங்க மன்னர் காரவேலர் கி. மு. 162 இல் மகதத்தின்மீது படையெடுத்து வென்றதாகவும் சரித்திரம் கூறும். ஆகவே இருபக்கத்தாரிடையிலும் படையெடுப்பு அக்கால வழக்கப்படி நடந்து வந்துள்ளது. சுருங்கச் சொன்னால், கலிங்கத்தின் வீரமே அதன்மீது பிறர் பன்முறை படையெடுத்து வரக் காரணமாயிருந்தது எனலாம். ஒவ்வொரு போரிலும், கலிங்கர் மிடுக்குடன் எதிர்த்து நின்று வீரப்போர் புரிந்திருக்கின்றனர். எத்தனை முறை தோல்வி கண்டாலும், சூழ்நிலை மாறியவுடன், அவர்கள் மீண்டும் நிமிர்ந்து நின்று விடுதலை பெற்று வந்தனர்.

அசோகரிடம் எப்பொழுதுமே நாற்படைகளையும் சேர்த்து ஆறு இலட்சத்திற்குக் குறையாத போர் வீரர்கள் இருந்து வந்தனர். அவர்களிலே பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, அவர் கலிங்கத்தின்மீது படையெடுத்து வந்தார். கலிங்கம் வட கலிங்கம், தென் கலிங்கம், நடுக் கலிங்கம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. தமிழ் நூல்கள் ஏழு கலிங்கம்' என்று ஏழு பிரிவுகளைக் கொண்டதாகவும் கூறும். அக்காலத்தில் கலிங்க மன்னனிடம் 60,000 காலாட்படையும், 1,000 பேர்களைக் கொண்ட குதிரைப் படையும், 700 பேர்களைக் கொண்ட களிற்றுப் படையும் நிரந்தரமாக இருந்து வந்தன. ஆனால், போர்க் காலத்தில் இவை பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். மகதப்பேரரசரே படையெடுத்து வந்து முற்றுகையிட்ட போதிலும், கலிங்க மன்னன் கலங்காது எதிர்த்து நின்றான்.

நீண்ட காலம் முற்றுகையும் போர்களும் நடந்த பின், கலிங்கத்திலே பட்டினியும் பஞ்சமும் பெருகிவிட்டன; களங்களிலே மோரியப் படையால் கலிங்கர்களில் இலட்சம் வீரர்கள் வதைக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர் என்று அசோகரின் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகின்றது. போரினால் மக்களிலே எத்தனை இலட்சம் பேர்கள் வீடிழந்து, நிலமிழந்து, உற்றார் உறவினரை இழந்து தவித்திருப்பார்கள் என்பதை நாமே சிந்தித்துக் கொள்ளலாம். மேலும் மோரியப்படையினர், நாட்டைத் தீ வைத்து எரிக்காவிட்டாலும், மறையவர், பெண்டிர், முதியோர், குழந்தைகள் என்றுகூடப் பாராமல் வதைத்துவிட்டனர்.

பண்டைக்காலப் போர்களிலே ‘சேனை தழை யாக்கி, செங்குருதி நீர் தேக்கி, ஆனை மிதித்த அருஞ்சேறு’ நிறைந்திருக்கும் என்பதை நாம் நூல்களிலே காண்கிறோம். எனினும் தமிழ் மன்னர் படையெடுத்துச் செல்லுகையில், பசுக்கள், அந்தணர், பெண்கள், பிணியாளர் முதலியோரைப் போர் நிகழும் இடத்திலிருந்து வெளியேறிவிடும்படி எச்சரிக்கை செய்த பிறகே போரிடுவர். போர்க் களத்திலும் படை வீரர் அல்லாதார்மீதும், பயந்து ஓடுவார்மீதும், காயமடைந்தார் மீதும், முதியோர் இளைஞர்மீதும், ஆயுதங்களை அவர்கள் செலுத்துவதில்லை. ஆயினும், வெற்றிகொண்ட நகரங்களைத் தீக்கிரையாக்குதல் அவர்தம் வழக்கமாயிருந்தது. அழித்த ஊர்களில் கழுதை பூட்டிய ஏர்களால் உழுது, எள்ளும் கொள்ளும் விதைத்தலும் உண்டு. பகைவரின் நாட்டைச் சுட்டெரிக்கும் நெருப்புப் புகையினால் மன்னன் அணிந்த மலர் மாலை வாடவேண்டும் என்று கவிஞர் வாழ்த்துவது உண்டு.

அசோகரின் கலிங்கப் போர், ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்குப் பின் முதற் குலோத்துங்க சோழர் வட கலிங்கத்தின்மீது படையெடுத்ததை நினைவூட்டும். முந்திய போரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், பிந்தியதைப் பற்றிக் ‘கலிங்கத்துப் பரணி’ என்ற தெவிட்டாத செந்தமிழ் நூலே இருக்கின்றது. கி. பி. 1096 இல் குலோத்துங்கர் கலிங்கத்தின்மீது முதன் முதலில் படையெடுத்து வென்றார். பதினாறு ஆண்டுகட்குப் பின் அவருடைய படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் பெரும்படையுடன் சென்று, கலிங்கத்தை வென்று, கலிங்க மன்னன் அனந்த வன்மனைச் சிறை செய்துகொண்டு, காஞ்சி மாநகருக்குத் திரும்பினான். இந்தப் போரைப் பற்றி உரைப்பவர்க்கு ‘நாவாயிரமும், கேட்பவர்க்கு நாளாயிரமும் வேண்டும்’ என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.

மலைகளெல்லாம் யானைகளாகத் திரண்டு வந்ததுபோல் மதயானைகள் இடிபோலப் பிளிறுகின்றன. முகில்கள் அனைத்தும் தேர்களாக வந்து குழுமியது போல் இருக்கின்றன. வீரர்கள், போர் வெறி கொண்டு ‘உடல் நமக்கு ஒரு சுமை’ என்றும், ‘உயிரை விற்றுப் புகழ்கொள்ள வேண்டும்’ என்றும் போராடுகிறார்கள். தரையிலும் வானத்திலும் ஒரே தூளிப் படலமாயிருக்கின்றது. வளைந்த விற்கள் இடிபோல் முழங்குகின்றன; அவற்றிலிருந்து நெடுமழை போல் கூரிய அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

‘இடிகின்றன மதில்
எரிகின்றன பதி
எழுகின்றன புகை
வளைகின்றன படை’

போர் முடிவிலே களங்களிலே காணக் கூடிய காட்சிதான் என்ன! இரத்த ஆற்றில் உடைந்த தேர்களின் வெண் குடைகள் நுரையைப் போல மிதந்து கொண்டிருந்தன. இறந்து வீழ்ந்த யானைகள் அந்த ஆறுகளுக்குக் கரைகளாகக் கிடந்தன. உறுப்பிழந்த போர் வீரர்கள் ஆயிரம் ஆயிரமாகச் சிதறிக் கிடந்தார்கள்.

இப்படிப்பட்ட காட்சியையே அசோகரும் கண்டார். சாலைகளிலும் தனிப் பாதைகளிலும், உணவு, உடை, உறையுள் எல்லாம் இழந்து, கண்ணீரும் கம்பலையுமாக, இலட்சக் கணக்கான அகதிகள் திரிவதைப் பார்த்தார். இரும்பு போன்ற உறுதியுள்ள அவர் உள்ளம் மெழுகுபோல உருகத் தொடங்கிவிட்டது. வீடு, வாசல், குடும்பம், குழந்தை, உறவினர்களுடன் அமைதியாக வாழ்ந்து
அசோகரின் மனமாற்றம்
கொண்டிருந்த கலிங்க மக்களுக்கு அத்துணை அவதிகள் ஏற்படக் காரணம் என்ன? போர்தான் காரணம். அதனை உணர்ந்து கொண்டதும், அசோகர் மேற்கொண்டு போர் செய்வதே இல்லை என்று உறுதி செய்துகொண்டார். பக்கத்து நாடுகளை வென்றுவென்று தமது பேரரசை வலிமைப்படுத்தவேண்டும் என்று கருதி வந்த பேரரசராகிய அசோக மோரியர் மறைந்து, அருள் மிகுந்த அசோகர் என்ற மனிதர் தோன்றிவிட்டார். கலிங்கத்திலே புரிந்த கன்னிப் போரே தமது கடைசிப் போர் என்று அவர் மக்களுக்கும் வீரர்களுக்கும் அறிவித்தார். முதன்முதலில் உலகிலே ஆயுத ஒழிப்புப் பற்றி முடிவு செய்து, அதை நிறைவேற்றிய மன்னர் அவரே. வையகத்தை இரத்த ஆறுகளும், நிணங்களும், பிணங்களும் நிறைந்த மயானமாகச் செய்வதை விடுத்து, அதை அன்பும் அருளும் நிறைந்த பசுஞ் சோலையாகச் செய்யவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அருளுடைய மன்னர்கள் எத்தனையோ பேர்களை உலகம் கண்டிருக்கிறது; ஆனால், இலட்சக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கி அரிதில் வெற்றி பெற்ற களத்திலேயே போரையும் வெற்றியையும் ஒருங்கே துறந்த பெரியவர் அசோகர் ஒருவரே. தாம் பெற்ற வெற்றி தரும வெற்றி அன்று; அசுர வெற்றி என்று கண்டதும், கொதிக்கின்ற சட்டியைத் தொட்டதும் கைகள் விட்டுவிடுவதுபோல, அவர் அதைத் துறந்து விட்டார்.

கலிங்கப் போரில் தமக்கு ஏற்பட்ட ஆறாத்துயரையும், மன வேதனையையும் அசோகர் பாறைருக்கிறார். ' அந்தச் சாசனம் சோகம் நிறைந்த அவரது உணர்ச்சித் துடிப்புடன் விளங்குகின்றது. அது கால வெள்ளத்தைக் கடந்து ஒரு மனிதரது ஆன்மாவின் ஓலத்தை இன்னும் தாங்கி நிற்கின்றது' என்று ஆசிரியர் ஸ்மித் போற்றியுள்ளார்.

கலிங்க நாட்டில் தோசலி, சமாபா என்ற இரண்டு இடங்களில் அசோகர் இரண்டு பாறைக் கல்வெட்டுக்களுக்கு ஏற்பாடு செய்தார். அவற்றிலே தம் நிருவாக அதிகாரிகளாகிய மகாமாத்திரர்களும், நகரச் செய்திகளைக் கவனிக்கும் நீதிபதிகளும் கவனிக்க வேண்டிய இன்றியமையாத செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் பல்லாயிரம் உயிர்கள் ஒப்படைக்கப் பெற்றிருந்ததை நினைவுறுத்தி அவர்கள் நல்ல மனிதர்களுடைய அன்பைப் பெறவேண்டும் என்றும், மக்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும் என்றும் அசோகர் கூறியிருந்தார். அதிகாரிகள் பொறாமை, முயற்சியின்மை, கடுமை, பரபரப்பு, பழக்கமின்மை, சோம்பல், தளர்ச்சியின்றி நேர்மையான வழியில் உறுதியுடன், இடைவிடாமல், ஊக்கத்துடன் சென்று கொண்டிருக்க வேண்டியதன் தேவையை அவர் நன்கு வற்புறுத்தியிருந்தார். எல்லைப்புறங்களிலுள்ள மக்களுக்கு அவர் அறிவிக்க விரும்பிய செய்தி, 'அவர்கள் என்னிடம் பயம் கொள்ள வேண்டியதில்லை. என்னிடமிருந்து துன்பத்திற்குப் பதிலாக அவர்கள் இன்பத்தையே பெறுவார்கள் என்று நம்பும்படி செய்யவேண்டும்,' என்பதே ஆகும்.