பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Xii

பரந்து கிடக்கக் காணலாம். ஆகவே நவீனம் என்பது தொன்மையின் தொடர்ச்சியே என வாதிடும் ஆசிரியரின் நிலைப்பாடு அவரது சிறப்பு அம்சங்களில் தலையாய ஒன்று.

இரண்டாவது, இதிலிருந்து வெளிப்படும் அவரது ஆய்வுமுறை அல்லது விமரிசனக் கண்ணோட்டம். கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரிப்பதே மெய் என்றனர் நமது முன்னோர். இக்கருத்தையே கார்ல் மார்க்ஸ், தோன்றுவனவற்றிற்கும் உண்மைக்கும் வேறுபாடு இல்லையெனில் அறிவியலுக்கு அவசியம் இல்லையென்று சுட்டினார். சமூக அறிவியியல் மரபுக்குள் இந்த நுண் உண்மை இருபெரும் ஆய்வு மரபுகளாக வடிவமைந்துள்ளன. ஒன்று, சமூக நிகழ்வுகளை அவற்றின் தோற்ற அடிப்படையில் தோன்றுவனவாறே ஏற்றுக் கொண்டு அவற்றின் கூறுபாடுகளின் தொடர்புகளில் காரண காரியங்களைக் காண முயல்வது. இரண்டு நிகழ்வுகளின் முன்னணி, பின்னணிகளின் உதவி கொண்டும் முன் பின் விளைவுகளை, வரலாற்றியலின் தொடர்ச்சியின் மூலமாகவும் அவற்றின், சமூக வர்க்க முரண்பாடுகளையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்த முயல்வது. உட்கருத்தையும், உள்ளுண்மைகளையும் உணர முயல்வது. இவ்விரண்டு மரபு வழிகளில் முதலாவது, அறிவியல் (புற ஆய்வு) மரபினின்று கொள்ளப்பட்ட மறுபதிப்பு. இரண்டாவதே, சமூக அறிவியலுக்கென்று உருவாக்கப்பட்டது என்ற போதிலும் முதலாவதே சமூக அறிவியலுக்குள்ளும் மேலோங்கி நிற்கிறது. பெரும்பாலும் சமூக இயங்கியலை இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்துவது இரண்டாவது சிறுபான்மை ஆய்வாளரால் கையாளப்படுவது. சமூக இயங்கியலை விமரிசனத்திற்குட்படுத்தி மாற்ற முயலும். அயோத்திதாசரின் ஆய்வு முறை இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தது.

இன்றைய சமூகம், பண்பாடு, கட்டுப்பாடுகள் இவற்றை அயோத்திதாசர் ஒரு திரிபாக காண்கிறார். இருக்க வேண்டிய நிலையிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு, திரிபடைந்த நிலையில் இருப்பதைக் கணிக்கிறார். இவற்றின் உண்மையைக் கண்டுணர, ‘கண்டுபிடிக்க’ வரலாற்றின் உதவியினாலும் பண்பாட்டு முழுமையின் இயங்கியியலினாலும் இவற்றின் பின் சென்றே விளக்க முயல வேண்டும். மறுவிளக்கம் செய்ய வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, இன்றைய சமயங்கள், வழிபாடுகள், கடவுளர், சமூக மரபுகள் அவற்றுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையை வெளிப்படுத்துவதில்லை. இவற்றின் உட்கருத்து, உண்மெய்நிலை, உள்ளுண்மையை, ஆய்ந்தே, அதாவது தீர விசாரித்தே உணர வேண்டும். ஏனெனில் அவற்றுள் முடங்கிக் கிடப்பது சமூக, வரலாற்று, பண்பாட்டு முரண்பாடுகளும், எதிர்மறையான சமூக அதிகாரங்களின் போராட்ட நிலைகளுமே. இப்படிப்பட்ட விளக்க முறையைக் கைக்கொள்வதினாலேயே அயோத்திதாசரால் மூன்றாம் மாற்றுகளை முன் வைக்க முடிகிறது. சமூக உறவுகளையும் உடன்பாடுகளையும் விமரிசனத்திற்குட்படுத்தி தோற்றங்களைக் கட்டவிழ்க்க முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பெருவாரியான ஒடுக்கப்பட்ட சனங்களின் சமூக, பண்பாட்டு விடுதலைக்கான அறிவியல் அடித்தளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட முடிகிறது. இதனைவிடுத்து மேற்கத்தியரால் வரையறுக்கப்பட்ட அறிவியல் - சமூகக் கோட்பாடுகளை புற ஆய்வுக்