பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

‘சுயராஜ்யம்’ — ஓர் இலட்சியத்துக்கு வாய்ப்பு என்றே அவர் கருதினார்; ‘ஒரு நாட்டுக் காதையிலே பொன் ஏடு அது ; ஆனால்-கடைசி ஏடு அல்ல !" என்பதை வலியுறுத்தினார்,

நாடும் மக்களும் எந்த நிலை பெறவேண்டுமோ அதற்கு அடிமைத்தனம் தடையாக இருக்கிறது. ஆகவே அதை எந்த விலை கொடுத்தேனும் அகற்றியாக வேண்டும் என்றே அவர் கூறினார்.

அடிமைத் தளையை
அண்ணல் ஒழித்தார்

அடிமைத்தளை அகற்றப்பட்டது, ஆனால் அவர் எந்த நிலையிலே நாடும் மக்களும் இருந்திட வேண்டும் என்று கருதினாரோ, அந்த நிலையை ஏற்படுத்திவிட்டோமா? இல்லை என்பதைச் சொல்லக் கூச்சப்படத் தேவை இல்லை. ஏற்படுத்தியாகவேண்டும் என்ற உறுதியைப் பெற்றிட இந்நாள் உணர்ச்சி அளித்திட வேண்டும்.

அச்சம் அகற்றினார் - ஆங்கில அரசிடம் கொண்டிருந்த அச்சத்தை ! ஆனால், அச்சம் பிற துறைகளிலே இருந்து அகன்றதா? இல்லையே! சமுதாயத்தில் மேலோர்-கீழோர், செல்வர்-வறியர், எளியோர்-வலியோர் என இருக்குமட்டும், அச்சம் எங்ஙனம் அகலும்?

பசி அச்சுறுத்துகிறது! பற்றாக் குறை பயமூட்டுகிறது! குரோத உணர்ச்சி விரட்டுகிறது ! அச்சம் அகலவில்லை. அச்சம் அகலவேண்டும்; அறநெறி தழைக்க வேண்டும் ; அண்ணலின் பிறந்த நாள் விழா நடாத்திடும் போது, இதற்கான உறுதி பெற்றிட வேண்டும்.

ஒரு புறம் செல்வர்; அதனைச் சூழ வறுமை!

ஒரு புறம் பளபளப்பான பட்டினங்கள், கோடியிலே வறுமை நெளியும் சேரிப்புறங்கள்.