பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விமர்சிப்பது எதைக் காட்டுகிறது ? கல்கி ரயிலில் கண்ட மனிதர்கள் 30 வருடங்களுக்குப் பிறகும் வயதான நிலையில் உலவிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

நெகிழ்ச்சி தருவது கலை-அதை
நெறிப்படுத்துவது அரசியல்

கலை என்பது மக்களின் மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாகும். எந்த நாட்டிலுமில்லாத முறையில் தமிழகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி மாந்தர் நெஞ்சில் குறைவானது. அதிக முயற்சி இல்லாமல் தமிழக நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும். அதற்குக் காரணம் நெகிழ்ச்சி என்ற சொல்லில் சிறப்பு'ழ'கரம் இருக்கிறது.

தமிழிலிருந்து பல நாட்டவர்கள் எதை எதையோ எடுத்துக் கொண்டனர். பரத நாட்டியத்தைக் கூடக் கற்றுக் கொண்டனர். ஆனால் அந்த ‘ழ’வை மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சிறப்பு 'ழ'கரம் இருக்கிற காரணத்தால் தமிழகத்துக் கலை மிக விரைவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

மனம் நெகிழச் செய்வது கலை !

நெகிழ்ந்த மனம் நெகிழ்ந்து கொண்டே போனாலும் பயனில்லை. நெகிழாமல் இருந்தாலும் தவறு. ஆகவே மனம் நெகிழ வேண்டும் கலையால்! அப்படி நெகிழ்ந்ததை வழிப்படுத்துவது—பயன் பெறச் செய்வது—அரசியல்.

உள்ளத்தை நெகிழச் செய்யும் திறன் படைத்த கலைஞர்களிடமே—நெகிழ்ந்த உள்ளத்தை வழிப்படுத்தும் அரசியலும் இருந்தால் தவறு இல்லை. தவறு இல்லை என்பது மட்டு மல்ல —பொருத்தமிருக்கிறது; பொருளுமிருக்கிறது இந்தக் கருத்துக்களை உலகம் உணர்ந்து நடக்கும் காலம் கனிந்து வருகிறது,