பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

75

கையை ஏற்றுக் கொள்ள இயலாவிட்டால் தமது முயற்சிக்கு ஆதரவாக இராணுவ உதவியாவது வழங்குமாறும், அவர் கேட்டிருந்தார்.[1] அத்துடன் சிவகங்கைச் சீமைக்காரர்கள் அதீதமான முறையில் சிவகங்கை அரசி வேல்நாச்சியாரையும் இளவரசி வெள்ளச்சியையும், சிவகங்கை அரண்மனைக்குள் சிறை வைத்திருப்பதாகவும், அந்த அரச வழியினரான படமாத்துார் கவுரி வல்லபத் தேவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் கொன்றுவிடச் செய்த முயற்சியினின்று தப்பிய அவர் இராமநாதபுரம் கோட்டையின் அடைக்கலம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், சிவகங்கை அரசியாரை சிறை மீட்பதற்கும், அந்தச் சீமை அரசை கவுரி வல்லபத் தேவருக்கு வழங்கி நல்லாட்சி நடைபெற உதவுமாறும் யோசனைகள் தெரிவித்திருந்தார். கும்பெனியார் அவரது பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.[2] என்றாலும் பொறுமையைக் கையாளுமாறு கும்பெனியாரும் நவாப்புமாக சேதுபதி மன்னருக்கு வழங்கிய அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை.[3]


பொறுமை என்பது நல்ல பண்புதான், ஆனால் அதனை எப்பொழுது கடைப்பிடிப்பது? தன்மான உணர்வுகளை முறுக்கிவிட்டு, தலைக்குனிவை ஏற்படுத்தி, பொதுமக்களது கண்ணிரையும், செந்நீரையும் சிந்தச் செய்து அவலம் மிகுந்த ஆற்றொணாத நிலையை எய்திய பிறகு எங்ங்ணம் பொறுமையாக இருப்பது? கைகட்டி வாய் புதைத்து வீணாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்புள்ள மன்னருக்கு பொருத்தமான செயல் அல்லவே. வன்முறைகளை ஒழிக்க சரியான வழி வன்முறைதான். மறக்குடிப் பிறந்த வீர மறவனது பிறவிப் பண்பும் அதுதானே. இவ்வாறுதான் சேதுபதி மன்னரது சிந்தனை சிறகடித்தது.


  1. Military Country Correspondence, Vol.45. 5-6-1794, pp. 159-60.
    |bid. 14-6-94, pp. 1-116.
  2. Military Consultations, 185, 10–5–1794, pp. 1762-68
  3. Military Country Correspondence Vol. 45, pp. 232-233