பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

எஸ். எம். கமால்

மறைந்திருந்த மயிலப்பனும், நெல்லைச் சீமையைச் சேர்ந்த காடல்குடி, குளத்தூர் பாளையக்காரர்களுடன், மதுரைச் சீமையின் விருப்பாச்சி, திண்டுக்கல், கோம்பை, பழனி பாளையக் காரர்களும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கு ஆதரவாக நின்றனர். மறவர் சீமையில் மக்கள் கிளர்ச்சி வலுவுடன் நிறை வேற, பல பகுதிகளில் கும்பெனிப் படைகளுடன் பயங்கரமாக மோதினர்.

1801-ம் வருடம் அக்டோபர் திங்கள்.

கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் பரங்கியர் எதிர்ப்பு போர் முடிவு நிலைக்கு வந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அந்நிய எதிர்ப்பு உணர்வு பொங்கிய வீர மறவர்களது எழுச்சி, போராட்டம், இரத்த வெள்ளம், பிணக்காடு, தெற்கே பள்ளிமடத்திலிருந்து வடக்கே பிரான்மலை வரையான பகுதி அனைத்தும் பரவலாக போர்கள் பல தொடர்ந்தன. என்றாலும், இறுதி வெற்றி பரங்கியர் பக்கமே இருந்தது. மானம், வீரம் என்ற சொற்களுக்கும் உள்ள பொருளும் பயனும் துரோகம், கைக்கூலி என்ற சொற்களுக்கும் அமைந்திருந்தன. பரங்கியரை எதிர்த்துப் போரிட்ட வீரர்களிடையே சாதிப் பிரிவினையை புகுத்தி கும்பெனியார் அவர்களது ஐக்கியத்தைப் பலவீனப்படுத்தினர். முந்திய சிவகங்கை அரசப் பரம்பரையைச் சேர்ந்த படமாத்துார் ஒய்யத் தேவருக்கு சோழபுரம் ஆலயத்தில் ஜமீன்தார் பட்டம் சூட்டப்பட்டு சிவகங்கையின் அதிகார பூர்வமான ஆட்சியாளராக பிரசித்தம் செய்யப்பட்டார்.[1] அதுவரை தோளொடு தோள் சேர்த்து கும்பெனியாருக்கு எதிராக போரிட்ட வீரர்கள் இப்பொழுது சிவகங்கை ஜமீன்தார் பக்கமும், மருது சேர்வைக்காரர்கள் பக்கமும் பிரிந்து நின்றனர். தேவர், சேர்வைக்காரர் என்ற ஜாதி அடிப்படையிலான இரண்டு அணிகள் உருவாகியதால் பரங்கியர் எதிர்ப்பு அணி நிலைகுலைந்தது.

மருது பாண்டியரும் அவர்தம் குடும்பத்தினர், தோழர்கள். உறவினர், குடிமக்கள் அனைவரும் போரில் களபலியாயினர்,


  1. Military consultations, Vol. 285 A. 6-7–1801, p. 4875 Revenue consultations, Vol. 110, 24-7-1801, p. 1361-69.