உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/முன்னரை

விக்கிமூலம் இலிருந்து

உதிரிப் பூக்கள்
முன்னுரை

சரமாகத் தொடுக்கும் பூக்களைவிட ஆரமாக அணியும் பூக்களை விட, மாலையாக அணியும் மலர்களைவிடப் புதுமை நலங்குன்றாமல் உதிர்ந்த உதிரிப் பூக்களை அப்படியே திரட்டி நுகர்வது சுவையான அனுபவத்தைத் தரக் கூடியது. உதிரிப் பூக்களின் பலம் அவை உதிரியாக இருப்பதுதான். உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒரு வகையில் அவற்றின் சிறப்பு.

தமிழ் இலக்கிய வரலாற்றில் புறநானூறு போன்ற தொகை நூல்களில் உள்ள பாடல்களே உதிரிப் பூக்கள்தான். அவற்றைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்தான் பின்னாட்களில் ஒரு தொகுதியாக்கினார்கள். ‘புறம்’ என்னும் ஒரு பொருள் தொடர்பில் அவை தொகுக்கப்பட்டதுபோல் பொருள் தொடர்பு இல்லாத பல உதிரிப் பாடல்கள் பிற்காலத்துத் தனிப்பாடல் திரட்டிலும் பெருந்தொகையிலும் உள்ளன. இந்நூல்களில் பல பாடல்கள் அதுபவத்தின் விளைவுகள்.

பாடியவர்களின் அனுபவங்கள், பாடியவர்களோடு பழகியவர்களின் அனுபவங்கள், உலக அனுபவங்கள், கண்டவை, கேட்டவை; இரசித்தவை எல்லாம் இந்நூல்களில் கவிதைகளாகி இருக்கின்றன. இவற்றில் ஒரு சில சிலேடைப் பாடல்கள்தான் திரும்பத் திரும்பப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களாக வருகின்றன. ஆசிரியர்கள் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்புக்களோடு மாணவர்களுக்கு அவற்றை நடத்தி விடுகிறார்கள்.

ஆனால் அந்தக் கவிதைக் களஞ்சியத்தின் செல்வங்களில் அதன் பெருமையை அடையாளம் காட்டுவனவற்றை முழுமையாக மாணவர்கள் இரசிக்க முடிவதில்லை. அப்படி அடையாளம் காட்டும் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுக் கதைகளைப் போன்று சொல்லும் முறையோடு இங்கு விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில, வரலாறாக இருக்கலாம். சில, வழி வழியாக வரும் கர்ண பரம்பரைச் சொலவடையாக மட்டும் இருக்கலாம். சில, புலவர்களின் வாழ்க்கை அநுபவங்களாகவும் இருக்கலாம்.

எப்படி இருப்பினும் இந்த அனுபவங்கள் தமிழ் இலக்கியத்துக்குச் சொந்தம். இவை தமிழ் இலக்கியத்தின் அனுபவங்கள் அல்லது இலக்கியப் படைப்பாளிகளின் அனுபவங்கள். இந்த அனுபவங்களின் சொந்தக்காரர்கள் தமிழர்கள்; இரசித்து மகிழும் முதல் உரிமையைப் பெற்றவர்களும் தமிழர்கள்.

என்ன காரணத்தாலோ சங்க இலக்கியப் பாடல்களும் புராணங்களும் காப்பியங்களும் பிரபலமாக இருக்கிற அளவு தனிப்பாடல்கள் பிரபலமாகவில்லை. மற்றவற்றைக் காட்டிலும் பாமர மக்களைச் சென்றடையும் எளிமையும் இனிமையும் இவற்றுக்கே உண்டு.

நகைச் சுவைக்குத் தமிழ் இலக்கியத்தின் எந்தப் பகுதியிலாவது அதிக இடம் உண்டு என்றால் அது தனிப்பாடற் பகுதிதான்.

தனிப்பாடல்களின் இனிப்பைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினாலே ஒரு சுவைக் களஞ்சியத்தின் பிரதான வாயிலைத் திறந்துவிட்ட மாதிரி ஆகும்.

இந்த நூல் அப்படி ஒரு முயற்சியே. ‘இனிப்பான தனிப்பாடல்’ என்ற பெயரிலும்; ‘கதம்பக் கவிமலர்கள்’ என்ற பெயரிலும் சுதேசமித்திரன் ஞாயிறு மலரிலும், கல்கி வார இதழிலும் முன்பு நான் எழுதியவையும், பிறவும் அப்போது தொகுக்கப்பெற்று இந்நூலாக இங்கு உருப் பெறுகின்றன.

இனி இக்கதைகள் தமிழிலக்கிய இரசனைக்கு உரியவை. தமிழ்ப் புத்தகாலயத்தார். இதனை இப்போது நூலுருவில் கொண்டுவருகிறார்கள்.

இதற்கு மேல் இந்த நூலுக்கும் வாசகர்களுக்கும் நடுவே நின்று தடுக்க ஒரு முன்னுரைக்கு இங்கே உரிமை இல்லை என்று எண்ணுகிறேன்.

நன்றி, வணக்கம்

நா. பார்த்தசாரதி

தீபம்
சென்னை,
12-10-1977