104 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
சகோதரர்களின் உற்சாகமான ஆதரவும், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பெரும் பகுதி உதவியும், வல்லமை மிகுந்த நம் நேசநாடுகளின் பக்கபலமும், இங்குள்ள இந்தியப் பொது மக்களின் பேராதரவும் நிச்சயமாகத் துணைசெய்யுமென்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இம்மகத்தான கடமையை நிறைவேற்றும் போரில், இந்திய தேசீய ராணுவம், சிறப்பாக தனது சொந்த பலத்தையே களங்கமற நம்பியிருக்கிறது.
அடிமை இருள் நீங்கிச் சுதந்திர ஒளி தோன்றப் போவதால், ஓர் தற்காலிக சர்க்காரை அமைத்து அதன் கொடியின் கீழ் இறுதிப் போரைத் தொடங்குவது ஒவ்வொரு இந்தியனின் தவிர்க்க முடியாத கடமையாகும். ஆனால் இந்தியாவிலுள்ள தலைவர்கள் அனைவரும் சிறையிலிருப்பதாலும், அங்குள்ள மக்கள் நிராயுதபாணிகளாக இருப்பதாலும், அங்கு தற்காலிக சர்க்காரை அமைப்பதோ அதன் கீழ் ஆயுதம் தாங்கிப் போர் செய்வதோ சாத்தியமில்லை. எனவே, அந்தக் கடமை கிழக்காசியாவிலுள்ள சுதந்திர இந்தியக் கழகத்தைச் சார்ந்துவிட்டது. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமுள்ள தேசபக்தர்கள் எல்லோரும் இதற்கு உதவக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
இப்பொழுது சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரை நாங்கள் அமைத்து விட்டோம். எங்கள் பொறுப்பை உணர்ந்து செய்கையில் இறங்குகின்றோம். எங்கள் முயற்சியனைத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் முழு வெற்றியை அருளுமாறு மனமொழி மெய்களால் இறைஞ்சுகின்றோம். அன்னையின் விடுதலைக்காக எங்கள் ஆருயிரையும் ஆயுதம் தாங்கிய சகாக்களின் உயிரையும் அர்ப்பணம் செய்யத் தயங்கோமென, திரிகரண சுத்தியுடன் சத்தியம் செய்கின்றோம். எங்கள் நாடு உலக நாடுகளினிடையே சரிநிகர் சமமாகத் தலைசிறந்து விளங்கவும், எங்கள் நாட்டின்மீது தாயின் மணிக்கொடி தன்னிகரற்றுப் பறக்கவும், எங்கள் உயிர் போம்வரை போர் செய்வோமெனச் சபதம் மேற்கொள்ளுகின்றோம்.
இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷாரையும் அவர்களது கூட்டாளிகளையும் வெளியேற்றும் போரைத் தொடங்கி நடத்துவது இந்தத் தற்காலிக சர்க்காரின் பொறுப்பு. பிறகு,