பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

65

சேர்ந்த சில ஊர்களில் இருந்ததாகத் தெரிகிறது.[1] இவர்கள் கைக்கோளர், சேடர், பட்டுநூல்காரர், சோனகர் என்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள். இந்த வகை நெசவாளி, மாதம் ஒன்றுக்கு தனது மனைவி குழந்தைகள் உதவியுடன் இரண்டு பீஸ் துணிகளை நெசவு செய்து தர முடியும் என்றும், இவைகளின் மதிப்பு ருபாய் 4 என்றும் தெரியவருகிறது.

என்றாலும், கும்பெனியாரது ஒப்பந்தத் தறிகள் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இருந்தன. பொதுவாக, நெசவாளிகள் அப்பொழுது கும்பெனியாரிடம் பணி செய்வதற்கு விருப்பம் இல்லாதவர்களாக இருந்தனர். காரணம் அவர்கள் கும்பெனியாரது தொழில் மையங்களில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலிக்கு கூடுதலான துணியை நெய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அவர்கள் பெற்ற கூலியில் ஒரு பீஸ் துணிக்கு நாலனா வீதம் தலைமை நெசவாளியினால் பிடித்தம் செய்து கொள்ளும் வழக்கமும் இருந்தது.[2] இதனைப் போன்றே நெசவாளிக்கு வழங்கப்படும் முன் பணத்திலும் ஒரு பகுதியை கும்பெனியாரது குமாஸ்தா இருத்தி வைத்துக் கொள்வார். அத்துடன் உற்பத்தி செய்த துணியின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு அதற்கு குறைவான கூலி கொடுக்கும் முறையும் இருந்து வந்தது.[3] இவைகளுக்கெல்லாம் மேலாக, அப்பொழுதைக்கப் பொழுது அதிகாரிகளது இடையீடும் தொந்தரவும் இருந்து வந்தன.[4]

நெசவாளர்களது வாழ்க்கை நிலை இவ்வளவு சிரமங்கள் நிறைந்ததாக இருந்தும், அன்றைய காலக் கட்டத்தில் அவர்களது தொழில் லாபம் தருகின்ற பெருந்தொழிலாக மதிக்கப்பட்டது. அதன் காரணமாக மறவர் சீமையின் மேலாதிக்கத்தை நவாப்பிடமிருந்து கும்பெனியார் பெற்றவுடன் மறவர் சீமையில்


  1. Dodwell, Indian Historical Records Commission Proceedings Meetings, Vol. IV. (1922), p. 42
  2. Dodwell, H., Madras weavers under the Company, p. 45
  3. Ibid
  4. Ibid