பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பக்தியால் பரவசப்பட்டுப் பாடிய சைவ அடியார்களைப்போல, வைணவ ஆழ்வார்களைப் போல, புலவர் என்.வி. கலைமணி அவர்கள், தமிழ்த் தாயின் அமிழ்த மகன், அறிஞர் அண்ணா அவர்களைத் தமிழால் நினைவஞ்சலி செய்திருக்கின்றார்.

ஏதாவதொரு புதிய திருப்பத்தைத் தமிழ் பெற்றிருக்கின்றதா இந்த நூலில் என்பதை, எதிர்காலம்தான் பதில் கூற வேண்டும்.

செஞ்சொற் கவிநயம் கலந்த இந்த நூலின் உரைநடை, அதன் நடைச் சித்திரம், படிப்போர் உள்ளத்தையும் கேட்போர் நெஞ்சத்தையும் எளிதில் ஈர்க்கவல்லக் காந்தக் கல்லாகத் திகழ்கின்றதெனலாம்.

பேரறிஞர் அண்ணா அவர்களை, இயற்கைச் சக்திகளோடு ஒப்பிட்டு, அதனதன் பணிகளை அவருக்குள் ஆழ்த்தி, அடக்கி, இந்நூல் பேசுவதால், இதனைப் படிக்கின்ற தமிழன்பர்கள், புத்தம் பதிய ஓர் இலக்கியக் கொத்தின் புகழ் மணத்தை நுகர்பவர்களாகக் காட்சியளிப்பார்கள் என்பது திண்ணம்.

அறிவுலக அணியில் ஒரு சகல கலா வல்லமை படைத்தத் தலைவரைப் பற்றிய தத்துவ வித்தக விளக்கங்களோடு "நினைவஞ்சலி" அமைந்துள்ளது.

அதனால்தான், இந்த நூலுக்கு அணிந்துரை அளித்த 'தினமணி கதிர்' ஆசிரியராகப் பணியாற்றி, மறைந்த திரு.விந்தன் அவர்கள், மனம் திறந்து விருப்பு வெறுப்பின்றிப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

'அறிஞர் அண்ணா நினைவஞ்சலி' என்ற இந்த நூல் வள்ளலார் நூலகம் சார்பாக, வெளிவருகிறது.

இந்த நூலைத் தமிழுலகம் வரவேற்கும் என்று நம்புகிறோம்.


அன்புடன்
வா.அறிஞர் அண்ணா