பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பல்லவர் வரலாறு



தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும் பழமொழியும் அப்பொழுது பாடப் பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தி உரையால், தமிழ் முத்தரையர் கோவை ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இம் முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற (செ. 200, 243, 296) நூல்களால் நன்குணரலாம்.[1]

கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான திருமங்கை யாழ்வார் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று திவ்யசூரி சரிதம் செப்புகிறது. கள்ளர் சரப மரபினர் என்று வடமொழியில் கூறப்படுவர்.[2] இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீந்தார்களாக இருக்கின்றனர். தெலுங்க நாட்டில் முத்துராசாக்கள் என்னும் சமீந்தார் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலுரில் முத்தரையர் ‘அம்பலகாரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர்.[3]

பல்லவராலும் பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலிகுன்றிச் சிற்றராசராக இருந்தனர். தஞ்சையையாண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்: கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் பாண்டியார்க்கு அடங்கியவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சோழப் பேரரசை நிலைநாட்டிய விசயாலய சோழன் தஞ்சையைக் களப்பிர அரசனிடமிருந்தே மீட்டான்.[4]


  1. Ibid.
  2. M.R.Aiyangar’s Alwargal Kalanilai,’ pp. 118-119
  3. “Studies in S.I.Jainism'pp.56,57 - 75
  4. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’ p.84-85
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/62&oldid=684801" இலிருந்து மீள்விக்கப்பட்டது