பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

பல்லவர் வரலாறு



பொறுப்பற்ற வாலிபனாக இருந்திருக்கலாம். மிகப்பெரிய பேரரசிற்கு அவன் தகுதியற்றவன் என்று அரசியல் தலைவர்கள் கருதினர் போலும் மேற்சொன்ன இரு பேரரசரான சாளுக்கியரையும். பாண்டியரையும் எதிர்த்து நிற்கும் மன ஆற்றல் பெற்ற அரசனே தமக்கு வேண்டும் என்று எண்ணிய அத்தலைவர்கள், அரசியல் அறிவும் ஆண்மையும் படைத்த இரண்யவர்மனை அரசனாகுமாறு தூண்டினர். அவன் மறுத்துத் தன் வீரமகனை அரசு கட்டிலில் அமர்த்தினான் போலும்!

பன்னிரண்டு வயதுடைய இளைஞனான பல்லவ மல்லன் நான் அரசனாவேன் என்று தந்தையிடம் கூறினது நோக்கற்பாலது. தனக்கு முன்னோர் மூவரும் மறுத்ததை அருள் நோக்கங் கொண்ட அவன் தன் இளமையும் கருதாமல் ஏற்றது. அவனது பெருந்தன்மையையும் அரசியல் பொறுப்புணர்ச்சியையும் உணர்த்துகிறது. அவன் பிறர்க்கு உரிய பட்டத்தை வலிதிற் கவரவில்லை; தானாக வந்ததைச் சிறுவயதில் ஏற்றுங்கொண்டான். அவன் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாலும் கடமை உணர்ந்த குடிமக்களாலும் பல்கலை விற்பன்னரான கடிகையாராலும் பேரரசைப் பண்பட நடத்திய அமைச்சராலுமே தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இப்புதிய பல்லவ மரபரசர் இவராவர்:

இரண்டாம் நந்திவர்மன்[1]

(கி.பி. 710-775)
|
தந்திவர்மன்
(கி.பி.775-825)
|
மூன்றாம் நந்திவர்மன்
(கி.பி.825-850)
|
பிற்பட்ட பல்லவர்

(கி.பி. 850-893)

  1. இவன் கி.பி. 726இல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் கூறுவர். Vide. Dr. N.R. Ramanayya’s article on “The Date of Pallava Malla’.