பக்கம்:இருட்டு ராஜா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்141

 மனசுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு, அவள் நன்றாகப் பேசமாட்டாள். தன் மீது அவளுக்கு வருத்தம் இருக்கத் தான் செய்யும் என்று உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

ஒரு ராத்திரி வேளையில் முத்துமாலை தெருக்களில் திரிந்து கொண்டிருந்த போது, திரிபுரத்தின் வீட்டுப் பக்கம் வருகையில் உள்ளே சிரிப்பொலி கேட்டது. அது விகாரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து அழுகை எழுந்தது, பொங்கி பொங்கி அழுதது.

திரிபுரம் தான் இப்படி எல்லாம் பண்ணுகிறாள் என்று அவன் உணர்ந்தான். அவளுக்கு அமைதியில்லாமல் மனம் பேதலித்துப் போயிற்றாம், அவ்வபோது ஹிஸ்டீரியா கண்டு சிகிச்சை பெற்றுப் தேறினாளாம் என்று முன்னொரு நாள் தங்கராசு தெரிவித்தது அவன் நினைவில் எழுந்தது.

“பாவம் திரிபுரத்துக்கு திரும்பவும் மனக்கோளாறு ஏற்பட்டு விட்டது போலிருக்கு!” என்று முத்துமாலை எண்ணிக் கொண்டான். அவன் மனமும் அமைதியிழந்தது.

அன்று இரவு பூராவும் அவன் சீட்டி அடித்தவாறே. திரிந்தான். தனது மனக் கொதிப்பை எல்லாம், உள்ளக் குமைதல் முழுவதையும், ஊதி ஊதியே கரைத்து விட விரும்பியவன் போல அவன் உதடுகளைக் குவித்து சீட்டி அடித்தவாறே வறண்ட காற்றென அங்குமிங்கும் சுற்றி வந்தான். அந்தச் சீட்டி ஒலி உருக்கமாகத் தொனித்தது. கேட்டோரின் செவி உட்புகுந்து உள்ளத்தில் இனம் புரியாத ஒரு வேதனையைப் பாய்ச்சுவதாக இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்திவேளை. இருட்டு இன்னும் கீழிறங்கி வந்து கலியவில்லை. முத்துமாலை அம்மன் கோயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/143&oldid=1140234" இலிருந்து மீள்விக்கப்பட்டது