பக்கம்:இருட்டு ராஜா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்137

 அல்பமாகத் தோன்றக் கூடிய காரணங்கள் எத்தனையோ. அவற்றை அவள் பெரிசாக எண்ணி, மனச் கவலையும் வேதனையும் பட்டு, இப்படி எல்லாம் அவதிப்படுவதை விட ஒரேயடியா செத்துப் போகலாமே என்று துணிந்து, பூச்சி மருந்தை தஞ்சம் அடைந்தாள். அவளுடைய “அதிர்ஷ்டம்” தக்க தருணத்தில் அந்த வீட்டில் யாரும் அவள் செயலைக் கண்டு பிடிக்கவில்லை. ஆகவே, அவளது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது. வளர்மதி ஒரே அடியாக அஸ்தமித்து விட்டாள்!

விஷயம் அறிந்த முத்துமாலை ரொம்பவும் ஆடிப் போனான் ‘சே, வளர்மதி இப்படிப் பண்ணுவாள்து நினைக்கவேயில்லையே. பைத்தாரப்புள்ளெ எதுக்கு இப்படிச்சாகனும்? அவளுக்காக நான் அசலூரிலே நடுத்தெருவிலே வச்சு அவ மாமியா கூடவும் புருசன் கூடவும் சண்டை போட்டேனே. அதைப் பத்தி அவகிட்டே சொல்லணும்னு எண்ணினேனே...”இவ்வாறு அவன் புலம்பிக்கொண்டே யிருந்தான்.

அன்றைக்கு ராத்திரி முத்துமாலை அதிகமாக சாராயம் குடித்தான். வயிற்றெரிச்சலையும் மனக் கொதிப்பையும் அணைக்கக் கூடிய ஒரே மருந்து இதுதான் என்று சொல்லிக் கொண்டே குடித்தான். பாட்டுப்பாடிய வாறு தெருக்களில் திரிந்தான்.

அன்று அவன் பாடிய பாட்டில் அளவற்ற சோகம் கலந்து ஒலித்தது.

“காயமே இது பொய்யடா-வெறும்
காற்றடைத்த பையடா!-ஒட்டை
மூங்கில் வைத்து வேய்ந்த வீடடா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/139&oldid=1140149" இலிருந்து மீள்விக்கப்பட்டது