அன்னப் பறவைகள்/முன்னுரை
இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளைப் படிக்க ஆரம்பிக்குமுன் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். அற்புதமான கதை. ஆனால் உண்மைக் கதை.
வெகுகாலத்துக்கு முன்னே ஓர் ஏழைப் பையன் வாழ்ந்து வந்தான். அவன் அப்பா செருப்பு, பூடஸ்கள் தைப்பவர். ஒருநாள் அந்தப் பையனுக்கு அந்நாட்டு இளவரசரின் பேட்டி கிடைத்தது. பையன் ரொம்பச் சூட்டிகை. இளவரசரின் முன்னால் ஆடினான், பாடினான் அவனது ஆடல் பாடலைக் கண்டு மகிழ்ந்த இளவரசர் “பையா உனக்கு என்னவேண்டும்”? என்று கேட்டார். பையன் சொன்னான், "நான் அழகழகான நாடகங்கள் எழுத விரும்புகிறேன். அவைகள் அரசாங்க நாடகமேடையில் அரங்கேறுவதைக் கண்டு மகிழவேண்டும் என்று.
இளவரசர் அந்தத் துணிச்சல்காரப் பையனை வியப்போடு ஏற இறங்கப் பார்த்தார். பெரிய குடமிளகாய் மூக்கு, பரிதாபம் சொட்டும் கண்கள், இளைத்த உடல், ஏழ்மையின் சின்னம். இளவரசருக்குச் சிரிப்பு வந்தது. "தம்பி உன் நிலைமைக்கு ஏற்றவாறு ஆசைப்படு. உருப்படியாக ஏதாவது தொழில் செய்து பிழைக்கும் வழியைப் பார். தச்சுவேலை செய்யக் கற்றுக்கொள்ளேன்" என்றார்.
ஆனால் அந்த அசட்டுப் பையன் அவர் சொன்னபடி கேட்கவில்லை. வீட்டுக்கு ஓடினான். தன் சேமிப்பு மண்கலய உண்டியலை உடைத்தான். சிதறிய காசுகளைச் சேர்த்து அள்ளிக்கொண்டு "அம்மா, நான் அதிர்ஷ்டத் தைத் தேடிப் போகிறேன் ' என்று கிளம்பிவிட்டான்.
அவன் அப்பா இரவு நேரங்களில் அவன் அம்மாவுக்கு அராபுக் கதை களைச் சொல்லுவார். அம்மாவுக்கு அதில் ஈடுபாடு கிடையாது. ஆனால் இந்தப் பையன் அந்தக் கதைகளை உன்னிப்பாகக் கேட்டு அதில் லயித்துப் போவான். இப்படிக் கதை கேட்பதில் நாட்டங்கொண்ட இவன் அதிர்ஷ் டத்தைத் தேடிக் கிளம்பியபோது இவனுக்குக் கைகொடுத்து உதவியது கதை சொல்லும் கலை, வாழ்க்கையில் முன்னேற என்னென்னவோ தொல்லைகளை அனுபவித்தாலும் இவன் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதில் இன்பங் கண்டான். இவன் எங்கு சென்றாலும் குழந்தைகள் இவனைச் சூழ்ந்துகொள்வார்கள். இவன்மீது ஏறித் தொத்திக்கொள்வார்கள். "ஒரு கதை சொல்லு" என்று கெஞ்சுவார்கள். சொன்ன கதைகளையே மறுபடியும் மறுபடியும் இவன் கூறினாலும்கூடக் குழந்தைகளுக்கு அவைகளைக் கேட்பதில் அலுப்பே ஏற்படுவதில்லை. அத்தனை அற்புதமாகக் கதைகளைச் சொல்லத் தெரிந்திருந்தது அவனுக்கு. குப்பைக் காகிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதுவே கூறுவதாக ஒரு கதை சொல்லுவான். ஒரு குழந்தையின் கையிலுள்ள உடைந்த பொம்மையைக் கண்டதும் உடனே ஒரு கதை பிறந்துவிடும். உடைந்த பாட்டில், சாக்கடை நீரில் மிதந்து செல்லும் பிய்ந்த ரப்பர் பந்து எல்லாமே இந்தப் பையனின் கற்பனையில் கதாநாயகர்களாகிவிடும். ༢་༡ ________________
அன்றாட வாழ்வின் உண்மைகளை, துன்பங்களை, இன்பங்களை ஒளிவு மறைவின்றிக் கற்பனை கலந்து வடிப்பதில் வல்லவனானான் இந்தப் பையன். அதிர்ஷ்டத்தைத் தேடிக் கிளம்பிய பையன் பெரியவனாகி ஊர் ஊராகக் கதை சொல்லும் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்தான். அவனது வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதைகளாயின. இவருடைய முப்பத்தைந்தாவது வயதில் இவர் குழந்தைகளுக்காகச் சொன்ன அற்புதமான கதைகளின் முதல் தொகுப்பு வெளிவந்தது. குழந்தைகள் இவரது கதைகளை விரும்பிப் படித்தார்கள். இதுபோன்ற இனிமையான கதைகள் இன்னும் வேண்டும் என்று பிஞ்சுக் கரங்கள் நீண்டன. குழந்தை உள்ளம் படைத்த இவர் குழந்தைகளுக்கான கதை களை ஏராளமாக எழுதிக் குவித்தார். அவருடைய கதைகளைத்தான் அன்னப் பறவைகள் என்ற இந்தப் புத்தகத்தில் படிக்கப் போகிறீர்கள். இவரது விந்தைக் கதைகள், விசித்திரக் கதைகள், வினோதக் கதைகள், மனோகரமான கதைகள் ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க் கப்பட்டன. உலகத்துக் குழந்தைகளெல்லாம் இவரது கதைகளைப் படித்து விட்டு மனம்விட்டுச் சிரித்தன, கண்கலங்கின, விம்மிவிம்மி அழுதன. அந்தக் காலத்துச் சிறந்த பேனா மன்னர்களெல்லாம் இவரைத் தங்களில் ஒருவராகச் சொல்லிக் கொள்ளுவதில் பெருமைப்பட்டனர்.
பூட்ஸ் தைப்பவரின் மகனாகப் பிறந்து, உலகத்துக் குழந்தைகளின் முகங்களில் புன்னகை தவழவைக்கும் இறவாத கதைகளை உருவாக்கிய இவர்தான் ஆண்டர்ஸன். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பது இவரது முழுப் பெயர். டென்மார்க்தேசத்தில் 1805-ம் ஆண்டு ஓடென்ஸி என்ற ஊரில் பிறந்தவர். இவரது வாழ்க்கையே ஒரு அழகான கதைபோலி ருக்கிறதில்லையா? இவர் கூறிய அற்புதமான கதைகளைச் சுவை குன்றா மல் அமரர் ப. ராமசாமி அவர்கள் அழகு தமிழில் இந்தப் புத்தகத்தில் தந் திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தேன்பாகுபோல் இனிக்கும். படிக்கப் படிக்கத் திகட்டாத இக்கதைகளைப் பார்த்துப் பார்த்து மகிழும்படியான படங்களுடனும் வெளியிட்டிருக்கிறார்கள் வானதி பதிப்பகத்தார். குழந்தைப் புத்தகங்களை எப்படி வெளியிடவேண்டும் என்பதை வானதி அதிபர் திருநாவுக்கரசு அவர்கள் நன்கு அறிந்தவர். ஏனென்றால் அவரும் குழந் தைகளுக்காக ஜில்ஜில்' என்று நிறைய எழுதி இருக்கிறாரே!
குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுவதில் மன்னரான உலகப் புகழ் பெற்ற ஆண்டர்ஸனின் அற்புதமான கதைகள் உங்களை மகிழ்விக்க உள்ளே அழைக்கின்றன. அந்தக் கற்பனைக் கடலிலே மூழ்கித் திளைக்கத் தயாராக இருக்கும் உங்களை இனிமேலும் தடுத்து நிறுத்தமுடியாது.
வாண்டுமாமா துணை ஆசிரியர், கோகுலம்.