உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/காது, கண், வாய்

விக்கிமூலம் இலிருந்து

காது,கண்,வாய்

19. மணமகனுக்கு நேற்று வரை இரு கண்கள். இனி, அது கூடாது. நாளையிலிருந்து மணமகளின் இரு கண்களையும் பயன்படுத்தி, உற்றார், உறவினர்களையும், உலகத்தையும் நான்கு கண்களால் பார்த்து வாழ்வைத் தொடங்க வேண்டும், மணமகளுக்கு நேற்று வரை இரு காதுகள். இனி அது போதாது. நாளையிலிருந்து மணமகனின் இரு காதுகளையும் பயன் படுத்திக் கொண்டு, நான்கு காதுகளால் உற்றார் உறவினர்களின் செய்திகளையும், உலகின் செய்திகளையும் கேட்டு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு மட்டும் போதாது. மணமகனும், மணமகளும் தங்களின் வாய்கள் இரண்டையும், நான்காகப் பெருக்கிக் கொள்ளாமலும், இரண்டாக வைத்துக் கொள்ளாமலும், ஒன்றாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான், வாழ்வில் வெற்றி காண முடியும், கணவன் உண்டால் மனைவி உண்டது போல, மனைவி உண்டால் கணவன் உண்டது போல, கணவன் ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டால், மனைவி வாக்குக் கொடுத்தது போல. மனைவி ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டால், கணவன் வாக்குக் கொடுத்தது போல. காதுகளும் கண்களும் நான்கு; வாய் நான்குமல்ல, இரண்டுமல்ல, ஒன்று என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். இதை மணமகனும், மணமகளும் உள்ளத்திற் கொண்டு வாழ்வைத் தொடங்குவது நல்லது.