உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறி குடிமுடித்த படலம்

103

இதற்கெலாம் முதலுக்கு எங்கே போவீர்?
வஞ்சியை முறித்து[1] வாரப் போவீரா?
வாதி பாகத்து வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
கிராஸு[2] கேட்டுக் கிடுக்கி விடுவான்; 325
சந்தேக மில்லை, சந்தேக மில்லை;
நீர்,
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்;
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்:
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்; 330
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்;
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்;
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்!
தயவாய்ச் சொல்லுவார், தக்கில்[3] கேட்பார்,
இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்; 335
பார் பார் என்பார். பல்லைக் கடிப்பார்;
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்;
அங்கும் இங்கும் அசையாதே என்பார்,
குனியாதே என்பார், கோட்டைப்பார்[4] என்பார்.
கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் 340
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.


  1. 322. வஞ்சி - கோவிலில் காணிக்கை செலுத்தும் உண்டிப் பெட்டி. லஞ்சியை முறித்தல்; திருட்டுத் தொழிலில் வல்லவனை வஞ்சியை முறித்த கள்வன்' என்று சொல்வது நாஞ்சினாட்டு வழக்கம்.
  2. 325. கிராஸு - குறுக்கு விசாரணை.
  3. 334. தக்கில் - தாழ்ந்த குரலில்.
  4. 330. கோட்டை - கோர்ட்டை,