உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

59


தலைவ! பகையரசர்கள் நால்வகைப் படையும் கூடிய பெரும் படையோடு வந்து வளைத்துக் கொண்டாலும், அவர்களைச் சிங்கம் முழங்கினாற்போல் முழங்கும், சிலைமரத்தால் செய்த வலிய வில்லில், முறுக்கிக் கட்டிய நாணிலிருந்து எழுப்பும் ஒலி ஒன்றினாலேயே அஞ்சப் பண்ணித் துரத்தி வெற்றி கொள்வதல்லது, அவரை அழிக்க அம்பேவ வேண்டிய நிலைக்கு நாணும் ஆற்றல் வாய்ந்தவரும், கூரிய பார்வையும், உருண்டு திரண்ட கழுத்தும், கலைமான் கொம்புபோல் முறுக்குண்டு திரண்ட தாடியும், கடுஞ் சினமும் உடையவருமான ஆறலை கள்வர், வழியில் வருவார் போவாரின் கைப்பொருளைப் பறித்துக்கொண்டு, குத்திப் புண்செய்து போக்கும் கொடுமையல்லது, அன்போ, அருளோ இல்லாத, கொடுமைகள் மலிந்தது நீ செல்லக்கருதிய காட்டுப்பாதை.

அன்ப! அசோக மரத்தின் மெல்லிய இளந்தளிர் போன்ற மென்மையும் அழகும் வாய்ந்தது உன் மனைவியின் மேனி. அம்மேனி, நீ பிரிந்து போவதால் வந்த வருத்தமிகுதியால் பசலை பாய்ந்து ஒளி இழந்து பாழ்பட்டுத் தன் பண்டைப் பேரழகை இழந்து போகும்! அவ்வாறு இழந்து போன அவ்வழகை, புறவாழ்வில் இன்பம் தரும் பொருளை விரும்பி, அகவாழ்வில் இன்பம் தரும் இவளைக் கைவிட்டு அக்காட்டு வழியைக் கடக்கத் துணிந்து சென்று, முயன்று தேடப் புதிய புதியவாய் வந்து குவிந்து அளவின்றிப் பெருகப்போகும் செல்வத்தால், மீட்டுத் தருதல் முடியுமோ! முடியுமானால் நீ பிரிந்து செல்க!

அன்ப! இனிய தண்ணொளி வீசும் முழுத்திங்கள் போல் ஒளிமிக்கது உன் மனைவியின் திருமுகம். அம்முகம், நீ பிரிந்து போவதால் வந்த வருத்த மிகுதியால், பாம்பின் வாய்ப்பட்ட மதிபோல் ஒளிகுன்றி அழிந்துவிடும்! அவ்வாறு அழியும் அவ்வழகை, பொய்ப் பொருள் கூறாது மெய்ப்பொருளே கூறும் நூல்களைக் கற்றுப் பெற்ற அறிவுடைமையால் உயர்ந்த பெரியோர்களை அடைந்து, அவரிடத்து மெய்யுணர்வு பெற்று, நீ மேற்கொள்ளும் குற்றம் அற்ற ஒழுக்க நெறிகளால் மீட்டுத் தருதல் இயலுமோ? இயலுமானால் நீ பிரிந்து செல்க!

அன்ப! அரும்பு மலர்ந்த அழகிய மணம் வீசும் நீலமலர் போன்ற வனப்புடையது உன் மனைவியின் மைதீட்டிய கண்கள். அவை, உன்னைப் பிரிய நேரும் துயர் மிகுதியால் கலங்கி, எரியும் திரியிலிருந்து ஒழுகும் எண்ணெய் போல், கொதிக்கும் நீரைச் சொரியும்! அவ்வாறு சொரியும் அவள் கண்ணீரை, உன்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/60&oldid=1723665" இலிருந்து மீள்விக்கப்பட்டது