உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


ஆரூரருக்குத் திருமணம் செய்ய எண்ணினார்கள். அதன்படி சடங்கவி சிவசாரியார் என்பவர் மகளை மணம் பேசி நாள் குறித்தார்கள்.

குறித்த நாளிலே திருமணம் நடக்கும் வேளையிலே முதியவர் ஒருவர் கோலூன்றி நடந்து அவ்விடம் வந்து, மணமகனாகிய நம்பி ஆரூரார் தமக்கு அடிமை ஆள் என்று வழக்காடினார். வழக்கின் முடிவில், ஆரூரார் முதியவருக்கு அடிமை என்று தீர்ப்பாயிற்று. முதியவர், ஆரூரரை அழைத்துக கொண்டு திருவெண்ணெய் நல்லூருக்குப் போய் அங்குத் திருவருட்டுறை என்றும் கோயிலில் புகுந்து மறைந்தார். ஆரூரர், கோயிலுள் புகுந்த முதியவரைக் காணாமல் திகைத்துப் பிறகு தம்மை ஆட்கொண்டவர் சிவபெருமானே என்று துணிந்தார். அப்போது அவருக்குக் கடவுளிடம் பக்தி தோன்றிற்று. அவர் திருப்பாடல்களைப் பாடித் துதிப்பாரானார்

கடவுள், தம்மை ஆட்கொண்டதை ஆரூரர் தமது தேவாரததில் கூறுகிறார். 'திருவெண்ணெய்நல்லூரும் திரு நாவலூரும் பதிகத்தில், வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை யாளுங்கொண்டார் என்று ஒவ்வொரு பாட்டிலும் கூறுகிறார். அன்றியும்,

“தன்மையினா லடியேனைத்
        தாமாட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள்பேசிட வன்றொண்ட
        னெப்தோர் வாழ்வு தந்தார்”

என்றும் கூறுகிறார். திருவாவடுதுறைப் பதிகத்தில்,

"மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை
        வலியவந் தென்னை ஆண்டு கொண்டான்"

என்றும் கூறுகிறார்.

“அன்றுவந் தெனைய கலிடத் தவர்முன
        ஆளதாக வென்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை
        யொளித்த நித்திலத் திரட்டொத்தினை......”[1]

  1. 16