452
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இந்தக் குகைக் கோவில்கள் கி.மு. 104-இல் இலங்கையை யாண்ட வலகம்பாகு (வடகெமுனு) என்னும் அரசன் காலத்தில் ஏற்பட்டவை.
கந்தன் இலங்கைத் தீவின் தெற்குத் திசைக்கும், விஷ்ணு மேற்குத் திசைக்கும் காவல் தெய்வங்கள் என்று கூறப்படுகின்றனர். மேற்குத் திசையின் காவல் தெய்வமாகிய விஷ்ணுவே, பிற்காலத்தில், விபீஷணனை மேற்குத் திசையில் காவல் தெய்வமாக அமைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
இலங்கை முழுவதுக்கும் காவல் தெய்வமாகப் புத்தர் இந்திரனை ஏற்படுத்தினார் என்றும், அக்கடமையை ஏற்றுக்கெண்ட இந்திரன் பிற்காலத்தில், தன் தம்பியாகிய விஷ்ணுவை இலங்கையின் காவல் தெய்வமாக அமைத்தான் என்றும் மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது.
வருணன்
தமிழ்நாட்டில் நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன். கடல் கடந்து கப்பல் வாணிகம் செய்த பண்டைக் காலத்துத் தமிழ் வியாபாரிகளும் வருணனை வழிபட்டனர். தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் வருணன் வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. வருணன் மேய பெருமணல் உலகம்' என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதிலிருந்து, கடற்கரையோரத்தில் வாழ்ந்த மக்களும் மாலுமிகளும் வருணனை வழிபட்டனர் என்பது அறியப்படுகிறது. சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படவில்லை. வருணனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வருணன் என்று நேரே பெயர் கூறப்படாமல் 'கடல் தெய்வம்' என்று கூறப்படுகிறது. அவை:
'கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்காட்டி
அரியசூள் பொய்த்தார் அறனிலரென்று ஏழையம் யாங்கு
அறிகோம் ஐய' (சிலம்பு - கானல்வரி -5)
'பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடல் தெய்வத்தின் மலரடி வணங்குதும்' (சிலம்பு – கானல்வரி – 51)