உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடியாததால், நீறு பூசியவரைக் கோபப் பார்வையுடன் நோக்கி "என்னய்யா அநியாயம், சரோஜா ஆறணா என்று வாய் கூசாமல் கூவுகிறீரே" என்று கேட்டேன். அந்த ஆள் கோபியாமலில்லை. "அனியாயமா? பங்கஜா இன்று என்ன விலை தெரியுமா?" என்று என்னைக் கேட்டு, துடிதுடித்து நான் நிற்பதைத் துளியும் சட்டை செய்யாமல், "பங்கஜா, பத்தணா விலை" என்றான், அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பிறகு எங்களுக்குள் பின்வரும் காரசாரமான பேச்சு நடந்தது.

"என்ன அனியாயமய்யா! சரோஜா ஆறணா, பங்கஜா பத்தணா என்று கூவுகிறீர். காலம் இப்படியா கெட்டு விட்டது".

"காலம் கெட்டு விட்டதற்கு நான் என்ன செய்வேன்? நானா இவைகளுக்குப் பொறுப்பாளி சரோஜாவும் பங்கஜாவும் போகிற போக்கை நானா தடுக்க முடியும்?"

"நீர் தடுக்காவிட்டாலும் அந்த அனியாயத்திலே நீர் பங்கெடுத்துக் கொள்ளாமலிருக்கக் கூடாதா? ஆளைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறதே!

"இதென்னய்யா காலையிலே நீ யோர் பித்துக்கொள்ளியாக வந்து சேர்ந்தாய். நான் பங்கெடுத்துக் கொள்வதுதானா உன் கண்களை உறுத்துகிறது. இதே தொழிலிலே, மாதத்திலே ஆயிரம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் ஒவ்வொருவன். எனக்கு ரூபாய்க்குக் காலணாகூடச் சரியாகக் கமிஷன் கிடைப்பதில்லை, இதற்கு நான் படுகிற பாடும், போடுகிற கூச்சலும், நடக்கிற நடையும் எவ்வளவு. என்னைக் குறை கூற வந்துவிட்டாய்."

"இது எனய்யா இந்த மானங் கெட்ட பிழைப்பு?"

16