உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

82

தத்திற்குக் கூட ஆளாகி, அதனால், வாழ்க்கையில் களங்கம் உண்டாகி விடுகிறது. இம்மாதிரி பெற்றோர்களே வைத்து வேடிக்கைப் பார்ப்பது, தீமையிலும் தீமையாம். கல்யாணம் செய்யாமல் வைத்துள்ள பெண்களை சரியான கட்டு திட்டங்களுடன் பெற்றோர்கள் சில இடங்களில் கண்காணிப்புடன் பார்க்காது விட்டு விடும் பரிதாபத்தினால், அப்பெண்களின் பெயருக்கு எத்தனை களங்கமும், அவமானமும் உண்டாகி விடுகின்றன. இப்படியொரு பெண்களைப் பழக்கி விட்டால், குடும்பத்தில் கண்ணியம் எப்படி உண்டாகும். பண்டய காலத்தின் பெண்மணிகளின் புகழும், ஒழுக்கமும் எப்படி இவர்களிடம் வரும்? இதென்னக் கூத்து!—என்று கமலவேணியம்மாள் தனக்குள் எண்ணமிட்டவாறு, தம்பித்துக் கம்பம் போல் நின்று விட்டாள்.

பெண்களும், இப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி நிற்பதை ஸ்ரீதரன் பார்த்தான். இந்த ப்ரக்ருதிகளை அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி, இவர்களையும், அவர்களையும் மாறி மாறி பார்த்து, இரு திரத்தினர்களின் தராதரத்தை, மனத்திற்குள் எண்ணி வியந்தவாறு, உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்த வீட்டிலுள்ள அலங்காரங்களையும், தடபுடல்களையும், செய்துள்ள நூதன வேலைப்பாடுகளின் விசித்திரங்களையுங் கண்டு, மிக மிக ப்ரமிப்படைந்த எல்லோருடைய மனத்தின் ப்ரமை அடங்குவதற்கே சில நிமிஷங்களாகியது. சிட்டுக் குருவி போல், உஷாதேவி பாய்ந்து, பாய்ந்து டிப்பன், காப்பி, பழ வகைகள் முதலியவைகளைக் கொண்டு வைத்து உபசரிக்கும் அழகைக் கண்டு, தாமோதரன் தன்னை மறந்து பூரித்து ஆனந்தப் பதுமை போலாகி விட்டான் என்றால் மிகையாகாது.

உஷாவின் தாயாரும், இதே தடபுடலில் கலந்து கொண்டு உபசரிக்கிறாள். ஆனால் கமலவேணிக்கு ஏதோ கூச்சமும், ஒரு விதமான வெறுப்புந்தான் தோன்றியது.