உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

136

உள்ளம் படும் பாட்டை விவரிக்கவே முடியவில்லை. தன்னுடைய அல்பச் செயலும், பொறாமையின் வேகமும், விவரம் புரியாமலேயே எத்தனை தூரம் பரவி ஆழமாகப் பாய்ந்து வேலை செய்கிறது? “ஆம்! அன்று நம் தாயின் உடல் நலம் குன்றி இருந்த சமயம், மகா உத்தமனாகிய அண்ணனே ஏதோ செய்து விட்டதாக மனந்துணிந்து கூறிய பாதகன்தானே நான்? ஏன் என்னைத் தூற்றக் கூடாது? ஏசிப் பேசி நோகச் செய்யக் கூடாது? எனக்கு இதுவும் தகும், இன்னமும் தகும்! இந்த முன் பின்னறியாத அனாதைகளுக்குள்ள ஒரு அன்பு கூட உடன் பிறந்த அண்ணன் மீது எனக்கில்லாது போய் விட்டதே! கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்யும் பழமொழி எனக்கே ஸ்திரமாகி விட்டது” என்று பல பல எண்ணங்களுடன், இந்த ப்ரார்த்தனையின் ஆனந்தத்தைப் பின்புறமே நின்று, கவனித்துத் தானும், மனப்பூர்வமாய் அண்ணனின் விடுதலைக்காக வேண்டிக் கொண்டான்.

ப்ரார்த்தனை செய்பவர்கள், தாமோதரன் வருகையைக் கண்டு ஆச்சரியமடைந்து திடுக்கிட்டு எழுந்தார்கள். தாங்கள் இதே மனிதனைப் பற்றி இழிவாகப் பேசி விட்டோமே… என்று பயந்து நிற்பதைக் கண்ட தாமோதரன், “பயப்படாதீர்கள்!… நல்ல உத்க்ருஷ்டமான நெல் பயிருடன், புல் பூண்டுகளும் முளைப்பது போல், மகா வீரத்யாகியாகிய என் அண்ணனுடன் கூட, நானும் பிறந்து அவருடைய மேன்மைக்கும், தூய்மைக்கும் களங்கத்தை உண்டாக்கி விட்டேன். இனி, நானும் புனர் ஜென்மமெடுத்து விட்டதால், என் அந்தகார ஆசாபாசங்கள் ஒழிந்தன. என்னருமை அண்ணனின் விடுதலையைக் கோரி, நாம் ப்ரார்த்தனை செய்வோம். என்னுடைய வேண்டுகோளுக் கிரங்காவிடினும் உங்களுடைய ப்ரார்த்தனைக்கு பகவான் மனமிரங்கி, என் அண்ணனின் படாப் பழி நீங்கி விடுதலையடைந்தால் போதும்!" என்று தானே கூறி, ப்ரார்த்தனையும் செய்து பின், தர்ம ஆஸ்பத்ரிக்குச் சென்றான்.