________________
198 இலக்கிய மரபு பறக்கும் சருகு போன்றது அன்று. மக்களின் கையில் பற்றிய நூலால் தொடர்பு உற்றுப் பறக்கும் காற்றாடி போன்றதே ஆகும். அதனால்தான் வாழ்விலும் அறிவுத் துறையிலும் நேரும் மாறுதல்களை ஆற்றல்மிக்க கலைஞர்கள் தம் படைப்பில் அமைத்துப் போற்றுகின்றனர். கார் காலம் கார் காலம் தொடங்குவதையும் முல்லை மலர்வதையும் தொடர்பு படுத்திப் பாடிய பழங் காலப் பாட்டுக்கள் மிகப் பல உள்ளன. இன்று அவ்வாறு கற்பனை அமைத்துப் பாடுவோர் காணோம். காரணம் என்ன? பழங் காலத்தில் மக்கள் தங்கள் வாழ்வோடும் தொழிலோடும் ஒட்டிக் கார் காலத்தை எதிர்பார்த்திருந்தனர். கார் காலத் தொடக் கத்தில் இயற்கை காட்டும் மாறுதல்களையும் மறவாது இருந்தனர். இன்று அந்த அளவிற்கு அறுவகைப் பருவங்களை மக்கள் கருத்தில் கொள்வது இல்லை. சித்திரை வைகாசி ஆனி என்றோ ஜனவரி பிப்ரவரி மார்ச் என்றோ மாதங்களைக் கணக்கிட்டு எண்ணும் வழக்கமே மக்களின் வாழ்வில் உள்ளது. அந்த மாதங்களின் தொடக்கத்தையும் இயற்கையின் மாறுதல்களைக் கண்டு யாரும் அறிவது இல்லை. ஒன்று இரண்டு என்று நாட்களைக் கணக்கிட்டுத் திங்கட் குறிப்புக்களையும் ஆண்டுக் குறிப்புக்களையும் பார்த்தே அறிகின்றார்கள். ஆதலின் கால வரவு பற்றிய கற்பனைகள் முன் போல் அமைவது இல்லை. மாலைப் பொழுது வெளி நாட்டுக்குச் சென்ற காதலன் மாலையில் திரும்பி வருவதாகப் பாடும் பாட்டுக்கள் பழங் காலத்தில் எழுந்தன. இன்று மாலை நேரத்திற்கும் காதலன் ஊர்க்குத் திரும்பு வதற்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆகையால் அத்தகைய கற்பனைகளும் இன்று அமைவது இல்லை.