உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/002-007

விக்கிமூலம் இலிருந்து

நோயும் சிகிச்சையும்

1921-ஆம் ஆண்டின் இறுதியில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையார் சென்னைக்குப் புறப்பட்டபோது சுவாமிகள் நோயுற்றதின் காரணமாகத் தூத்துக்குடிக்குச் சென்றார். சென்னையில் நாடகம் தொடங்கியதும் தூத்துக்குடியிலிருந்து வந்த செய்தி எங்களெல்லோரையும் திடுக்கிடச் செய்தது. ‘சுவாமிகள் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு வலது கால் வலது கை முடக்கப்பட்டு வாயும் பேச முடியாத நிலையில் படுக்கையில் இருக்கிறார்’ என்றறிந்ததும் எல்லோரும் கண்ணீர் விட்டனர்.

கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான திருவாளர் பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளைச் சென்னைக்கே அழைத்து வந்து சிகிச்சை செய்ய முனைந்தார். மருத்துவர்கள் பலர் வந்து பார்த்தனர். எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையிலிருந்தபோதும் சுவாமிகள் நாடகப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. நாடக அரங்கிற்கு வந்து திரை மறைவில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்தவாறே அவ்வப்போது கைகளால் சைகை காட்டித் தமது ஆசிரியப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.

மறைவு

இவ்வாறு ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும், தமிழ் நாடக உலகின் தந்தையாகவும் பல ஆண்டுகளைக் கழித்த சுவாமிகள், இறுதிவரை பிரமச்சாரியாகவே இருந்து 1922-ஆம்ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த புதுச்சேரி நகரில் தமது பூதவுடலை நீத்தார்.

தமிழ் நாடகத் தாய் பெறற்கரிய தனது புதல்வனை இழந்தாள். நடிகர்கள் தங்கள் பேராசிரியரை இழந்தனர். கலையுலகம் ஒர் ஒப்பற்ற கலைஞரை இழந்து கண்ணீர் வடித்தது.

நாடக முறை வகுத்த பெரியார்

ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாடக மேடையில் வசனங்கள் கிடையா. முழுதும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அக்காலத்தில் நாடகங்களை இயற்றிய ஆசிரியர்கள் எல்லா நாடகங்களையும் இசை நாடகமாகவேதான் எழுதினார்கள். திருவாளர் அருணாசலக்கவிராயர் அவர்களின் ‘இராம நாடகம்’ இதற்குச்சான்று கூறும்.

சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறி நடிக நடிகையர் தமது திறமைக்கும் புலமைக்கும் ஏற்றபடி நாடகக் கதைக்குப் புறம்பாகப் போகாமல் கற்பனையாகவே பேசிக்கொள்ளும் முறை வழக்கத்தில் வந்தது. இவ்வாறு நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் வரம்பு மீறிப் போய்விடுவது முண்டு.

இந்தச் சமயத்தில்தான் நமது சுவாமிகள் தமிழ் நாடக உலகில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வழிகோலினார். அந்தக் காலத்திலே நடைபெற்று வந்த புராண, இதிகாச, கற்பனை நாடகங்களுக்கெல்லாம் பாடல்களும் உரையாடல்களும் எழுதி வரம்புக்குட்படுத்தியதோடு, புதிய நாடகங்கள் பலவற்றையும் இயற்றி உதவினார்.

இவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களே சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் நாடக மேடைக் கலை அழிந்து போகாமல் காப்பாற்றி வந்தன. இன்றும் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் பலருக்கு உயிர் கொடுத்து நிற்பவை சுவாமிகளின் கோவலனும், வள்ளி திருமணமும், பவளக் கொடியும்தாம்.

ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். சுவாமிகள் தமது வாழ்நாள் முழுதும் இதையே வலியுறுத்தி வந்தார்.

தமிழகத்திலே முன்பு நடைபெற்று வந்த பல நாடகங்களை உங்களிற் சிலர் பார்த்திருக்கலாம். ஒரு சிலர் கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், அந்நாடகங்களை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பதை உங்களிற் பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாது. கோவலன், வள்ளி திருமணம், பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, சீமந்தனி, சதியனுசூயா, மணிமேகலை, லவகுசா, சாவித்திரி, சதி கலோசனா, பிரகலாதன், சிறுத்தொண்டர், பிரபுலிங்கலீலை, பார்வதி கல்யாணம், வீரஅபிமன்யு முதலிய பல நாடகங்கள் சுவாமிகளால் இயற்றப்பெற்றவை.

இந்த நாடகங்களையெல்லாம், ஒழுங்காக நாடகங்களை நடித்துவந்த எந்த நாடக சபையாரிடம் நீங்கள் பார்த்திருந்தாலும் அவர்கள் நமது சுவாமிகளின் பாடல்களையும் உரையாடல்களையும் உபயோகப்படுத்தியிருப்பார்கள் என்பதற்கையமில்லை.

மேற்குறிப்பிட்ட நாடகங்கள் அனைத்தும் இன்று சிலருக்குப் பிடிக்காதிருக்கலாம். ஆனால், இவைதாம் தமிழ் நாடக மேடையைப் பாதுகாத்துத் தந்தவை என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. புராண இதிகாசக் கதைகள் என்பதற்காக அந்நாடகங்களிலே பொதிந்து கிடக்கும் பொன்னுரைகளையும், பேருண்மைகளையும், அவற்றைப் பல ஆண்டுகளுக்குமுன் இயற்றியருளிய புலவர் பெருமானின் நாடகத் திறனையும் நல்லிசைப் புலமையையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.

நாடகப் புலமை

சுவாமிகளின் நாடகப் புலமையை அக்காலத்தில் வியந்து பாராட்டாதாரில்லை. அவருடைய பாடல்களிலே உயர்ந்த கருத்துக்கள் நிறைந்திருக்கும்; அதே சமயத்தில் கல்லாதாருக்கும் பொருள் விளங்கக்கூடிய முறையில் எளிமையாகவுமிருக்கும்.

பாடல்கள் எழுதும்போது சுவாமிகள் சொற்களைத் தேடிக் கொண்டிருப்பதில்லை. எதுகை, மோனை, நயம், பொருள் இவற்றுடன் சொற்கள் அவரைத் தேடி வந்து நிற்கும். ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் அரும்பெரும் ஆற்றல் சுவாமிகளுக்கிருந்தது.

ஒரு முறை எழுதியதை அடித்துவிட்டுத் திருத்தி எழுதும் வழக்கம் சுவாமிகளிடம் இருந்ததில்லை. அடித்தல் திருத்தல் இல்லாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போவார். சிந்தனை செய்ய நேரும் சந்தர்ப்பங்களில் எழுதுவதை நிறுத்தாமல் சிவமயம், வேலும் மயிலுந் துணை என்று பலமுறை எழுதிக்கொண்டே இருப்பார். இரண்டொரு பக்கங்கள் இவ்வாறு எழுதியபின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடலைப் பூர்த்தி செய்வார். சுவாமிகள் எழுதிய நாடகக் கையெழுத்துப் பிரதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.