பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


நிலையாகப் போர் வரையறை - இலக்கணம் உருவாயிற்று. இவ்விலக்கணம் பூவின் பெயரிலேயே வகுக்கப்பட்டது. வன்மையான போருக்கு மென்மையான மலரின் பெயரைச் சூட்டி அதனைச் சின்னமாக்கினர். இவ்வாறு சின்னமாக்கிய பாங்கு உன்னி உவக்கத் தக்கது. முற்காலத் தமிழ்ச் சான்றோர், போரை முன்னறிவிப்பிலேயே துவங்கினர், இன்ன நோக்கில் வம்புக்கு வருகின்றோம் என்று. சொல்லாமல் சொல்லியவாறே சென்றனர். வாய்ச்சொல்லை அடுத்துச் சின்னம் அணிந்து சென்று அறிவித்தனர். அச் சின்னத்தைப் பூவாகவே கொண்டனர். போரின் போது எளிய உயிரினங்கள் ஊறு பெறாமல் தவிர்க்க விரும்பினர். அதே நேரத்தில் போர் அறிவிப்பாகவும் அஃது அமையவேண்டும். இதனால் பகை நாட்டு 'ஆவினங் களைக் கவர்ந்து வந்து காக்கும் நோக்கில் வருகின்றோம்’ என்பதன் அறிகுறியாக-சின்னமாக ஒரு மலரைத் தேர்ந்தனர். 'வெட்சி' என்றொரு மரம். அதன் பூ சிறியது, சிறியதாம் சின்னப் பூவே 'சின்னப்பூவும்' ஆயிற்று, பூ சிறியது என்றாலும் பளிச்சென்று தெரியும் சிவப்பு நிறங் கொண்டது. சிவப்பு எச்சரிக்கைக்குரிய நிறமும் ஆயிற்று. வேந்தன் இப்பூச் சின்னத்தை வழங்குவான். வீரர் இதனைச் சூடிப் பகைநாடு சென்று இரவில் தொழுவத்தில் ஆநிரைகளைக் கவர்ந்து எதிர்த் தோரை விலக்கி ஆநிரைகளை ஒட்டித் தம் நாட்டிற்குக் கொணர்வர். வேந்தன் ஆநிரைகளைப் பகுத்துப் பரிசாக வழங்குவான். பரிசுபெற்றுக் களிப்பர். முனைப்பு முதல் முடிவு வரை வெட்சிப் பூவைச் சூடுவர். இந் நிகழ்ச்சி யாவும் ஒரு போர் ஒழுக்கமாக இப்பூவின் பெயரால் "வெட்சித்திணை" எனப்பட்டது. இதுபோன்றே, கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டுக் கொண்டு செல்லப் பகைவர் 'கரந்தை' என்னும் ஒருவகைக் கொடியின் பூவைச் சூடிச் சினங்கொண்டெழுவர். சிவந்த நிற முடைய இப்பூ சினத்தின் குறியாகவும் அமைந்தது. மீட்கும் வரையுள்ள நிகழ்ச்சிகள் ஒரு போர் ஒழுக்கம் ஆகி இப்பூவின் பெயரால் "கரந்தைத் திணை" ஆயிற்று. .

53. சின்னப் பூ அணிந்த குஞ்சிச் சீதத்தான்-சீவ சி: 2869