பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சிவபெருமானுக்கு விருப்பமானது கொன்றை என்றனர்.இதனைக் குறிப்பிட்டுப் பாடும் புறநானூறு,

“கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை” [1]

-என்று அக்கொன்றையை அவருக்குக் கண்ணியாகவும் தாராகவும் பாடிச் சின்னப் பூவாகக் காட்டுகின்றது.

சோழ இளவரசன் உதயகுமாரன் அரச வீதியில் தேரில் வருகின்றான். அவன் இளங்காளை; செந்நிற மேனியன்; அழகன். மக்கள் அவனைக் காண்கின்றனர். வருவது முருகக் கடவுளோ என்று ஐயுறும் அளவில் அவனது தோற்றப்பொலிவு இருந்தது. தேரில் உள்ள கொடிஞ்சி என்பது வேல் உருவங்கொண்டது. அதனை இளவரசன் கைப்பிடியாகப் பிடித்திருப்பது வேலைப் பிடித்திருப்பது போன்று இருந்தமை 'முருகனோ' என்ற ஐயத்திற்கு உறுதி ஊட்டியது.

'இல்லை இல்லை நான் முருகன் அல்லேன். எனது தலையைப் பார்மின்! முருகனுக்குரிய சின்னப்பூவாகிய கடப்பம் பூவாலாகிய கண்ணியா உள்ளது?' - என்று தலையில் சூடி யுள்ள ஆத்திப் பூக் கண்ணியே வாயாகச் சாற்றுவதுபோல் இருந்ததாம். இதனை,

“காரலர் கடம்பன் அல்லன் என்பதை
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்”[2]

-என்று பாடுவதன் மூலம் மணிமேகலைக் காப்பியம் கடம்பு முருகனது சின்னப்பூ எனக் குறிப்பாகச் சாற்றுகின்றது. சிலப்பதிகாரம் பாண்டியனை அவனது சின்னப் பூவாலேயே 'வேம்பன்' என்று குறியிட்டதைக் கண்டோம். இதுபோன்று, முருகன் 'கடம்பன்' என்று இங்கே பூப்பெயரால் குறிக்கப்பட்டமை நோக்கத்தக்கது. சிவபெருமானையும் கலித்தொகை 'கொன்றையவன்' [3] எனச் சின்னப் பூவால் பெயர் குறிக்கின்றது. 'பூவன்' 'பூவினுள் பிறந்தோன் பூமேல் நடந்தான்' என்பன அருகக்கடவுளது பெயர்கள். பூவின் கிழத்தி, தாமரையினாள்' என்பன


  1. புறம் : 1 : 1, 2
  2. மணி : பனிக்கரைபுக்க காதை : 49, 50
  3. கலி : 142 : 28