நற்றிணை 1/014
14. நட்டனர் நல்குவர்!
- பாடியவர் : மாமூலனார்.
- திணை : பாலை.
- துறை : இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
சிறப்பு : புல்லி, குட்டுவன், செம்பியன் ஆகியோரைப்பற்றிய செய்திகள்.
[(து.வி.) தலைவனின் பிரிவினைப் பொறாத தலைவி, துயருற்றுப் புலம்புகிறாள். அதனைக் கேட்ட தோழி. அவளைத் தேற்றுவாளாய்த் தலைவனை 'அன்பிலன்' எனப்பழிக்கின்றாள். அதனைப் பொறாத தலைவி, தலைவனது சால்பினைக் கூறுதலாக அமைந்தது இச்செய்யுள்.]
தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்;
நட்டனர் வாழி! தோழி ! குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றன ராயினும்—மலர்கவிழ்ந்து
5
மாமடல் அவிழ்ந்த காந்தளம் சாரல்,
இனம்சால் வயக்களிறு பாந்தட் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும்
கடுமான் புல்லிய காடிறந் தோரே.
10
தோழீ! மலர் தலைகவிழ்ந்து, பெரிதான மடல்கள் விரிந்த காந்தட் பூக்களை உடையது மலைச்சாரல். அதனிடத்தே, தன் இனத்திற் சால்புடையதான வலிய களிறொன்று, பாம்பின் வாயிடத்தேபட்டது. அதுகண்டு, தளராத துயரத்தோடு அச்சமுற்றுக் கதறுகின்ற அதன்பிடியின் பேரொலியானது, நீண்ட மலையிடத்துள்ள பிளப்புக்களிடத்தே சென்று எதிரொலித்தபடியே இருக்கும். அத்தன்மை கொண்டதும், கடிதாகச் செல்லும் குதிரையினையுடைய 'புல்லி' என்பானுக்கு உரியதுமாகிய வேங்கடமலைக் காட்டினைக் கடந்து, அதன் வடபாற் சென்றுள்ளவர் நம் காதலர். அவர், என் தோள் நலமனைத்தும் அழிந்துபோய், என் பழைய கவினும் நீங்கிப்போக, எனக்கு அருளாராய் என்னைக் கைவிட்டனர். அங்ஙனம் அவர் கைவிட்டனராகிக், குட்டுவனது அகப்பா என்னும் மதிலானது ஒருங்கே அழியும்படியாக இடித்தழித்து அற்றைப் பகற்போதிலேயே அந்நகரைத் தீயிட்டுக் கொளுத்திய சோழன்செய்த போரின் கடுமையைக் காட்டினும், மிகப்பெரிதான பழிச்சொல் உண்டாகுமாறு நம்மைப்பிரிந்து சென்றனர். என்றாலும், நம்மை நட்புச் செய்தாராகிய அவர், குறித்த பருவத்தே தவறாது வந்தனராய் நமக்குத் தலையளி செய்வார். ஆதலின், அவர் நீடூழி வாழ்வாராக!
கருத்து : 'அவரைப் பழித்து உரையாதேயிரு; அவர் தவறாது வருவர்; அதுவரை ஆற்றியிருப்பேன்' என்பதாம்.
சொற்பொருள் : தொல் கவின் – பழையதாகிய கவின்; குட்டுவன் – சேரர்களுள் ஒரு குடும்பத்தான். அகப்பா – கழுமலக்கோட்டை. செம்பியன் – சோழன்; கிள்ளிவளவன்; ஞாட்பு – போர். 'இனம் சால் வயக்களிறு என்பதற்கு, ஞால்வாய்க் களிறு எனவும் வேறுபாடம் கொள்வர். துஞ்சாத் துயரம் – தளராத் துயரம். புல்லி – கள்வர் கோமானாகிய புல்லி.
விளக்கம் : ஊர் தீப்பட்ட காலை எழுந்த அலராரவாரத்தினுங் காட்டில், பிரிவால் சேரியிடை எழுந்த அலர் பெரிதாயிருந்தது என்கின்றாள். தானுற்ற காமநோயது கொடுமை மிகுதியையும், அதனால் ஊரகத்தெழுந்த பழியது மிகுதியையும் இவ்வாறு கூறுகின்றாள். 'நல்கார் நீத்தனர் ஆயினும், நட்டனர் நல்குவர்" என்று உரைத்தது தனது கற்புமேம்பாட்டினைக் காட்டிக் கூறியதாகும்.
இறைச்சி : 'களிறு பாம்பின் வாய்ப்பட அஞ்சிய பிடியினது பூசல் மலைப்பிளப்பெல்லாம் சென்று எதிரொலிக்குமாறு போலத், தலைவன் பிரியத் தான்கொண்ட துயர மிகுதியினால் எழுந்த ஊரலர், சேரியிடமெல்லாம் சென்று பரவினும் பரவுக' என்கின்றனள்.