மலரும் உள்ளம்-1/நல்ல கேள்வி
Appearance
ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன்
அரச மரத்தில் ஏறினன்;
பாடு பட்டுத் தழைகள் தம்மைப்
பறித்துக் கீழே போட்டனன்.
ஆசை யோடு ஆட்டு மந்தை
அவற்றைத் தின்னும் வேளையில்
நாச வேலை செய்ய எண்ணி
நாலு ஐந்து ஆடுகள்,
அம்பு பாய்ந்து பெயர்த்த தைப்போல்
அரச மரத்துப் பட்டையைக்
கொம்பி னாலே வேக மாசுக்
குத்திப் பெயர்க்க லாயின.
அரச மரத்தில் இருந்த சிறுவன்
அந்தக் காட்சி கண்டதும்,
இறங்கி வந்து அவைகள் தம்மை
இகழ்ந்து மிகவும் பேசினன்:
“கழுத்தை வெட்டிக் கறிச மைத்துக்
களித்தே உண்பார், மனிதர்கள்.
குளிரைப் போக்க அவர்க ளுக்குக்
கொடுக்கின் றீர்கள், கம்பளி.
தின்று வளர இலையும், தழையும்
தினமும் தந்த மரத்தினை
நன்றி கெட்டுத் தோல் உரித்தல்
நியாய மாமோ, கூறுவீர்?”