மலரும் உள்ளம்-1/வேடிக்கைப் பாடல்கள்
நெட்டை யான கால்களும்,
நீண்ட கழுத்தும் உடையதாம்.
ஒட்டைச் சிவிங்கி ஒன்றுதான்
உலகில் எனக்குப் பிடித்தது!
ஆனை, குதிரை மீதிலே
அரசர் பவனி வருகிறார்.
நானும் ஒட்டைச் சிவிங்கிமேல்
நன்கு ஏறிச் சுற்றுவேன்!
பழுத்த பழத்தை மரத்திலே
பார்த்து விட்டால், சிவிங்கியின்
கழுத்தில் உடனே ஏறுவேன்;
கையை நீட்டிப் பிடுங்குவேன்!
நீண்ட பாலம் அமைக்கலாம்,
நெட்டை யான கழுத்தினால்!
தாண்டிச் செல்வேன் ஓடையை,
தயக்கம் எதுவும் இன்றியே!
ஓடிப் பிடிக்கும் ஆட்டத்தில்
ஒருவ ருக்கும் அகப்படேன்.
ஓடிச் சென்று சிவிங்கிமேல்
உடனே ஏறிக் கொள்ளுவேன்!
நெட்டை யான கழுத்திலே
தொட்டில் ஒன்றைக் கட்டுவேன்.
கட்டிக் கரும்புத் தங்கையை
இட்டு அதனில் ஆட்டுவேன்!
எச்சில் ஊறச் செய்திடும்
இனிப்புப் பண்டம் யாவையும்
உச்சி மீது அன்னையும்
ஒளித்து இனியும் வைப்பளோ?
நடக்கும் ஏணி இருக்கையில்
நமக்கு என்ன பயமடா?
இடக்குப் பண்ணி டாதடா!
எங்கும் சுற்ற லாமடா!
பூவின்மீது வண்ணாத்திப்
பூச்சி ஒன்றடா—அதைப்
பிடிக்கஎண்ணித் துணியைமேலே
போட்டே னேயடா.
என்னை அதுவும் ஏய்த்துவிட்டுப்
பறந்து போச்சடா—உடன்,
எனதுதுணியை வேகமாக
இழுத்தே னேயடா.
செடியில்மாட்டிக் கொண்டுதுணியும்
கிழிந்து போச்சடா—இது
தெரிந்துபோனால், அப்பாஎன்னை
அடிப்பார், ஐயோடா!
பூக்கள் விற்கும் கடையருகே
போனேன். உடனே, அடடாவோ !
மூக்கில் வாசனை புகுந்ததுவே,
முகத்தில் இன்பம் பொங்கியதே.
‘பத்து விரல்கள் படைத்ததுபோல்
பற்பல மூக்கைப் படைத்திருந்தால்
இத்தனை மணமும் மூக்கினுள்ளே
இழுத்திட லாமே’என நினைத்தேன்.
சாக்கடை தங்கிய வீதியிலே
சற்றே ஒருநாள் நடந்திடவே
மூக்கைத் துளைத்தது, துர்நாற்றம்.
முகமும் சுருங்கிப் போனதுவே!
‘மூக்கே இல்லா திருந்திட்டால்,
மிகமிக நல்லது’ என்றெண்ணி
மூக்கைப் பிடித்துக் கொண்டேநான்
மும்முர மாக நடந்தேனே!
படுத்து உறங்கும் போதிலே
பயமில் லாமல் என்னையே
கடித்து எழுப்பும் மூட்டையே,
காலம் கிட்டி விட்டதோ?
இரத்தம் உடலில் ஊறவே,
ஏது, ஏதோ மருந்துகள்
சிரத்தை யோடு தின்பதும்
தினமும் உன்னை வளர்க்கவோ?
இரவில் விழிக்கச் செய்கிறாய்.
இரத்த மெல்லாம் குடிக்கிறாய்.
பரவும் உன்றன் வம்சமே
படுத்தும் பாடு கொஞ்சமோ?
இருக்கும் இடத்தைத் தேடியே
இச்சை யோடு வருகிறாய்.
‘நறுக்கு, நறுக்கு’ என்றுநீ
நன்கு கடித்து விடுகிறாய்.
படுக்கும் கட்டில், மெத்தைகள்,
பாய்கள், பெஞ்சு யாவிலும்
இடுக்கில் இருந்து கொண்டுநீ
என்னைக் கடித்து விடுகிறாய்.
இலையைப் போல இருந்தநீ
‘இட்லி’ போலப் பருக்கிறாய்.
கொலைதான் செய்யப் போகிறேன்,
கொடிய மூட்டைப் பூச்சியே!
கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல்,
எழுந்திருப்பாயே.
‘கொக்க ரக்கோ!’ என்று நீயும்
கூவிடுவாயே!
உறங்கு கின்ற சேவ லேநீ
எழுந்திருப்பாயே.
உதித்து விட்டான், சூரியனும்.
கூவிடுவாயே!
எனக்கு ஒற்றை வாயைத் தந்த
பிரம்மதேவனே,
ஏனோ கூட மூன்று வாய்கள்
பிரம்மதேவனே,
உனக்கு மட்டும் வைத்துக் கொண்டாய்
பிரம்மதேவனே?
உலகில் இதுவும் நீதி யாமோ
பிரம்மதேவனே!
பட்ச ணங்கள் அதிக மாகத்
தின்றுதீர்க்கவோ
படைத்துக் கொண்டாய் நான்கு வாய்கள்
பிரம்மதேவனே.
பட்ச பாதம், பட்ச பாதம்,
பிரம்மதேவனே,
படைக்கும் போதே காட்ட லாமோ
பிரம்மதேவனே?
பட்டணம் செல்ல ஒருராஜா
பயணம் வைத்தார். அவருடனே,
ஒன்றாய்ச் செல்ல அவருடைய
ஒன்பது மனைவியர் புறப்படவே,
ஒவ்வொரு மனைவியின் பின்னாலும்
ஒன்பது குழந்தைகள் சென்றனராம்.
ஒவ்வொரு குழந்தையின் பின்னாலே
ஒன்பது நாய்கள் புறப்படவே,
ஒவ்வொரு நாயின் பின்னாலும்
ஒன்பது குட்டிகள் சென்றனவாம்.
பட்டணம் செல்ல ராஜனுடன்
பயணம் வைத்தவர் மொத்தத்தில்
எத்தனை என்று சரியாக
என்னிடம் சொல்வாய் ‘பட்’டென்று?
★★★
தெரிந்திட வில்லை யானாலோ
திருப்பிடு இதனைத் தலைகீழாய்!
படிக்க எண்ணிப் பாலனும்
பாடப் புத்த கத்தினை
எடுத்து வைத்துக் கொண்டனன்;
இருந்து படிக்க லாயினன்.
சிறிது நேரம் ஆனது.
சிரமம் இன்றிப் படிக்கவே,
அருகில் இருந்த தலையணை
அதனில் சாய்ந்து கொண்டனன்.
சற்று நேரம் ஆனது.
சாய்ந்து கொண்டே படித்தவன்,
முற்றும் உடலை நீட்டினன்.
மிகவும் சுகமாய்ப் படுத்தனன்.
படுத்துக் கொண்டே படித்தவன்
பாதி படிக்கும். முன்னரே
படுத்துத் தூங்கிப் போயினன்;
பலத்த குறட்டை விட்டனன்!
மறுநாட் காலை பரீட்சையில்
வந்த கேள்வி கண்டதும்
பரக்கப் பரக்க விழித்தனன் :
பரீட்சை ‘கோட்டை’ விட்டனன்?
வில்லெ டுத்துப் பூனையார்
விரைந்து ஓடும் எலிகளைக்
கொல்ல ஆசை கொள்கிறார்;
குறியும் பார்த்து எய்கிறார்!
துறட்டி ஒன்றை யானையார்
துதிக்கை நுனியில் ஆவலாய்
இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;
இளநீர் யாவும் பறிக்கிறார்!
உண்டி வில்லால் மந்தியார்,
உயரே உள்ள பழங்களைக்
கண்டு ஓங்கி அடிக்கிறார்;
கனிகள் தம்மை உதிர்க்கிறார்!
குட்டி நாயார் உச்சியில்
ரொட்டிப் பெட்டி இருப்பதை,
எட்டி எடுத்துத் தின்னவே,
ஏணி ஏறிச் செல்கிறார்!
“உங்க ளைப்போல் எதையுமே
யுக்தி யோடு செய்திட,
எங்க ளுக்கும் தெரியுமே!”
என்றோ காட்டு கின்றன!
ஆந்தை, ஆந்தை, பகலெல்லாம்
அடைந்து கிடப்பது எங்கே, சொல்?
தேடித் தேடிப் பார்த்தேன்நான்.
தெரிய வில்லை, உன்னுருவம்.
களவு செய்தே அகப்பட்ட
கள்ளன் போலே விழிப்பதுஏன்?
பொந்துக் குள்ளே இருப்பதுஏன்?
பொழுது பட்டே வருவதுஏன்?
முட்டைக் கண்கள் கண்டால்நாம்
மிரள மாட்டோம்; வந்திடுவாய்
வெளிச்சம் கண்டால் கூசிடுமோ,
விரிந்த கண்கள்? கூறிடுவாய்.
“அழகை ஈசன் தரவில்லை.
அதனால் நானும் வரவில்லை”
என்றா காரணம் கூறுகிறாய்?
இதற்கேன் வெட்கம்; வந்திடுவாய்.
ஆந்தை, ஆந்தை அன்றொருநாள்
அப்பா உனது கதைசொன்னார்.
கண்ணைச் சுழற்ற மாட்டாயாம் ;
கழுத்தைத் திருப்பியே பார்ப்பாயாம்.
புத்தி உனக்கு அதிகமெனப்
புகழ்ந்தார் தந்தை மேன்மேலும்.
புத்தி மிகுந்த அறிஞரேநீர்
புத்தகம் எத்தனை எழுதிவிட்டீர்?
எந்தக் கடையில் விற்றிடுமோ?
என்ன விலைக்குக் கிடைத்திடுமோ?
சும்மா விழித்துப் பார்ப்பதுஏன்?
சொன்னால் வாய்தான் வலித்திடுமோ?
“அப்பா, சினிமாப் பார்த்திடவே,
ஆறணா வேண்டும்” எனக்கேட்டால்,
“கரடி யாகக் கத்துவதேன்?
காலணாக் கூடத் தரமாட்டேன்”
என்பார் எங்கள் அப்பாவும்,
என்னே செய்வேன், தோழர்களே !
★★★
அடுப்பங் கரைக்கும், முன்புறத்து
அறைக்கும் இருமுறை போய்வந்தால்,
“புனுகு பூனை போலவேநீ
போவதும், வருவதும் ஏனோதான்!”
என்றே அம்மா திட்டுகிறாள்.
என்னே செய்வேன், தோழர்களே!
★★★
கேள்விகள் ஏதும் தெரியாமல்
கேட்டால், உடனே என் அண்ணா,
அடிப்பார்; உதைப்பார்; அத்துடனே,
ஆத்திர முடனே எனைப்பார்த்து,
“எத்தனை அடிகள் கொடுத்தாலும்
ஏண்டா, உனக்கு வலிக்காதோ?
காண்டா மிருகம்! போடாபோ.
கருத்தாய்ப் படிப்பாய் இனியேனும்”
என்பார், ஐயோ! நானும்தான்
என்னே செய்வேன், தோழர்களே!
★★★
சீப்பைக் காணோம் என்றலோ,
‘சிடுசிடு’ எனவே என்அக்காள்
“ஏண்டா குரங்கே, என்சீப்பை
எங்கே ஒளித்தாய்? சொல்லிடுவாய்”
என்றே என்னைக் கேட்கின்றாள்.
என்னே செய்வேன். தோழர்களே!
★★★
கணக்கைக் கொடுத்ததும், விடைசொல்லக்
கருத்துடன் எழுந்து, “ஸார், ஸார், ஸார்,
எனக்குத் தெரியும் விடை”யென்றால்
ஏனோ ஆசான் சீறுகிறார்!
“ஆமாம், கணக்கில் புலியேதான்,
அமர்வாய் உனது இடத்தினிலே”
என்றே மட்டம் தட்டுகிறார்.
என்னே செய்வேன். தோழர்களே!
★★★
காண்டா மிருகம், கரடி, புலி,
காட்டு மிருகம் எல்லாமே
நான்தான் என்றனர், பெரியோர்கள்
நானொரு வார்த்தை கூறிடுவேன்;
மிருகக் காட்சி கண்டிடவே
வீணாய்க் காசைக் கொடுக்காமல்,
என்னைப் பார்த்தே மகிழுங்கள்.
எல்லா மிருகமும் நான்தானே!
மூக்கு வெளுத்திடுமாம்;
முட்டிக்கால் தட்டிடுமாம்;
காதுமே நீண்டிடுமாம்:
‘காள்கா’ளென்று கத்திடுமாம்.
அதுதான்,
க…ழு…தை!
மொட்டை | அடித்துப் |
பட்டை | சாத்திக் |
கொட்டை | அணிந்து |
சட்டை | இன்றிக் |
கட்டை | மாட்டி, |
வட்டம் | இட்டும் |
பட்டைச் | சாதம் |
கிட்டா | ததனால் |
ஒட்டி | உலர்ந்த |
சட்டிச் | சாமியார் |
‘செட்’டைச் | சேர்ந்த |
குட்டைச் | சாமியே, |
‘குட்மார் | னிங்’ஸார்! |
ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்!
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா