உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் நாடகங்கள்/நீதிதேவன் மயக்கம்

விக்கிமூலம் இலிருந்து

நீதிதேவன் மயக்கம்


[பூலோகத்திலே புதுக் கருத்துக்கள் பரவிவிட்டனவாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன், என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன், வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக, இராவணனின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், பழைய கோர்ட் தீர்ப்பின்படி இராவணன் குற்றவாளிதான், இலங்கை அழிந்தது நியாயமே, இராவணன் இரக்கமற்ற அரக்கன், என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான். கோர்ட்டிலே, நீதிதேவன் தலைமை தாங்குகிறார். கம்பர், ஓலைச் சுவடிகளுடன், தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.]
நீதி: இலங்காதிபனே! உன் கட்சியை எடுத்துக்கூற யாரை நியமித்திருக்கிறீர்?

இரா: என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே! உமது கவிதையிலே, கொஞ்சம் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள்.

[கம்பர் புன்னகை புரிகிறார்.]

நீதி: உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப்போகிறீரா?

இரா: ஆமாம்! நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன்.

நீதி: வணங்காமுடியான் என்றோர் பெயர் உமக்குண்டா?

கம்: பெயர் என்று கூறுவதைவிட, வசைமொழி என்பது பொருந்தும்.

இரா: பொருத்தம் - பார்ப்பதானால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம்.

நீதி: சொல் விளக்கத்துக்குள் நுழையவேண்டாம். அவ்விதம் அழைக்கப்பட்டதுண்டா?

இரா: ஆமாம்!

நீதி : ஏன்? இரா : நான் கேட்கவேண்டிய கேள்வி அல்லவா அது!

கம்: எவருக்கும் வணங்கினதில்லை, மதிப்பதில்லை, அவ்வளவு மண்டைக் கர்வம்......என்று பொருள்படும்.

இரா: பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே! நீரே தான் சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக்கர்வம் என்று!

நீதி : எவரையும் வணங்காத காரணம்?

இரா: அவசியம் ஏற்படாததால்!

நீதி : தக்க சமாதானமா அது?

இரா: நான்மட்டுமா? எத்தனையோ மண்டலாதிபதிகள் வெற்றி வீரர்களாக இருக்கும்வரையிலே, வணங்காமுடி மன்னர்களாகத்தான் இருந்தனர்.

கம்: அவர்கள் கூடத், தமது இன்பவல்லிகளின் தாளிலே வீழ்ந்ததுண்டு, மஞ்சத்திலே.........

இரா: நமது கம்பருக்கு, அந்த ரசவர்ணனையிலே அபாரத் திறமை!

நீதி: மாலைநேரப் பேச்சு, காலைவேலைக்கு உதவாது.

இரா: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதிவீரர்கள், மற்றொருவருக்கு வணங்காமல், வாழ்ந்தனர், அதுபோலத்தான், நானும் வணங்காமுடியனாக வாழ்ந்துவந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம், வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்.

கம்: அந்த வாசகத்தைப்பற்றிய விவாதத்தை விட்டுவிடலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்காமுடியன் என்ற பெயர் துரியோதனனுக்கும் உண்டு! ஆகவே இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிட வேண்டாம்; முக்கியமான விஷயத்தைக் கவனிப்போம். ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி, பரமனை வேண்டித் தவம் செய்துவந்த முனிபுங்கவர்களின் யாகயோகாதி காரியங்களை இலங்காதிபன், கெடுத்து நாசமாக்கி வந்தான். இப்பெருங் குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்?

இரா : தவம், ஆரியமுறை, அதை என் இனக் கலாசார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது, யாகம் என்பது ஜீவன்களை வதைத்து, பொருளைப் பாழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின் சித்தாந்தம். ஆகவே என் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலே, ஆரியர் பிரவேசித்து, என் கலாசார விரோதமான காரியத்தைச் செய்து, அதன்மூலம் என் கட்டளையை மீறினதால், நான் யாகங்களை அழித்தேன்.

கம்: அதைத்தான் குற்றம் என்று கூறுகிறோம்.

இரா : அது எப்படிக் குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு, அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையிலிருந்த தண்டகாரண்யத்திலே தவசி வேடத்திலே புகுந்து என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர், அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக, அவனுடைய இராஜ்யத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குல முறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய இராமன் ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத்தவசியைக் கொன்றான்! அவன் உரிமை அது என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது, தவறாகுமா?

கம்: அதுகூடக் கிடக்கட்டும். நீ இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன்! ஆகவேதான் உன்னை இராமர் கொன்று இலங்கையை அழித்தார். இரக்கம் உயர்ந்த பண்பு! அதை இழந்தவர்களைத் தண்டிப்பது, தேவப் பிரீதியான காரியம், நியாயம், தர்மம்; அவஸ்யம்!

நீதி: (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இராவணன் நடந்து கொண்டவைகளை விவரமாகக் கூறும்.....

கம்: ஆஹா! தடையின்றி. இராவணன் மகாபண்டிதன், வல்லமை மிக்கவன், தவசியும்கூட, சாமவேதம் பாடினவன்! சௌர்யத்தில் நிகரற்றவன். எல்லாம் இருந்தது அவனிடம், இரக்கம் என்ற ஒரு பொருள்தான் இல்லை. இரக்கமின்றி இராவணன் செய்த பல கொடுஞ் செயல்களை நான் விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.

இரா: கம்பரே! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்கன் என்பது குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப் போகவேண்டும்? நானே கூறுகிறேன், கேளும். பூங்கொடி துவள்வது போலானாள், அந்தப் பெண் அவிர்மேனியாள், சீதா நான் சிறை எடுத்தபோது! நான் இரக்கங் காட்டவில்லை!

அலறினாள், நான் அரக்கன் என்று அறிந்ததும், நான் இரக்கங்காட்டவில்லை! சபித்துவிடுவேன் என்றாள். புன்னகை புரிந்தேன்! அழுதாள், சிரித்தேன்! பிராணபதே! என்று கூவினாள், எதற்கும் நான் இரக்கங்காட்டவில்லை!

அடே துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்மபத்தினியையா இந்தக்கோலம் செய்கிறாய் என்று வயோத்திக சடாயு வாய்விட்டு அலறினான். சீதை உயிர்சோர, உடல்சோர, விழியில் நீர்வழிய, கூந்தல்சரிய, ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக் கண்டு! போடாபோ! என்றேன். போரிடத் துணிந்தான், போக்கினேன் அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா? இல்லை!

அரசிளங்குமரி சீதையை அசோகவனத்திலே சிறை வைத்தேன். ராஜபோகத்தில் இருக்கவேண்டிய அந்த ரமணியைக் காவலில் வைத்தேன். சேடியர் புடைசூழ நந்தவனத்திலே ஆடிப்பாடி இருக்கவேண்டிய அழகியை, அரக்கமாதர் உருட்டிமிரட்ட, அவள் அஞ்சும்படியான நிலையிலே வைத்தேன். அந்த அழகியின் கண்கள் குளமாயின! நான் இரக்கம்காட்டினேனா? இல்லை! இரக்கம் காட்டவில்லை! தேகம் துரும்பாக இளைத்துவிடுகிறது, தேவ காலனே! என்று என்னிடம் கூறினர். கோதாக் கூந்தல்! பேசா வாய்! வற்றாத ஊற்றெனக் கண்கள்! வைதேஹி, விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள் என்று சொன்னார்கள்.

பழம், பால், மது, மாமிசம், மலர், எதனையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி என்று தெரிவித்தார்கள்! சரி! புத்தி கூறு! மிரட்டு! கொன்றுபோடுவேன் என்று சொல்! பிடிவாதம் கூடாது என்று தெரிவி! தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று சொல்!—என்றுதான் என்னிடம் சேதி சொன்னவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். இரக்கம் காட்டவில்லை!

கொலுமண்டபத்திலே, கொட்டி அளந்தான் விபீஷணன்! தம்பீ! உனக்குத் தாசர் புத்தித் தலைக்கேறிவிட்டதடா! என்று கூறி உட்காரவைத்தேன். இரக்கம் காட்டவில்லை!

போதுமா? இன்னம் ஏதாகிலும் கூறட்டுமா, ஈரமற்ற நெஞ்சினன் நான் என்பதற்கான ஆதாரங்கள்! இதேது, அரக்கன் முரடன் மட்டுமில்லை, முட்டாளாகவுமன்றோ இருக்கிறான், எதிர்க்கட்சிக்காரன் கூறுவதைவிட, ஆணித்தரமாகக் குற்றப்பட்டியைத் திட்டமாகக் கூறுகிறானே, என்று யோசிக்கிறீர்களா?

இன்னமும் கொஞ்சம் செந்தேன் ஊற்றுகிறேன். உங்கள் சிந்தனைக்கு!

களத்திலே, என் தம்பி மாண்டான்! கதறினர் மக்கள்! என் மகன் மாண்டான், மண்டோதரி மாரடித்து அழுதாள்! என் மக்களின் பிணம், மலைமலையாகக் குவிந்தன, எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று! அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும், ஏவலரின் பணிவான பேச்சும் காவலரின் கெம்பீர முழக்கமும், எந்த இலங்கையிலே நித்ய நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுத்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல், பெண்டிரின் பெருங்குரல், பிணங்களைக கொத்தவந்த பெரும் பறவைகளின் சிறகொலி, இவை நிரம்பின! நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை.
[இராவணன், படபடவென்று பேசினவன், கொஞ்சம் களைத்து உட்கார்ந்தான். கோர்ட்டாரின் உத்தரவின் பேரில் அவனுக்கு ஒரு கோப்பையிலே சோம ரசம் தருகிறார்கள்! இராவணன் புன்னகையுடன் மறுத்து விடுகிறான்.]

"என் அரசு உலர்ந்து, அது தெரிந்து என் உற்சாகம் உலர்ந்தபோது, இதுபோல் 'ரசம்' நான் பருகிடவில்லை! பழி வாங்குதல் எனும் பானத்தையே விரும்பினேன்! இரக்கம் என்ற ஒரு பொருள் இலா, அரக்கன்! கம்பரே! அதுதானே, உமது கவிதா நடையிலே உள்ள, வாசகம், என்மீதுள்ள குற்றச்சாட்டு! இராவணன், ஏன் அழிக்கப்பட்டான்? அவன், இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கனானபடியால்! மிகச் சுருக்கமாக முடித்துவிடுகிறீர், கவியே!

நான், என்மீது குற்றம் சாட்டுபவருக்கு, சிரமம் அதிகம் கூடாது என்பதற்காகத்தான், எந்தெந்த சமயத்திலே, நான் இரக்கமின்றி நயந்துகொண்டேன் என்ற விஷயங்களைக் கூறினேன்.

கம்: எங்களால்கூட முடியாது; அவ்வளவு தெளிவாகக் கூற!

இரா: இதைவிடத் தெளிவாக இருக்கும், இனி என்னுடைய பதில்.

நீதி: பலசமயங்களில், இரக்கமின்றி நடந்துகொண்டதை, விவரமாக எடுத்துக் கூறினபிறகு, பதில் என்ன இருக்கிறது தெரிவிக்க?

இரா: பதில், ஏராளமாக இருக்கிறது. அநீதியுடன் நடந்தாகவேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றங்களைக்கூட நீதியின் பக்கம் இழுக்கககூடிய அளவு, பதில் உண்டு, கேளுங்கள். இரக்கம் காட்டவில்லை நான்? யாரிடம்? ஒரு பெண்பாலிடம்! அழுத கண்களுடன் அசோக வனத்திலே கிடந்த அபலையிடம்! ஏன்? அரக்கனல்லவா நான்! இரக்கம் என்ற ஒரு பொருள்தானே கிடையாது, கம்பர் கூறியதுபோல, கம்பர் கூறுவதானாலும் சரியே, தாங்கள் கூறினாலும் சரியே, இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூறமுடியுமா? இன்ன விதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டமாகக் கூறமுடியுமா?

கம்: இலங்காதிபதி, வழக்குமன்றத்திலே நிற்கிறார், பள்ளிக்கூடத்திலே அல்ல!

இரா: நீதியின் கூடத்திலே நிறுத்தப்பட்டு இருக்கிறேன், ஆகவேதான் என்மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மையை, குற்றம் சாட்டுபவர்கள் முதலில் விளக்கவேண்டும் என்று கேட்கிறேன். உங்களுக்குத் தண்டிக்கமட்டுந்தான் தெரியுமா? விளக்கவும் தெரியவேண்டுமே! கூறுங்கள் இரக்கம் என்றால் என்ன? எது இரக்கம்? உங்களைக் கேட்கிறேன்? உங்களை! உங்களை! ஏன் ஊமையாகிவிட்டீர்கள்? இரக்கம் என்றால் என்ன பொருள்?

நீதி: இரக்கம் என்றால், பிறருடைய நிலைமை கண்டு வேதனையைக் கண்டு, பரிதாபப்படுவது, மனம் இளகுவது, இளகி அவர்களுக்கு இதம் செய்வது........

கம்: இதம் செய்யாவிட்டாலும் போகிறது, இன்னல் செய்யாமலாவது இருப்பது.

இரா: அதாவது தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்கவேண்டும். அந்த ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான், அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது, அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது. கூடுமானால், அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது; இதுதானே இரக்கம்.

கம்: மகாபண்டிதனல்லவா! அருமையான வியாக்யானம் செய்துவிட்டாய் இரக்கம் என்ற தத்துவத்திற்கு!

இரா: தாகவிடாயால் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு புள்ளிமான்! அடவியிலே நீர்தேடி அலைகிறது! அந்த நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது, மான் மிரள்கிறது, சிறுத்தை அதன் நிலை கண்டு, மனம் இளகி, பாபம், இந்த மானைக் கொல்லலாகாது என்று தீர்மானித்து, இரக்கப்பட்டு, மானை அருகாமையிலுள்ள நீர் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அது நீர் பருகும்போது வேறு துஷ்டமிருகத்தால் ஒரு தீங்கும் நேரிடாதபடி காத்துக்கொண்டிருக்கிறது; அதுதானே இரக்கம்!

கம்: சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத்தியமா என்பது வேறு விஷயம்.

இரா: மானை அம்புஎய்திக் கொல்ல வருகிறான் வேடன். வேடனுக்கு, இரக்கத்தின் மேன்மையை எடுத்துக்கூறி, தவசி தடுக்கப்பார்க்கிறார். வேடன் என்ன செய்வான்?

கம்: வேடனா? அவன் தவசியின் பேச்சைத்தள்ளி விடுவான். முரடனல்லவா அவன்?

இரா: முரடனாகமட்டுமா இருக்கிறான். ஞானக்கண்ணில்லாக் குருடன்.

கம்: வாஸ்தவம்! வாஸ்தவம்!

இரா: அந்த முரடன், குருடன், ஊமையல்ல! அவன் என்ன சொல்வான் தெரியுமா, தவசியைப் பார்த்து? முனி புங்கவரே! என்தொழில் காட்டிலே வேட்டையாடுவது. இந்த மானைநான் கொன்றால்தான் இன்றைய வாழ்வு எனக்கு. இரக்கமில்லையா என்று கேட்கிறீர், தவசியே! பரமனையே நோக்கித் தவம் புரியும் உமது கூட்டத்தவர், யாகங்களிலே, ஆடுகளைப் பலியாக்குகிறீர்களே, அந்தச் சமயம், இரக்கம் என்ற ஒரு பொருள் உம்மை விட்டுப் போய்விடும் காரணம் என்ன? என்று கேட்பான். கேட்டான் என்று கருதுவோம், முனிவர் என்ன சொல்வார்!

கம்: முட்டாளே! யாகம் பகவத்ப்ரீதிக்கான காரியம், என்று கூறுவார்.

இரா: இறைவன் வழிப்பாட்டுக்கான காரியத்துக்கும் இரக்கம் என்ற பண்புக்கும் பகையா ஸ்வாமீ! என்று வேடன் கேட்பானே!

நீதி: கற்பனைக்காட்சிகள், ஏன்! உன் கட்சியைக்கூறு. இரக்கம் என்றால், பிறர் கஷ்டப்படுவது கண்டு மனம் இளகுவது அந்த உயரிய பண்பு உன்னிடம் இல்லை. இருந்ததா?

இரா: இல்லை! நானே கூறினேனே, எந்தெந்தச் சமயங்களிலே இரக்கம் கொள்ளவில்லை என்பதை. நான், இரக்கப்பட்டேன் என்று புளுகுபேசித் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. என்வாதம்வேறு.

நீதி: அது என்னவாதம்? கூறும் கேட்போம்.

இரா: இரக்கம், எனக்கு இல்லை, என்று கூறி, அந்த ஒரு பொருள் இல்லாத நான் அரக்கன் என்று கூறி, அரக்கனான நான் அழிக்கப்பட்டது; இரக்கம் எனக்கு இல்லாததால்தான் என்று பேசுகிறார்களே அது வீண் அபவாதம்! ஏனெனில், ஒருவனுடைய சிந்தனையும் செயலும், அவனவனுடைய தொழில் வாழ்க்கைமுறை, இலட்சியம், என்பனவற்றைப் பொறுத்திருக்கிறது. அந்த நிலையிலே, கருணாகரன் என்று புகழப்படுபவர்களும் கூட. பலசமயங்களில் இரக்கமற்று இருந்திருக்கிறார்கள். இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால், அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்!

நீதி: விசித்தரமான வாதமாக இருக்கிறது.

இரா : வேடன், இரக்கத்தைக் கொள்ள முடியாததற்குக் காரணம் அவனுடைய வாழ்க்கைமுறை, தொழில்! வேதமோதி வேள்வி நடாத்தும் முனிவர்கள் யாகப் பசுக்களைச் சித்திரவதை செய்யும்போது இரக்கம் காட்டாதது, அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர் இலட்சியத்துக்கு அதிக மதிப்புத் தருவதே காரணம். வேடனின் வாழ்வும், வேதமோதியின் உயர்வும், அவரவருக்கு, இரக்கத்தைவிட அதிக அவசியமுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான் தோல் ஆசனங்கள், இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை!! அவர்கள் அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்?

க: தபோதனர்களை, அரக்கராக்கி விட்டார் இலங்கேசன்! இனித் தயாபரனையும் குற்றம் சாட்டுவார்போலும்.

இரா: தாய்பிடிக்கத் தந்தை அறுக்கச் சீராளனைக் கரியாக்கும்படி, தயாபரன் சோதித்தது, இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத்தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்தால், சிவனாரை நோக்கி, "ஐயனே! பாலகனைக் கொன்று கறிசமைக்கச் சொல்லுகிறீரே? எப்படி மனம்வரும்? இரக்கம் குறுக்கிடுமே" என்று கூறியிருந்திருப்பார், உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும், அல்லவா?

க: பேசினால் மிருகத்தின் கதை, இல்லாவிட்டால் மகேசன் கதை, இவ்வளவுதானா? இவை இரண்டும், வாதத்துக்குத் தக்கவையாகா, ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக்கதை, மற்றொன்று மனித நீதிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத மகேஸ்வரன் விஷயம். பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தா.

நீ: கம்பர் கூறினது முற்றிலும் உண்மை! காட்டில் உலாவும் புலியும் கைலையில் உலவும் ஈசனும் கோர்ட் விவகாரத்திலே உனக்கு உதவி செய்ய முடியாது.

இரா: வேள்வி செய்யும் முனிவர்கள், இரக்கம் கொள்ளவில்லை என்பதைக் கூறினேனே.

நீதி: ஆமாம் கம்பரே! குறித்துக்கொள்ளும் சரி, இராவணரே! வேறு உண்டோ?

இரா: ஏராளமாக! தாங்கள், எதற்குக் கட்டுப்பட்டவர்?

நீதி: நீதிக்கு!

இரா: மண்டோதரி, இதுசமயம் இங்கு நின்று கதறினால்....

நீதி: நீதிநெறியினின்றும் நான் அப்போதும் தவறமுடியாது.

இரா: அவளுடைய கண்ணீரைக் கண்டும்......

நீதி: கண்ணீருக்காகக் கடமையினின்றும் தவறமாட்டேன்.

இரா: அப்படியானால், கடமை பெரிதா, இரக்கம் பெரிதா?

நீதி: சிக்கல் நிறைந்த கேள்வி........

இரா: சிக்கல் நிறைந்ததுதான், ஆனால் பலருக்கும் இந்தப் பிரச்னை வந்தே தீரும். கடமையின்படிதானே நீர் நடந்தாக வேண்டும்.

நீதி: ஆமாம்!

இரா: கடமையை நிறைவேற்றுகையிலே, அச்சம், தயை, தாட்சணியம், எதுவும் குறுக்கிடக் கூடாது. ஆக, அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும்போதெல்லாம் அரக்கர்தானே!

நீதி: கம்பரே ! குறித்துக்கொள்ளும்!

க: உயர்ந்த இலட்சியத்துக்காக உழைக்கிறவர்கள், இரக்கம் என்பதை இலட்சியப்படுத்தாதது குற்றமல்ல!

இரா: ஆம்! ஆனால், எது உயர்ந்த இலட்சயம், எது குறைந்தது என்பது, அவரவர்களின், சொந்த அபிப்பிராயம், அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அவரவர்களின் தொழில், வாழ்க்கைமுறை ஜீவியத்திலே அவர்களுக்கென்று ஏற்பட்டுவிடும் குறிக்கோள் இவற்றைப் பொறுத்தது.

நீதி: சரி ! வேறு உண்டோ?

இரா: ஏன் இல்லை! தபோதனரும் நீதிபதியும் மட்டுந்தானா? என்னைப் போன்றவர்கள், இன்னும் ஏராளம். சாட்சிகளை அழையுங்கள் இனி.

[சாட்சிகள் பட்டியைப் பார்க்கிறார் நீதிதேவன்.]
[சூர்ப்பனகை வருகிறாள்.]

இரா: தங்கையே! உன் கதையைக் கூறு.

நீதி: எழுதிக் கொடுத்து விடட்டுமே!

இரா: ஆமாம்! ஆயிரமாயிரம் வீரர்களுக்கு அதிகாரியாக வீரமொழி பேசிவந்த என் தங்கை, இப்போது, நாலுபேர் நடுவே நின்று பேசமுடியாதபடி, தான் ஆக்கப் பட்டுவிட்டாள்.

[சூர்ப்பனகை ஒரு ஓலையைக் கொடுக்கிறாள்.

கோர்ட்டிலே ஒருவர் அதை வாசிக்கிறார்]

"இராம இலட்சுமணரைக் காட்டிலே கண்டேன். மூத்தவரிடம் மோகம் கொண்டேன், எவ்வளவோ, எடுத்துக் கூறினேன், காதல் கனலாகி என்னைத்தகித்தது. மன்றாடினேன்!"

இரா: கொஞ்சம் நிறுத்து! நீதிதேவா! ஒருபெண், அரச குடும்பத்தவள், அதிலும் வணங்காது வாழ்ந்துவந்த என்தங்கை வலியச்சென்று தன்காதலை வாய்விட்டுக் கூறினாள். இராமன் மறுத்தான்! ஏன்?

க: இது தெரியாதா! ஸ்ரீஇராமசந்திரர், ஏகபத்தினி விரதர்?

இரா: ஏகபத்னி விரதம் என்ற இலட்சியத்திலே அவருக்குப் பற்றுதல்.

க: ஆமாம்!

இரா : அந்த இலட்சியத்தை அவர் பெரிதென மதித்தார்.

க: பெரிதென மட்டுமல்ல, உயிரென மதித்தார்.

இரா: தாம் உயிரென மதித்த ஒரு இலட்சியத்தின்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, ஒருமங்கையின் கண்ணீரைக் கண்டால் இயற்கையாகவரும், இரக்கத்தை இரவிகுலச்சோமன், தள்ளிவிட்டார்.

க: இரக்கம் காட்டுவதா இந்தத்தூர்த்தையிடம்?

இரா: காதலைத் தெரிவிப்பவர் தூர்த்தையா?

க: இஷ்டமில்லை என்று கூறினபிறகு, வலியச் சென்று மேலே விழுவது, உயர்குல மங்கையின் பண்போ?

இரா: கம்பரே! என்தங்கை சூர்ப்பனகை கண்ட ஆடவர் மீது காமுற்றுக் கருத்தழிந்தவளா? இராமனைக் காணு முன்பு, அன்று நடந்து கொண்டதுபோல, என்தங்கை வேறு எந்தச் சமயத்திலேனும் நடந்து கொண்டாளா?

க: இல்லை! ஒருமுறை செய்தால் குற்றம் குறைந்து விடுமா, என்ன?

இரா: அதற்கல்ல நான் கேட்டது. ஒரு நாளும் இன்றி, அன்று இராமனைக்கண்டதும் காதல் கொண்டாள். அவளுடைய குணமே, கெட்டது என்றா அதற்குப் பொருள்? அன்றுமட்டும் அவ்விதமான எண்ணம் ஏற்பட்டது! ஏன்?

க: என் இராமனுடைய செளந்தரியத்தைக் கண்டு!

இரா: குற்றம், அவளுடையதா?

க: ஏன் இல்லை! சீதையிருக்க. இவள் எப்படி......

இரா: மன்னர்கள், பல மனைவியரை மணம் செய்வது முறைதானே!

க: ஆமாம்! ஆனால் இராமன் ஏக பத்னிவிரதனாயிற்றே.

இரா : அவள் அறியமாட்டாளே! ஆகவேதான், தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த ஆடவரிடமும் வலியச்சென்று காதலை வெளியிடும் வழுக்கி விழுந்தவளல்ல. அன்று ஓர் வடிவழகனைக் கண்டாள், மன்றாடி நின்றாள், இரக்கம் இருந்தால், ஏற்றுக் கொண்டிருக்கலாமே, விரதத்துக்குப் பங்கம் வரக் கூடாதென்பதிலே விசேஷ அக்கரை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும், இப்படி, அலங்கோலப்படுத்தாது இருந்திருக்கலாமே, அவளுடைய நாசியைத் துண்டித்தபோது, இராம இலட்சுமணர்கள், இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா?

கம்: காமப்பித்தம் பிடித்து அலைந்தவளைத், தண்டிக்காமல் விடுவரா?

இரா: கம்பரே! நான் இருக்கிறேன் தண்டனைதர! என் தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவித்திருக்கலாமே! ஏதாவது தந்திரம்பேசி, அவளை அனுப்பி விடுவது மறுபடி அவள் வருவதற்குள், எனக்குச் செய்தி அனுப்பினால், நான் இருக்கிறேன், அவளுக்குப் புத்தி புகட்ட! இரக்கமும் இல்லை, யூகமும் இல்லை, இதோ இங்கே நிற்கிறாள், நாசியற்ற நங்கை! இரக்கத்தை மறந்த அரக்கரால் அலங்கோலப் படுத்தப்பட்டவள்!!

தங்காய்! போ! தயையே உருவெடுத்தவர்களின் தீர்ப்பு, நான் இரக்கமென்ற ஒரு பொருள்இலா அரக்கன் என்பது! ஒருநாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும் எவர் முன்பும் வர முடியாத நிலைப்பெற்றாள்! என் கைதியாகப் பலநாள் இருந்த சீதை, செளந்தர்யவதியாய், சகல சௌபாக்யங்களையும், அயோத்திலே பிறகு அனுபவித்தாள். ஆனால் நான் அரக்கன்!!

[சூர்ப்பனகை போய்விடுகிறாள். நீதிதேவன் மறுபடியும் சாட்சிப்பட்டியைப் பார்க்கிறான்.]

இரா: நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, பாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள் ஆகவே, தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை.

[கைகேயி வருகிறாள்.]

இரா: கேகயன்மகளே! மந்தரையின் சொல்லைக் கேட்ட பிறகு, இராமனைப் பட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க நீ திட்டம் போட்டாயல்லவா?

கை: ஆமாம்!

இரா: பட்டம் கூடாது என்பது மட்டுமல்ல, இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென்பதும் உன் திட்டம்?

கை: ஆமாம்.

இரா: சக்கரவர்த்தியின் மூத்தகுமாரன் என்ற முறையிலே, இராமனுக்கு அயோத்திலே, ஆனந்தமாக வாழ்வு இருந்ததல்லவா?

கை: ஆமாம்!

இரா: அதிலும், கண்ணொடு கண்கலந்த காதல் வாழ்க்கை நடாத்தி வந்தகாலம்.

கை: ஆமாம்?

இரா: அப்படிப்பட்ட ஆனந்த வாழ்விலே இருந்த இராமனைக் காடுபோகச் சொன்னபோது, அடவியிலே உள்ள கஷ்டம், ஆபத்து இவைகளுக்கு இராமன் உள்ளாகி, மிகக் கஷ்டப்படுவானே, என்று உமக்குத் தோன்றவில்லையா?

கை: தோன்றிற்று! ஆனால் பரதன் நாடாள்வதாக இருந்தால் இராமன் காடேகத்தான் வேண்டும் என்று தீர்மானித்தேன், வேறுவழியில்லை.

இரா: பஞ்சணையில் துயிலும் இராமன் பசும்புல்தரையிலே படுப்பான். கனகமணி அணிந்தவன், மரஉரி தரிப்பான் ராஜ போஜனம் உண்டவன் காய்கனி தின்பான் வசிஷ்டரைக் கண்டு களித்த கண்களால் துஷ்ட மிருகங்களைக் கண்டு கலங்குவான், அரசு ஆளவேண்டியவன், விசாரத்திலே வேதனையிலே மூழ்குவான், தெரிந்தும்........

கை: காடு ஏகத்தான் வேண்டும் என்று கூறினேன்.

இரா: இராமன் காடு ஏகுவான் என்ற நிலைவந்ததும், அயோத்தியிலே இருந்தவர்கள் எப்படியானார்கள்.

கை: சொல்லமுடியாத கஷ்டப்பட்டார்கள். (கம்பரைப் பார்க்கிறாள்.)

இரா: கம்பர், அதுபற்றி விவரமாகப் பாடி இருக்கிறாரே, என்கிறீரா? நான், அவருடைய கவிதை சிலவற்றிலே இருந்து குறிப்பு வாசிக்கிறேன், அவை உண்மையா என்று பாரும்,முடியுமானால் கூறும்.

(ஓலையைப் புரட்டிக் கொண்டு) அயோத்தியா காண்டம், நகர்நீங்கு படலத்திலே, ஊரார் துயரைக் கம்பர் உள்ளம் உருக்கும் முறையிலே இருபது பாடல்களுக்குமேல் வர்ணித்திருக்கிறார்.

இராமன் காடுசெல்வான், என்ற சொல் காதில் வீழ்ந்ததோ இல்லையோ, அரசரும் அந்தணரும், மற்ற மாந்தரும், மாதர்களும், தசரதனைப் போலவே துயருற்றுக் கீழே சாய்ந்தார்களாம்.

புண்ணிலே நெருப்புப் பட்டது போலிருந்ததாம் அந்தச் செய்தி!

மாதர்கள், கூந்தலவிழப் புரண்டு அழுதனராம்! அடியற்ற மரமெனக் கீழே வீழ்ந்தனராம்! அம்மே, கைகேயி, கம்பர் பாடுகிறார்.

"கிள்ளையொடு பூவையழுத கிளர்மாடந்
துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வளம்புகுவானென்றுரைத்த மாற்றத்தால்"

வள்ளலாம் இராமன் வனம்புகுவான் என்ற வார்த்தையைக் கேட்ட அளவிலே, கிளியும் நாகணவாய்ப் பட்சியும், வீடுகளிலே வசிக்கும் பூனைகளும், உருவத்தை அறியாத சிறு குழந்தைகளும் அழுதன என்றால் பெரியவர்கள் அழுததுபற்றி என்னவென்று சொல்வது, என்று கம்பர் பாடியிருக்கிறார்! கம்பரே! தங்கள் பாட்டுக்கு நான் கூறிய பொருள் சரிதானே?

கம்: உண்மையே! இராகவன் காடு செல்கிறான் என்று கேள்விப்பட்டவுடன் பட்சிகளும் பூனைகளும் குழந்தைகளுங்கூட அழுதன என்று பாடினதுண்டு. ஏன், இன்னோர் பாடலும் உண்டே,

"ஆவுமழுதவன் கன்றழுதவன்றலர்ந்த
பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங்
காவுமழுத களிறழுத கால்வயப்போர்
மாவுமழுதன வம்மன்னவனை மானவே"

என்றும் பாடினேன்.

நீதி: இராவணன் கூறினதைவிட, இந்தப் பாடல் கொஞ்சம் கடினம்.

இரா: எளிதாக்கிவிடலாம் நீதி தேவனே!

ஆவும் அழுத, அதன் கன்று அழுத, அன்று அலர்ந்த பூவும் அழுத, புனல் புள் அழுத, கள் ஒழுகும் காவும் அழுத, களிறு அழுத, கால்வயப்போர் மாவும் அழுத, அம்மன்னவனை மானவே—இதுதான் கவிதை. ஆவும் காவும், மாவும் களிறும், இப்படிப் பலப்பலவற்றைக் கவி சந்திக்கச் செய்ததாலே கொஞ்சம் சிரமமாக ஆகிவிட்டது கவிதை! அழுத என்பது இடையிடையே அடிக்கடி வருகிறது, ஒரே பொருள் உணர்த்த. கவிதையின் பொருள் இதுதான், அந்தத் தசரத மன்னவனைப் போலவே, பசு, அதன் கன்று, அன்று மலர்ந்த புஷ்பம், நீரிலே வாழும் பறவைகள், தேன் பொழியும் சோலை, தேரில் பூட்டப்படும் வலிவுள்ள குதிரைகள் இவை யாவும் அழுதன, என்கிறார் கவி.

நீதி: ஏது இராவணனே! கம்பரின் கவிதைகளை நுட்பமாக ஆராய்ந்திருக்கிறீரே?

இரா: எதிர்க்கட்சி வக்கீலாயிற்றே கம்பர்? அவருடைய வாய் மொழியிலுள்ளவைகளைக் கவனித்துத்தானே, 'என் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவேண்டும்.

நீதி: சரி! இராமன் வனம் புகுவது கேட்டு அயோத்தி ஒரே அழுகுரல் மயமாகிவிட்டது. அதனால்.......

இரா: (கைகேயியைப் பார்த்து) ஏனம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பது கேட்டுப் பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும், பூவும் காவும், கிளியும் நாகணவாய்ப் பட்சியும், மனம் உருகி அழுதனவாமே, அந்த நேரத்திலும் தங்கள் மனம் இளகவில்லையோ?

கை: இல்லை!

இரா: ஊரார் ஏசினர் நீதிதேவா! ஒரு மன்னரின் மனைவியைச் சொல்லத்தகாத மொழியினால்கூட ஏசினர். கொடியவளே! கொலைகாரி! என்று தசரதன் ஏசினார். ஊரார், என்ன சொன்னார்களாம் தெரியுமோ? கம்பரே கூறலாமோ?

கம்: எந்தப் பாடலைச் சொல்லப்போகிறீர்?

இரா: நீர் பாடியதைத்தான், நான் என்ன கவியா சொந்தம் பாட. கணிகை காண் கைகேசி! என்று ஊரார் பேசினராம்! (கைகேயி கோபமாகப் பார்க்க) அம்மே! அரக்கனாம் என்மொழி அல்ல, அயோத்யா காண்டம் நகர் நீங்கு படலம், 109-ம் பாடல்!

கம்: கணிகை காண் கைகேசி என்றால் விலைமகள் கைகேசி என்று பொருள் நான் அப்படிப் பாடவில்லை. கொஞ்சம் இடைச்செருகல் புகுந்துவிட்டது நான் பாடினது,

"கணிகைநாண் கைகேசி"

இரா: பாட்டு, பழுதுபார்க்கப்பட்ட பிறகு, பொருள் முன்பு இருந்ததைவிட மோசமாகிவிட்டது கம்பரே! முன்பாவது கைகேயியை வேசி என்று கூறினீர். இப்போது வேசையரும் கண்டு வெட்கப்படுவர், கைகேயியின் கெட்ட குணத்தைக் கண்டால் என்றல்லவோ பொருள்!

கம்: வேறுவிதமாகத்தான் இருக்கவேண்டும், நிதானமாக யோசித்தால்தான் முடியும். கைகேயியை நான் கணிகை என்று கூறமுடியுமா?

இரா: கூறினீர், வேறோர் சமயம் திருத்திக்கொள்ளும். சரி! ஊரார் கண்டபடி ஏசினர், ஆனால் கேகய குமாரியின் மனம் மாறவில்லை.

நீதி: ஆமாம், கொஞ்சமும் இறக்கமில்லை.

இரா: அரக்க மாதல்ல, நீதி தேவா! கைகேயி, அம்மை! தசரதன், சோகமுற்று, மானே மடமயிலே! கேகயன் மகளே கேளடி என்மொழியை! பேயும் இரங்குமே பெண்கட்கரசே நீ இரங்காயோ? என்று எவ்வளவோ கெஞ்சினான்! கைகேயி மன்னனின் புலம்பலைக் கேட்டும் மனம் இளகவில்லை. மன்னன் மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான், அம்மையின் மனதிலே இரக்கம் எழவில்லை. கம்பர் கூறினார், மன்னர் பலர், எந்தத் தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ, அப்படிப்பட்ட மன்னர் மன்னன், கைகேயியின் காலிலே வீழ்ந்தான்! கைகேகி சூழ்வினை படலம், 25-வது செய்யுள். தன் மணாளன், மன்னர் மன்னன் தன்காலில் வீழ்ந்து அழுது, கெஞ்சி, எனக்கு உயிர்ப்பிச்சை தரவேண்டும், என்மகன் இராமன் நாடாளாவிட்டால் போகிறது. காடுபோகச் செய்யாதே, அவன் போனால் என்உயிர் நில்லாதே! என்று உள்ளம் உருகிக் கதறுகிறான், கேகயகுமாரி, அப்போதாவது இரக்கம் காட்டினதுண்டா? இல்லை! கோசலை அழுத போது? இல்லை! சீதை, மரஉரி தரித்தபோது? இல்லை! ஊரே புரண்டு அழுதபோது? இல்லை! துளியும் இரக்கம் காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன் அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம் கம்பர் கூறினார். உண்மை தானே கம்பரே!

க: உண்மைதான்!

இரா: இரக்கம் என்ற ஒருபொருள் இல்லாதார் அரக்கர்! உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே, ஏன் அரக்கர் குலமாக்கவில்லை அம்மையை! இரக்கமென்ற ஒருபொருள் இல்லாத காரணத்தாலேயே நானிருந்த இலங்கை அழிந்தது என்றீரே, இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத இந்த அம்மையார் இருந்தும், அயோத்திக்கு அழிவு வராத காரணம் என்ன? என் தங்கைக்குப்பங்கம் செய்தவர்களை, பழிவாங்கவேண்டுமென்ற எண்ணம் என்கண்முன், சீதை கதறியபோதிலும், இரக்கப்படக்கூடாது, இரக்கத்துக்காகவேண்டி, அரக்கர்குல அரசமங்கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர் குலத்தையே ஆரியகுலத்தின் அடிமையாக்கிவைக்கும் இழி செயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின்முன் இரக்கம் தலைகாட்டவில்லை! இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று கொண்டாடப்படுவது, தேன்தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டுக் கட்டத் தெரிந்ததால். நீதி தேவா! இது சரியா? சீதையை நான் களவாடி சிறைவைத்தேன்! மூவர்கள் இதுபோல் பலமுறை செய்திருக்கிறார்களே! நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று, சிந்தையில் மூண்ட காமத்தைக்கூட அடக்கினேன், மூவர்கள், அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்கமுடியாத காமத்தால், ஆபாசங்கள் செய்திருக்கின்றனரே! எந்தத் தேவன், கற்பை மதித்தான்? எத்தனை ஆஸ்ரமங்கள் விபசார விடுதிகளாக இருந்ததற்குச் சான்று வேண்டும்? மானைக்காட்டி மயக்கினேன் என்று கூறினர், முருகன் யானையைக் காட்டி மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும் மூவரும் செய்யாததை நான் செய்ததாக ருஜுப் படுத்தும் பார்ப்போம்! சீதை போன்ற ஜெகன்மோகினி, என் கரத்திலே சிக்கியும், சீரழிக்காது நான் விட்டதுபோல, எந்தச் சிங்காரியையாவது, தேவரும், மூவரும் விட்டிருப்பாரா? கூறுங்கள். இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என்வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்.

[நீதிதேவன் திடீரென்று மயங்கிக் கீழே சாய்கிறான். ஜூரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம் தெளிந்தபிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர் தெரிவிக்கிறார். அது நெடுநாளைக்குப் பிறகு தானே சாத்தியம்! என்று கூறிக் கொண்டே இராவணன் போய்விட கோர்ட் கலைகிறது. கம்பர், அவசரத்திலே கால் இடறிக் கீழே வீழ்கிறார்.]