அண்ணாவின் நாடகங்கள்/நன்கொடை
நன்கொடை
(அரசியல் நாடகம்)
பீரங்கி பீமராவ் நாயுடு | — | காங்கிரஸ் பிரசாரகர் |
ஜவுளி ஜம்புலிங்கம் | — | காங்கிரஸ் எம். எல். ஏ. |
வனிதா | — | ஜம்புலிங்கத்தின் மகள் |
தருமலிங்கம் | — | ஜம்புலிங்கத்தின் தம்பி |
மன்னன் | — | ஜம்புலிங்கத்தின் மகன் |
சங்கரலிங்க ஐயர் | — | ஜம்புலிங்கத்தின் கடை மானேஜர் |
இடம் | — | தமிழகத்தில் ஒரு நகரம் |
காலம் | — | இப்போது |
கண்டவர் | — | யூகம் |
ஜ: வா, தம்பீ, வா. ஏது இவ்வளவு நேரத்தோடே, இவ்வளவு தூரம்?
பீ: எல்லாம் உங்களைப் பார்த்துப் போகத்தான்.
ஜ: நல்லா பாரு, தம்பீ—நிக்கிறியே, உக்காரு.
பீ: நாட்டிலே, காங்கிரஸ்காரன் என்று சொல்லிக்கொண்டு வெளியில் வரமுடியவில்லை. அப்படி செய்துவிட்டார்கள், இல்லாததையும், பொல்லாததையும் பேசி, காங்கிரஸ் என்றாலே கசக்கிறமாதிரி பண்ணிவிட்டார்கள். காங்கிரஸ் என்றாலே வெறுக்கும்படி, மக்களை மாற்றிவிட்டார்கள்! திராவிடத்தான்களுடைய கொட்டம் வளர்ந்துகொண்டே போய்விட்டது. அவன்களை அடக்கலேன்னா, காங்கிரஸ் இனி செத்துப்போய் விட்டதென்றே வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
ஜ: சரி, தம்பீ! இப்ப அதுக்கு என்ன செய்யவேணும் சொல்லு.
பீ: இவ்வளவு விளக்கமாக நான் நிலைமையை எடுத்துக் காட்டின பிறகும், எதிர்காலம் எவ்வளவு இடர் உள்ளதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகும்...
ஜ: தம்பீ! பதறாம பேசு. நீ சொன்னது உண்மை—எழுத்துக்கு எழுத்து உண்மை, நான் அதைப் புரிந்துகொள்ளவில்லையா என்ன! நல்லா புரியுது. நான் இப்ப உன்னை கேட்பது என்னான்னா, இப்ப என்ன செய்யவேணும்ன்னுதான்.பீ: கேள்வி சரி, ஆனால் நீங்கள் பேசுகிற தோரணை சரியில்லை. நான் வேலை வெட்டி இல்லாமலா வந்திருக்கிறேன்—அல்லது என் சொந்த இலாபத்துக்காகப் பாடுபடுகிறேனா.........
ஐ: இதென்ன தம்பீ, வீணான கோபம்......
பீ: வீண்தான்.......உங்களைப் போன்றவங்களுக்காக நாங்க மாரடித்துக்கொண்டு அழறது வீண் வேலைதான். எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுத்தொலைக்கவேண்டியதுதான்.........
ஜ: வெடுக்கு வெடுக்குன்னு பேசாதே, தம்பீ. இப்ப உன் பேச்சை நான் மதிக்கவில்லையா......
பீ: மதிச்சு......?
ஜ: இவ்வளவு நேரமா நீ சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு இருந்தேன்.
பீ: கேட்டு......? நிலைமை புரியுதா உங்களுக்கு. நெருப்பைக் கக்கறானுங்க, திராவிடத்தானுங்க.....புரியுதா......சன்னம் சன்னமாப் பேத்து எடுக்கறானுங்க, செல்வாக்கை........
ஜ: என்ன சொல்லு தம்பி, இந்தத் திராவிடத்தானுங்க நெருப்பைக் கக்கட்டும், விஷத்தையே கொட்டட்டும், நம்ம காங்கிரஸ் மகாசபையை அசைக்கக்கூட முடியாது.
பீ: அதுதான் தப்பு என்கிறேன், நிலைமை உங்களுக்குப் புரியவில்லைன்னு சொல்றேன். திராவிடத்தானுங்க கூட்டம், மகாநாடு, நாடகம், பாட்டுக் கச்சேரி, படக்காட்சி, இதிலே எல்லாம் கூட்டம் எப்படிக் கூடுது தெரியுமா உங்களுக்கு......
ஜ: கூட்டம் கூடிட்டா தீர்ந்துபோச்சா.......
பீ: கூட்டம் கூடினா என்னன்னு சொல்றிங்களா! பேஷ்! ரொம்ப நல்லாயிருக்கு உங்க மூளை.............
ஜ: தம்பீ! நல்ல வார்த்தையா பேசு......மூளை நல்லாயிருக்கா இல்லையான்னு எல்லாம் பேசாதே.....சரியில்லை.......என் வயசையாவது கவனிக்க வேணும் பாரு........நீ பெரிய மேதாவின்னே வைச்சிக்கோ........ஆவேசமாப் பேசறே.......விடாப்பிடியா வேலை செய்யறே........அதனாலேயே, அனுபவஸ்தர்களோட மனதைப் புண்படுத்தலாமா........
பீ: ஆத்திரத்திலே பேசிவிட்டேன்....மன்னிக்கணும்...ஜ: ஆத்திரம் கூடாது தம்பீ! நாமெல்லாம் மகாத்மா சிஷ்யருங்க..பொறுமை வேணும்......ஆத்திரம் கூடவே கூடாது. எதிர்க்கட்சிக்காரணுங்களோட பிரசாரத்தாலே, தீமை வரும்னு சொல்றே. சரி. அதுக்கு என்ன செய்யலாம்...
பீ: நாமும் கூட்டம் மகாநாடு, நடத்த வேணும்.
ஜ: இவ்வளவு தானே! செய்துட்டாப் போவுது....நாடகம் கூட நடத்தலாம்...
பீ: மகாநாடு, நாடகம், இது என்னவேலை செய்யுது தெரியுமா...பட்டிக்காட்டானுங்களெல்லாம்கூட இப்ப, பார்லிமெண்ட், பர்மிட், சட்டம், பத்திரிகை சுதந்திரம் இதை எல்லாம் தெரிந்துகொண்டு பேசறாங்க...
ஜ: ஆமாம்...பொதுவா, அறிவு வளருது...
பீ: என்ன...என்ன...அறிவு வளருதா! சரிதான் உங்களுக்கே மயக்கமா இருக்கு, அந்த ஆசாமிகள் பேச்சைக் கேட்டு...
ஐ: செச்சே...ஒரு பேச்சு முறைமைக்குச் சொன்னேன்...சரி, தம்பீ! மதுவிலக்கு கமிட்டிக் கூட்டம் போகணும்...இப்ப உன் ஏற்பாடு என்ன அதைச்சொல்லு...மகாநாடு நடத்தணும்...
பீ: ஆமாம்...
ஜ: நடத்தி விடலாம், தம்பீ! மகாநாடு நடத்தி, நாலாயிரம் ஐயாயிரம் பணம் கூட மிச்சப்படுத்தறாங்களாமே திராவிடக் கட்சிக்காரனுங்க. நாமும் ஒரு மகாநாடு நடத்தினா, ஆயிரம் இரண்டாயிரம் மிச்சமாகும்.....
பீ: யாருக்கு? நமக்கா! உலகம் தெரியாதவரா இருக்கிறேயேய்யா...அவனுங்களுக்கு மிச்சமாகுது—மகாநாடு நாடகம் எதிலேயும்—அதைப்போல நமக்கும் ஆகுமா....
ஜ: ஏன், தம்பீ, நாமும் பெரிய கொட்டா போட்டு, கொடி மரம் நட்டு நம்ப கோடிலிங்கம் நாயனக்கச்சேரி, கோகர்ணம் குப்பாயி பாட்டு, எல்லாம் ஜமாய்த்து விடலாம்—அட, ஒரு இரண்டாயிரம் மிச்சம் பிடிச்சா, நம்ம கமிட்டி ஆபீஸ் செலவுக்காவது ஆகும். ஒரு வருஷமா, வாடகை நான் கையைவிட்டுக் கொடுக்கறேன் தம்பீ!
பீ : தலைதலைன்னு அடிச்சிகிட்டு போகலாம்னு தோணுது, உங்கப் பேச்சைக் கேட்டு......ஐயா! ஆர அமர யோசித்துப் பேசுங்க. ஜனங்க, திராவிடத்தானுங்களோட சேர்ந்துவிட்டாங்க ......அதனாலே, அவங்க மகாநாடுன்னா, ஐம்பதனாயிரம்னு இலட்சம்னு ஜனங்க சேர்றாங்க......
ஜ: போ, தம்பீ, சும்மா விளையாடறே......ஐம்பதாயிரமும் இலட்சமும்.....
பீ: உன்னோடு மாரடிக்க என்னாலே முடியாதய்யா, என்னாலே முடியாது.........ஐம்பதாயிரம்னு சொன்னா நம்பிக்கை வரவில்லை...வரவில்லையேல்லோ—சரி, இதைப்படியுங்கள்
ஜ: நீயேதான் சொல்லு தம்பி, என்ன இருக்கு—அவனுங்க பேப்பரா...
பீ: இல்லை, நம்ம மித்ரன்...
ஜ: மித்ரன் என்ன சொல்லுது...
பீ: கேளுங்க...திராவிட மகாநாடு நடந்தது. பெரிய அட்டகாசம்—ஊர் சுவர் முழுவதும் ஆபாசமான வசை மொழியை எழுதி பர பரப்பை உண்டாக்கிவிட்டனர்.
ஜ: சரி—ஐம்பதாயிரம்னு எங்கே இருக்கு...
பீ: நம்ம பேப்பர்லேயே ஐம்பதாயிரம்னு வருமா...வரணுமா—சூட்சமமா இருக்கே அட்டகாசம்னு என்ன அர்த்தம் அதற்கு...பெரிய கூட்டம்! நம்ம மித்ரன் நிருபர் பார்த்துப் பிரமிச்சி போயிருக்கிறார்—ஊர் அமர்க்களப்படறதுன்னுதானே அர்த்தம். ஊர்லே சுவர் பூரா எழுதி இருக்கிறான்னா, என்ன அர்த்தம். அவ்வளவு ஜரூரா வேலை செய்கிறான்னு அர்த்தம்...சுவர்லே எழுதிக் காட்டினது நாம்—முதலிலே...
ஜ: பட்டாளத்திலே சேராதே பணத்தைப் பாங்கியிலே போடாதேன்னு எழுதினோமே......
பீ: அது மட்டுமா ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்......இதெல்லாம்? ஆமாம், ஆமாம்—ஊர் பூராவும், அதைப் பார்த்துப் பார்த்து அதனாலேதானே நம்ம கட்சிக்கும் செல்வாக்கு! இப்ப, அவனுங்களிடமிருக்கு, அந்த செல்வாக்கு—அதனாலே அவனுங்க மகாநாடு நடத்தினா, கூட்டம் பிரமாதமா வருது—நமக்கு அப்படி வராது...
ஜ: அப்படியா......!
பீ: அதனாலே நம்ம மகாநாட்டுச் செலவு இருக்கே, அதை ஜனங்களிடம் வசூல் செய்வது முடியாது.ஜ: டிக்கட்டு விற்கலாமேல்லோ.
பீ: யார் வாங்குவா.....! டிக்கட்டே கூடாது நம்ம மகா நாட்டுக்கு
ஐ: அப்படியானா, செலவு?
பீ: செலவுக்காகத்தான் உங்களிடம் வந்தது......
ஜ: ஏன் தம்பீ, நான் பணம் கொடுக்க இஷ்டமில்லாததாலே இப்படிப் பேசுகிறேன்னு எண்ணிக் கொள்ளாதே. என் மனசிலே பட்டதைச் சொல்லுகிறேன் .......
பீ: சொல்லுங்க......
ஜ: இந்த ஜனங்கதான் புத்தி கெட்டுபோயி, திராவிடத்தான்களோட சேர்ந்துகிட்டு இருக்கறாங்களே, இப்ப, நாம்ம ஏன் நம்ம பணத்தைப் பாழாக்கிக்கிட்டு, கூட்டம்னும், மகாநாடும்னும் ஏற்பாடு செய்துகிட்டு இருக்கணும்! தானா திருந்தட்டும்னு விட்டு விட்டா நல்லதில்லையா.......
பீ: விட்டு விட்டா, நம்ம கட்சி இருந்த இடத்திலே புல் முளைக்கும்...இப்பவே வெளியே தலைகாட்ட முடியலே, இன்னும் கொஞ்சம் வளரவிட்டா, உங்களைப் போல, எப்படியோ ஆகட்டும்னு இருந்துவிட்டா தீர்ந்தது, நம்ம கட்சி குப்பை மேட்டுக் கூளமாயிடும்......
ஐ: சரி... தம்பீ! மகாநாட்டுக்கு, என்னிடம் என்ன எதிர்பார்க்கிறே...
பீ: நீங்கதான் வரவேற்பு கமிட்டித் தலைவர்.
ஐ: நானா! ஜில்லா காங்கிரஸ் தலைவருக்கல்லவா அந்த உரிமை.
பீ: காங்கிரஸ் மகாநாடல்ல இப்ப நான் போடவேணும்னு சொல்றது —இது காங்கிரஸ் எதிர்ப்பு ஒழிப்பு மகாநாடு—காவிய காவிகாப்பு மகாநாடு......
ஜ: என்னது......காவிய காவி....
பீ: அதாவது நமது பழய புராண இதிகாச காவியங்களையும், சாதுசன்யாசி சன்னிதானங்களையும் திராவிடத்தானுங்க ஒழிக்கக் கிளம்பி இருக்காங்க...நாம் காவிய காவிகாப்பு மகாநாடு போட்டு அந்தப் பயல்களை வெளுத்து வாங்க வேணும்..... ஐ: நீ, பேசறது பூரா வேடிக்கையா இருக்கு தம்பீ! நமக்கு ஏன் அந்த வீண் வேலை. காவியக்காரனும் காவி கட்டியும் தங்களைக் காப்பாத்திக் கொள்ள மகாநாடு போட்டுக் கொள்ளட்டும்—நாம்தானா முந்திரிக்கொட்டைங்க.
பீ: விவரம் தெரியாததாலே இப்படிப் பேசறிங்க—அந்தப் பயல்களுக்கு எதிரா, ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேணும் அந்தப் பயல்களை நாம்ம மட்டுந்தான் எதிர்க்கிறோம்னு இருக்கப்படாது பெரிய பெரிய புலவர்களெல்லாம் எதிர்க்கிறாங்க, பெரிய பெரிய ஞானிகள் எதிர்க்கிறார்கள் என்கிற எண்ணம் ஜனங்க மனசிலே பரவி, பிறகு ஜனங்க, நம்மோடு, சேரவேணும்.
ஐ: இதென்னமோ, தம்பி எனக்கு, கொக்கு தலையிலே வெண்ணைவைச்சி பிடிக்கிறமாதிரியாத்தான் படுது......நாம்ம நம்ம காங்கிரஸ் கட்சி மகாநாடு கூட்டி காந்தி பெருமை, கைராட்டினத்தோட அருமை இதுகளைப் பற்றி எடுத்துச் சொன்னா ஜனங்க திருந்தி வருவாங்க.......
பீ: இனிமேலே என்னய்யா இருக்கு, நாம்பதான் முப்பது வருஷத்துக்குமேலே மூலை முடுக்குக்கூட பாக்கிவிடாம. காந்தி, கதரு, கைராட்டினம் இவைகளோட பெருமையை எடுத்துப் பேசியாச்சி—கேட்டுக் கேட்டு ஜனங்களுக்குப் புளிச்சும் போச்சே. காந்தி, தத்துவத்தை மறந்துவிட்டாங்க. கதரை கள்ளமார்க்கட்டை மறைக்கிற துணியாக்கிவிட்டாங்க, கைராட்டினம் பரணைமேலே இருக்கு, அப்படின்னுதானே இப்ப ஜனங்க பேசறாங்க நம்ம கட்சியைப் பார்த்து. இப்பப்போயி காந்தி கதர் கைராட்டைன்னு பேசினா, காதிலே ஏறுமா, கவைக்கு உதவுமா......
ஜ: அப்ப......காவிய மகாநாடும் போடணும்.....
பீ: ஆமாம்—இது ஒரு நாள்—அது ஒரு நாள்—பத்து ரூபாய் பிடிக்கும்—இலட்ச ரூபா பலன் கிடைக்கும்—செலவுன்னு எண்ணக்கூடாது சேவைன்னு எண்ணவேணும்.......
ஜ: அது சரி.....
ஜ: ஆமாம், இப்ப உன் கிட்டே, காசு கொட்டிக் கொடுத்தாத்தான் நான் காங்கிரஸ்காரன்னு ஒத்துக்கொள்ளவே போலிருக்கு—ஏண்டா தம்பீ! நீ வந்து அந்த மகாநாடு இந்த மகாநாடுன்னு சொல்லுவே, உடனே நான், பெட்டிச் சாவியை உன்னிடம் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்தேமாதரம்னு சொல்லவேணும், நீ தொறந்து உனக்கு வேணும்கிற பணத்தை எடுத்துக்கிட்டு ஜெய் ஹிந்த் சொல்லிவிட்டுப் போயிடுவே—இல்லையா—இதைச்செய்தா நான் நல்லவன்—இல்லையானா பொல்லாதவன்—அப்படித்தானே—இந்த வேலை நல்லா இருக்கு தம்பீ! திராவிடத்தானுங்க எதிர்க்கிறானுங்க, அதனாலே என்கிட்ட பணத்தைக் கொட்டு, அவனும் நானும், நாயே பேயேன்னு ஏசிக்கிட்டு போறோம், நீ, நோட்டு நோட்டா நீட்டு, இதுதானா, உன் பிளான்......
பீ: மரியாதையாப் பேசு—தெரியுதா—வார்த்தைகளை அளந்து பேசு—உன்னைப் போல சுயநலக்காரனுங்க இருக்கிறதாலேதான், திராவிடத்தானுங்க அந்தப் போடு போடறாங்க—அவனுங்க பேசறதிலே என்ன தப்பு இருக்கு—கதர் கட்டிக்கொண்டு கள்ள மார்க்கட் கழுகுகள் இருக்குன்னு சொன்னாங்களே, திராவிடத்தானுங்க அவங்க வாய்க்குச் சர்க்கரை போடவேணும்.
ஜ: ஏலே...ஏய்...! இதோபாரு...போயி, சந்துமுனையிலே நின்னுகிட்டு கத்து, இங்கே பேசாதே...எழுந்திரு...மரியாதையா.
பீ: யாருக்கு மரியாதை இல்லே......யாருக்கு. மகாத்மா பேரைச் சொல்லிக்கிட்டு ஜனங்களை ஏமாத்திகிட்டு, மாசமாசம் மூவாயிரம் நாலாயிரம்னு அடிக்கறியே கொள்ளே நூல் பர்மிட்டிலே, அதைத்தான் திராவிடத்தானுங்க பேசி, மானத்தை வாங்கறானுங்க. வேணும் உங்களுக்கு—இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்......
ஜ: வீணா அவமானம் அடையப் போறே—ஏய்! நான் கள்ளமார்க்கட்காரன். அதானே.....பேசாதே.....இதோபார், கதர் போட்டிகிட்டிருக்கறேன்—காங்கிரசிலே இருக்கறேன் பர்மிட்டிலே கொள்ளை அடிக்கிறேன்—அதானே. நீ சொல்றது.....போடா, போயி, நீயும் அந்தத் திராவிடத்தானுங்களோட கூடிக் கொண்டு, ஏசு, பேசு, உன்னாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொள்—நட என் வீட்டை விட்டு......
பீ: இப்ப, நட! அப்போ ஓட்டோ ஓட்டுன்னு அலைகிறபோது, நான் தேவைப்பட்டுது...
ஐ: நீ இல்லேன்னா, ஓட்டு கிடைக்காது எனக்கு—ஏண்டா, டே! அப்படியா எண்ணிகிட்டு இருக்கே—ஆறு தடவை வந்தார்டா என் வீடு தேடி, உங்க தலைவரு எலக்ஷன்லே நிக்கச்சொல்லி—கெஞ்சிக் கூத்தாடினாரு.......
பீ: அதை எல்லாம் சொல்லிச் சொல்லித்தான் திராவிடக் கட்சிக்காரன், கண்டிக்கிறான்—உங்களைப் போன்றவர்களாலே, காங்கிரசின் கதியே அதோகதியாகுது.
ஐ: ஏண்டா சேர்த்தாங்க காங்கிரசிலே......தெரிஞ்சாச் சொல்லேண்டா, டே! வந்தேமாதரம்.....உன்னைத்தாண்டா கேக்கறேன், ஏன் சேத்துக்கிட்டாங்க, காங்கிரசிலே, கொஞ்சம் பசை இருக்கிறதாலேதான்—சும்மா இல்லே—சரி, சரி உன்கிட்ட என்ன வீண்பேச்சு—நான் பிளாக்மார்க்கட்—போய்க் கூவு ஊர் பூராவும் —இந்த ஊர் எம். எல். ஏ. இருக்கிறாரே, அவர்கதர் கட்டிகிட்டு பிளாக்மார்க்கட் செய்கிற காங்கிரஸ்காரர்ன்னு பேசு, போ.......
பீ: பேசத்தான் போகிறேன் பாரு.........
ஜ: பேசித்தான் பாரேன்.....ஒரு மீடிங் நடத்து, அடுத்த மீடிங்கு போட முடியுதான்னு பாரு. ஜில்லா கமிட்டியைக் கூட்டி உன்மேலே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உன்னை மூணு வருஷத்துக்குக் காங்கிரசிலே இருந்து தள்ளி வைக்கலேன்னா, என் பேரையே மாத்தி வைச்சிக்கிறேண்டா, டேய்! மாரடிச்சான்! போய், உன்னாலானதைப் பார்த்துக்கோ. டேய்! மன்னார்.....மரியாதையா போய்விடு.
[சத்தம் பலமானது கேட்டு சங்கரலிங்க ஐயர், எம். எல். ஏ.வின் மண்டி மானேஜர் வெளியே வருகிறார்.
நிலைமையைக் கண்டதும், அவர் கண்களிலே குறும்பு ஒளிவிடுகிறது—புன்னகையும் தவழுகிறது.
எம். எல். ஏ. வும் காங்கிரஸ் பிரசாரகர் பீரங்கி பீமராவும் கோபமாகவே இருக்கக் காண்கிறார்.
இதுபோது தலையிட்டு நிலைமையைச் சீர் செய்தாக வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.
எனவே குழைவாகப் பேச்சைத் துவக்குகிறார்.]சீ: (பீமராவைப் பார்த்து) என்ன பீமராவ்! பிரமாதமான கோபம்—ரெளத்ராகாரம்.
பீ: கோபமா!.....எனக்கா! ஆமாம்....நீ வேறு எப்படிப் பேசுவே...இந்த முப்பது வருஷகாலமாக நான் இந்தத் தேசத்திலே என் சக்திக்கு மீறின அளவு சேவை செய்துவருகிறேன். என்னை......இப்போது, புதுசா முளைத்த களான்கள் கண்டபடி ஏசினால்கூட நான் பொறுமையாக இருக்க வேண்டும் போலிருக்கு.
ஜ: பார், சாமி! பார்...இப்ப ஏசுவது யார்னு நீயே பாரு.....காளானாம் நான், காளான்.....கேட்டயா...கர்ணம் போட்டாங்க என் எதிரே முன்னே......இரண்டே இரண்டு கதர்வேட்டி போதும்; ஒரே ஒரு கையெழுத்து போதும், காங்கிரசிலே சேரலாம்னு, இப்ப நான், காளான்.....எப்படி இருக்கு நியாயம்! அதுவும் யார் சொல்லறது........இந்த சோளக் கொல்லைப் பொம்மை......!!
பீ: மரியாதையாக பேசணும்னு மறுபடியும் சொல்றேன்....புதுசா மழைக்காலத்திலே முளைக்கிறது காளான்—அதுபோலத் தேர்தல் காலத்திலே கிளம்பும் தலைவர்களைக் காளான் என்று சொல்வது தவறல்ல! ஏசுவதாகாது.....கண்களை உருட்டலாம், பற்களை நறநறவெனக் கடிக்கலாம்....உம்ம வீட்டிலே வந்திருக்கிறேன் என்கிறதாலே, ஆளை விட்டு அடித்துக்கூடப் போடலாம். ஆனா அதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல, இந்த பீரங்கி பீமராவ் நாயுடு......!
ச: சார்! பீரங்கி! அதெல்லாம் கிடைக்கட்டும்—காளான் என்றால் கேவலம் என்கிறீரா?
ஜ: (வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில்) பட்டம்! யார் கொடுத்ததாம், பட்டம்.......
ச: (குறும்பு ததும்பும் குரலில்) என் பேச்சை! கவனிக்கவில்லை போலிருக்கு.........பட்டம் இருக்குன்னுதான் சொன்னேன்—பட்டம் தந்தான்னு சொல்லலே........புரியறதோ.........பட்டம் இருக்கு.........அவ்வளவுதான்........
பீ: அதாவது நானே சூட்டிக்கொண்டேன்........
ச: செச்சே! யாராவது ஆப்த நண்பர்களாக இருப்பவா சூட்டியிருப்பா......நீர் அவாளுக்கு ஏதாவது பட்டம், சர்தார், சுபேதார், அப்படி இப்படின்னு சூட்டியிருப்பீர். இது சகஜம், இதனாலே லோகத்துக்கு நஷ்டம் என்ன! அது கிடக்கட்டும், பீமராவ்! காளான், காளான்னு கேவலமாப் பேசிண்டிருக்கிற, அந்தக் காளான், கேவலமானதுதானான்னு கேட்கறேன்......
பீ: ஏன் கேட்கமாட்டீர்! மாதம் ஒரு பச்சை நோட்டு தருகிறாரே, இதுவும் கேட்பீர், இன்னமும் கேட்பீர்......
ச: கோபம்தான் வர்ரது உமக்கு.......என் கேள்விக்குப் பதில் இல்லே—உம்மை நம்பிண்டு இருக்கு காங்கிரஸ், இந்தப் பக்கத்திலே. காங்கிரசுக்குக் கியாதி போயிண்டிருக்குன்னா, இதிலே, என்ன ஆச்சரியம்! காளான் என்றால் கேவலமானது என்கிற அளவுதான் அறிவு இருக்கு......
பீ: (கோபம் அதிகமாகி) ஏ, ஐயர்! போதும் உன் அதிகப்பிரசங்கம்.....நிறுத்து.....
ஜ: இதேதான் சாமீ! இக்கட்டான கேள்வி கேட்டா, கோபம் கொதிக்குது இந்தக் கோமாளிக்கு.
பீ: யாரய்யா, கோமாளி.........எம்மு எல்லு ஏ!.....யார் கோமாளி! உன் கோமாளித்தனத்தைக் கண்டுதான் ஊரே சிரிப்பாச் சிரிக்குது......சட்டசபைக்குப் போனயே, அங்கே என்ன செய்தே......தெரியாதா........திராவிடத்தானுங்க அதைச் சொல்லிச் சொல்லித்தானே கண்டிக்கிறானுங்க......உம்மைப் போல ஒரு எம். எல். ஏ. சட்டசபையிலே தூங்கலாமான்னு கேள்வி கேட்டாரேல்லோ.......அந்தக் கேள்வியோ, சபாநாயகர் தந்த பதிலோ இன்னது என்று கூட உமக்குத் தெரியாதே—அவ்வளவு சுவாரஸ்யமான தூக்கத்திலே அல்லவா இருந்தீர்........
ஜ: அதைச் சொல்லுங்க சாமி, அதைச் சொல்லுங்க......என்ன பிரமாதமான காரியம் நடக்குது சட்டசபையிலே......முதலிலேயே கட்சிக் கூட்டம் நடத்தறாங்க......அங்கே ஒரு நாலைந்து பெரிய தலைங்க எதை எதையோ எழுதி இதெல்லாம் சட்டம்னு சொல்ல எல்லோரும் வந்தே மாதரம்னு சொல்லி சம்மதம் கொடுத்து விடறாங்க, பிறகு, சட்டசபையிலே கூடி அதையே நிறைவேத்தறாங்க—வெட்டி வேலை—தூக்கம் வராமலா இருக்கும்.........
ச: பீமராவுக்கு இதெல்லாம் புரியாது இல்லே...அவருக்குத்தான் காளான் விஷயமே புரியல்லய்யே! காளான்னா மகாகேவலமானது என்றுதானே எண்ணிண்டிருக்கார்.
பீ: என்னய்யா இது, காளானை எடுத்துக்கிட்டு நாலு நாழியா காலட்சேபம் செய்திண்டே இருக்கீர்...என்ன கண்டு விட்டீர் காளானைப் பத்தி...
ச: நானா...! நன்னா சொன்னே, போ...நான் என்ன மேதாவியா...போறது...பென்சிலின் தெரியுமோ?
பீ: பென்சிலின்—மருந்தா?
ச: ஆமாம்...மருந்துன்னா சாமான்யமானதா...அடடா, சகல ரோக நிவாரண சஞ்சீவி அல்லவா அது...
ஜ: ஆமாம்...எப்படிப்பட்ட ரணமும் ஆறுதாமே...
ச: எந்த வியாதியா இருக்கட்டும்.....கட்டுக்கு அடங்காம படிக்கு, மீசுரமாகிவிட்டா, இந்தப் பென்சிலின் தர்ரா...உடனே நோய், பெட்டிப் பாம்பாகிவிடறது...அவ்வளவு அற்புதமான மருந்து பென்சிலின்.
பீ: {சலிப்புடன்) சரி அதனாலே...
ச: அதனாலே என்கிறீரா...அவசரம் உமக்கு.....பீரங்கி அல்லவா, அப்படித்தான் இருக்கும் அவசரம்.
பீ: கேலி போதும் ஐயரே! விஷயத்துக்கு வாரும்.....பென்சிலின் அற்புதமான மருந்து...அதனாலே?ச: ஒத்துக்கொள்கிறீரா........பென்சிலின் அற்புதமான மருந்து, என்பதை.
பீ: ஆமாம்........
ச: அந்தப் பென்சிலின் இருக்கே அது, நீர் கேவலமானதுன்னு நினைக்கிறீரே, காளான், அந்தக் காளானிலிருந்துதான் செய்யறா........
ஜ: (ஆச்சரிய மேலிட்டு) அப்படியா, சாமி!
ச: ஆமாம்...காளானிலிருந்து தான் பென்சிலின் செய்யறா...பீமராவுக்கு அது என்ன தெரியும், பாபம், அவர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அனந்தம்......காளானோட அருமை எங்கே தெரியப்போது......பீமராவ்! எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதுபோல முகம் இருக்கு. பிரபஞ்சத்திலே, உம்மைத் தவிர மத்தவாளெல்லாம் ஞான சூன்யான்னு எண்ணிண்டு, பெரியவாளை ஏசறதும் மிரட்டறதுமா இருக்கக் கூடாது...பீரங்கிதான் நீர்! ஆனா, எதற்குப் பயன்படவேண்டும், பீரங்கி—இவர் பேரிலே குண்டு வீசவா.....பைத்யக்காரர்—சுமுகமாக, சாந்தமாப்பேசி, என்ன காரியத்தைச் சாதிக்கவேணுமோ, அதைச் சாதிச்சிண்டு போறதா, சம்வாதம் செய்துண்டு, சச்சரவு செய்துண்டு இருக்கறதா?
ஜ: நல்லா சொல்லுங்க சாமி! மனதிலே ஆழமா அழுத்தமா படற மாதிரியாகச் சொல்லுங்க......
ச: (பீமராவிடம்) மகாநாடு போடவேணும் என்கிறீர்—செய்யவேண்டியதுதான்...ஆனா, பூராவும் இவர் தலையிலேயே போடலாமா.....இவர், இப்ப, எம். எல். ஏ. அதனாலே, ஏதோ அவருடைய அளவுக்குக் கொஞ்சம் செய்யத்தான் வேணும்—செய்யத்தான் போறார்......ஆனா, இவரை மட்டும் இழுத்தா போதுமோ....அடுத்த எலக்க்ஷனிலே, யார் எம். எல். ஏ.-வுக்கு நிற்கப்போறதுன்னு கண்டுபிடியும்—அவரைப் போய்ப் பிடித்து உலுக்கி எடுக்கவேணுமே.......
பீ: எலக்க்ஷனுக்காகத்தானா இவ்வளவும்......
ச: (குறும்பாக) பின்னே எதுக்கு? நமக்குள்ளே பேசிக் கொள்வோம், பீமராவ்! வேறே எதற்கு இந்த மகாநாடு....
பீ: எலக்க்ஷன் விஷயத்தோடுகூட, நமது புனித காங்கிரஸ் மகாசபையினுடைய செல்வாக்கையும் கவனிக்கவேண்டும்—அதுதான் முக்கியம்.ச: சரி, அப்படியே இருக்கட்டும்—காங்கிரஸ் மகாசபையோட செல்வாக்கைப் பலப்படச் செய்யறது எதுக்கு...அதுவும் எலக்க்ஷனுக்குத்தானே...இல்லையானா, வெள்ளைக்காரனை ஓட்ட வேணுமோ.......இல்லையே, அவா போயிட்டா.....! இப்ப, காங்கிரசுக்கு அந்த வேலை இல்லை...ஆகவே காங்கிரசோட பலம் எதற்கு பயன்படப்போறது? எலக்க்ஷனுக்கு....அதனாலேதான் சொல்றேன், அடுத்த எலக்க்ஷனிலே, யாரார் எம். எல். ஏ.வுக்கு நிற்கப்போறவான்னு கண்டுபிடிச்சு.....
ஜ: பீமராவுக்கு எப்படித் தெரியும்' அந்த இரகசியம். சாமி! போன எலக்க்ஷனிலே, இந்த பீரங்கியும் மத்தவாளும், யாரோ தேசத் தொண்டராம் தாண்டவராயப்பிள்ளை.......
ச: ஆமாம், கொடிப்போர் தாண்டவராயன்னு சொல்லுவா.....அதாவது, ஊரிலே உயரமா இருக்கிற மரம், கோபுரம், ஒண்ணு பாக்கி விடாமல், தேசியக் கொடியைக் கட்டிவைக்கறது அவன் வேலை. பாபம், பல தடவை, அடி உதை.....
பீ: மண்டையைக்கூட உடைத்திருக்கா......
ச: யார் தெரியுமா.....? உம்ம சம்மந்தி, ஆப்காரி காண்ட்ராக்டர் ஆறுமுகம் பிள்ளையோட தம்பி......
ஐ: சொன்னாங்க.....இவன் அவங்க புதுசா கட்டின பிள்ளையார் கோயில் கோபுரத்திலே கொடி கட்டப் போனானாம்......கேள்விப்பட்டிருக்கேன்.....அந்தத் தாண்டவராயனைத்தான் எலக்க்ஷனுக்கு நிற்க வைக்கவேணும்னு ததிங்கிணத்தோம் போட்டாங்க.....கடைசியிலே இவங்க தலைவர், இங்கே வந்தார். நான் முடியாதுன்னு சொல்ல வாய் எடுத்தேன்......இப்ப சொல்றேன், சாமி! நிஜத்தை, ஒரு மந்திரி வேலை கூடத் தருவதாகச் சொன்னாங்க.....அதனாலே, அடுத்த எலக்க்ஷனிலேயும், யாராரை நிற்க வைப்பாங்க என்கிற விஷயம், பீமராவுக்கு என்ன தெரியும்......
பீ: சரி...உங்களுடைய போக்கு எனக்கு நன்றா புரிந்துப் போச்சி......நான் என்ன செய்யவேணுமோ அதைச் செய்து கொள்கிறேன்.......
பீ: (வெறுப்பாக) பாபம், உங்களுக்கு என் சிரமம்—நான் மகாநாடு கூட்டும் உத்தேசத்தையே விட்டுவிட்டேன்......
ச: விரக்தியா......இவ்வளவு சீக்கிரமாகவா.........
பீ: (கோபமாக) மகாநாடு எதுக்கு.....எதுக்காக மகாநாடு போடவேணும்......எங்களுக்கு என்ன வந்தது......திராவிடத்தானுங்க, எங்களையா ஏசறாங்க......உண்மைக் காங்கிரஸ் ஊழியர்களுக்கு மரியாதை காட்டுவதுதான் எங்கள் கடமை என்றுதான் சொல்கிறாங்க. உண்மைக் காங்கிரஸ் ஊழியர்களே! உங்கள் தியாகத்தை உலுத்தர்கள் பயன்படுத்திக்கொண்டு ஊரை மிரட்டி வாழ்கிறார்களே, கொள்ளை அடித்துக் கொழுக்கிறார்களே. அவர்களோடு கூடிக்கொண்டு, ஏன் பாழாகிறீர்கள், என்றுதான் கேட்கிறார்கள், தியாகத் தழும்புகளுக்குத் தலை வணங்கத்தான் செய்கிறார்கள்! தேர்தல் காலத் தில்லுமல்லுகளும், கள்ளமார்க்கட் கழுகுகளும், வைதீக வல்லூறுகளும், பதவி தேடும் பச்சோந்திகளும், காங்கிரசிலே கூடிக்கொண்டு கொட்டமடிப்பதைத்தான் அவர்கள் கண்டிக்கிறார்கள். இதை ஏன் தடுக்கவேண்டும்—இதை ஏன் நாங்கள் எதிர்க்கவேண்டும்! நன்றாகக் கண்டிக்கட்டும்—சூடு சொரணை உங்களுக்கு வருகிற அளவுக்குக் கண்டிக்கட்டும்—காங்கிரசின் செல்வாக்கைக் கபடர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது உலகுக்குத் தெரிகிற அளவுக்குக் கண்டிக்கட்டும்—எங்களுக்கு என்ன! மகாநாடு போட்டு, உங்கள் சார்பாகப் பேசுவதே அக்கிரமம்—அனியாயக்காரனை அம்பலப்படுத்துகிறார்கள் திராவிடத்தார்—செய்யட்டும். அப்பழுக்கற்ற உழைப்பாளிகள், உண்மைத் தியாகிகள், ஏன் இதற்காகச் சீற வேண்டும். பல காலமாக எந்த காங்கிரசில் சேர்ந்து பாடுபட்டோமோ அந்தக் காங்கிரசின் செல்வாக்கை அழிக்கிறார்களே, என்ற கோபம் எங்களுக்கு. ஆனால் அதற்காகவேண்டி எதிர்ப்பு மகாநாடுகள் நடத்தினால், உங்களைப்போன்ற பகற்கொள்ளைக்காரர்களின் ஆதிக்கம்தான் வளருகிறது. உங்களுக்கு இடமளித்த பிறகு, உங்களுடைய ஆளுகையிலே வந்தபிறகு, காங்கிரஸ் வாழவா முடியும், அதைக் காப்பாற்றக் கிளம்புவதும் வீண்வேலை. விபரீதமாகவும் முடிகிறது வீணர்கள் கொழுக்கிறார்கள்.
ஜ: பீரங்கி அல்லவா.......பிரமாதமான பேச்சாத்தானே இருக்கும். சரி, சந்துமுனைக்குப் போய் சண்டமாருதத்தைக் காட்டு, இங்கே என் பங்களாவிலே வேண்டாம்.........
பீ: நான் பேசுவானேன்—உங்களுடைய யோக்யதையை எடுத்துக் காட்டி விளாசுகிற திராவிடத்தான்கள் செய்யும் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடாதிருந்தாலே, போதும், உங்கள் மானம் கப்பலேறும், உங்கள் கொட்டம் தன்னாலே அடங்கும்......
வ: யார் வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு இடமிருக்கிறது. இந்தச் சுரண்டல்களைத் தடுக்கக்கூடிய சுறுசுறுப்பு மந்திரிமார்களுக்கு இல்லை. மந்திரிகளுக்குத் தந்திரிகளாக இருக்கும் எம். எல். ஏ.-க்களோ எப்படி எப்படியோ இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எழுதினால் நல்லதோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாகத்தான் எழுதவேண்டும். ஏனென்றல் சூடு சொரணையற்றுப் போனவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
அப்பா! கேட்டாயா, இந்த கேடு கெட்ட ஏடு எழுதியிருப்பதை,
ஐ: ( அலட்சியமாக) கிடக்கிறான்களம்மா!.........சாமியே கிடையாதுன்னு பேசற கும்பல், சாதாரண மனஷாளைச் குறை சொல்வதிலே என்ன ஆச்சரியமிருக்கு.
ச: ஆயாசமடையறதிலேயும் அர்த்தமில்லே......
ஜ: நாக்கு புழுத்துச் சாகப் போகிறானுங்க.....
பீ: (புன்னகையுடன் சங்கரலிங்க ஐயரைப் பார்த்து) சாபம் கொடுக்க உத்தேசமோ.....
வ: எல்லோரும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலே பேசுகிறீர்கள்......எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறான் இந்தப்பத்திரிகையிலே....இப்ப இருக்கும் எம். எல். ஏ.க்களுக்குச் சூடு சொரணையே கிடையாதாம்—எவ்வளவு துடுக்குத் தனம்.....
ஜ: அதுகளோட துடுக்குத் தனத்தை நீ என்னம்மா கண்டே......?ச: சாட்சாத் சிவபெருமானுக்கு நெற்றிக்கண்ணே கிடையாதுன்னு சாதிக்கிற, சண்டாளக் கூட்டம் எம். எல். ஏ.வைச் சூடு சொரணையற்ற ஜென்மம் என்று ஏசி எழுதுவது, என்ன ஆச்சரியம்,வனிதா?......
வ: எம்.எல்.ஏ.க்களைச் சூடு சொரணையற்ற ஜென்மங்கள் என்றும், மந்திரிகள் சுறுசுறுப்பு அற்றவர்கள், அதாவது சோம்பேறிகள் என்றும் எழுதியிருப்பது, சூனாமானா என்று எண்ணிக்கொண்டு, பேசுகிறீர்கள்.
பீ: வேறே, யார் எழுதினது?
வ: (ஏட்டை அவர் எதிரே வீசி) யாரா? உங்க, காண்டீபம் காங்கிரசைத் தாங்கிக் கொண்டிருக்கே அதே ஏடு. சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம். எல். ஏ.-க்கள் என்று எழுதியிருக்கு 8—6—'51-ல். இதுவா கட்சியை வளர்க்கிற இலட்சணம்.
ஜ: (பதறி) காங்கிரஸ் பத்திரிகையா இப்படி எழுதுது—எங்களைக் குறித்து......
ச: (சோகமாக) சோம்பேறி மந்திரிகள்! சொரணைகெட்ட எம். எல். ஏ.-க்கள்!! அட அடா! எவ்வளவு கேவலமான நிந்தனை......இவ்வளவு கேவலமாக சூனாமானாக்கள் கூடப் பேசுவதில்லை.
வ: ஆமாம்—அவர்கள் சில சமயம் இந்த மந்திரி சபையே திராவிடர்களுடையதுதான், மந்திரிகள் மீதும் தவறு கிடையாது, எம். எல். ஏ.-க்கள் மீதும் தவறு கிடையாது—இவர்களுடைய அதிகாரத்தை எல்லாம், டில்லி எடுத்துக்கொண்டுவிட்டதாலே, இவர்களாலே ஏதும் செய்யமுடியவில்லை என்று பேசுகிறார்கள், காங்கிரசை ஆதரிக்கும் 'காண்டீபம்' சோம்பேறி மந்திரிகள்—சொரணை கெட்ட எம். எல். ஏ.-க்கள் என்று எழுதுகிறது—இதை ஆதரிக்கவேண்டும் என்று காங்கிரசின் பெயரைக் கூறிக் கொண்டு, பீமராவுகள் பேசுகிறார்கள்......
ஜ: தெரியுதாய்யா யோக்யதை! என்னமோ, எங்களை, திராவிடத்தானுங்க, திட்டு திட்டுன்னு திட்டறாங்க, எங்கிட்ட பணம் கொடு. நான் மகாநாடு கூட்டி, அந்தத் திட்டைத் துடைச்சிப் போடறேன்னு பேசினயே, இதுக்கு என்ன சொல்றே? காண்டீபம் கண்டபடி ஏசுதே! சூடு இல்லை சொரணை இல்லை, எங்களுக்கு......காசு இருக்கேல்லோ, அதைக் கொடு!.....எப்படி,சாமி! ஏற்பாடு!
ச: காண்டீபம் இப்படித் திட்டுகிறபோது, திராவிடா திட்டுவதிலே கோபப்படக் காரணமே இல்லே......
ஐ: அதைப்போயி தடுக்க வேணும், ஆயிரம்கொடு, ஐந்நூறு கொடுன்னு கேட்க வந்துவிட்டாரே இந்த ராவு நாயுடு......
ஜ: என்ன தம்பீ! ஏன் முடியலையா, போன காரியம்.........
த: (ஆயாசமாக உட்கார்ந்து) வனிதா! ஐஸ்வாடர் கொடு—என்ன கேட்டிங்க......போன காரியமா? அது ஒரு வகையாக முடிஞ்சுது......(பீமாராவைக் காட்டி) இவர் என்ன வேலையா.....
ஜ: கட்சி சமாசாரம் பேச வந்தாரு—பரவாயில்லை.....அவர் நம்ம சினேகிதருதான்.........
த: எல்லாரும் சினேகிதருதான்—சினேகிதராலே, ஆபத்து வருகிற காலமாக அல்லவா இருக்குது இப்ப.......
ஜ: என்ன தம்பீ, என்னென்னமோ பேசறே.......
த: பீமராவ் ஒண்ணும் சொல்லவே யில்லையா உங்களிடம்?
ஜ: எதைக் குறித்து?
த: இதைப் பார்க்கவில்லை போலிருக்கு....
ஐ: எதை?
த: நம்ம தலைக்குத் தீம்பு தேடுது இந்த ஏடு.
ஒவ்வொரு சட்டசபை அங்கத்தினரும், பார்லிமெண்ட் அங்கத்தினரும், அவர்கள் அங்கத்தினராகும்போது எவ்வளவு சொத்து உடையவர்களாக இருந்தார்கள்! இப்போது எவ்வளவு சொத்து அவர்களுக்கு இருக்கிறது என்று விசாரணை செய்து கண்டு பிடிக்கவேண்டும்.
ச: இவ்வளவுதானா......
த: இன்னும் இருக்கு.
வ: விசாரணை செய்யவேணுமாமா?
த: கேளுங்க, மத்ததையும்.......சட்டசபை அங்கத்தினருடைய மாதச் சம்பளம் 150 என்பது தெரிந்த விஷயம். ஐந்து வருஷத்துக்கு முன்பு சொத்து ஒன்றும் இல்லாதவராயிருந்தவர் இப்போது இலட்சக் கணக்கில் சொத்து, சேர்த்திருந்தால் அது சம்பளத்திலிருந்து சேர்ந்திருக்க முடியாதல்லவா? வேறு எந்த வழியில் அவர் அவ்வளவு பணம் சேர்த்தார் எனும் விவரம் சொல்லியாகவேண்டுமல்லவா?
வ: என்ன பேப்பர் அது?
ஜ: வயத்தெரிச்சல் பேப்பர். வேறென்ன—எம். எல். ஏ.க்களெல்லாம் பணக்காரனாயிட்டானுங்க என்கிற வயத்தெரிச்சலைக் கொட்டுகிற பஞ்சை ஏடு.
த: சாமான்யமான பேப்பரல்ல......ரொம்ப செல்வாக்கானது.....டில்லி வரையிலே செல்வாக்குள்ளது......
ஜ: பேப்பர் நிறைய செலவாகுதுன்னு சொல்கிறயா.....
த: அது மட்டுமில்லே.....டில்லி மந்திரி இருக்கிறாரே, ராஜ கோபாலாச்சாரியார், அவருக்கு ரொம்ப வேண்டிய பேப்பர்......
வ: கல்கியா......!
ஜ: கல்கியா இப்படி எழுதுது......
வ: எம். எல். ஏ.க்களெல்லாம் கொள்ளைக்காரனுங்கன்னு துணிச்சலா எழுதுதே.......
த: விசாரணை செய்யவேணுமாம்......
ச: சொத்து என்ன இருக்குன்னா......த: ஆமா, எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு என்ன இருந்தது, இப்ப எவ்வளவு இருக்கு—எப்படி இவ்வளவு சொத்து கிடைச்சுது, இதெல்லாம் கண்டு பிடிக்கவேணுமாம்.....
வ: காண்டீபமே பரவாயில்லை....சொரணையற்ற ஜென்மம் எம். எல். ஏ.,என்று எழுதிற்று, கல்கியின் கர்வத்தைப் பாரேம்பா, கொள்ளைக்காரன் என்றே எழுதுது.....
ஜ: (பீமாராவைக் கோபமாகப் பார்த்து) கல்கியும், காண்டீபமும் இப்படி, எங்க மானம், போகிறபடி எழுதி இருக்கு, இதோ இவர் இருக்கிறாரே, பீரங்கி, இவர் சொல்றாரு, பணம் கொடு, நான் உங்களைத் திட்டுகிற திராவிடத்தானுங்களைத் தீர்த்துக் கட்டிவிடறேன்னு.
வ: திராவிடத்தானுங்க, வேறே கட்சி வேறே இலட்சியம்—இருந்தும், சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம். எல். ஏ.க்கள் என்றெல்லாம் சொல்றது இல்லையே......
ஐ: சொந்தக் கட்சிப் பத்திரிகை......இந்த இலட்சணத்திலே இருக்கு.....இதை என்ன மகாநாடு போட்டு தடுக்கப் போறே, பீமு.
த: 17—6—51லே எழுதி இருக்கு.....அது சரி...என்னமோ வயத்தெரிச்சலிலே, எழுதியிருக்கு, எதையோ எழுதித் தொலைக்கட்டும், இந்த எழுத்தெல்லாம் நம்மை அசைக்காது, ஆனா இதைப்போல விசாரணை எதாவது நடக்குமா...?
ஜ: விசாரணையாவது மண்ணாவது.....
ச: ஏன் வீணா விசாரப்படணும்—கல்கி ஹாஸ்ய பத்திரிகை—வேடிக்கையா ஏதோ எழுதி இருக்கும்.....
ஜ: நல்லா இருக்கு சாமி! உங்க நியாயம்! சொரணை கெட்டவன், துடு இல்லாதவன், அகப்பட்டதைச் சுருட்டறவன், என்றெல்லாம் எழுதுவது, விகடமா......
வ: அவர் வேற எப்படிச் சொல்லுவார் அப்பா! அவர் தானே நம்ம ஊருக்கு, கல்கி ஏஜண்ட்.
ஜ: புரியுது, ஐயரோட போக்கு....
த: இது மட்டுமில்லை.....அடுத்த எலக்க்ஷனிலே, இப்ப இருக்கிற எம். எல். ஏ.க்களை தேர்தலுக்கு நிறுத்தக் கூடாதாம்.
ஜ: யார் யோசனை இது? த: கல்கிதான்.....கேளுங்க......
யாரை அபேட்சகராகப் பொறுக்குவது என்ற கேள்விக்குப் பதில் சொல்வதைக் காட்டிலும் யாரைப் பொறுக்கக் கூடாது என்ற கேள்விக்கு விடை சொல்வது எளிது. பொது மக்களைக் கேட்டால், உங்களுக்குப் புண்யமாய்ப் போகட்டும், இப்போதுள்ள எம். எல். ஏ.-க்களைத் தயவு செய்து திரும்பவும் பொறுக்காதீர்கள் என்பார்கள்.
ஐ: எப்படி இருக்கு, சாமி, இவர் கொட்டுடா பணத்தை மகாநாடு நடத்தன்னு கேட்கறாரு—இவர் எழுதறாரு பழைய ஆட்களை நிறுத்தாதே புதுசா ஆளைத் தேடுன்னு.
ச: அதனாலேதான் நானும் பீமராவிடம் சொன்னேன், மகாநாடு நடத்த பணம் வேணும்னா, அடுத்த சான்சுக்கு யார் ஆசைபட்டுண்டிருக்காளோ அவாளைப் போய்ப் பாருன்னு.
ம: பீமராவா? என்ன, காவிய காவி பாதுகாப்பு மகாநாடாமே.....அப்பாவிடம் நன்கொடைக்காகவா....?
ச: அந்த மகாநாடு மட்டுமில்லே......காங்கிரஸ் எதிர்ப்பு ஒழிப்பு மகாநாடும்.
ம: ஆமாம், அதற்குத்தானே, காண்டீபம் ஆசிரியர் தலைவர்.
ஜ: யார், யார்?
வ: சொரணையற்ற ஜென்மங்கள் இந்த எம். எல். ஏ. க்கள் என்று எழுதினாரே, அதே காண்டீபம் ஆசிரியர்தான்.
பீ: மன்னா! நான் இங்கே வந்தது, மகாநாடுகள் விஷயமாகத்தான்—இப்போதோ, அந்த எண்ணமே இல்லை......நான் புது மனிதனாகிவிட்டேன்—
ம: அப்படியா.....பீமராவ், திராவிடத்தான்கள் கடவுளை மறுக்கும் கயவர்கள், என்று கன்னிக் கோயில் மைதானத்திலே பேசினாயே, காரசாரமாக.....
ச: ஆமாம், அவர், நாஸ்தீகப் பிரச்சாரம் செய்துதான் நாட்டைக் குட்டிச் சுவராக்கிண்டிருக்கா.......
ம: கடவுளைக் கும்பிட வேண்டாம் என்றா சொல்கிறார்கள்?ச: இது கடவுளா, அது கடவுளா, ஆறுமுகமா, ஆனை முகமா, பசு கடவுளா, பாம்பு கடவுளா, கண்டதும் அத்தனையும் கடவுள்தானா—என்று பேசறாளே, அது நாஸ்தீகம் தானே.....
ம: அது எப்படி நாஸ்திகமாகும்......கடவுளே கூடாது என்றால்தானே நாஸ்தீகம்....
ஜ: ஆமாம்....அது உண்மைதான்.....
ம: கடவுள், கடவுள் என்று கூறிக்கொண்டு கண்டதை பூஜிப்பது கூடாது என்கிறார்கள். இதை நாஸ்தீகம் என்கிறீர். (சட்டைப் பையிலிருந்து ஒரு ஏடு எடுத்து) இதைக் கேளுங்கள்—எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம், இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகிவிட்டது.
ச: இது எந்த மேயோ எழுதினது.....
ம: இது மேயோ சொன்னதுமல்ல, திராவிடத்தார் சொன்னதுமல்ல, பாரதத்தின் முடிசூடா மன்னர், பண்டித ஜவஹர், பெங்களூரில் பேசியது, 3—6—1951-ல் 'அனுமான்' இதழில் வெளிவந்தது. பீமராவ்! இதைத்தான் பத்தாயிரம் துண்டு வெளியீடு போட ஏற்பாடாகி இருக்கிறது, காவிய காவி பாதுகாப்பு மகாநாட்டின்போது பொதுமக்களுக்குத் தர.
பீ: மகாநாடு இல்லை—அந்த எண்ணத்தை விட்டு விட்டேன்—ஆனால், இந்தப் பொன்மொழியைப் பொதுமக்கள் படிக்கட்டும், இன்னும் ஒரு பத்தாயிரம் வெளியிடலாம். (சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து) இந்தா ஐந்து ரூபாய், என் நன்கொடை.
வணக்கம். நான் சென்று வருகிறேன்.