உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் நாடகங்கள்/இரக்கம் எங்கே?

விக்கிமூலம் இலிருந்து

இரக்கம் எங்கே?


[இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்? இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள். ஆனால், பலரால், பல சமயங்களில் இரக்கத்தைக்கொள்ள முடிவதில்லை. ஏன்? வாழ்க்கையின் அமைப்பு முறைதான் அதற்கு முக்கியமான காரணம். இச்சிறு நாடகம், இக்கருத்தை விளக்குவது.]

காட்சி 1

இடம்:—வேலன் வீடு.
இருப்போர்:—வேலன், வீராயி, மருதை, பூஜாரி.


[மருதை படுத்துக்கிடக்கிறான். வேலனும் வீராயியும் பூஜாரிக்கு எதிரில் அடக்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள். பூஜாரி உடுக்கையை அடித்துக்கொண்டு, உரத்த குரலில் பாடி, வேப்பிலையால், அவ்வப்பொழுது அடித்துக்கொண்டிருக்கிறான். ஒரு தட்டிலே விபூதியும், எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருக்கிறது. பாதி அளவு சாராயம் உள்ள ஒரு பாட்டில், ஒருபுறம் இருக்கிறது. பூஜாரியின் கண்கள் அடிக்கடி அந்தப் பக்கம் பாய்கிறது.]


பூ: வேலப்பா! இது பொன்னியம்மா குத்தந்தான், இருந்தாலும் பாதகமில்லே! நான் அதுக்கு சரியான வேலை செய்துவிடறேன், கொலை நோவு ஓடிப் போவுது பாரு.

வீ: (கும்பிட்டபடி) உங்களுக்குக் கோடிபுண்யமுங்க. எங்களாலே இந்த கோரத்தைப் பார்த்துச் சகிக்க முடியலைங்க.

பூ: வீரம்மா! உன்புள்ளே நோவு போயிடுத்துன்னு வைச்சிக்கோ. வேலப்பா! பொன்னியம்மா கோயிலிலே இண்ண ராத்திரி நடுசாமத்திலே, ஒரு கோழி அறுத்து, இரத்தத்தை அபிஷேகம் செய்யணும். குடலுக்குக் குடலு.

வீ: அப்படின்னா, என்னாங்கோ?

பூ: ஆத்தா, கோவத்திலே, உன் மவனுடைய குலையிலே நோவு உண்டாக்கிட்டா. இப்பொ அவமனசு குளிருகிறாப்போலே, கோழியை அறுத்துக் குடலை எடுத்து மாலையா போட்டு விட்டா, ஆத்தா, உன் மவனுடைய குலைநோயை போக்கிடுவா.

வீ: (கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு) பொன்னிம்மா, தாயே! அப்படியே செய்யறேன். ஏழைகமேலே இரக்கம் காட்டு.

[வேலன், துணிமுடிப்பை அவிழ்த்து 3-ரூபாய் கொடுக்கிறான். பூஜாரி அதைப்பெற்றுக் கொண்டு போகிறான்.]

காட்சி 2

இடம்:—பாதை.
இருப்போர்:—பூஜாரி, ராஜாக்கண்ணு.


[பூஜாரி, ராஜாக்கண்ணு வருவதைக்கண்டு]


பூ: அடடே! தம்பி! ராஜாக்கண்ணு இல்லே, நீ! நம்ம வேலன் மகன்?

ரா: ஆமாம். நீங்க? தொப்புளான் தோட்டத்திலே காவக்காரராக இருந்திங்களே, மொட்டெ, அவுங்கதானே?

பூ: முன்னே காவக்காரனாக இருந்தேன். இப்ப நான் நம்ம பொன்னியம்மா கோயில் பூஜாரி. ஆமா, கடுதாசி போட்டானா, வேலன்?

ரா: இல்லையே! ஏன்? வீட்டிலே யாருக்கு என்ன?

பூ: அடபாவமே! உனக்கு விஷயமே தெரியாதா? உன் தம்பி மருதை இருக்கானே, பாவம், அவனுக்குக் குலைநோவு கொல்லுது. பொன்னியம்மா குத்தம். இப்பத்தான், மந்திரிச்சி விட்டு வர்ரேன். போய்ப்பாரு தம்பியை.

ரா: (சோகத்துடன்) இங்கே இப்படியா? சரி. நான்தான் படாத பாடுபட்டு, பிழைச்சா போதும்னு இங்கே வந்தேன். வந்த இடத்திலே இப்படி இருக்குது. துரத்தி அடிக்குது தொல்லையும் துயரும்.

பூ: உனக்கு என்னப்பா உடம்புக்கு? தலையிலே கட்டு! காயம்!

ராஜா: அதுவா? ஒண்ணுமில்லே, நம்ம மாட்டுக்குச் சூடு போட்டு வைக்கிறமில்லே, அந்த மாதிரி நம்ம சர்க்காரு, அடிக்கடி இப்படித் தொழிலாளருக்கு முத்திரை போட்டு வைக்கிறது. அந்த முத்திரை தான் அது.

பூ: என்னப்பா இது? பட்டணத்து பாஷையிலே சொன்னா எனக்குத் தெரியுமா? புரியறாப்போல சொல்லு.

ரா: போலீசார், தடியாலே அடிச்சாங்க, மண்டையிலே. அந்த அடி.

பூ: (திடுக்கிட்டு) என்னப்பா இது? பூமழை பொழிஞ்சுதுன்னு சொல்றாப்போலே, இவ்வளவு சாந்தமாச் சொல்றயே, இந்த அனியாயத்தை. போலீசாரு தடியாலே அடிச்சாங்களா? ஏன்?

ரா: என்னை மட்டுமா? என்னைப் போல ஒரு நூறு பேருக்கு இருக்கும். ஒரு ஐஞ்சாறு பேரு,'ஓகயா' ஆயிட்டாங்க.

பூ: என்ன ஆயிட்டாங்க?

ரா: செத்துப் போயிட்டாங்க.

பூ: (திகைத்து) செத்துப் போயிட்டாங்களா? அடிச்சதாலேயா?

ரா: அடின்னா அடி, உங்க ஊட்டு அடி, எங்க ஊட்டு அடியா அது.

பூ: அக்ரமமா இருக்கேடா, தம்பி! ஏன் அடிக்கோணும் மனுஷன்களை. நாயா நரியா நாம்ப.

ரா: (கேலிச்சிரிப்புடன்) அடிக்கிறவங்க மாத்திரம் நாயா, நரியா? அவங்களும் மனுஷ்யனுங்கதான்.

பூ: மனுஷனை மனுஷன் இப்படி ஈவு இரக்க மில்லாமெ, அடிக்கறதா! சாகடிக்கிறதா? ஏன்?

ரா: மெட்றாசிலே, நான் மில்லிலே வேலை செய்யறேனேல்லோ, என்னைப்போல ஒரு ஐயாயிரம்பேரு தொழிலாளி வேலை செய்யறானுங்க. விலைவாசி ஏறிப்போச்சி. மில்லிலே கொடுக்கிற கூலி போதலே. மில்காரருக்கு இந்த வருஷத்திலே அடி அடின்னு இலாபம் சரியா அடிச்சுது. எங்க உழைப்பினாலே தானே இவ்வளவு இலாபம் வந்தது, எங்களுக்கோ வயித்துக்கூடச் சரியா இல்லையே, நீங்க கொடுக்கிறகூலி ஒரு எட்டணா அதிகமாத் தரவேணும்னு கேட்டோம்.....

பூ: நீயா, கேட்டே?

ரா: எல்லோரும், ஒருவர்மட்டும் கேட்க முடியாதே. கூட்டம் போட்டுக் கேட்டோம்...

பூ: தம்பீ! பீடி இருந்தா ஒண்ணு குடு.

ரா: இல்லையே? கூலி உயர்த்தச் சொன்னமா—முடியாதுன்னு சொன்னான்.

பூ: கெவர்மெண்டா?

ரா: இல்லே—மில்காரன்.

பூ: சரி. அப்புறம்?

ரா: ஸ்ட்ரைக் பண்ணினோம்.

பூ: என்னா? என்ன பண்ணிங்க?

ரா: ஸ்ட்ரைக், ஸ்ட்ரைக் பண்றதுன்னா, வேலைக்கு வர முடியாதுன்னு சொல்றது.

பூ: வேலை செய்யாவிட்டா, கூலி? கூலிவராமே, குடும்பம் எப்படி நடக்கும்?

ரா: அதெல்லாம், சங்கம் பார்த்துக் கொள்றேன்னு சொல்லிச்சி, ஸ்ட்ரைக் பண்ணிக் கூட்டம் போட்டோம். ஒரு ஐயாயிரம் ஜனம், ஆத்திரத்தோடு கூடினா, கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகத் தானே இருக்கும்!

பூ: ஆமாம்—கொஞ்சம் நிதானம் தவறினாலே, ஆர்ப்பாட்டந்தான்.

ரா: நாங்க, குடிக்கக் கஞ்சிக்குக் கூட்டம் போட்டோம். அதுக்குப் பேர் என்ன தெரியுமோ. கலாட்டான்னு பேரு.

பூ: யாரு உங்க மில்காரன் சொன்னானா?

ரா: கெவர்மெண்டு சொல்லிச்சி. சொல்லி, போலீசை அனுப்பினாங்க. அவனுங்க குதிரைமேலே வந்தாங்க. நாங்க. கும்பலா கூச்சல் போட்டோம். குதிரை மிரண்டுட்டுது. ஒரே அமர்க்களம். போலீசாரு, தூக்கினாங்க தடியை. மண்டையைப் பார்த்துக் குடுத்தானுங்க.....

பூ: ஈவு இரக்க மில்லாமெ.....

ரா: ஈவாவது, இரக்கமாவது? என்கூட, தங்கவேலுன்னு ஒரு தொழிலாளி—அவன் அண்ணனுக்குப் போலீசிலே வேலை. அண்ணைக்குப்பாரு வேடிக்கையை - கும்பலிலே புகுந்து அடிக்கச்சே, தங்கவேலுக்கு அடி கொடுத்தது யாரு தெரியுமா—அவுங்க அண்ணன்! கும்பலிலே கோவிந்தா! கண்டானா அவன், தன் தம்பின்னு? கண்டு அடிக்காமெ விட்டா, அவனுக்கு வேலைதான் நிலைக்குமா? சாயந்திரம் அண்ணன் அடிச்சான்—அந்த அடிக்கு இராத்திரி, அண்ணிதான் 'பத்து' அரைச்சி போட்டா.

பூ: ரொம்ப அக்ரமமா இருக்கேடாப்பா? இரக்கம், கொஞ்சம்கூடக் காணோமே?

[ராஜாக்கண்ணு ஒரு பீடி எடுத்துப் பற்ற வைக்கிறான்.]

பூ: என்னா தம்பி, பீடி, குடுன்னு கேட்டா, இல்லைன்னு சொன்னயே?

ரா: ஆமா, ஒண்ணுதான் இருந்தது. உங்களுக்குக் குடுக்கிறதுக்கு இல்லைன்னு சொன்னேன். சரி, நான் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறேன்.

[ராஜா போகிறான்]

பூ: திருட்டுப்பய! ஒரு பீடி கேட்டா இல்லைன்னு சொன்னான். வேணும் இதுகளுக்கு. இதுகளிடம் ஈவு இரக்கம் காட்டப்படாது.

[போகிறான்]

காட்சி 3

இடம்:—வேலன் வீடு.
இருப்போர்:—மருதை, வேலன், வீராயி.


[மருதை படுக்கையில் படுத்துப் புரள்கிறான்—துடிக்கிறான். சாராயப் பாட்டில் முழுவதும் காலியாகிக் கிடக்கிறது. வேலனும் வீராயியும் வேதனைப் படுகிறார்கள்.]

வீ: ஐயோ! புழுவாட்டம் நெளியிறானே! என்மனம் தாளலியே. நான் என்னத்தைச் செய்வேன். பொன்னியம்மா!

மரு: ஐயோ! ஐயயோ—என் உயிர் போவுதே—அம்மா—அம்மாடி—அப்பா—அப்பாடி—

[ராஜாக்கண்ணு ஓடி வருகிறான்]

வீ: அடே ராஜா! இந்தக் கண்றாவியைப் பாருடா!

மரு: அண்ணென்! வந்தூட்டயா? உன்னைத்தான் பார்க்கோணும், பார்க்கணும்னு ஆசையா இருந்தது. ஐயயோ! அப்பப்பா!

ரா: (பக்கத்திலே உட்கார்ந்து மருதையைத்தூக்கி, மார்மீது, சார்த்திக்கொண்டு விம்மியபடி)

தம்பி! மருதெ! உனக்கு என்னடாப்பா, பண்ணுது? ஐயோ! இது என்ன நோயோ தெரியலை. பார்க்கச் சகிக்கலையே! தெய்வமே! உனக்குக் கருணை இல்லையா?

மரு: அண்ணென்! எங்கிட்ட கொஞ்சம் பேசண்ணென். ஏழைக பேச்சை எண்ணைக்கும் கேட்காத தெய்வத்தைக் கூப்பிட்டு பலன் என்னாண்ணேன்.

ரா: (தம்பியை அன்புடன் அணைத்துக்கொண்டு) அடெ அப்பா! இந்தக் கோரத்தைப் பார்க்கவாடா, நான் வந்தேன். அப்பா! இங்கே பக்கத்திலெ, டாக்டர் யாரும் இல்லையா?

வீ: இருக்கறாரே, ராமய்யர்.

[மருதையைப் படுக்க வைத்துவிட்டு ஓடுகிறான். ராஜாக்கண்ணு—டாக்டர் வீட்டுக்கு.]

காட்சி 4

இடம்:—டாக்டர் வீடு.
இருப்போர்:—டாக்டர் தண்டம், கம்பவுண்டர்; ராஜாக்கண்ணு.

[சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு, டாக்டர் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். கம்பவுண்டர் கண்ணன் காலி பாட்டில்களில் கலர்த் தண்ணீர் நிரப்புகிறார்.

ஐயா! ஐயா! டாக்டர்! டாக்டர்! என்று வெளியே குரல் கேட்கிறது.

டாக்டர் பரபரப்படைகிறார். கம்பவுண்டர் பாட்டில்களை ஒழுங்காக வைத்துவிட்டு வெளியே போய், ராஜாக்கண்ணை அழைத்துக்கொண்டு வருகிறார்.]

க: இப்பத்தான், டாக்டர் ஒரு விசிட் போய்வந்து உட்கார்ந்தார்—இதற்குள் வந்துவிட்டீர்.

ராஜா: ரொம்ப அவசரமான கேஸ் (டாக்டருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு) ரொம்ப அர்ஜண்டாக என் வீட்டுக்கு வரவேணும்.

டா: (கம்பவுண்டரைப் பார்த்து) டயம் என்ன இப்போ?

க: டுவெல்வுக்கு டென் மினிட்ஸ் இருக்கு.

டா: அப்படின்னா, டோக்கர் கம்பெனி சேட் வருகிற சமயம்?

ரா: டாக்டர் சார்! என் தம்பி, பிராணாவஸ்தையிலே இருக்கிறான். இந்நேரத்திற்குள் என்ன ஆகிவிட்டதோண்ணு பயப்படக்கூடிய ஸ்திதி. தடை சொல்லாமல் வரணும். என் தம்பி உயிரைக் காப்பாத்தணும்.

டா: (அலுப்பால் வெறுப்படைந்ததுபோல பாவனை செய்து) என்னய்யா இது ஒரே ரகளை! நமது வாடிக்கைக்காரன்—ஒரு இலட்சாதிபதி—டோக்கர் கம்பெனி சேட்—அவன் வருகிற நேரம் அதைக் கெடுத்துக்கொண்டு, உன் பின்னோடு வரமுடியுமா

ரா: (டாக்டரின் காலைப் பிடித்துக்கொண்டு) அப்படிச் சொல்லப் படாதுங்க. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.

டா: எழுந்திரு, எழுந்திரு. என் வேலையிலே அலுப்பு பார்த்தா முடிகிறதா? சரி! கார் வந்திருக்கா?

ரா: மோட்டாரா? இல்லிங்க.

டா: யார்ரா இவன்—சுத்தப்பட்டிக்காட்டுப் பயபோலிருக்கு. போய் குதிரை வண்டியாவது கொண்டுவாடா.

ரா: ரிக்ஷா கொண்டு வரட்டுங்களா?

டா: சரி, ஓடு. அழைத்துக்கொண்டு வா.

[வெளியே செல்கிறான். டாக்டர் உடை போட்டுக் கொள்கிறார்.]

காட்சி 5

இடம்:—வேலன் வீடு.
இருப்போர்:—வேலன், வீராயி, மருதை.


[டாக்டர் உள்ளே வருகிறார். வீராயி கும்பிடுகிறாள். வேலன் காலிலே விழுகிறான்.]
டா: என்னை அழைக்கவந்த ஆசாமி எங்கே?

வே: டே! அப்பா! ராஜாக்கண்ணு! டே!

[ராஜாக்கண்ணு, ஒரு பழைய நாற்காலியைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறான். அதைப் போட்டு, டாக்டரை அதிலே உட்காரச் சொல்லி விட்டு நிற்கிறான்.]
[டாக்டர் பரிசோதனை நடக்கிறது.]

டா: இது, அபண்டி சிடிஸ். மேஜர் ஆபரேஷன் செய்யணும். ரொம்ப ஜாக்ரதையாத்தான் கவனிச்சிக்க வேணும்.

ரா: (பயந்து) ஆபரேஷனா? ஆபத்து இராதுங்களே!

டா: ஏம்பா! நான் என்ன ஜோசியரா? டாக்டர்தானே! அபண்டி சிடிஸ் ஆபரேஷன் சிரமமானதுதான். நூறு ரூபாயாகும், பீஸ்.

ரா: (மேலும் பயந்து) நூறு ரூபாய்ங்களா? உயிருக்கு ஆபத்து இராதே.

டா: நூறு ரூபாய்னா அதிகம்னு நினைக்கறயா? வியாதி, அப்படிப்பட்டது. உயிர் விஷயத்தைப்பத்திப் பயப்படாதே, பகவான் இருக்கார்.

ரா: (வேலனைப் பார்த்து) ஐயா, ஆபரேஷன் செய்கிறாராம். பிறகு ஆண்டவன் இருக்காருன்னு சொல்றாரு.

வே: (வேதனையுடன்) ரூபா நூறு வேணுமாமே.

[ராஜாக்கண்ணு கைகளைப் பிசைந்து கொள்கிறான். வீராயி முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.]

டா: சரி! உங்க யோசனை முடிந்தபிறகு வந்து சொல்லுங்கோ. இப்ப, விசிடிங் பீஸ் ஐஞ்சு ரூபா எடுங்கோ.

ராஜா: இருங்க, டாக்டர்.

[ராஜா. தகப்பனிடம் இரகசியமாக எதுவோ பேசுகிறான்.]

[மடியிலிருந்து ஒரு மணிபர்சை எடுத்துச் சில நோட்டுகளை டாக்டரிடம் கொடுத்து]
ரா: தற்சமயத்துக்கு இதை வைச்சிக்கங்க—ஏழைக மேலே இரக்கம் காட்டுங்க.

டா: நீ, என்ன காய்கறிக் கடைக்காரனா? இது என்னப்பா இருபத்தைந்து ரூபா?

ரா: கையிலே இருந்தது அவ்வளவுதானுங்க. பெரிய மனசு செய்யவேணும்.

[டாக்டர் ஒரு ஐந்து ரூபா நோட்டை எடுத்துக் கொண்டு, மற்றதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு]

டா: வேறே ஆசாமியைப் பாரு. இல்லையானா தர்ம ஆஸ்பத்ரிக்குப் போ.

ரா: ஐயா! இந்த ஆபத்தான நிலைமையிலே, கைவிட்டு விடுவது தர்மமா, நியாயமா? கொஞ்ச ஈவு இரக்கம் காட்டக் கூடாதா? இந்தப் பையனைக் கொஞ்சம் கண்ணாலே பாருங்க. உயிர் துடிக்குதே! மரணாவஸ்தையிலே இருக்கிறானே! பணமா பெரிசு! டாக்டர்! ஒரு பிராணனைக் காப்பாத்துங்க—கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.

டா: சுத்தப் பைத்யக்காரத் தனம்! இரக்கம், இரக்கம்னு சொல்லிக்கொண்டா, எனக்குப் படிப்பு சொல்லித் தந்தார்கள்? பணம் கொடுக்க, வக்கு இல்லாதவன், டாக்டர் வீடு வருவானேன்? வேலை இல்லாமலா இருக்கிறோம், கண்ட இடத்துக்கு வந்துபோக! இடியட்!

[கோபமாகப் போய்விடுகிறார். டாக்டர் போன பிறகு]

ராஜா: அப்பா ! இந்தப் பாவிகள் எவருக்கும் இரக்கம் என்பது கடுகளவுகூட இல்லை. ஏழைகளின் துயரத்தைப் பற்றி கவலைப்படுகிற ஆளையே காணோம்.

வே: எந்தப் புண்யவானும் கிடைக்கலையே.

மருதை: (படுக்கையில் புரண்டபடி) புண்யவான்களுக்கு என்னப்பா குறைவு? வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கோயிலைக் கட்டுவாங்க, குளத்தை வெட்டுவாங்க, தேரு திருவிழா செய்வாங்க, ஏழைக்குக் குலைநோவு வந்தா, அவுங்களுக்கு என்ன, குடும்பமே நாசமானாத்தான் என்ன!

ரா: தம்பி! நீ பேசிகிட்டு இராதேப்பா. வலி அதிகமாப்போகும்.

மரு: இருக்கப்போறது கொஞ்ச நேரம், பேசிகிட்டாவது சாகிறேன்.

வீ: ஐயோ, மகனே! அப்படி எல்லாம் பேசாதேடா கண்ணு!

ரா: அப்பா! என்னாலே தாங்கமுடியாது. இந்த க்ஷணம் போய், நீங்க வேலை செய்ற இடத்திலே எப்படியாவது கொஞ்சம் பணம் கடன் வாங்கிகிட்டு வாங்க......

வே: அந்தப் பாவி கிட்டவா போகச் சொல்றே. அவன் ஈவு இரக்கமில்லாதவனாச்சே, எரிஞ்சி விழுவானே.

வீ: போய், கைகாலைப் பிடிச்சிக்கங்க. இந்த ஆபத்தான வேளையிலே கூடவா, அவரு, கர்மியா இருப்பாரு போய்வாங்க. எழுந்திருங்க. நான் நல்ல சகுணம் வருதான்னு பார்க்கிறேன்.

[வேலன் போகிறான்.]

காட்சி 6

இடம்:—மிராசுதார் மாணிக்கம் மாளிகை.
இருப்போர்:—மிராசுதார், கணக்கெழுதும் கந்தையா,கடன் பட்டவர்.


[மிராசுதார் கோபமாக உலவுகிறார். கடன்தர வேண்டியவர் கைகட்டிக்கொண்டு நிற்கிறார். கணக்கெழுதுபவர் தலையைச் சொறிந்து கொண்டு நின்றபடி, கடன் தர வேண்டியவரைக் குறும்பாகப் பார்க்கிறார்.]

மிரா: தலை தலைன்னு அடிச்சிகிட்டு, எங்காவது தேசாந்திரம் போகலாம்போலே இருக்கு. மூணு வருஷமாகுது; வாங்கின கடனைப் பைசல் செய்யலே. கேட்டு அனுப்பினா லாபாயின்ட் பேசறே லாபாயின்ட்.

கட: நான் தவறாக ஒண்ணும் சொல்லலிங்களே. கணக்கப் பிள்ளை, மென்னியைப் பிடிச்சாரு. அந்தச் சமயம், என் மருமவன், குடித்துவிட்டு வந்து என் மகளைப் போட்டு அடி அடின்னு அடிச்சிப்போட்டான். நான் வேதனையோடு இருந்தேனுங்க. அந்தச் சமயத்திலே, கடனைப் பைசல் செய்தாகணும்ணு, உயிரை வாங்கனாரு. கோவத்திலே, வாங்கிக்கிற விதமா வாங்கிக்கோன்னு சொன்னேன்.

மிரா: (ஆத்திரம் பொங்கியவராய்) எவ்வளவு திமிர் இருந்தா அப்படிப் பேசத்தோணும்? கடன்பட்ட கழுதே, அடக்க ஒடுக்கமாப் பதில் பேசாமே, ராங்கிப் பேசறியா ராங்கி. உன்னை, வீடு வாசலை ஏலத்திலே எடுத்து ஊரைவிட்டுத் துரத்தாவிட்டா, என் பேரை மாத்தி வைச்சிக்கிறேண்டா. ஆமா.....

கட: மன்னிச்சிடுங்க .....

மிரா: உன்னையா? ஊரான் சொத்துக்குப் பேயாப் பறக்கற உன்னையா? மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போயிடு.....ஆமா......எனக்கு இருக்கற கோவத்துக்கு, நான் உன்னை......

கண: (கடன்காரனைப் பார்த்து) போய்வாய்யா! நாளை மறுநாள் வந்து கடனைப் பைசல் செய்துடு. போ! கடனை வாங்கறப்போ, பூமேலே வைத்துக் குடுத்துடறேன், கெடுவு தவறாதுன்னு குழையறது—கொஞ்சம் கண்டிஷனா இருந்தா, சட்டம் பேசறது.....போ! போ.

[கடன்பட்ட பூஜாரி போகிறான்.]
[வேலன் வருகிறான்.]

மிரா: இவர் எங்கே வந்தாரு தொரே! இந்த நேரத்திலே?

வே: (சோகம் கப்பிய குரலில்) எஜமான்! இந்தச் சமயத்திலே நீங்கதான் காப்பாத்தவேணும்.]

மிரா: (கேலியும் கோபமும் கலந்த குரலில்) கற்பூரம் கொண்டு வந்தாயாடா?

வே: (புரியாமல்) எதுக்குங்க?

மி: என் எதிரிலே கொளுத்த! ஒருத்தன் மாத்தி ஒருத்தன் நம்மைப் பிராணனை வாங்குகிறவனாகவே வந்து சேருகிறான். காப்பாத்தவேணுமாம் இவரை! ஏண்டா, உலகம் பூராவையும் காப்பாத்த அவன் இருக்கான்.

வே: என் சின்ன மகன் சாகக் கிடக்கிறானுங்க. கொலை நோவு. ரொம்ப ஆபத்தா இருக்குது.....

மி: ஓஹோ! இதைச் சொல்லிவிட்டு, நாளைக்கு வேலைக்கு வராம இருக்க......

வே: எஜமான், லீவு கேக்க வரலிங்க....என் மகன் உயிரைக் காப்பாத்தணும். டாக்டர் ஆபரேஷன் செய்தாத்தான் பையன் பிழைப்பானுன்னு சொல்றாரு. (விழுந்து கும்பிட்டு) இந்தச் சமயம் ஒரு நூறு ரூபா கடனா கொடுங்க, என் பிள்ளையை காப்பாத்துங்க.....

மி: சரி, சரியான 'பிளான்' போட்டுகிட்டுத்தான், வந்தூட்டான். ஆபரேஷன் செய்யணுமா! டாக்டர் பீசு 100 ரூபா!! பெரிய சீமானில்லே இவரு, பட்டத்து இளைய ராஜாவுக்கு இல்லவா, வைத்யம் செய்யப் போறாரு.....

வே: எஜமான், இந்தச் சமயம் என் மனம் நொந்து போயிருக்கிற சமயத்திலே இப்படி எல்லாம் பேசாதிங்க, எப்படியாவது, நீங்கத்தான் காப்பாத்தணும். கொஞ்சம் இரக்கம் காட்டுங்க. நான் நாயா, உழைக்கிறவனாச்சிங்களே, உங்களைத் தவிர உலகத்திலே எனக்கு யாருங்க துணை?—கொஞ்சம் மனசு வையுங்க.

மி: (கோபத்துடன்) ஏண்டா! நீ என்னாண்ணு எண்ணிக்கிட்டே, பணம் என்ன செடியிலா முளைக்குது. வாய் கூசாமே, ஐஞ்சா, பத்தா? நூறு ரூபா கேக்கறே. முட்டாப் பயலே! போடா. போயி ஏதாச்சும் கஷாயம் போட்டுக் கொடு நோய் போயிடும். ஆபரேஷனாம்—நூறு ரூபாயாம்......பெரிய சமஸ்தானம்—திருவாங்கூர்......!

வே: தெரிந்த வைத்யமெல்லாம் செய்தாச்சிங்க. குணமாகலைங்க. துடியாத் துடிக்கிறான்.

மி: ஏண்டா, அந்தப் பய பெரிய அலகிரி! கூச்சல் போடுவான். நோவு இருந்தா கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டுப் பொறுத்துக்கவேணும். மூணுநாளா எனக்கு முதுகுவலி உயிரை வாட்டுது—அவ வேறே அடி வயித்திலே என்னமோ பண்ணுது என்னமோ வேதனைன்னு அழுதுகிட்டு இருக்கா. நோவு நொடி சகசமாக வரும் போகும். அதைச் சாக்குக் காட்டி இங்கே பணம் கிணம்னு வராதே. செப்பாலடிச்ச காசு கிடையாது—ஆமா—போ, போ.

வே: எஜமான், எஜமான்......

மி: போடா போ! நான் இனிமே உனக்குப் புத்தி சொல்லிகிட்டு இருக்க முடியாது—சிவன் கோயில் போயாகணும்—டே முனியா? தடியைக் கொண்டா—அம்மா! அன்னம்! சரிகை வேஷ்டியை எடுத்துவாம்மா—போ போ!-இங்கே சனியன் போல என் எதிரே இராதே—அன்னம்! வாம்மா நேரமாவது—ஏய், கணக்குப்பிள்ளை. நெத்தியிலே, சந்தனப் பொட்டு சரியா இருக்கா பாரய்யா...(உரத்த குரலில்) டேய்! தடியா! வண்டியைப் பூட்டியாச்சா?
[அன்னம், வேஷ்டிகொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிப் பார்த்துவிட்டுக் கோபத்துடன், கீழே வீசிவிட்டு]

ஏம்மா! இதான் கிடைச்சுதா உனக்கு? வேறே இல்லே.....

காட்சி 7

இடம்:—பாதை
இருப்போர்:—வேலன், சுடலை, ராஜாக்கண்ணு


[விசாரத்தோடு வேலன் தள்ளாடி நடந்து வருகிறான். அவனுக்குப் பின்புறமிருந்து ஒரு முரடன் ஓடி வந்து, கீழே தள்ளி, வேலனைத் கத்தியால் குத்த முயற்சிக்கிறான். வேலன் கூச்சலிடுகிறான்.]

வே: சுடலை! சுடலே! உன்னைக் கும்பிடுகிறேன். என்மவன் அங்கே குத்துயிராக இருக்கிறான், என்னை இப்போ ஒண்ணும் செய்யாதே......

சு: டே, வேலா? போன வெள்ளிக்கிழமை புளியமரத்திலே கட்டி வைச்சி அடித்தவனில்லே நீ. மறுதினமே தயார் பண்ண கத்திடா இது.

வே: (திணறி) எஜமான் சொன்னாரு உன்னை நான் அடிச்சேண்டா சுடலை—எனக்கும் உனக்குமா விரோதம்?

[சுடலை அடிக்கிறான்—வேலன் கத்தியைக் கீழே தட்டிவிடுகிறான்—கூவுகிறான்—அதே சமயம் ராஜாக்கண்ணு ஓடி வருகிறான்.]

[சுடலைமீது பாய்ந்து, தாக்குகிறான். சுடலை பலத்த அடிபட்டுக் கீழே வீழ்கிறான்.]

வே: ஜயோ, பாவம்! பலமான அடி விழுந்துடுத்தோ

[கூடலை அருகே சென்று இரத்தத்தைத் துடைக்கிறான். ராஜா! அவன் மேலே தப்பு இல்லெடா போன வெள்ளிக்கிழமை, அவனை நான் புளிய மரத்திலே கட்டி வைச்சி, அடிச்சேன்—இன்னக்கி அவனுக்குச் சமயம் கிடைச்சது.]

ரா: இவன் என்ன செய்தான்.

வே: பாவம்! என்னை ஒண்ணும் செய்யலே இவன். என் எஜமான் தோட்டத்திலே வேலை செய்கிறவன். தாறுமாறாப் பேசினானாம் எஜமானனை. அவர் என்கிட்ட சொல்லி, அடிக்கச் சொன்னார்.

ரா: ஏழையைக் கொண்டே ஏழையை அடிக்கச் சொன்னானா? சரி, பணம் கிடைத்ததா?

வே: கிடைக்குமா? நான் முன்னமேயே சொன்னேனே, கெஞ்சிக் கூத்தாடினேன்—ஒரு சல்லிக்கூடத் தரமுடியாதுன்னு சொல்லிவிட்டுப் போயிட்டாரு—ஜமுனா வீட்டுக்கு.

[ராஜாக்கண்ணு ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு]

ரா: அப்பா! நீ வீட்டுக்குப்போ! தம்பிக்குக் கொஞ்சம் சாராயம் கொடுத்தேன். தூங்கறான். எனக்கு ஒரு சினேகிதர் இருக்காரு, அவரையாவது போய்க் கேட்டுப் பார்க்கிறேன்.

வே: சுருக்கா வந்தூடு.

ரா: ஆகட்டும்பா! அடிபட்டதுக்கு ஏதாச்சும் பத்து அரைச்சி போடப்பா.

[வேலன் போகிறான். ராஜா, கீழே கிடந்த கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.]

காட்சி 8

இடம்:—ஜமுனா வீடு—கூடம்
இருப்போர்:—ஜமுனா, மிராசுதார்.


[ஜமுனா,மிராசுதாரருக்குப் பானம் தருகிறாள். அவர், சரசமாடிக் கொண்டே அதைப் பருகுகிறார். வெளியே குரல் கேட்கிறது. அவள் எழுந்து உள்ளே போய்விடுகிறாள்.

[மிராசுதார், உள்ளே வா, என்று உத்தரவிடுகிறார். ராஜா, கூடத்துக்கு வருகிறான், மிராசுதார் குடி வெறியில் உளறுகிறார்.]

மி: யார் நீ? தெரியலையே!

ரா: (பானத்தை எடுத்துப் பருகிவிட்டு) தெரியலே!.....நான்தான் ஜமுனாவுக்குத் தம்பி!

மி: (குடிவெறியால் ராஜாவைத் தழுவிக்கொண்டு) அடெ, நம்ம மச்சானா! மச்சான்—சும்மா சாப்பிடு...சாப்பிடு மச்சான்.......எனக்குத் தெரியவே தெரியாதே...ஜமுனா சொல்லவேயில்லையே. ஜமுனா! ஜமுனா!! ஜமுனா!!—!

[ஜமுனா வருகிறாள்]

ரா: அக்கா! கொஞ்சம் அத்தானிடம் இரகசியம் பேசணும், உள்ளே போய் இரு.

ஜ: யார் இவரு? அக்காவுக்கு ஒரு தம்பி வந்து முளைச்சாரு?

ரா: (மிரட்டுகிற பாவணையில்) ஜம்னாக்கா! உள்ளே போ!

ஜ: (கோபத்துடன்) அடயாரடா இவன், அறிவு கெட்டவன்—என் வீட்டிலே வந்து, என்னை உள்ளே போகச் சொல்ல.

மி: என்னா ஜமுனா இது? அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டையா?

ஜ: கர்மந்தான்! குடித்துவிட்டு வெறியிலே உளறாதிங்க.

ரா: உள்ளே போகிறயா, இல்லையா?

ஜ: அடடே! இவரு பெரிய சூரப்புலி!

ரா: (கோப்பையை வீசி எறிந்து) போடி உள்ளே! போடின்னா போ - (கத்தியைக் காட்டுகிறான்—ஜமுனா உள்ளே ஓடிவிடுகிறாள் பயந்து—திகைக்கும் மிராசுதாரன் வாயைக் கட்டி விட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு, ராஜா ஓடிவிடுகிறான்.)

காட்சி 9

இடம்:—வேலன் வீடு.
இருப்போர்:—வேலன், வீராயி, மருதை.


[ராஜாக்கண்ணு, வீட்டுக்குள் நுழைகிறான். அழு குரல் கேட்கிறது. ஐயோ! என்று அலறிக் கொண்டு ஓடுகிறான். தம்பி மருதை இறந்து
கிடக்கிறான். வேலனும் வீராயியும் புரண்டு அழுகிறார்கள். ராஜாக்கண்ணு, தம்பிமேல் புரண்டு கற்றுகிறான்.]

ரா: தம்பி! கடைசியில் நீ செத்துவிட்டாய்! ஆமாம்! தடி தடியாக நாங்கள் இருத்து என்ன பிரயோசனப்பட்டது—பழிகார உலகமே! ஏழையைப்பார்! குடிக்கவும் கூத்தி வீட்டுக்குப் போகவும், ஏழையின் வயிறு எரியப் பணத்தைப் பிடுங்கும் பணக்கார சமூகமே! உன் மனம், கல்லா, இரும்பா? இரக்கம் இல்லாத நெஞ்சு! ஈரமில்லாத நெஞ்சு! உன் வஞ்சகம் எப்போது ஒழியும். (தம்பி மேல் விழுந்து) எப்போதடா தம்பி! இந்த உலகத்திலே ஏழையின் குலைநோய், எப்போதடா தீரும். நமக்கு விடுதலை, விமோசனம், வாழ வழி, எப்போதடா தம்பி கிடைக்கும்? உன்னைப்போல, பிணமான பிறகுதானா? ஏழைகளுக்கு இந்த உலகத்திலே இடம் இல்லையா? காலமெல்லாம் என் தகப்பனாரை வேலை வாங்கிய காதகன் கடுகளவு கூட இரக்கம் காட்டவில்லையே! பாழும் பணத்தை (நோட்டுக்களைக் கசக்கிக் கீழே வீசியபடி) ஊரை மோசம் செய்து, பலகுடும்பங்களை நாசம் செய்து, சேர்த்த பணத்தை, ஜமுனாவுக்குத் தர மனம் இருந்தது, என் தம்பியின் உயிரைக் காப்பாற்ற மனம் இல்லையே! பணமே! பணமே! பாபிகள் கையில் கொஞ்சி விளையாடும் பணமே! இதோ என் தம்பியின் பிணம் ! நீ இங்கே முன்பு இருந்திருந்தால், என் தம்பி பிழைத்திருப்பான். தூ? இனி என் கால்தூசுக்குச் சமானம் நீ (நோட்டுக்களைக் காலால் துவைக்கிறான்.)

[இரண்டு போலீசார் உள்ளே வருகிறார்கள்.]

போ: யார்டா இங்கே, ராஜாக்கண்ணு!

ரா: நான்தான்...

போ: இதென்ன இங்கே?

ரா: என் தம்பி.

போ: செத்து போயிட்டானா? பாவம்: கர்மம்! சரி, நீதானே ஜம்னா வீட்டிலே புகுந்து கலாட்டா செய்து மிராசுதார் பொருளைத் திருடிக்கிட்டு ஓடிவந்தது.

ரா: ஆமாம்.

போ: எவ்வளவு நெஞ்சழுத்தம்! பயல், பட்டணமோ, பிடித்துத் தள்ளிகிட்டுவா....

வீ: (அவர்கள் காலைத் தொட்டு) ஐயா! தருமப் பிரபுக்களே! இங்கே பிணம் கீழே கிடக்குதே—அவன் தம்பிங்க...தகனம் செய்தூட்ட பிறகு, இழுத்துக்கிட்டுப்போங்க...உங்கக் காலைக் கும்பிடறேன்...ஐயா! நீங்கி பிள்ளே குட்டியைப் பெத்தவங்கதானே.

வே: ஐயாவுங்களே நானும் கும்படறேன்.

போ: அதெல்லாம் ஸ்டேஷன் போனபிறகு, ஐயாகிட்டச் சொல்லணும். டே! ராஜாக்கண்ணு! புறப்படு.

வீ: ஐயா! கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டுங்களய்யா! தம்பி பிணத்தைப் போட்டுட்டு எப்படிய்யா, அண்ணன்காரன் வருவான்.

ரா: அம்மா, அழாதே! இரக்கம் இரக்கம் என்று ஏனம்மா இல்லாத ஒன்றைக் கேட்கிறாய். டாக்டரைக் கேட்டாயே இருந்ததா? எஜமானரை அப்பா கேட்டாரே, இருந்ததா? பைத்தியம் உனக்கு.

[போலீசுடன் போகிறான்.]

காட்சி 10

இடம்:—பாதை.
இருப்போர்:—போலீசார், ராஜாக்கண்ணு.


[ராஜாக்கண்ணு, கையில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறான்.]

போ 34: என்னமோ போண்ணேன்! எனக்கென்னமோ வர வர இந்த வேலையே பிடிக்கலே. அதிலேயும் இந்தமாதிரி சமயத்திலே ரொம்பக் கண்றாவியா இருக்கு.

போ 48: அதைப் பாத்தா முடியுமா 34? டியூடின்னா டியூட்டிதானே! கண்ணைக் கசக்கினாகூட நாம்ப என்ன செய்யறது—இவன் வீட்லே தம்பி செத்துப் போயிட்டானே, தகனம் செய்றவரை, சும்மா இருக்கட்டும்னு சொல்லத்தான் வேணும்னு தோணுது. நமக்கு மட்டும் இரக்கம் இல்லாமலா போகும்? ஆனா, விட்டா, பய, ஓடிடுவானே, பிறகு நாம்ப சஸ்பெண்டு தானே, ஏம்பா! நம்ம பெண்டு பிள்ளைக் கதி என்ன ஆகும்?

34: நீ சொல்லறதும் நியாயமாத்தான் இருக்கு. இவங்கிட்டவும் இரக்கமாகத்தான் வருது.

[ஒரு ஆசாமி ஓடோடி வந்து, 48-ம் நம்பர் கான்ஸ்டபிளைப் பார்த்து]

வந்: மாமா! அக்காவை, பாம்பு கடிச்சிடிச்சி, ஓடிவா...

48: ஐயோ! என்னா! பாம்பா! அடிபொன்னி! ஐயயோ! 34, என் சம்சாரத்தைப் பாம்பு கடிச்சிடிச்சாமே.

போ 34: பதறாதே 48, வீட்டுக்கு ஓடிப்போயி, ஏதாச்சும் மந்தரம் மருந்துபாரு. அட தெய்வமே! எவ்வளவு நல்ல மனுஷரு, இவருக்கு இப்படி ஆபத்து வந்ததே.

போ 48: 34! எனக்கு ஒரு இடமும் தெரியாதே.

34: அழாதே 48! அழாதே. பாம்புன்னா, வெறும் தண்ணிப் பாம்பாகூட இருக்கும், பயப்படாதே!


48: எந்தப் பாம்போ—என்ன ஆகுதோ—அவ ரொம்பப் பயங்காளிப்பா—பாம்புன்னாலே உயிர் போயிடுமே—எங்கேயாவது மந்திரக்காரன்......

34: இருக்கு, ஒருவில்லிகிட்ட.......

48: அந்த வில்லி...........

34: ஏம்பா! அந்த இருளன், ஊர்க்கோடியிலே இல்லவா இருக்கறான்.

48: (பதறி) உலகத்துக் கோடியா இருந்தாக்கூட போகத்தானே வேண்டும். இரக்கம் துளிகூட இல்லையா உனக்கு. வாப்பா!

34: இந்தப் பயலை ......

48: இவனா? கிடக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்வோம்பா.

34: ஓடிப் போயிட்டா?

48: அங்கே உசிரு போயிட்டா என்னப்பா செய்யறது! ஐயோ! பொன்னி!

34: (ராஜா, கைவிலங்கைக் கழற்றிவிட்டு) டே! நீயும் ஓடிப்போயி, உன் தம்பி தகன காரியத்தைக் கவனிச்சிட்டு, ரெடியா இரு, வீட்லே.

ரா: ஆகட்டுங்க.

34: என்னா? ஐயோ, பாவம்னு இரக்கத்தாலே உன்னை வீட்டுக்கு அனுப்பறேன்—ஏமாத்தினா......?

48: வாப்பா, ஏமாத்தமாட்டான். நான் எம்மாந் துடியாத் துடிக்கறேன்—ஈவு இரக்கமில்லாமே இப்பத்தான் அந்தப் பயகிட்ட பேசிகிட்டு இருக்கறே.

34: பாவம்! அவனும் போய், தம்பி காரியத்தைக் கவனிக்கட்டும்—வா! வா! பாம்பு கடிச்சா ஒரு பச்சிலை கொடுப்பான். அந்த வில்லி. போயிடும்.....

48: என்னாப்பா?

34: விஷம் போயிடும்பா.

[போகின்றனர்]

[ராஜாக்கண்ணு தனிமையில்]

ராஜா: மனிதர் கைவிட்டனர்—பாம்பு காப்பாற்றுகிறது என்னை!

இரக்கம் காட்டமுடியாது! டாக்டர்—மிராசுதாரன்—சுடலை—34—48—சகலரும் கூறினர்! உலகமே கூறுகிறது—ஒருவர் இருவர் இரக்கம் காட்டவேண்டும் என்று பேசுவர், முடிவதில்லை காட்ட.

பாம்பு கடித்தது என்ற உடனே, பாவம் போய் உன் தம்பியைத் தகனம் செய்துவிட்டுவா! என்று இரக்கம் பேசினார்கள்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள்.

அதற்குள் ஓடிவிட வேண்டும்—ஆமாம்! திருட்டு ரயில்தான் பிறகு? கப்பல்! கண்காணாச் சீமை!......... என்னைப்போல் எத்தனையோ பேர்! இரக்கத்தைத் தேடி அலைந்து......உருமாறினவர்கள்.