உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகை

பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங் காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் ௸ மஹாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலை மயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நக்ஷத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு க்ஷணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே