உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரசேலிங்கம் பந்துலு

௪௯

“அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்” என்றார் கோபாலய்யங்கார்.

“முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சி யில்லாதவள். கல்விப் பயிற்சி யில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதை யெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்“ என்று பந்துலு சொன்னார்.

அதற்கு கோபாலய்யங்கார்:— “நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல ஸங்கீத ஞானம்— இன்னும் எத்தனையோ லக்ஷணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அஃதற்ற-

ச, ௪