மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/013-052
12. வேறு கொங்குச் சேரர்
சங்க இலக்கியங்கள், அரசர் வரலாறுகளைத் தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கூறவில்லை. அவ்வாறு கூறுவது அச்செய்யுள்களின் நோக்கமும் அன்று. ஆகையால், அவை கூறுகிற அரசர் வரலாறுகளைச் சான்றுகளுடன் சீர் தூக்கிப் பார்த்து ஆராய்ந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் கொங்கு நாட்டுச் சேர அரசர் பரம்பரையை ஆராய்ந்தோம். சங்க இலக்கியங்களில் காணப்படாத கொங்குச் சேரர் சிலர் அக்காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர். கொங்கு நாட்டுப் புகழியூரில் ஆறுநாட்டார் மலைக் குகையில் எழுதப்பட்டுள்ள இரண்டு பிராமி எழுத்துச் சாசனங்கள் மூன்று கொங்குச் சேர அரசர்களின் பெயரைக் கூறுகின்றன. இந்தப் பெயர்கள் புதியவை. இரண்டு சாசனங்களும் ஒரே விஷயத்தைக் கூறுகின்றன. இளவரசனாக இருந்த இளங்கடுங்கோ என்பவன், அமணன் ஆற்றூர்ச் செங்காயபன் என்னும் முனிவருக்கு ஆறு நாட்டார் மலைக் குகையில் கற்படுக்கைகளை யமைத்துத் தானஞ் செய்ததை இவை கூறுகின்றன தானங் கொடுத்த இளங்கடுங்கோவின் தந்தை பெருங்கடுங்கோவையும் அத்தந்தையின் தந்தையாகிய கோ ஆதன் சேரலிரும்பொறையையும் இந்தச் சாசனங்கள் கூறுகின்றன. இச்சாசனங்களின் வாசகங்கள் இவை:
1. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறத்த கல்.”
2. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோ இளங்கடுங்கோ ஆக அறத்த கல்.”இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் கூறுகின்றன. இவற்றில், பாட்டனான கோ ஆதன் சேரலிரும்பொறையும் தந்தையான பெருங்கடுங்கோனும் அவனுடைய மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். இளங்கடுங்கோ, இளவரசனாக இருந்த போது இந்தத் தானத்தை இம்முனிவருக்குச் செய்தான். இந்த மூன்று அரசர்களைப் பற்றிப் புகழியூர்க் கல்வெட்டில் கூறியுள்ளோம்.
ஆதனவினி
கொங்குச் சேர அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன் ஆதனவினி. இவன் கொங்கு நாட்டின் ஒரு சிறுபகுதியை யரசாண்டிருக்கவேண்டு மென்று தோன்றுகிறது. ஐங்குறுநூறு முதலாவது மருதத்திணையில், வேட்கைப் பத்து என்றும் முதற்பத்தில் இவன் பெயர் கூறப்படுகிறது.
“வாழி யாதன் வாழி யவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க.”
“வாழி யாதன் வாழி யவினி
விளைக வயலே வருக விரவலர்.”
“வாழி யாதன் வாழி யவினி
பால்பல வூறுக பகடுபல சிறக்க.”
“வாழி யாதன் வாழிய வினி
பகைவர் புல்லார்க பார்ப்பா ரோதுக.”
“வாழி யாதன் வாழி யவினி
பசியில் லாகுக பிணிசேண் நீங்குக.”
“வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக.”
“வாழி யாதன் வாழி அவனி
அறம்நனி சிறக்க அல்லது கெடுக.”
“வாழி யாதன் வாழி யவினி
யரசுமுறை செய்க களவில் லாகுக.”
“வாழி யாதன் வாழி யவினி
நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக.”
“வாழி யாதன் வாழி யவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க.”
இவ்வாறு இவன் பத்துச் செய்யுட்களிலும் வாழ்த்தப்படுகிறான். இதன் பழைய உரை, “ஆதனவினியென்பான் சேரமான்களிற் பாட்டுடைத் தலை மகன்” என்று கூறுகிறது. இவ்வரசனைப் பற்றி வேறொன்றுந் தெரியவில்லை.
ஐங்குறுநூறு யா.க.சே.மா.சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும்.
கொங்குச் சேரர் பரம்பரை
1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.
அந்துவன்பொறையன் = பொறையன் பெருந்தேவி
(7ஆம் பத்து, பதிகம்) (ஒரு தந்தையின் மகள்)
↓
2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக் கோமான்
பெருந்தேவி. 7ஆம் பத்தின் தலைவன். 25 ஆண்டு ஆண்டான்.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ
வாழியாதன் என்பவன் இவனே. இவனுக்கு இரண்டு
மக்கள் ‘இளந் துணைப்புதல்வர்’ இருந்தார்கள்.
(7ஆம் பத்து 10:21)
↓
─────────────────────
↓↓
3. பெருஞ்சேரல் இரும் பொறைகுட்டுவன்இரும்பொறை =
(தகடூர் எறிந்தவன்) வேண்மாள் அந்துவஞ்செள்ளை,
17ஆண்டு அரசாண்டான். மையூர்கிழான் மகள்.
8ஆம் பத்தின் தலைவன். (9ஆம் பத்து, பதிகம்)
↓ ↓
5. யானைக்கட்சேய் 4.இளஞ்சேரல் இரும்பொறை
மாந்தரஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டு அரசாண்டான்.
(பெருஞ்சேரல் இரும்பொறையின் (9ஆம் பத்துத் தலைவன்).
மகன் எனத் தோன்றுகிறான்.
10ஆம் பத்தின் தலைவன்
இவனாக இருக்கலாம்).
↓
6. சேரமான் கணைக்கால்
இரும்பொறை. (இவன்
யானைக்கட்சேயின் மகனா,
இளஞ்சேரல் இரும்பொறையின்
மகனா என்பது தெரியவில்லை).
சேர அரசர் பரம்பரை
மூத்தவழி (சேர நாடு)இளையவழி (கொங்கு நாடு)
உதியன் சேரல்அந்துவன் பொறையன்
││
┌─────────┴─────────┐│
குடக்கோநெடுஞ்பல்யானைச்செல்செல்வக்கடுங்கோ வாழியாதன்
சேரலாதன்கெழுகுட்டுவன்(7 ஆம் பத்து. 25ஆண்டு
(2ஆம் பத்து, 58(3ஆம் பத்து. 25அரசாண்டான்)
ஆண்டு அரசாண்ஆண்டு அரசாண்│
டான்)டான்)│
┌─────┴─────┐
┌───────────┬───────────┬───────────┐தகடூர் எறிந்தகுட்டுவன்
களங்காய்க்சேரன்ஆடுகோட்இளங்கோபெருஞ்சேரல்இரும்
கண்ணிசெங்குட்டுவன்பாட்டுச்அடிகள்இரும்பொறை(8ஆம்பொறை
நார்முடிச்(5ஆம் பத்துசேரலாதன்(சிலப்பதிகாரபத்து 17 ஆண்டு│
சேரல்55 ஆண்டுஅர(6ஆம் பத்துஆசிரியர்)அரசாண்டான்)இளஞ் சேரல்
(4ஆம் பத்து.சாண்டான்38 ஆண்டு│இரும்பொறை.
25 ஆண்டு│அரசாண்யானைக்கட்சேய் மாந்த(9 ஆம் பத்து. 16
அரசாண்குட்டுவன்டான்)ரஞ் சேரல் இரும்பொறைஆண்டு அரசாண்
டான்)சேரல்│டான்)
கணைக்கால் இரும்பொறை
இரும்பொறை அரசர்களின் கால நிர்ணயம்
இனி, கொங்கு நாட்டைக் கடைச்சங்க காலத்தில் அரசாண்ட சேர மன்னர்களின் காலத்தை நிர்ணயிக்கவேண்டியது கடமையாகும். (காலத்தைக் கூறாத சரித்திரம் சரித்திரம் ஆகாது.) இந்த அரசர்களில் மூன்றுபேர் (7,8, 9ஆம் பத்து) ஒவ்வொருவரும் இத்தனையாண்டு அரசாண்டனர் என்பதைப் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புகள் கூறுகின்றன. 7ஆம் பத்தின் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டும், இவன் மகன் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17ஆண்டும், இவனுடைய தம்பி மகன் 9ஆம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டும் அரசாண்டனர் என்று அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னும்பின்னும் அரசாண்டவர் ஒவ்வொருவரும் எத்தனையாண்டு அரசாண்டனர் என்பது தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்புகளைக் கொண்டு இவர்களின் காலத்தை ஒருவாறு நிர்ணயிக்கலாம்.
இந்தக்கால நிர்ணயத்திற்கு அடிப்படையான கருவியாக இருப்பது செங்குட்டுவன் - கஜபாகு சமகாலம் ஆகும். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அரசர்களில் இலங்கையரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன். முதலாம் கஜபாகு இலங்கையை கி.பி. 171 முதல் 191 வரையில் அரசாண்டான் என்று மகாவம்சம், தீபவம்சம் என்னும் நூல்களினால் அறிகிறோம். சரித்திரப் பேராசிரியர்கள் எல்லோரும் இந்தக் கால நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (கஜபாகு, செங்குட்டுவனைவிட வயதில் இளையவன்). செங்குட்டுவன் பத்தினிக் கோட்ட விழாச் செய்தபோது அவனுடைய ஆட்சியாண்டு ஐம்பது. அவன் ஆட்சிக்கு வந்தபோது (இளவரசு ஏற்றபோது) அவன் இருபது வயதுடையவனாக இருந்தான் என்று கொள்வோமானால், அவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் அவனுக்கு வயது எழுபது இருக்கும். செங்குட்டுவன் தன்னுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் (அதாவது தன்னுடைய 70ஆம் வயதில்) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழாக் கொண்டாடினான்.
“வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை.”(சிலம்பு, நடுகல். 129 - 132)
9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டைப் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனின் தாயாதிச் சகோதரனுடைய மகன் என்பதை அறிவோம்.
செங்குட்டுவன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் இளஞ்சேரலிரும்பொறை கொங்கு நாட்டையரசாண்டான். ஆனால், செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே, அவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்ட விழாச் செய்வதற்கு முன்னமேயே, இவன் இறந்து போனான். அதாவது, செங்குட்டுவனுடைய 50ஆவது ஆட்சியாண்டுக்கு முன்பே, (செங்குட்டுவனுடைய 70ஆவது வயதுக்கு முன்னமே, உத்தேசம் கி.பி. 180க்கு முன்னமே) இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான். இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.
“சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்” (சிலம்பு, நடுகல் 147-150)
சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களை வஞ்சியில் (கொங்கு நாட்டுக் கருவூர் வஞ்சியில்) அமைத்தவன் இளஞ்சேரல் இரும்பொறையாவன். இதை இவனைப் பாடிய 9ஆம் பத்துப்பதிகமுங் கூறுகிறது.
“அறந்திறல் மரபில் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை” (9ஆம் பத்துப் பதிகம்)
இதனால் கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரலிரும்பொறை, சேர நாட்டையரசாண்ட செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்திலேயே (பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே) இறந்து போனான் என்று திட்டமாகத் தெரிகிறது. கி.பி. 175க்கு முன்னமே இறந்துபோனான் என்று தெரிவதால் (உத்தேசம்) கி.பி. 170இல் இவன் இறந்து போனான் என்று கருதலாம். இவன் பதினாறுயாண்டு அரசாண்டான் என்று தெரிகிறபடியால் (170 16 = 154) கி.பி. 154இல் இவன் சிம்மாசனம் ஏறினான் என்பது தெரிகிறது. எனவே, இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசமாக கி.பி. 154 முதல் 170 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம்.
சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதையறியாமல், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் கே.ஜி. சேஷையரும் அவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இருந்தான் என்று எழுதியுள்ளனர். இளஞ்சேரல் இரும்பொறை ஏறத்தாழ கி.பி. 190இல் இருந்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முழுவதும் தவறு. செங்குட்டுவனுக்கு முன்னே இறந்து போனவன் அவனுக்குப் பின்னே எப்படி வாழ்ந்திருக்க முடியும்?
இளஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டையரசாண்டவன் அவனுடைய பெரிய தந்தையாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்று அறிந்தோம். அவன் பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே, அவன் உத்தேசமாகக் கி.பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். இவனுடைய ஆட்சிக்காலமும் சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே அடங்கிவிட்டது.
பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாகிய செல்வக் கடுங்கோவாழியாதன் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்று 7ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவன் உத்தேசமாக கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.
செல்வக் கடுங்கோவின் தந்தையாகிய அந்துவன் பொறையன் எத்தனையாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு அரசாண்டான் என்று கொள்வோம். அப்படியானால் அவன் உத்தேசமாகக் கி.பி. 92 முதல் 112 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.
இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்டவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிந்தோம். அவன் எத்தனைக் காலம் அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு ஆட்சி செய்தான் என்று கொண்டால் அவன் உத்தேசமாகக் கி.பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம்.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலுக்குப் பிறகு அரசாண்ட கணைக்கால் இரும்பொறையும் இருபது ஆண்டு அரசாண்டான் என்று கருதலாம். இவன் உத்தேசம் கி.பி. 190 முதல் 210 வரையில் இவன் அரசாண்டான் எனக் கொள்ளலாம். இவனுக்குப்பிறகு, கொங்கு நாட்டு அரசாட்சி சோழர் கைக்குச் சென்றது. சோழன் செங்கணான் கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான். ஏறக்குறைய 120 ஆண்டுக் காலம் கொங்கு நாடு, சேர பரம்பரையில் இளைய பரம்பரையைச் சேர்ந்த பொறையர் ஆட்சியில் இருந்தது.
மேலே ஆராய்ந்தப்படி கொங்கு நாட்டுச் சேர அரசரின் காலம் (உத்தேசமாக) இவ்வாறு அமைகிறது:
அந்துவன் பொறையன் | (உத்தேசமாக) | கி.பி. 92 முதல் 112 வரையில் |
செல்வக்கடுங்கோ வாழியாதன் | „„ | 112 முதல் 137 |
பெருஞ்சேரலிரும்பொறை | „„ | 137 முதல் 154 |
இளஞ்சேரலிரும் பொறை | „„ | 154 முதல் 170 |
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை |
„„ | 170 முதல் 190 |
கணைக்காலிரும்பொறை | „„ | 190 முதல் 210 |
✽ ✽ ✽