60
வித்துக்கொண்டுள்ளன! தேசீயத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் அந்த ஏடுகள், மக்களுக்குத் தெளிவும் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கவனித்து நடப்பதானால், நான் எடுத்துக் கூறும் பேச்சையும், குலைக்காமல் வெளியிட வேண்டும். அந்தப் பண்பு ஏது? இருந்தால் ஜனநாயகம் ஏன் இன்று கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது! அது கிடக்கட்டும். நீண்டகால வியாதி, உடம்போடு ஒட்டிக் கொண்டது!
என் மீது இத்துணை எரிச்சல் கொள்ள என்ன காரணம் நிதி அமைச்சருக்கு?
சாதாரணமாக, நிதி அமைச்சர், நம் பிரச்னைகளை — பேச்சுகளைத் தமது மேலான கவனத்துக்கு உரியன என்றே கருதுவது கிடையாது. நிதியும் மந்திரியும், ஒருசேரத் தம்மிடம் சிறைப்பட்டிருப்பதால், அவர் பண்டைக்காலப் பாதுஷாக்கள்போல, ஊர்ப் பிரமுகர்கள் தரும் உக்காவைப் பிடித்துக்கொண்டு, ஊஹும்...ஆஹாம்...பேசிக் கொண்டு உலா வந்தால் போதும், கழகத்தார் பற்றிக் கவனிப்பதே, தமது மேலான நிலைக்கு ஏற்றதாகாது என்று எண்ணிக்கொள்பவர், எனினும், இந்தக் கிழமை, முழுவதும் அவர், கரூரிலும், மதுரையிலும், திருச்சியிலும் செல்லுமிடமெங்கணும், பொதுவாக முன்னேற்றக் கழகத்தையும், குறிப்பாக என்னையும் ‘போடு போடு’ என்று போட்டுவிட்டதாகக் கருதிக் கொண்டு தம்முடைய பலவீனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
1. திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் அமைந்த எதிர்க்கட்சி அல்ல.
2. திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு அரசியலே தெரியாது.
3. அடுக்குமொழி பேசுவார்கள் — அனாவசியமாக எதிர்ப்பார்கள்.
4. அவர்களுக்கு நாட்டிலே ஆதரவே கிடையாது.இவை நிதியமைச்சரின் மொழிகள் — மதிமிகு மொழிகள் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார் — அவராவது அவ்விதம் எண்ணிக்கொள்ளாவிட்டால், வேறு யார் துணைவரப்போகிறார்கள்.
எதிர்க்கட்சி என்பதற்கு என்ன இலக்கணம் காண்கிறார் நிதி அமைச்சர் — அவர் படித்துள்ள அரசியலில்—படித்திருந்தால்!—என்று அறிய யான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன்.