மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/018-052
17. கொங்கு நாட்டுப் புலவர்கள்
புலவர் நிலை
சங்க காலத்துக் கொங்கு நாட்டின் கல்வி நிலை ஏனைய தமிழ் நாட்டிலிருந்தது போலவே இருந்தது. புலவர்களுக்கு உயர்வும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. புலவர்கள் ஒரே ஊரில் தங்கிக் கிணற்றுத் தவளைகளைப் போலிராமல், பல ஊர்களில் பல நாடுகளிலும் சென்று மக்களிடம் பழகி நாட்டின் நிலை, சமுதாயத்தின் நிலைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களிடையே கல்வி பரவாமலிருந்தாலும், கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தபடியால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர் முயன்று கல்வி கற்றனர். ஆண்பாலார், பெண் பாலார், அரசர், வாணிகர், தொழிலாளர் முதலியவர்கள் அக்காலத்தில் புலவர்களாக இருந்தார்கள். அந்தப் பழங்காலத்திலே இருந்த அந்தப் புலவர்கள் இரண்டு பொருள்களைப் பற்றிச் சிறப்பாகச் செய்யுள் இயற்றினார்கள். அவற்றில் ஒன்று அகப்பொருள், மற்றொன்று புறப்பொருள். அகப்பொருள் என்பது காதல் வாழ்க்கையைப் பற்றியது. புறப்பொருள் என்பது பெரும்பாலும் வீரத்தையும் போர்ச் செயலையும் பற்றியது. சங்க இலக்கியங்களில் சிறப்பாக இவ்விரு பொருள்கள் பேசப்படுகின்றன. பலவகையான சுவைகள் இச்செய்யுட்களில் காணப்படுகிறபடியால், இவற்றைப் படிக்கும்போது இக்காலத்திலும் மகிழ்ச்சியளிக்கின்றன. மேலும், சங்கச் செய்யுட்கள், அக்காலத்து மக்கள் வாழ்க்கை வரலாற்றை யறிவதற்குப் பேருதவியாக இருக்கின்றன.
புலவர்கள் பொதுவாக அக்காலத்தில் வறியவராக இருந்தார்கள். அவர்கள் செல்வர்களையும் அரசர்களையும் அணுகி அவர்களுடைய சிறப்புகளைப் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். புலவர்கள் பொதுவாக யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் (வண்டிகள்) பரிசாகப் பெற்றார்கள். பரிசாகப் பெற்ற இவைகளை விற்றுப் பொருள் பெற்றனர். சில சமயங்களில் அரசர்கள் புலவர்களுக்கு நிலங்களையும் பொற்காசுகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். பொருள் வசதியுள்ளவர்கள் - அரசர், வாணிகர் பெருநிலக்கிழார் போன்றவர்கள் - கல்வி இன்பத்துக்காகவே கல்வி பயின்று புலவர்களாக இருந்தார்கள். அவர்களும் அகப்பொருள் புறப்பொருள்களைப் பற்றிச் செய்யுள் இயற்றினார்கள். ஆனால், அக்காலத்தில் கல்வி கற்றவர் தொகை மிகக் குறைவு. பொதுவாக நாட்டு மக்கள் கல்வியில்லாதவர்களாகவே இருந்தார்கள்.
பொதுவாகப் புலவர்களுடைய வாழ்க்கை வறுமையுந் துன்பமுமாக இருந்தது. பிரபுக்கள் எல்லோரும் அவர்களை ஆதரிக்கவில்லை, சிலரே ஆதரித்தார்கள். அவர்கள் பெற்ற சிறு பொருள், வாழ்க்கைக்குப் போதாமலிருந்தது. ஆகவே, புலவர்கள் புரவலர்களை நாடித் திரிந்தனர். அவர்களில் நல்லூழ் உடைய சில புலவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்கள். கொங்குநாட்டுப் புலவர் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது.
அஞ்சியத்தைமகள் நாகையார்
இவர் பெண்பால் புலவர். நாகை என்பது இவருடைய பெயர். அஞ்சியத்தைமகள் என்பது சிறப்புச் சொல். தகடூர் அதிகமான் அரசர்களில் அஞ்சி என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தார்கள். அந்த அஞ்சியரசர்களில் ஒருவருடைய அத்தை மகள் இவர். ஆகையால் அஞ்சியத்தை மகள் நாகையார் என்று பெயர் கூறப்பெற்றார். அத்தை மகள் என்பதனால் அஞ்சியினுடைய மனைவி இவர் என்று சிலர் கருதுகின்றனர். அஞ்சியின் அவைப் புலவராக நெடுங்காலம் இருந்த ஔவையாரிடம் இந்த நாகையார் கல்வி பயின்றவராக இருக்கலாமே?
இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 352ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. குறிஞ்சித் திணையைப் பாடிய இந்தச் செய்யுள் இனிமையுள்ளது. பாறையின்மேல் இருந்து ஆடுகிற மயிலுக்குப் பின்னால் பெரிய பலாப்பழத்தை வைத்திருக்கிற கடுவன் குரங்கு. ஊர்த்திருவிழாவில் விறலியொருத்தி பரதநாட்டியம் ஆடும்போது அவளுக்குப் பின்னாலிருந்து முழவுகொட்டும் முழவன்போலக் காட்சியளித்ததை இவர் இச்செய்யுளில் கூறுகிறார். மணப்பெண் ஒருத்தி தன்னுடைய தோழியிடம் தன்னுடைய மனநிறைந்த மகிழ்ச்சியைக் கூறியதாக இவர் கூறியுள்ளது படிப்பவருக்குப் பேருவகை தருகின்றது. அஞ்சியரசன்மேல் புலவர் பாடிய செய்யுளுக்கு இசையமைத்துப் பாடும் பாணனுடைய இசையில், இசையும் தாளமும் ஒத்திருப்பது போலவும் காதலன்- காதலியின் திருமண நாள் போலவும் அந்த மணப்பெண் நிறை மனம் பெற்றிருந்தாள் என்று இவர் கூறுவது படித்து இன்புறத்தக்கது.
“கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே”
இதனால் இப்புலவர் இசைக் கலையைப் பயின்றவர் என்பது தெரிகின்றது.
அதியன் விண்ணத்தனார்
அதியன் என்பது குலப்பெயர். விண்ணத்தன் என்பது இவருடைய இயற்பெயர். அதியன் (அதிகன், அதிகமான்) என்பது தகடூர் நாட்டையரசாண்ட அரச பரம்பரையின் குலப்பெயர். இப்புலவர் அந்த அரச குலத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகிறார். எனவே, இவர் கொங்கு நாட்டுப் புலவர் என்பதில் ஐயமில்லை. இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 301ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அரிசில்கிழார்
இந்தப் புலவரின் சொந்தப் பெயர் தெரியவில்லை. அரிசில் என்னும் ஊரின் தலைவர் என்பது இவர் பெயரால் தெரிகிறது. அரிசில் என்னும் ஊர் சோழ நாட்டில் இருந்தது என்று சிலர் கூறுவர். அரிசில் என்னும் பெயருள்ள ஊர் கொங்கு நாட்டிலும் இருந்தது. அரிசில்கிழார் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர்.
இப்புலவர் அகப்பொருள் துறையில் பாடிய ஒரு செய்யுள் (193) குறுந்தொகையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. வையாவிக் கோப்பெரும் பேகனை அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக இவர் ஒரு செய்யுள் பாடினார் (புறம். 146). இதே காரணம் பற்றி வையாவிக் கோப்பெரும்பேகனைக் கபிலரும் (புறம். 143), பரணரும் (புறம். 141, 142, 144, 145) பெருங்குன்றூர்க் கிழாரும் (புறம். 147) பாடியுள்ளனர். இதனால், இப்புலவர்கள் காலத்தில் அரிசில்கிழாரும் இருந்தார் என்பது தெரிகின்றது. இவர் பாடிய புறப்பொருட்டுறை பற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 281, 285, 300, 304,342).
பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமான் நெடுமானஞ்சியின் தகடூரின்மேல் படையெடுத்துச் சென்று முற்றுகையிட்டுப் போர் செய்த போது அரிசில்கிழார், போர்க்களத்தில் இருந்து அந்தப் போர் நிகழ்ச்சியை நேரில்கண்டார். பொன்முடியாரும் அப்போர் நிகழ்ச்சிகளை நேரில்கண்டவர். தகடூர்ப் போரைப் பற்றித் தகடூர் யாத்திரை என்னும் ஒரு நூல் இருந்தது. அந்த நூலில் இப்புலவர்கள் பாடிய செய்யுட்களும் இருந்தன. அந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. சில செய்யுட்கள் மட்டும் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஔவையாரும் இவர்கள் காலத்திலிருந்தார். அதிகமான் நெடுமானஞ்சியின் மகனான எழினி, தகடூர்ப் போர்க்களத்தில் வீரப்போர் செய்து இறந்தபோது அரிசில்கிழார் அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடினார் (புறம். 230).
தகடூர் யாத்திரையில் அரிசில்கிழாருடைய செய்யுள்களும் இருந்தன என்று கூறினோம். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலின் உரையில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், தகடூர் யாத்திரையிலிருந்து அரிசில்கிழாரின் செய்யுட் கள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ எனத் தொடங்கும் 8ஆம் சூத்திரத்தின் ‘பொருளின்று உய்த்த பேராண் பக்கம்’ என்பதன் உரையில் “மெய்ம்மலி மனத்தினம்மெதிர் நின்றோன்” என்னும் செய்யுளை மேற்கோள் காட்டி “இஃது அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்று எழுதுகிறார்.
புறத்திணையில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்று தொடங்கும் 12ஆம் சூத்திரத்தில் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி, “இது சேரமான் (பெருஞ் சேரலிரும்பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது” என்று விளக்கங் கூறியுள்ளார்.
தகடூர்ப் போரை வென்ற பெருஞ்சேரலிரும்பொறை மேல் அரிசில்கிழார் பத்துச் செய்யுட்களைப் பாடினார் (பதிற்றுப் பத்து, எட்டாம் பத்து). அச்செய்யுள்களில் அவ்வரசனுடைய வெற்றிகளையும் நல்லியல்புகளையும் கூறியுள்ளார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அவ்வரசன் அவருக்கு ஒன்பது லட்சம் பொன்னையும் தன்னுடைய அரண்மனையையும் தன்னுடைய சிம்மாசனத்தையும் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். புலவர் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் அரசனுக்கு அமைச்சராக இருந்தார். இவைகளை எட்டாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பினால் அறிகிறோம். அக்குறிப்பாவது:
“பாடிப் பெற்ற பரிசில் தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.” (கோயிலாள் - இராணி. கோயில் அரண்மனை. காணம் - அக்காலத்தில் வழங்கின பொற்காசு. அரசு கட்டில் - சிம்மாசனம். அமைச்சு - மந்திரி பதவி)
இது, புலவர் வேறு எவரும் அடையாத பெருஞ் சிறப்பாகும். அரிசில்கிழாரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உம்பற்காடு என்பது கொங்கு நாட்டு ஊர். இளங் கண்ணனார் என்பது இவருடைய பெயர். யானை மலைப்பிரதேசமாகிய உம்பற் காட்டில் வாழ்ந்தவராகையால் இப்பெயர் பெற்றார். இவர் பாடின செய்யுள் ஒன்று அகநானூற்றில் 264ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஔவையார்
ஔவை (அவ்வை) என்பது உயர்குலத்துப் பெண் பாலார்க்கு வழங்கப்படுகிற பெயர். இது இவருக்குரிய இயற்பெயர் அன்று. உயர்வைக் குறிக்கும் சிறப்புப் பெயர். ஔவையார் என்று சிறப்புப் பெயர் பெற்ற பெண்பாற் புலவர் சிலர் இருந்தனர். அவர்களில் இவர், காலத்தினால் முற்பட்டவர். கொங்கு நாட்டில் வாழ்ந்த இவர், கொங்கு நாட்டுத் தகடூரை யரசாண்ட அதிகமான் நெடுமானஞ்சியின் புலவராக இருந்தார். தகடூர், இப்போதைய சேலம் மாவட்டத்தினின்றும் பிரிந்து தர்மபுரி மாவட்டம் என்று பெயர் வழங்கப்படுகின்றது.
ஔவையார் முதன்முதலாக நெடுமானஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது அவன் பரிசு தராமல் காலந்தாழ்த்தினான். அப்போது இவர் ஒரு செய்யுளைப் பாடினார் (புறம். 206). பிறகு, அதிகமான் பரிசில் வழங்கி இவரை ஆதரித்தான். அதிகமான் அஞ்சியை ஔவையார் அவ்வச் சமயங்களில் பாடியுள்ளார். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு மகன் பிறந்தபோது அவன் போர்க்களத்திலிருந்து வந்து மகனைப் பார்த்தான். அவ்வமயம் அவன் இருந்த காட்சியை ஔவையார் பாடியுள்ளார். கையில் வேலும் மெய்யில் வியர்வையும் காலில் வீரக்கழலும் மார்பில் அம்பு தைத்த புண்ணும் உடையவனாக வெட்சிப் பூவும் வேங்கைப்பூவும் விரவித் தொடுத்த மாலையையணிந்து கொண்டு புலியுடன் போர் செய்த யானையைப் போல அவன் காணப்பட்டான் என்று கூறுகின்றார் (புறம். 100). அவனுடைய மகன் பெயர் பொகுட்டெழினி.
அதிகமான் ஒரு சமயம் ஔவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான். இவரை வரவேற்றுத் தொண்டைமான் தன்னுடைய படைக்கலச் சாலையைக் காட்டினான். போர்க் கருவிகள் எண்ணெயிடப்பட்டு மாலைகள் சூட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதுகண்ட ஔவையார், தன்னுடைய அதிகமான் அரசனின் போர்க்கருவிகள் பழுது தீர்க்கப்டுவதற்காகக் கொல்லனுடைய உலைக்களத்தில் இருக்கின்றன என்று ஒரு செய்யுள் பாடினார் (புறம். 95). அதாவது, அதிகமான் தன்னுடைய ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டே யிருந்தபடியால் அவற்றை அவன் ஆயுதச் சாலையில் வைக்கவில்லை என்பது கருத்து.
எளிதில் கிடைக்காத அருமையான நெல்லிக்கனி நெடுமானஞ்சிக்குக் கிடைத்தது. அதனை அருந்தியவர் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள். அந்தக் கனியை அவன் அருந்தாமல் ஔவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்டபிறகுதான் அக்கனியின் சிறப்பை ஔவையார் அறிந்தார். அப்போது, அதிகமானுடைய தன்னலமற்ற பெருங்குணத்தை வியந்து வாழ்த்தினார் (புறம் 91). நெடுமான் அஞ்சியை ஔவையார் வேறு சில பாடல்களிலும் பாடியுள்ளார். அவை புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 87, 88, 89, 90, 91, 94, 97, 98, 101, 103, 104, 315, 320).
நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினியையும் ஔவையார் பாடியுள்ளார். அவன் அக்காலத்து வழக்கப்படி, பகைவருடைய நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து வந்ததைப் பாடியுள்ளார் (குறுந். 80 : 4-6). அவனுடைய வீரத்தையும் நல்லாட்சியையும் பாடி இருக்கிறார் (புறம். 102). அவன் பகைவருடைய கோட்டையொன்றை வென்றபோது ஔவையாருக்குப் புத்தாடை கொடுத்து விருந்து செய்தான் (புறம். 392).
ஔவையார் காலத்தில் பாரிவள்ளல் இருந்தான். மூவேந்தர் பாரியின் பரம்புமலைக் கோட்டையை முற்றுகையிட்டிருந்த போது, கிளிகளைப் பழக்கிக் கோட்டைக்கு வெளியேயிருந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்த செய்தியை ஔவையார் கூறுகிறார் (அகம். 303: 10– 14).
ஔவையார் காலத்தில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. கொங்கு நாட்டில் தங்கள் இராச்சியத்தை நிறுவிய இரும்பொறையரசர்கள் தங்கள் இராச்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரின்மேல் படையெடுத்து வந்து, கோட்டையை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அந்தப் போரில் இரு தரப்பிலும் பல வீரர்கள் மாண்டார்கள். அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பில் அம்பினால் புண் உண்டாயிற்று. அப்போது ஔவையார் அவனைப் பாடினார் (புறம். 93). பிறகு அப்புண் காரணமாக அவன் இறந்துபோனான். அப்போதும் அவனை ஔவையார் பாடினார் (புறம். 236, 231). அவனுக்கு நடுகல் நட்டு நினைவுக்குறியமைத்தார்கள். அச்சமயத்திலும் ஔவையார் ஒரு செய்யுளைப் பாடினார் (புறம். 232).
ஔவையார், அதிகமான் நெடுமான் அஞ்சியாலும் அவன் மகன் பொகுட்டொழினியாலும் ஆதரிக்கப்பட்டவர். தகடூரில் அதிகமானுடன் போர் செய்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் அவனுடைய தாயாதித் தமயனான சேரன் செங்குட்டுவனையும் அரிசில்கிழாரும் பரணரும் பாடியிருக்கிறார்கள். ஔவையாரின் காலத்திலிருந்த பாரியைக் கபிலர் பாடியுள்ளார். ஆகவே, இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் ஔவையாரும் வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. பாரியைப் பாடின கபிலர், செங்குட்டுவனின் தாயாதிச் சிற்றப்பனான செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது 7ஆம் பத்துப் பாடினார் செங்குட்டுவனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் ஏறத்தாழ சமகாலத்தில் இருந்தவர். மேலும் கபிலரும் பரணரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். ஆகவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர் என்பது தெரிகின்றது. மேலும், செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகளும் இவர்களின் நண்பராகிய சீத்தலைச் சாத்தனாரும் ஔவையார் காலத்தில் இருந்தவர்கள்.
ஔவையாரின் செய்யுட்கள் தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய, செய்யுள்கள் அகநானூற்றில் நான்கும், குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும், புறநானூற்றில் முப்பத்து மூன்றும் ஆக மொத்தம் ஐம்பத்தொன்பது செய்யுட்கள் கிடைத்திருக்கின்றன. இவருடைய செய்யுட்களில் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற செய்திகள் காணப்படுகின்றன.
அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவன் கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் முதல்முதலாகப் பயிர் செய்தான் என்று ஔவையார் கூறுகிறார் (புறம். 99, 392).
கரூவூர்க் கண்ணம்பாளனார்
இவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்தவர். இவருடைய செய்யுட்கள் அகநானூற்றிலும் (180, 263) நற்றிணையிலும் (148) தொகுக்கப்பட்டுள்ளன. அகம். 263இல்
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சியன்ன வளநகர் விளங்க
என்று இவர் கூறுகிறார். இதில் கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் குறிப்பதாகலாம். பெருஞ்சேரலிரும்பொறைக்குக் ‘கோதை’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. வஞ்சி என்பது கருவூரின் இன்னொரு பெயர்.
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்த இவர் அகம் 309, நற். 343, புறம் 168 ஆகிய மூன்று செய்யுட்களைப் பாடியிருக்கிறார். கதப்பிள்ளை யார் என்னும் இன்னொரு புலவர் குறுந்தொகை (64, 265, 380), நற்றிணை (135), புறம் (380) ஆகிய செய்யுட்களைப் பாடியுள்ளார். இவ்விருவரையும் ஒருவர் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கருதுகிறார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்று தோன்றுகின்றனர்.
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் புறம் 168 இல் குதிரைமலைப் பிட்டங்கொற்றனைப் பாடுகிறார். பிட்டங்கொற்றன், கொங்கு நாட்டில் குதிரைமலை நாட்டில் இருந்தவன். இவன் கொங்குச் சேரரின் கீழ் சேனைத் தலைவனாக இருந்தான்.
கருவூர்க் கலிங்கத்தார்
கலிங்க நாட்டில் (ஒரிசா தேசம்) சென்று நெடுங்காலந் தங்கியிருந்து மீண்டும் கருவூருக்கு வந்து வாழ்ந்திருந்தவர் இவர் என்பது இவருடைய பெயரிலிருந்து அறிகிறோம். (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் வாணிகர் கலிங்க நாட்டுக்குச் சென்று அங்கு வாணிகஞ் செய்துவந்தனர் என்பதைக் கலிங்கநாட்டில் காரவேலன் என்னும் அரசன் ஹத்திகும்பா குகையில் எழுதியுள்ள சாசனத்திலிருந்து அறிகிறோம்.) கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த இவர் வாணிகத்தின் பொருட்டுக் கலிங்க நாடு சென்றிருந்தார் போலும். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று அகம் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர் கிழார்
இவர் இருந்த ஊரின் பெயரே இவருடைய பெயராக அமைந்திருக்கிறது. இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 170ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர்க் கோசனார்
கோசர் என்பது ஒரு இனத்தவரின் பெயர். சங்ககாலத்தில் கோசர், போர் வீரர்களாகவும், அரச ஊழியர்களாகவும் தமிழகமெங்கும் பரவியிருந்தார்கள். கொங்கு நாட்டில் இருந்த கொங்கிளங் கோசர், சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு விழாச் செய்தது போலவே, இவர்களும் கொங்கு நாட்டில் பத்தினித் தெய்வத்துக்கு விழாச் செய்தார்கள் என்று சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். கோயம்புத்தூர் என்பது கோசர் (கோசர் - கோயர்) என்னும் பெயரினால் ஏற்பட்ட பெயர். கோசர் இனத்தைச் சேர்ந்த இந்தப் புலவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்தபடியால் கருவூர்க் கோசனார் என்று பெயர் பெற்றார். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று நற்றிணையில் (214) தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர் சேரமான் சாத்தன்
சாத்தன் என்னும் பெயருள்ள இவர் சேரமன்னர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் இருந்த கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர் என்று தோன்றுகிறது. இவருடைய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 268 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர் நன்மார்பனார்
நன்மார்பன் என்னும் பெயருள்ள இப்புலவர் கருவூரில் வாழ்ந்தவர். இவருடைய வரலாறு தெரியவில்லை. இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 277ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெயிற்காலத்தில் செந்நிறமாக மலர்கிற (கலியாண) முருக்க மலர்க்கொத்து, சேவற்கோழி வேறு சேவலுடன் போர் செய்யும் போது சிலிர்த்துக்கொள்ளும் கழுத்து இறகு போல இருக்கிறது என்று இவர் உவமை கூறியிருப்பது மிகப் பொருத்தமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
“அழலகைந் தன்ன காமர் துதை மயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண்குரல்” (அகம் 277 : 14 - 17)
கருவூர்ப் பவுத்திரனார்
பவுத்திரன் என்பது இவருடைய பெயர். இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 162ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. பசுக்கூட்டம் ஊருக்குத் திரும்பி வருகிற மாலை வேளையில் முல்லை முகைகள் பூக்குந் தருவாயிலிருப்பதைக் கண்டு தலைமகன் கூறியதாக அமைந்த இந்தச் செய்யுள் படிப்பதற்கு இன்பமாக இருக்கிறது
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
பேய், பூதம், சாத்தன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்களுக்குப் பெயராக வழங்கப்பட்டன. பேய், பூதம் என்னும் பெயர்கள் அந்தக் காலத்தில் தெய்வம் என்னும் பொருளில் உயர்வாக மதிக்கப்பட்டன. பிற்காலத்திலுங்கூட இப்பெயர்கள் வழங்கப்பட்டன. பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. மிகப் பிற்காலத்தில், பேய் பூதம் என்னும் பெயர்கள் சிறப்பான உயர்ந்த பொருளை இழந்து தாழ்வான பொருளைப் பெற்றன. கொங்கு நாட்டுக் கருவூரில் பூதம் என்னுந் தெய்வத்துக்குக் கோயில் இருந்தது. இந்தப் புலவருக்கு அந்தத் தெய்வத்தின் பெயரை இட்டனர் போலும்.
கருவூர்ப் பூதஞ் சாத்தனார் இயற்றிய செய்யுள் ஒன்று அகநானூற்றில் ஐம்பதாம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனாதனார்
இவர் கருவூரில் பெருஞ்சதுக்கம் என்னும் இடத்தில் இருந்தவர் என்று தோன்றுகிறார். இவருடைய பெயர் பூதன் ஆதன் என்பது. இவருடைய வரலாறு தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிலிருந்து (பட்டினி நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவன் மீது இவர் கையறுநிலை பாடினார். அந்தச் செய்யுள் புறநானூற்றில் 219 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கொல்லிக் கண்ணனார்
கண்ணன் என்பது இவருடைய பெயர். கொல்லி என்பது இவருடைய ஊர்ப்பெயர். கொல்லி என்னும் ஊரும் கொல்லி மலைகளும் கொல்லிக் கூற்றத்தில் இருந்தன. ஓரி என்னும் அரசன் கொல்லிக் கூற்றத்தை யரசாண்டான் என்றும் பெருஞ்சேரல் இரும்பொறை அவனை வென்று அவனுடைய நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்றும் அறிந்தோம். கொல்லிக் கண்ணனார், கொல்லிக் கூற்றத்துக் கொல்லி என்னும் ஊரிலிருந்தவர் என்பது தெரிகிறது.
இந்தப் புலவரைப் பற்றிய வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 34ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. மருதத்திணையைப் பற்றிய இந்தச் செய்யுளில் ‘குட்டுவன் மாந்தை’யைக் கூறுகிறார். மாந்தை என்பது கொங்குச் சேரருக்குரிய மேற்குக் கரையிலிருந்த துறைமுகப்பட்டினம். குட்டுவன் என்னும் பெயருள்ள அரசர் பலர் இருந்தனர். அவர்களில் இவர் கூறுகிற குட்டுவன் யார் என்பது தெரியவில்லை.
சேரமான் கணைக்காலிரும்பொறை
கொங்கு நாட்டையாண்ட இவன் கொங்குச் சேரரின் கடைசி அரசன் என்று கருதப்படுகிறான். இவன் புலவனாகவும் திகழ்ந்தான். இவன் பாடிய செய்யுள் புறநானூற்றில் 74ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளை இவனுடைய வரலாற்றுப் பகுதியில் காண்க.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் இவரைக் கூறுவர். கொங்கு நாட்டுச் சேரர்களில் கடுங்கோ என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். செல்வக்கடுங்கோ (வாழியாதன்), மாந்தரன் பொறையன் கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று சிலர் இருந்தனர். கடுங்கோ என்பது இவருடைய பெயர். இவருக்குப்பிறகு இளங்கடுங்கோ ஒருவர் இருந்தார். பாலைத் திணையைப் பற்றிய செய்யுட்களைப் பாடினபடியால் இந்தச் சிறப்பையுஞ் சேர்த்துப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் பெற்றார்.
கொங்கு நாட்டைச் சேர்ந்த புகழூர் ஆறுநாட்டார் மலையில் உள்ள இரண்டு பழைய பிராமிக்கல்வெட்டெழுத்துக்கள் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோக்களைக் கூறுகின்றன. ‘அமணன் ஆற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்’ என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம்.
இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற பெருங்கடுங்கோன், பாலை பாடிய பெருங்கடுங்கோவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால், இவருடைய தந்தை, கோஆதன் சேரலிரும்பொறையாவான். கோஆதன் சேரலிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோனுக்கு இளங்கடுங்கோ என்று பெயருள்ள ஒரு மகன் இருந்தான் என்பதை இந்தக் கல்வெட்டு எழுத்தினால் அறிகிறோம். இந்த இளங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங்கோவும் ஒருவராக இருக்கலாமோ?
பாலை பாடிய பெருங்கடுங்கோவின் அறுபத்தெட்டுச் செய்யுட்கள் சங்கத் தொகைநூல்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அகநானூற்றில் பன்னிரண்டும் (அகம். 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313,337,379), கலித்தொகையில் முப்பந்தைந்தும் (பாலைக்கலி முழுவதும்), குறுந் தொகையில் பத்தும் (குறுந். 16, 37, 124, 135, 137, 209, 231,262,283,398), புறநானூற்றில் ஒன்றும் (புறம். 282), நற்றிணையில் பத்தும் (நற். 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) ஆக அறுபத்தெட்டுச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவருடைய செய்யுட்கள் அழகும் இனிமையும் பொருள் செறிவும் சொற்செறிவும் உடையவை. இவர் காட்டும் உவமைகளும் உலகியல் உண்மைகளும் அறிந்து மகிழத் தக்கவை.
“அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்.”(அகம். 155:1-3)
என்று இவர் கூறியது என்றும் மாறாத உலகியல் உண்மையாகும்.
“உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை யிரவினும் இளிவெனச் சொல்லிய வன்மைத் தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி”(குறுந். 283: 1-4)
இது எல்லோரும் கொள்ளவேண்டிய பொன்மொழி யன்றோ?
திருவிழாவின்போது உயரமான கம்பத்தில் இராத்திரியில் பல விளக்குகளை ஏற்றிவைப்பது அக்காலத்து வழக்கம். இந்தக் கம்ப விளக்கை, மலைமேல் வளர்ந்த இலையுயர்ந்த இலவ மரம் செந்நிறப் பூக்களுடன் திகழ்வது போல இருக்கிறது என்று உவமை கூறியிருப்பது இயற்கையான உண்மையைத் தெரிவிக்கின்றது.
“அருவி யான்ற வுயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில மலர்ந்த இலவம்” (அகம்.185:10-12)
நம்பியும் நங்கையும் காதலரானார்கள். நங்கை நம்பியுடன் புறப்பட்டு அவனுடைய ஊருக்குப் போய்விட்டாள். அவள் போய்விட்டதை யறிந்த செவிலித்தாய் அவளைத் தேடிப் பின் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. தொடர்ந்து நெடுந்தூரஞ் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. ஆனால், துறவிகள் சிலர், அவ்வழியாக வந்தவர் எதிர்ப்பட்டனர். அவர்களை அவ்வன்னை ‘நம்பியும் நங்கையும் போவதை வழியில் கண்டீர்களோ’ என்று வினவினாள். அவர்கள், நங்கையின் அன்னை இவள் என்பதையறிந்தனர். அவர்கள் அன்னைக்குக் கூறினார்கள்: ‘ஆம், கண்டோம். நீர் மனம் வருத்த வேண்டா. நங்கை நம்பியுடன் கூடி வாழ்வதுதான் உலகியல் அறம். அந்த நங்கை நம்பிக்குப் பயன்படுவாளே தவிர உமக்குப் பயன்படாள். மலையில் வளர்ந்த சந்தனமரம் மலைக்குப் பயன்படாது: கடலில் உண்டாகும் முத்து கடலுக்குப் பயன்படாது; யாழில் உண்டாகிற இன்னிசை வாசிப்பவருக் கல்லாமல் யாழுக்குப் பயன்படாது. உம்முடைய மகளும் உமக்கு அப்படித்தான்’ என்று கூறி அன்னையின் கவலையைப் போக்கினார்கள் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ உலகியல் அறத்தை அழகும் இனிமையும் உண்மையும் விளங்கக் கூறுகிறார். அவை:
“புலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.”
இவ்வாறு பாலை பாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்களில் பல உண்மைகளையும் அழகுகளையும் இனிமையையும் கண்டு மகிழலாம். இவர் போர் செய்திருக்கிறார் என்றும் அப்போரில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் பேய்மகள் இளவெயினியார் இவர்மேல் பாடிய செய்யுளினால் அறிகிறோம்.
பேய்மகள் இளவெயினி
பேய் என்பது இவருடைய பெயர். பேய், பூதம் என்னும் பெயர்கள் சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் தெய்வங்களின் பெயராக வழங்கி வந்தன. பேயாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. எயினி என்பதனாலே இவர் எயினர் (வேடர்) குலத்துப் பெண்மணி என்று தெரிகிறார். இவர் சிறந்த புலவர். பெரும்புலவரும் அரசருமாக இருந்த பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடி இவர் அவரிடம் பரிசு பெற்றார். இவர் பாடிய பாடல் புறநானூறு 11ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளில் இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோவை,
“விண்பொரு புகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே”
என்று கூறுகிறார்.
இவரும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் கொங்கு நாட்டில் சமகாலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது.
பொன்முடியார்
கொங்கு நாட்டுப் புலவராகிய இவர் சேலம் மாவட்டத்துத் தகடூர் நாட்டைச் சேர்ந்த பொன்முடி என்னும் ஊரினர். இவ்வூர்ப் பெயரே இவருக்குப் பெயராக வழங்கியது. இவருடைய சொந்தப் பெயர் தெரியவில்லை. இவரைப் பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுவது தவறு. அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூர்க் கோட்டையைப் பெருஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்டுப் போர் செய்த காலத்தில் பொன்முடியார் அந்தப் போர்க்களத்தை நேரில் கண்டவர். அரிசில்கிழார் என்னும் புலவரும் அந்தப் போர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர். இவர்கள் காலத்திலே, அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஔவையாரும் இருந்தார். எனவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தில் இருந்தவர்கள். பொன்முடியாரின் வரலாறு தெரியவில்லை. இப்புலவருடைய பாடல்கள் புறநானூற்றிலும் தகடூர் யாத்திரையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.
புறநானூறு 299, 310, 312ஆம் பாட்டுகள் இவர் பாடியவை. இவை முறையே குதிரைமறம், நூழிலாட்டு, மூதின்முல்லை என்னுந் துறைகளைக் கூறுகின்றன. இவர் பாடிய “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று தொடங்கும் மூதின்முல்லைத் துறைச் செய்யுள் (புறம். 312) பலரும் அறிந்ததே.
தகடூர்ப் போர் நிகழ்ச்சியைக் கூறுகிற தகடூர் யாத்திரை என்னும் நூலில் பொன்முடியாரின் பாட்டுகளும் தொகுக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்நூல் இப்போது மறைந்துபோன படியால் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அந்த நூற் செய்யுட்கள் சில புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொன் முடியாருடைய செய்யுட்கள் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ என்னுந் தொடக்கத்து 8ஆம் சூத்திரத்தில் ‘வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையானும்’ என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார், ‘கார்த்தரும்’ எனத் தொடங்கும் பாட்டை மேற்கோள் காட்டி (புறத்திரட்டு 1369ஆம் செய்யுள்) “இது பொன்முடியார் ஆங்கவனைக் (?) கண்டு கூறியது” என்று எழுதியுள்ளார்.
புறத்திணையியலில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ எனத் தொடங்கும் 12ஆம் சூத்திரத்தின் ‘தொல் எயிற்கு இவர்தலும் என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் (பக்கம் 11 - 12) ‘மறனுடைய மறவர்’ என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி ‘இது பொன்முடியார் பாட்டு என்று எழுதுகிறார். மேற்படி சூத்திரத்தின் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி “இது சேரமான் (பெருஞ்சேரல் இரும் பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறிய விளக்கம்” என்று கூறியுள்ளார்.
மேற்படி சூத்திரம் ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர்எயில் உளப்பட’ என்னும் அடிக்கு உரை எழுதியவர் “இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என்று விளக்கங் கூறுகிறார்.
பொன்முடியாரின் செய்யுட்கள் இவ்வளவுதான் கிடைத்திருக்கின்றன. இவர் பாடியவை எல்லாம் புறத்துறை பற்றிய செய்யுட்களே.
பெருந்தலைச் சாத்தனார்
இவர்ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றும் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றுங் கூறப்படுகிறார். இவருடைய பெயர்க் காரணத்தைப் பற்றிப் “பெரிய தலையையுடையராதலிற் பெருந்தலைச் சாத்தனார் எனப்பட்டார் போலும்” என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் நற்றிணை பாடினோர் வரலாற்றில் எழுதுகிறார். இது ஏற்கத்தக்கதன்று. சாத்தனார் என்னும் பெயருள்ள இப்புலவர் பெருந்தலை என்னுமூரில் இருந்தது பற்றிப் பெருந்தலைச்சாத்தனார் என்று பெயர் பெற்றார் என்று கருதுவது பொருத்தமானது. கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிப் பாளையம் தாலுகாவில் பெருந்தலையூர் என்னுமூர் இருக்கிறது. இப்புலவர் அவ்வூரினராக இருக்கலாம். பெருந்தலையூர்ச் சாத்தானார் என்பது சுருங்கிப் பெருந்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பட்டது.
அகநானூற்றில் 13, 224ஆம் செய்யுள்கள் இவர் பாடியவை. அகம் 13ஆம் செய்யுளில் ‘தென்னவன் மறவனாகிய கோடைப் பொருநன்’ என்பவனைக் குறிப்பிடுகிறார். இவன் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்பதும் கோடைக்கானல் மலைப்பகுதியை இவன் ஆண்டான் என்பதும் தெரிகின்றன. நற்றிணை 262ஆம் செய்யுளும் இவர் பாடியதே. இவர் பாடிய ஆறு செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
புறம் 151ஆம் செய்யுளின் கீழ்க்குறிப்பு, “இளங்கண்டீரக் கோவும் இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாராக, என்னை என் செயப் புல்லீராயினீரென, அவர் பாடியது” என்று கூறுகிறது. கண்டீரக்கோ, விச்சிக்கோ என்பவர்கள் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள். கொங்கு நாட்டுக் குதிரை மலை நாட்டையரசாண்ட குமணனை அவன் தம்பி காட்டுக்கு ஓட்டிவிட்டுத் தான் அரசாண்டான். வறுமையினால் துன்புற்ற பெருந்தலைச் சாத்தனார் காட்டுக்குச் சென்று அங்கிருந்த குமணனைப் பாடினார் (புறம். 164). இச் செய்யுளில் இவருடைய வறுமைத் துன்பம் பெரிதும் இரங்கத்தக்கதாக உள்ளது. அப்போது குமணன் என் தலையை வெட்டிக் கொண்டுபோய் என் தம்பியிடங் கொடுத்தால் அவன் உமக்குப் பொருள் தருவான் என்று கூறித் தன்னுடைய போர் வாளைப் புலவருக்குக் கொடுத்தான். அந்த வாளைப் பெற்றுக் கொண்ட புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் கொடுத்த வாளைக் காட்டிப் புறம் 165ஆம் செய்யுளைப் பாடினார். கோடைமலைப் பொருநனாகிய கடிய நெடுவேட்டுவனைப் பாடியுள்ளார் (புறம் 205). இவனை இவர் தம்முடைய அகம் 13 ஆம் செய்யுளில் குறிப்பிட்டுள்ளதை முன்னமே கூறினோம். மூவன் என்பவனிடம் சென்று பரிசில் பெறுவதற்குப் புறம் 209ஆம் செய்யுளைப் பாடினார். புறம் 294ஆம் செய்யுளில் ஒரு போர் வீரனுடைய தானைமறத்தைப் பாடியுள்ளார்.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
இவர் பெயர் கடுங்கோ என்பது. பெருங்கடுங்கோ என்று ஒருவர் இருந்தது பற்றி இவர் இளங்கடுங்கோ என்று பெயர் பெற்றார். மருதத்திணை பற்றிய செய்யுள்களைப் பாடினபடியால் மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று இவர் அழைக்கப் பெற்றார். பாலை பாடிய பெருங் கடுங்கோவின் மகனாக இவர் இருக்கக்கூடுமோ? அல்லது தம்பியாக இருக்கக்கூடுமோ? (பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னுந்தலைப்புக் காண்க.). இவர் கொங்கு நாட்டிலிருந்த அரசர் மரபைச் சேர்ந்த புலவர். இவர் பாடிய செய்யுட்கள் அகநானூற்றில் இரண்டும் (அகம். 96, 176) நற்றிணையில் ஒன்றும் (நற். 50) தொகுக்கப்பட்டுள்ளன.
பாலை பாடிய பெருங்கடுங்கோ, அவரைப் பாடிய பேய்மகள் இளவெயினி ஆகிய இவர்கள்காலத்தில் இப்புலவர் இருந்தார். அவர்களுக்கு இவர் வயதில் இளைஞர்.
✽ ✽ ✽