உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

மற்றோர் பெரிய தவறு நாம் செய்கிறோமாம்—தேமதுரத்தமிழோசை அவர் செவியைத் துளைக்கிறதாம்! ஏனடா, தம்பி, தமிழின் எழில் விளங்கப் பேசுகிறாய்? பார்! அமைச்சருக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது; அமைதி அழிகிறது; அழுதுவிடுவார் போலிருக்கிறது. நானே கூடச் சொல்லாலாமென்று இருக்கிறேன்—நீயும் சொல்லு—மலையினின்றும் கிளம்பும் சிற்றாரின் ஒலியோ, மங்கை நல்லாள் மதலைக்கு முத்தமிட்டுக் கொஞ்சும் போதும், மணவாளனிடம் பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும் கேட்கக் கிடைக்கும் சிரிப்பொலியோ, வாட்போரின்போது கேட்கும் ஓசையோ, தென்றலோ, புயலோ, தேனோ, என்றெல்லாம் பலரும் பலப்பட எண்ணி மகிழத்தக்க விதமாக, இனிப் பேசி, இந்த அமைச்சரின் இதயத்தை வாட்டாமலிருக்கும்படி, நமது நாவலருக்கும், மற்றையோருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும்.

சீவிச் சிங்காரித்துக்கொண்டு, முல்லை சூடி, முறுவலுடன் இடுப்பில் குழந்தையுடன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளமங்கை செல்லக் கண்டால், பதியை இழந்ததால் பசுமை உலர்ந்து போன பரிதாபத்துக்குரிய ‘மொட்டை’க்குக் கோபமும் சோகமும் பீறிட்டுக் கொண்டுதானே வரும்! அமைச்சருக்கு நாம் ஏன் அந்த அல்லல் தரவேண்டும்!!

அவர் நமது கழகத் தோழர்கள் பேசும் மொழியில் ஏற்றமும் எழிலும் இருந்திடக் காண்கிறார்—எரிச்சல் பிறக்கிறது—அதை மறைத்துக்கொள்ளும் ஆற்றலும் அற்றுப்போய், அழகாகப் பேசி, அடுக்குமொழி பேசி, மயக்கிவிடுகிறார்கள் என்று கூறி மாரடித்து அழுகிறார்! நாம் என்ன செய்வது, தம்பி, வேண்டுமென்றே, தமிழின் இனிமையைத் தேடிப் பிடித்திழுத்தா வருகிறோம். தமிழ் உள்ளம் நமக்குத் தமிழ் இனிமையைத் தருகிறது; அமைச்சரின் நிலை அது அல்லவே!

உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசவேண்டிய நிர்ப்பந்தம் தாக்குகிறது.

உண்மை தெரிகிறது, அதை மறைத்தால்தான் பதவி என்பது குடைகிறது.

எந்தத் துறையிலே பார்த்தாலும் வடவர் வளம் பெறுவதையும், தென்னவர் திகைப்புண்டு கிடப்பதையும் அறிகிறார் உள்ளத்தில் சோக அலை கிளம்புகிறது கோபப்புயல் வீசுகிறது. ஆனால் அந்த வெல்வெட்டு மெத்தையில் அமர்ந்து எண்ணிப் பார்க்கும்போது, தெற்குத் தேய்ந்-