உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தாலென்ன, காய்ந்தாலென்ன, என்ன சுகம்! என்ன சுவை, இந்தப் பதவி! என்று சபலம் பிறக்கிறது; அமைச்சரின் பேச்சு, உள்ளத்தில் உள்ளதை மறைத்திடப் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே பேச்சிலே சூடு இருந்தால் சுவை இல்லை, சுத்தம் இல்லை! சூட்சமம் அதுவே தவிர அவருக்கென்ன அகமும் புறமும் படித்திட, தமிழின் அருமையும் இனிமையும் அறிந்திட, எதுகை மோனையை அழைத்திட, எழிலும் சுவையும் பெற்றிடவா இயலாது! நம்மைவிட அதிகம் முடியும்!! ஆனால், உள்ளத் தூய்மை வேண்டுமே! கொள்கை ஆர்வம் தேவையாயிற்றே! தெளிவும் துணிவும் நிரம்ப வேண்டுமே! அதை எங்ஙனம் அவர் பெறுதல் இயலும்—அமைச்சராயிற்றே!

அமைச்சர் பேசியதாக ‘தினமணி’ கூறுகிறது, நான் ஓர் மாபாதகம் செய்துவிட்டிருப்பதாக அவர் மனச்சங்கடம் அடைந்திருக்கிறார் என்று தெரிகிறது என்ன என்கிறாயா? கேள், தம்பி, நான் ரோமாபுரி ராணிகள்—ஓர் இரவு—என்றெல்லாம் ஏடுகள் எழுதினேனாம்—எனவே, இதுதான் இவர்கட்குத் தெரியும், வேறென்ன தெரியும்—என்று ஏளனம் செய்ய முற்படுகிறார், அமைச்சர் பெருமான்!

அமைச்சர் பெருமானுடைய கவனத்தை ஓர் இரவும் ரோமாபுரி ராணிகளும் ஈர்த்திருக்கும் உண்மை எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதல்லவா—மகிழ்ச்சி—மெத்த மகிழ்ச்சி. நரைதிரை மூப்பு என்பவைகளுக்கு ஆளான தொண்டு கிழங்களே, ரோமாபுரி ராணிகளிடம் சிக்கிக்கொண்டனர் என்றால், வாலிப முறுக்குக் குறையாத அமைச்சர், அவர்களிடம் சொக்கிப் போனதிலே ஆச்சரியமில்லை. ஆனால் இதிலே ஆச்சரியம் என்ன தெரியுமா தம்பி, கயல்விழி, மையல் மொழி, காட்டியும் ஊட்டியும் கட்டழகிகள் கருத்தைக் கெடுப்பர், காரியம் குலைப்பர், ரோம் சாம்ராஜ்யம் அழிந்துபட்டதற்கு வேல்விழி மாதரிடம் வாள் ஏந்திய வீரர்கள் அடிமைப்பட்டது ஒரு காரணம் என்று எச்சரிக்கை செய்ய, நான் அந்த ஏடு எழுதினேன். அமைச்சர், பாவம், அதைப் படித்து, பெறவேண்டிய பாடம் பெறாமல், வேறு ஏதேதோ எண்ணங்களைப் பெற்று, மெத்தச் சிரமப்பட்டிருக்கிறார்போலும். அதனாலேதான், அவர் அத்துணை கோபத்துடன், ரோமாபுரி ராணி புத்தகம் எழுதியதைக் கூறியிருக்கிறார்.

அமைச்சரே! அலைமோதும், அடக்கிக்கொள்க! ஆசை வந்து உந்தும், ஆட்பட்டுவிட வேண்டாம். அந்த ஏடு, சுவையூட்டுச் சூறாவளியை மூட்டிவிடும் சுந்தராங்கிகளிடம்,