உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம் 67

வேதனை வெள்ளம்

கே. வி. கே. சாமியின் மறைவு

தம்பி,

நெஞ்சிலே பெருநெருப்பு மூண்டதடா, தம்பி. ஓராயிரம் நச்சுப் பாம்புகள் ஒருசேரக் கூடி, இதயத்தைக் கடித்துக்கடித்து, மென்று மென்று கீழே உமிழ்ந்தவண்ணம் இருக்கிறது. வேதனை வெள்ளத்தில வீழ்ந்து, கரைகாணாமல் தவிக்கும் நிலையிலே இருக்கிறேன். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று நான் சொல்லாத நாளில்லை. இதயம் தாங்கிக்கொள்ள முடியாத பெருநெருப்பு புகுந்து, சுட்டு எரிக்கிறது. உட்கார்ந்தால் உடல் சாய்கிறது. உடலைக் கீழே சாய்த்தால் தானாக எழுகிறது. நடமாடினால் கால்கள் நடுக்கமெடுக்கின்றன, பேசினால் நாக்குக் குளறுகிறது. நண்பர்களைச் சந்தித்தாலோ, கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்புகிறது. ஐயயோ வேதனை, வேதனை, இது நாள்வரை நான் அனுபவித்தறியாத வேதனைǃ எவராலும் தாங்கிக்கொள்ள முடியாததோர் வேதனை! எந்தக் காதகனும் கன்மனம் படைத்தோனும், எண்ணவும் சொல்லவும் கூசும் விதமான கொடுமை நேரிட்டுவிட்டதே! வாழ்கின்ற இடம் நாடா, காடா? சூழ இருப்போர் மனிதர்களா, கொலைபாதகர்களா, கொடிய காட்டு மிருகங்களா? இதென்ன 1956 தானா அல்லது நாக்கறுத்து மூக்கறுத்து, கண்டதுண்டமாக்கிக் கொலைபுரியும் காட்டுமிராண்டிக் காலமா? என்றெல்லாம்