77
எண்ண எண்ண, நெஞ்சிலே குபீல் குபீலென்று ஓர் ஜுவாலை கிளம்பி, தகித்துத் தள்ளுகிறது என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது. ஐயயோ! என்று அலறி மாரடித்து அழுது புரண்டு புரண்டு அழுது, காணும் நண்பர்களுடன் கூடிக் கூடி அழுதாலும், கப்பிக்கொண்டுள்ள துக்கம் ஒரு துளியும் விலகுவதாகக் காணோம். என்னைப் பிடித்திழுத்து, செயலற்றவனாக்கிவிட்டது. பித்தன்போல, வெறிச்சென்றதோர் பார்வையுடன் இருக்கிறேன். பேயறைந்தது என்பார்களே, அதுபோன்றதோர் கோலம் என்னைப் பிடித்துக்கொண்டது. நான் எந்நாளும் இதுபோன்றதோர் வேதனையைக் கொண்டதில்லை.
நடுநிசிக்குமேல், இரண்டிருக்கும். அடிகள் நாக்குக் குழறக் குழற, சென்னையிலிருந்து கிடைத்த சேதியைக் கூற வந்தார். இல்லத்தில் படுத்து, அந்தக் கிழமை இதழில் நான் நாட்டுக்கு அளித்துள்ள கருத்துகளைப்பற்றி எண்ணியபடி இருந்த என்னிடம்.
“அடிகள்?”—என்று நான் கேட்கிறேன்—படியிலிருந்து கீழே உருண்டு விழுந்து விடுபவர்போல் காணப்பட்டார். என்ன?—என்று நான் கேட்க, “நமது சாமி...தூத்துக்குடி சாமி......” என்றார், கண்ணீர் தளும்பியபடி...“என்ன, என்ன தூத்துக்குடி சாமிக்கு...என்ன?...என்ன......” நான் கேட்கிறேன், நடுக்கும் குரலில்...“யாரோ, அவரை...கொலை...போய்விட்டாராம்...” என்றார்; அந்தத் தாக்குதலிலிருந்து நான் இந்த விநாடிவரையில் மீளமுடியவில்லை, முழுதும்மீள என்றைக்குமே முடியாதடா தம்பி, முடியாது. இதயத்திலே ஏற்பட்டுவிட்ட பிளவு, குறையாது, மறையாது......
அந்த விநாடியிலிருந்து வேதனை வெள்ளத்தில் வீழ்ந்துபட்ட நான், என்ன செய்வது, என்ன எண்ணுவது என்று தெரியாமல், திகைத்துப்போய், கிடக்கிறேன்.
அஞ்சாதீர்கள்—எதற்கும் கவலை கொள்ளாதீர்கள்—மலைகுலைந்தாலும் மனம் குலையாதவன் தமிழன்—இன்னல் இடுக்கண் வரிசை வரிசையாக வந்து தாக்கினாலும், கலங்காதவன் திராவிடன்! அஞ்சா நெஞ்சுடையோன்!—தம்பி, ஆயிரம் தடவை கூறி இருப்பேன், பல்லாயிரம் தடவை எழுதி இருப்பேன், மேடைகளிலே நின்று இவைதமை முழக்கியிருக்கிறேன், இதோ கவிழ்ந்த தலையைத் தூக்கிவிட முடியவில்லை, பொங்கும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பதறும் உடலத்தைக் கட்டுக்குக் கொண்டுவர இயலவில்லை, வேதனை பிடித்தாட்டுகிறது. ஆபத்து என்றால் அஞ்சா